TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழரின் அறப் போராட்டம் உடன் தொடங்கப்பட வேண்டும்!

நமக்குள் உள்ள முரண்பாடுகளால் ஒருவருக்கு ஒருவர் அறிக்கைகள் விட்டும் வாதப் பிரதி வாதங்களிலும் காலத்தை வீணடிக்கிறோம். அதனால் சிங்களத்துக்குத் தேவையான கால இழுத்தடிப்புகளுக்கும் குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்கவும் வசதி கொடுத்து வருகிறோம். சிங்களமும் தனது தமிழ் இன அழிப்பைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும், ஈழ மண் பறிப்பு மற்றும் தமிழ் மக்களை இராணுவ அழுத்தங்களால் கொத்தடிமைகளாக்கி வருகிறது.

* அண்மையில் அல் ஜசீரா தொலைக் காட்சியில் முல்லைத் தீவுப் பகுதிகளில் புதிதாகக் கட்டப் பட்ட ஓடுகளால் கூரையிடப் பட்ட கல் வீடுகளில் சிங்கள மக்கள் குதூகலமாக உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பதைக் காண்பிக்கப் பட்டது. இரண்டு அறைகள் பெரிய ஹால் சமையலறை கழிப்பறை வசதிகள் அவர்களுக்கு. அவற்றை அரசு தமக்கு இலவசமாகத் தந்துள்ளது என்றனர் அங்கு வாழ்ந்து வரும் சிங்கள மக்கள்.

அதே சமயம் அவர்களே அந்ந இடம் முன்னர் தமிழர்களுடையது இப்போ தமிழர்களுக்கு பிரதான வீதிகளுக்கு அப்பால் அரசால் இடம் கொடுக்கப் பட்டுள்ளது எனக் காணொளி நிருபர்களுக்குக் கூறினார்கள்.

மறு புறத்தே போரினால் விரட்டியடிக்கப்பட்டு முட்கம்பி முகாமிலிருந்து மீளக்குடியமர்த்தப் பட்;ட எமது தமிழ் மக்கள் போரினால் இடிபட்டுச் சேதமடைந்த வீடு ஒன்றினுள் 3 அல்லது 4 குடும்பங்களைச் சேர்ந்த 26 தமிழர்கள் ஒன்றாக வாழ வைக்கப் பட்டுள்ளனர். இதனை அல் ஜசீரா காண்பித்ததுடன் அங்கு வாழ்ந்த பெண்களே நேரடியாக முனம் தெரியத் தொலைக் காட்சியில் கூறியுள்ளனர்.

இப்போது கிளிநொச்சியில் மீள் குடியேற்றப் பட்ட இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் போடப் பட்டுள்ள செய்தியும் அந்தச் சடலங்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்ட செய்தியும் எமக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கொல்லப் பட்டு அடையாளம் காணப்பட்ட அந்த இரு பெண்களும் தொலைக் காட்சியில் முகம்காட்டி தமது அவலத்தை வெளி உலகுக்குச் சொன்ன பெண்களே என்பதே அந்தச் சந்தேகம். பொது மக்களால் அந்ந இருவருக்கும் நேர்ந்த கதி அறியப்பட வேண்டும் என்பதற்காகவே அந்ந இரு சடலங்களும் கிணற்றில் போடப்பட்டு பின்னர் இராணுவத்தால் எங்கோ புதைப்பதற்கு எடுத்துச் செல்லப் பட்டன. இதன் மூலம் மீளக் குடியமர்த்தப் பட்டவர்களுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கையும் தேவையற்றுப் பயமின்றி வாயைத் திறப்பவர்களுக்கு ஏற்படும் கதி என்ன என்ற சேதியும் சொல்லப் பட்டுள்ளது. இத்தயை பின்னணியில் தமிழர் தேசியக் கூட்டணியோ அல்லது அதன் தலைவர் சம்பந்தனோ மரண பயத்தில் மட்டுமே செயற்பட முடியும் அப்படித்தான் செயற் பட்டார்கள் செயற் படுகிறார்கள் செயற் படவும் முடியும்.

