TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழகத்தின் ஈழத் தமிழ்த் தேசியவாதிகள்? – தவறும் திசை

“இலங்கை என்பது பௌத்தர்களின் புனித பூமி, பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் சிங்கள் மக்கள் வாழ்கின்ற ஒரே நாடு இலங்கை. இந்த நாடு பௌத்தத்தின் பாதுகாவலர்களான சிங்கள மக்களுக்கு உரித்தானது. இங்கு வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு அவர்களது புனிதக் கடமையை நிறைவேற்றும் உன்னத நோக்கத்திற்குப் பாதகமின்றியும் உதவி புரியும் வகையிலும், தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் வாழ்ந்து மடியலாம்”. பெரும்பாலான சிங்கள மக்களின் பொதுப்புத்தி அல்லது சிந்தனை முறை இவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

உலகமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் குக்கிராமங்கள் வரை பரவியிருக்கின்ற இரண்டாயிரத்தின் இரண்டாவது பத்தாண்டும் கூட இந்தச் சிந்தனை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

பௌத்தப் பெறுமானங்கள் மீதான அரசியலும், சிங்கள பௌத்த தேசிய வாதமும் ஒருவகையான இனக்குழு மைய வாதத்தையும் அதனூடான இராணுவ மயமாக்கலையுமே நிலைநாட்டியுள்ளது.

சிங்கள வம்சத்தின் முதல் மனிதனாகக் கருதப்படும் விஜய, புத்தர் இறந்த நாளிலேயே இலங்கையில் வந்திறங்கியதாக மகாவம்ச மாயக்கதையில் கூறப்படுகிறது. இந்துக்களின் ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் அதிகமாக ஒவ்வொரு சிங்கள பௌத்தரினதும் நாளாந்த வாழ்வியலில் இரண்டறக் கலந்த மகாவம்ச சிந்தனையை முதலில் அரசியலாக்கியவர்கள் பிரித்தனியர்கள் தாம்.

குணவர்தன என்ற சிங்கள் ஆய்வாளர் கூறுவது போல் காலனியத்திற்கு முன்னய காலகட்டத்தில், பௌத்ததின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு தேரவாத பௌத்தம் என்ற அடையாளத்தைக் உருவாக்கியிருந்த போதிலும் பிரித்தானிய காலனியாதிக்கக் காலப்பகுதியில் மட்டும்தான் சிங்களவர்களின் உணர்வுகளில் தீவிர மாற்றத்தைத் தோற்றுவித்தது. (Gunawardhana 1990:70)

பிரித்தானிய காலனிய ஆட்சியின் இறுதிக் காலகட்டங்களில் மகாவம்சம் ஆங்கிலேயர்களால் சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு பௌத்த விகாரைகள் எங்கும் வினியோகிக்கப்படுகின்றது.

இந்தக் காலப்பகுதியில் தான் அனகாரிக தர்மபால என்ற சிங்கள பௌத்தத் தேசிய வாதி கேணல் ஒல்கோட், ஹெலெனா பிளவட்ஸ்கி ஆகியோரின் துணையோடு பிரித்தானியர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார். தமிழர்கள் இலங்கையைச் சூறையாட வந்தவர்கள் என்றும் அவர்களைக் கடலில் தள்ளிக் கொலைசெய்து விடவேண்டும் என்றும் சூழுரைத்த அனகாரிக தர்மபால இலங்கையில் தேசிய நாயனாகக் இன்றும் கௌரவிக்கப்படுகிறார்.

இவ்வாறு சிங்கள பௌத்தத் தேசியவாதம் குக்கிராமங்கள் வரை தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தியுள்ளது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் மேலிருந்து கீழாக விகாரைகள் ஊடாகவும், கிராம சபைகள் போன்றை குடிமைச் சமூக அமைப்புகளூடாகவும் இறுக்கமாக அமைப்புமயத்திற்கு உள்ளக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை பாராளுமன்ற அரசியல் வாதிகள் தமது தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்வது இலகுவானதாக, இதன் தொடர்ச்சி இன்றுவரை பேணப்படுகிறது.

