TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள்

பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் முறுகல் வெளிப்பாடு.

நீதி வேண்டிநிற்கும் உலகில் மற்றோர் நீதி அரங்கேற்றம் பெற்றுள்ளது. ஆனால் அந்த நீதி மற்றொரு அநீதியால் அரங்கேற்றப்பட்டுள்ளமை தான் வித்தியாசமானது. தமிழின அழிப்பினை மேற்கொண்ட ஓரங்க நாடகத்தின் பிரதான வில்லன்களில் ஒரு வில்லன் மற்றொரு வில்லனால் அழிக்கப்பட்ட அல்லது சிறையெடுக்கப்பட்ட கதைதான் பொன்கேசா கைது.

விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் பகுதியில் ஒப்பேற்றப்பட்ட தமிழின அழிப்பின் கூரிய வாள் பொன்சேகாவிடமே இருந்தது. அந்த வாள் கண்ணை மூடி வீசப்பட்ட பொழுது வீழ்ந்த தலைகள் ஆயிரம் என்றால் அந்தத் தலைக்குச் சொந்தமான பல்லாயிரம் கண்களின் கண்ணீர்களின் சாபத்திற்கு அவரும் அவரது அன்றைய தலைவர் மகிந்தராஜபக்சவும் உட்பட்டிருந்தனர்.

போர்களத்தில் நெருங்கிய நண்பர்களான சரத் பொன்சேகாவும் படையில் இருந்து தப்பி ஓடி பின்னர் மகிந்தவின் ஆட்சியின் பின்னர் நாட்டிற்குத் திரும்பி பாதுகாப்புச் செயலர் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற கோத்தபாய ராஜபக்சவும் தமிழின அழிப்பினை ஒருவரை விஞ்சி ஒருவர் முன்னெடுத்தனர். பொன்சேகா போருக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவருக்கு உயரிய பதவிகள், இலங்கையில் யாருக்கும் இல்லாத ஜெனரல் பதவி அனைத்தும் வழங்கப்பட்ட போதிலும், அவர் தொடர்பில் கோத்தபாய ஒரு அச்சநிலையிலேயே இருந்தார் என்பதை பல இடங்களில் அவருக்கு வழங்கப்பட்ட அவமதிப்புக்களின் மூலம் அறியமுடிந்தே வந்துள்ளது.

போர் வெற்றியின் பின்னர் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததன் பின்னர் மகிந்த குடும்பம் உண்மையில் ஆடிப்போயே இருந்தது. தேர்தல் வெற்றியை தமதாக்குவதற்காக எதையும் செய்வதற்கு அது தயாராகவே இருந்தது. காரணம் பொன்சேகாவின் ஜனாதிபதி வருகையானது நேரடியாகவே அமெரிக்காவின் வருகையாகவே இலங்கையில் அமையும் என்பது. மகிந்த குடும்பத்தின் பார்வை மட்டுமல்ல. அமெரிக்க எதிர் நிலை நாடுகளின் போக்குமாகும்.

ஆசியப் பிராந்தியத்தில் எல்லைப் பிரச்சினை தொடர்பில் முறுகல் நிலையில் எதிர்காலத்தில் போர் முகத்தினைக் கூடச் சந்திக்கத் தயாராவதாகக் கருதப்படுகின்ற சீனாவும் இந்தியாவும் மகிந்தவின் நகர்வின் ஊடாக ஒருமித்த கொள்கை நிலையினையே கொண்டிருக்கின்றன. இதே நிலையிலேயே பாகிஸ்தானும் விளங்குகின்றது. சீனா நேரடியாக அமெரிக்காவை எதிர்க்கின்றது. தற்போதைய தலாய்லாமா ஒபாமா சந்திப்புத் தொடர்பில் சீனா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகின்றது. சீனா எதிர் காலத்தில் உலக வல்லரசு என்ற பட்டத்தைத் தனதாக்க வேண்டும் என்ன தீவிர முனைப்பில் ஈடுபட்டுவருகின்றது.

இதே நேரம் பல்வேறு உடன்பாட்டு ரீதியான கொள்கைகளை அமெரிக்காவுடன் இந்தியா கொண்டிருந்தாலும் தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை இந்தியா விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே ரஸ்யாவும் உள்ளது. இந்த இடத்தில் மகிந்த முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு இந்தியாவும் சீனாவும் தம்மாலான முண்டு கொடுப்புக்களை வழங்கியவண்ணமே தற்போதும் உள்ளன.