இன்று சிங்கள இராணுவத் தளபதியாக இருந்து போரில் வெற்றி பெற்றுக் கொடுத்த சரத் பொன்சேகாவே மரண தண்டனைக் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறார் என்றால் மற்றவர் நிலை எப்படி யிருக்கும்? எனவேதான் புலத்தில் தமிழரால் நடத்தப்பட வேண்டிய அறப் போராட்டத்தில் கூட இலங்கை அரசியற் கட்சிகள் வெளிப்படையாக ஆதரிக்கவோ ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடவோ முடியாதுள்ள நிலையை புலத்தில் உள்ள நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

* சிங்களக் குடியேற்றம் வன்னிப் பகுதிகளுக்கு மட்டும் உரிய ஒன்றாகக் கணக்கெடுக்க கூடாது. வடபகுதிகளில் உள்ள அனைத்து கட்டுமான ஒப்பந்தங்கள் அத்தனையும் சீனா இந்தியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தமிழர் யாரும் வேண்டுமானால் நிதி முதலீடு செய்யலாமே அல்லாது முகாமைத்துவம் செலுத்த இடம் அளிக்கப்பட மாட்டார்கள்.

அப்படியானால் எல்லாப் பணிகளிலும் தமிழரின் நிலை கூலித் தொழிலாளர் என்பதற்கு அப்பால் எதுவும் இருக்காது. தமிழரின் விவசாய மற்றும் மீன்பிடி கடல் வளங்களும் நிலங்களும் அதி உயர் பாதுகாப்பு வலையங்களால் அபகரிக்கப் பட்டுவிட்டன. இந்நிலையில் எமது உறவுகளை நாம் கையேந்திப் பிச்சை பெறும் ஏதிலிகளாக மட்டுமே பார்க்க முடியும். வேண்டுமானால் நம்மால் பணத்தை மட்டுமே அனுப்ப முடியும் அந்தப் பணமும் அரசின் மூலமாக அதன் பணபலத்தை வலுவூட்ட வேண்டும். அரசும் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

ஆனால் நாம் அனுப்பும் ஒவ்வொரு சதமும் எம்மக்களை சிங்கள மேலாதிக்க முதலாளித்துவ அடிமை வாழ்வில் பிச்சைக்காரர்களாக வைத்திருக்கவே உதவும். அதே நேரத்தில் எமது பணத்தைக் கொண்டே சிங்களத்தின் பொருளாதாரம் வலுப் படுத்தப் பெறும். அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச் சலுகையும் அதைப் பெறுவதற்கான மனித உரிமைகளுக்குக் கட்டுப்பட வேண்டிய தேவையும் இருக்காது.

போர் முடிந்து விட்ட நிலையிலும் ரஷியாவிடமிருந்து 300 கோடிக்கு ஆயுதங்களும் இராணுவ உதவிகளும் இராணுவ பயிற்சிகளும் பெற வேண்டிய தேவை என்ன? மகிந்தர் பேசுவது சகேதரத்துவம் சமத்துவம் அண்ணன் தம்பிகள் ஒரு தாய் மக்கள் என்ற கொச்சைத் தமிழ்ப் பசப்பு வார்த்தைகள் ஆனால் செய்வது அத்தனையும் அப்பட்டமான அராஜகம்.

* அங்கே அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தமிழ் மக்களைத் தற் கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு அதிகரித்து வரும் வேளையில் புலத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானமா நாடுகடந்ந அரசா எனப் பட்டிமன்றம் நடத்திக் காலத்தை வீணடிக்கிறோம். தமிழீழப் போராட்டத்துக்கு ஆதாரமான பண பலம் அத்தனையும் மே 2009 முதல் மாயமாகி விட்ட நிலையில் இயக்கத்தின் அமைப்பாளர்களும் அவர்களின் செயற் பாடுகளும் காணாமல் போயுள்ளன.

