TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிங்களவர் தமக்குள் மோதும் போர் களமானது கொழும்பு

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பிலும், சிறிலங்காவின் வேறு பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்களும் காவல் துறையினரும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு உயர்நீதிமன்ற வளாகம் அருகே சரத் பொன்சேகாவுக்கு அதரவளிக்கும் எதிர்க் கட்சிகளின் சார்பில் இன்று காலையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜெனரல் பொன்சேகரின் மனைவி அனோமா பொன்சேகா, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஆளும் கட்சியைச் சேர்ந்த கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் புகுந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

பொல்லுகள், கற்கள், கண்ணாடிப் போத்தல்களால் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து உயர் நீதிமன்ற வளாகப் பகுதி போர்க் களம் போன்று காட்சியளித்தது.

காவல் துறையினரின் பாதுகாப்புடனேயே ஆளும் கட்சியினர் தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளை – எதிர்க் கட்சியினரின் போராட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் தண்ணீர் பீரங்கி மூலமும், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதே வேளை, சரத் பொன்சேகாவின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலி, மாத்தறை, அம்பாறை போன்ற இடங்களிலும் எதிர்க் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர்.

இதன் போதும் – காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் , தடியடிப் பிரயோகம் மேற்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைத்தாகத் தெரியவருகிறது.

இந்தச் சம்பவங்களில் பெருமளவானோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளை – சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக சிறிங்காவின் உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி அனோமா பொன்சேகா இன்று அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு அதரவளிக்கும் வகையில் எதிர்க் கட்சிகளின் சார்பில் இன்று நடத்தப்பட்ட இந்த அறவழிப் போராட்டத்தில் பங்கேற்காமலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளுக்குள் சிக்காமலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*