1983 இனப்படுகொலைக்குப் பின்னர், இலங்கை அமைச்சரான காமினி திசாநாயக்க இவ்வாறு குறிப்பிடுகிறார்:

* “யார் உங்களைத் தாக்கியவர்கள்?

சிங்களவர்கள் தான். நாங்கள் தான் உங்களைத் தாக்கவும் முடியும் பாதுகாக்கவும் முடியும். இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்பினாலும் அது இலங்கை வந்து சேர 14 மணி நேரங்களாகும். ஆனால் 14 நிமிடங்களில் இலங்கைத் தமிழர்களின் இரத்த ஆற்றை இந்த மண்ணிற்காக நாங்கள் வழங்க முடியும்” ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் இதே வகையான சிந்தனையத் தான் சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைக்கின்றனர்.

தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறை தத்துவார்த்த அரசியல் தளத்தில் நியாயப்படுத்தப் படுகிறது. பிரித்தானியக் காலனியப் பகுதியில் கூர்மையடைந்த தேசிய இன முரண்பாடுகள் அறுபது ஆண்டுகள் தமிழ்ப் பேசும் மக்களின் மீதான இராணுவப் பொருளாதார அரசியல் ஒடுக்கு முறையாக இன்றுவரை நீட்சியடைகிறது.

சிங்கள மக்களின் சமூக விடுத்லைக்கும் கூட எதிரான பெருந்தேசிய வாதம் என்பதும், அதன் நிறுவன மயம் என்பதும் அதற்கெதிரன போராட்டங்களூடாகவே வெற்றிகொள்ளப்பட முடியும். ஆக, தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக்கான போராட்டம் தேவையானது மட்டுமல்ல முற்போக்கானதும் கூட.

இந்தியாவில் இன்று பழங்குடி மக்கள் மீதான இராணுவ ஒடுக்கு முறை வெளிப்படையாக தெரித ஆரம்பித்திருப்பது போல, தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பௌத்த சிங்கள பேரின வாததின் இராணுவ வன்முறைகள் அறுபது ஆண்டுகளாக வெளிப்படையாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஆக தெற்காசியாவில் போராட்டத்திற்கும், புரட்சிக்குமான புறச்சூழல் இலங்கையில் அதிகமாகவே கணப்பட்டது என்பதை யாரும் மறுப்பதில்லை. தெலுங்கானா போராட்டம், காஷ்மீர், நாகாலந்து மக்களின் போராட்டங்களிலிருந்து மாறுப்ப்பட்ட தன்மைகளையும், வேறுபட்ட அடக்குமுறை வடிவங்களையும் ஈழத்தமிழர் போராட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தெற்காசியாவிலும் குறிப்பாக இந்தியாவின் தென்பகுதியில் உருவாகவல்ல சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டம் தீர்மானகரமான பங்கு வகித்திருக்க முடியும். ஈழத் தமிழர்களின் போராட்டம் சீர்குலைந்து போனதன் பல புறக் காரணிகளில் தமிழ் நாட்டின் தமிழ்த் தேசிய வாதமும் குறித்துக் காட்டத்தக்க பங்கு வகித்திருக்கிறது எனலாம். சமூக மாற்றத்திற்கான போராட்டமாக பரிணாமமடையும் என எதிர்வு கூறப்பட்ட ஈழத் தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் தூய தேசிய வாதமாகக் முள்ளி வாய்க்காலில் ஐம்பதாயிரம் மக்களின் அழிவோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.

தனது சொந்த மக்களின் மீது படுகொலைக் கலாச்சாரத்தைக் கட்டவித்துவிட்டுள்ள இந்திய அரசு இலங்கைப் பிரச்சனையை தனது மேலாதிக்க நலன்களுக்காகக் கையாள்வதை தமிழ்த் தேசிய வாதம் கண்டுகொள்ளவில்லை. இந்தியாவினுள் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் முற்போக்கு அணிகளோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தயாரற்ற தமிழ் நாட்டுத் தமிழ்த் தேசிய வாதிகள், அந்த ஒடுக்கு முறைகளையெல்லாம் தாண்டி ஈழத் தமிழர்கள் மீது மட்டும் அக்கறை கொள்வது என்பது பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

1. முதலாவதாக ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களின் அங்கம் எனற நிலையிலிருந்து குறுக்கி தூய தேசிய வாதப் போராட்டமாக முன்வைகிறது.