முக்கியமான இராஜதந்திர மற்றும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு சில தன்னார்வ அமைப்புகளும் தனி நபர்களும் பண வசதி இன்மையால் முழுமையான அளவில் செயற்பட முடியாது தவிக்கின்றனர். இத்தனைக்கும் கோவில்களில் வழமைபோல் ஆடம்பர விழாக்கள் அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவற்றால் வரும் வருவாய்கள் எமது இனம் சார்ந்த அமைதிவழி அரசியல் செயற்பாடுகளுக்கு உதவாது இருக்கும் நிலையே தெரிகிறது.

இவற்றின் செலவுகள் தமிழ் மக்களின் தலைகளில் கட்டிவிடும் அதே வேளையில் அவற்றால் கிடைக்கும் வருவாய் தமிழரின் அரசியல் அமைதி வழிச் செயற்பாடுகளுக்குக் கிடைப்பதில்லை. இதற்கிடையில் உலக நடைமுறை உண்மைகளை உணராது தலைவர் மீண்டும் வந்து ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழம் பெற்றுத் தருவார் என ஆரூடம் கூறும் அறிவாளிகளையும் காண முடிகிறது. இப்படிக் கூறுபவர்கள் அரசின் கையாட்கள் ஆகவும் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்குள் எழாது இருப்பதே எமது ஒற்றை வழிச் சிந்தனையின் வெளிப்பாடுதான்.

இத்தகைய பின்னணியில்; இந்திய மத்திய மாநில அரசுகளின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் சென்னையில் 07.06.2009ல் இடம் பெற்ற பன்னாட்டுத் தமிழர் நடுவம் நடத்திய மூன்றாவது தமிழ் மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைச் சட்ட அமெரிக்க மேதைகளான ப்றூஸ் ஃபெயின் மற்றும் ப்ஃறான்சிஸ் பொயில் நிகழ்த்திய உரைகளில் வழங்கிய பெறுமதிமிக்க சட்ட ஆலோசனைகளை வெறும் கைதட்டல்களோடு தமிழினம் மறந்து விட்ட பரிதாபம் தெரிகிறது.

பொயில் அவர்கள் பொஸ்னியாவில் கொசோவோ மக்களின் இன அழிப்புக் குற்றங்களை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வெற்றிகரமாக வாதாடி நீதிபெற்று கொசோவோ தனிநாடாக உருவாக உதவியவர். இலங்கை இந்திய அரசுகள் ஈழத் தமிழருக்கு இறையாண்மையும் சுய நிர்ணய உரிமையும் கிடையாது என வாய்க்கு வாய் பேசக் கேட்டுக் காதுகள் சலித்து விட்ட நிலையில் நம்மில் பலர் அதுவே உண்மை என நம்பியும் பிறரை நம்ப வைத்தும் வருகின்றனர்.

இதோ பொயிலின் பேச்சிலிருந்து சில வரிகள் தமிழில் தரப்படுகின்றன,

“நான் இங்கே இரண்டு அடிப்படைக் கருத்துகளை சொல்ல விரும்புகிறேன்: முதலாவது ஸ்ரீலங்காவில் வாழுகின்ற தமிழர்கள் இன அழிப்புக்கு பலியாக்கப் பட்டுள்ளனர். இரண்டாவது, சர்வதேசச் சட்டங்களின் படியும்; அவற்றின் நடைமுறைக்கு ஒப்பவும் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பினால் தனியாகத் தனி அரசு அமைத்துக் கொள்ளும் உரிமை உட்பட சுய நிர்ணய உரிமை உள்ளது. அவர்கள் இன அழிப்புக்கு உள்ளாகி இருக்கும் உண்மையானது அவர்கள் விரும்பும் பட்சத்தில் தனி அரசு அமைப்பது உட்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான அவர்களின் உரிமையை மேலும் வலுப் படுத்துகிறது.”

மேலும் அவரது பேச்சில் இந்தியாவின் நிலைபற்றிய வாதத்துக:கு இப்படிக் கூறுகிறார்-

* “ஸ்ரீலங்காவில் வாழும் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும் தனி அரசு உரிமையையும் இந்திய அரசு அங்கீகரித்தால், தமிழ் நாட்டில் வாழும் 6 கோடித் தமிழரும் அதே உரிமைகளின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து பிரிந்து விடுவர் என்பதை ஆதாரமாகக் கொண்டு வாதிட்டு வருகிறது. சர்வதேசச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் இது ஒரு தப்பான இரட்டைவாதம் என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஸ்ரீலங்காவில் உள்ள தமிழரைப் பாதுகாக்கும் விடையத்தில் இந்திய அரசின் செயலற்ற தன்மைக்கு இதனை ஒரு காரணமாகப் பயன் படுத்தக் கூடாது”.

பொயில் தமது உரையை இப்படி முடித்துள்ளார்-

* “அதீத எச்சரிக்கை உணர்வால் இந்தியா இந்த நேரத்தில் அந்த அளவுக்குப் போகத் தயாரில்லை என்றாலும் கூட அது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்பதாலும் சர்வதேசச் சட்டங்கள் சம்பிரதாயங்களின் படி இந்தியாவுக்கு உள்ள உரிமைகள் கடப்பாடுகளின் அடிப்படையில் , ஆகக் குறைந்ந பட்சம் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழரின் பிதுராஜிய கடமையை நிறை வேற்ற வேண்டும். ஆகவேதான் இந்தியா ஸ்ரீலங்கா அரசை ஹேக்கில் உள்ள சரவதேச நீதி மன்றில் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழரை இன அழிப்பு செய்யும் குற்ற விசாரணைக்கான வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அத்தகைய வழக்கில் ஸ்ரீலங்கா அரசை ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர் மீதான எல்லா வகையான இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் தொடர்ந்து செய்வதைத் தவிர்க்கவும் தற்காலிகத் தடை உத்தரவு வழங்க இந்தியா கோர வேண்டும். டக்அவ், அவுஸ்விச், கம்போடியா, சப்ரா- சட்டில்லா, ஸிறபிறெனிக்கா, றுவண்டா, கொசோவோ இப்பொழுது வன்னியில் தவிக்கும் ஆவிகளுக்கு இதைவிடக் குறைவான வேறு எவையும் போதாது.”

இப்படிப் பேசி 6 மாதங்களுக்கு மேலாகியும் எவரும் எதுவும் செய்ய வில்ல என்பது மிக வேதனையான விடையம். இந்திய மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இம் மகாநாடு பெருமளவில் அறியப்படாமலும் தமிழக அரசியல்வாதிகளின் கவனத்தைப் பெறாமலும் போய்விட்டது.

தமிழக அரசியல் கட்சிகள் , தமிழ் உணர்வாளர்கள் மற்றும் உலகத் தமிழ் அமைப்புகளும் இந்திய மத்திய மாநில அரசுகளையும் அகில இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இலங்கை அரசை இந்திய அரசு சர்வ தேச நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் சார்பான வழக்கைத் தாக்கல் செய்ய வைக்க வேண்டும்.

எமது துன்ப துயரங்கள் எல்லாம் வெறும் பட்டியலிடவும் பட்டிமன்ற விவாதமும் செய்யவும் பயன்படுத்தும் நிலை மாற்றம் பெற வேண்டும். இனியாவது எமது தமிழர் பேரவைகள் போன்ற அமைப்புகள் உலக நீதி மன்றில் எமது மக்களுக்காள நீதியும் நிவாரணமும் கோரும் வகையில் தாமும் செயற்பட்டுத் தமிழக அமைப்புகளையும் செயற்பட வைப்பார்களா? இனிமேலும் ஊர்வலம் ஆர்ப்பாட்டங்களால் பயனில்லை ஆனால் ஆக்க ப+ர்வமான செயற்பாடுகளே எமக்கு தீர்வைப் பெற்றுத் தரும் என்ற உண்மையை உணர்வார்களாக.

வன்னித்தம்பி தங்கரத்தினம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*