2. .இந்தியாவினுள்ளேயே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற தேசிய இனங்களின் ஒடுக்க்முறைக்கெதிரான போராட்டங்களுடனான இணைவிலிருந்து ஈழத் தமிழ்த் தேசியப் போராட்டத்தை அன்னியப்படுத்துகிறது.

3. ஈழத்தில் உருவாகவல்ல ஏகபோக மேலாதிக்கங்களுக்கு எதிரான போராடத்தின் திசை வழியை பிற்போக்கான அதிகார வர்க்கத்தின் நலன்களுக்கு உட்ப்பட்ட குறும் தேசிய வாதமாக மாற்றுகிறது.

தமிழர்களின் தேசிய தன்னுரிமையை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தின் உந்துசக்திகள் எனத் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தும் தூய தமிழ்த் தேசிய வாதிகள் காஷ்மீரிகளின் போராட்டத்தையோ ஏனைய தேசிய விடுதலை இயக்கங்களையோ அங்கீகரிக்க மறுப்பதுடன் அவகளைக் அரசியல் தளத்தில் காட்டிக்கொடுக்கும் நிலைவரை சென்றிருக்கிறார்கள்.

* ஏகபோக அரசுக்கள் இணைந்து தான் வன்னிப் படுகொலைகளை நிகழ்த்தி முடித்தன. இதற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களினது, தன்னுரிமைக்காகப் போராடும் தேசிய இனங்களதும், மக்களினங்களதும், மக்கள் கூட்டங்களதும் இணைவு தொடர்ச்சியாகவே நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. இந்த நிராகரிப்பு தமிழகத்தின் தூய தமிழ்த் தேசிய வாதிகளிடம் அதி மிகையாகவே காணப்படுகின்றது.

* தீக்குளித்து தன்னனை ஈழத்தமிழர்களுக்காகத் மாய்த்துக்கொண்ட முத்துக்குமாரின் மரணமும் போராட்ட வழிமுறையும், அந்தப் போராட்டத்தை எழுச்சியாக மாற்றம் பெறச் செய்வதில் தமிழகத் தமிழ்த் தேசிய வாதிகளின் தோல்விக்கான காரணத்தை இங்கு கருத்தில்கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகள் மட்டுமே இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை எழுச்சியாக மாற்றுவதில் குறித்தளவிலாயினும் வெற்றி கண்டுள்ளன என்பது இங்கு குறித்துக்காட்டத்தக்கது.

* இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு வெளியிலிருந்து ஈழத் தமிழ்த் தேசியத்தைத் தனிமைப்படுத்தி நோக்க முடியாது. அவ்வாறான தனிமைப்பட்ட “தூய தமிழ்த் தேசியம்” தமிழகத்தில் பிற்போக்கான பாத்திரத்தையே வகிக்க முடியும்.

மக்கள் கூட்டத்தின் உணர்வுகளை அவர்களின் வாழ்வியலே தீர்மானிக்கின்றன. இலங்கைக்கு வெளியில் இருபது வருடங்களுக்கு மேலாக புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் உணர்வுகள் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களின் உணர்வுகளிலிருந்து பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருப்பதும் கூட இதனடிப்படையில் தான் உருவாகிறது. இலங்கைக்கு வெளியில் மேலிருந்து திணிக்கப்படும் தேசிய வாதச் சிந்தனை போன்றவை பொதுவான மக்களின் சிந்தனை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

வெளியிலிருந்து திணிக்கப்படும், சூழலுக்கு அன்னியமான கருத்துக்கள் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அமைப்பியல் வாதியான லெவி ஸ்ரோசின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்தாடல்களின் இன்றைய வளர்ச்சியான மானுடவியலைக்கூட நிராகரிக்கும் தமிழகத் தேசியவாதிகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாகவல்ல போராட்டங்களை மீண்டும் தவறான வழியை நோக்கி செலுத்துவதற்கான உந்துசக்திகளாக அமைந்துவிடக்கூடாது.

ச.பாவலன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*