உலகில் நடைபெற்ற போர் வன்முறைகளில் வரலாற்று ரீதியாகக் குறிப்பிடக் கூடிய மாபெரும் இன அழிப்பினை மேற்கொண்ட ஒருவருக்கு செங்களம்பள வரவேற்புக் கொடுத்து, 200 நாடுகளைச் சேர்ந்த 6000 பேரை அழைத்து அவர்கள் முன்னிலையில் தனது நாட்டின் பிரான பல்கலைக்கழகம் ஒன்றினால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்து, போர்த் தளபாடக் கொள்வனவிற்கென 300 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கிய ரஸ்யா தனது உள்ளார்ந்த ஆத்மார்;த்த பாராட்டினை மகிந்தவிற்கு வழங்கிக் கொண்டிருந்த வேளையே ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு தலைவர் மகிந்தவின் இராணுவத்தினால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, எதிர்கட்சித் தலைவர்களின் முன்னாலேயே இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். இந்த இடத்தில் ரஸ்யாவின் நிலைபாடும் தெளிவாகின்றது.

இந்த இடத்தில் பொன்சேகாவின் அமெரிக்கப் பயணமும் அங்கு அவரை அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்ததாகவும் அதனை எதிர்கொள்ளாது நாடு திரும்பியதாகவும் அவர் ஒரு நாடகத்தினை வெளியிட்டிருந்தார். உண்மையில் அவ்வாறான ஒரு அழைப்பினை அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர் எவ்வாறு நிராகரிக்க முடியும்? என்ற கேள்வி ஆசிய பிராந்திய வல்லரசுகளால் எவ்வாறு எதிர்நோக்கப்பட்டிருக்கும். அவருடைய தேர்தலை நோக்கிய அமெரிக்காவின் நகர்த்தலாகவே தெற்காசிய பிராந்திய நாடுகள் அவரது தேர்தல் வருகையை இலகுவில் நோக்கியிருப்பார்கள்.

ஏற்கனவே போர் இறுதியின் பின்னரும் இலங்கையில் போர்க் குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரின் விவாதத்தினை இந்தியா, சீனா, ரஸ்யா உட்பட்ட நாடுகள் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தடுத்திருந்ததை இந்த இடத்தில் நோக்கலாம். அவ்வாறான அவர்களின் அன்றைய நகர்விற்கான காரணம் போர்க்குற்றங்கள் நிறுவப்பட்டால் அமெரிக்க மற்றும் மேற்குலகின் அடிபணிவிற்கு ஆசியப் பிராந்திய வல்லரசுகள் உட்டதாக மாறிவிடக்கூடாது என்பதே ஆகும்.

ஜனாதிபதித் தேர்தல்ப் பரப்புரைகளின் போதும் அதன் பின்னரும் பொன்சேகா நாட்டை பிளவுபடுத்தப் போவதாக இலங்கையிலும், அமெரிக்காவின் நகர்வுகளுக்கு அமையவே பொன்சேகா செயற்படுவதாக தனது நட்பு நாடுகளிடமும் பூச்சாண்டி காட்டினார். அவரது அந்தப் பூச்சாண்டிப் பரப்புரை வெற்றி பெற்றது. இந்த நாடுகளைப் பொறுத்தவரையில் மகிந்த முன்னெடுக்கும் எந்த நகர்வுகளுக்கும் முண்டு கொடுப்பதாகவே தமது கொள்கைகளை அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்படுவதாக எண்ணிக் கொண்டு உதவிபுரிகின்றன.

போர்காலத்தில் தமக்கான பாரிய ஆயுத வழங்கல்களை மேற்குலக நாடுகள் இடைநிறுத்தியதாக அண்மையில் ஒரு அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தமை நினைவிருக்கலாம். மகிந்தவின் நகர்வுகள் போர்க்காலத்தில் வித்தியாசமானதாகவே அமைந்திருந்தது. போர் தீவிரமாக நடைபெற்ற வேளை பம்பரம் போல் சுழன்று திரிந்த மகிந்தவும், பசிலும் ரஸ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான் உட்பட்ட நாடுகளிடம் தாராள ஆயுதக் கொள்வனவை மேற்கொண்டனர். போரின் போது கொத்துக்குண்டு, மற்றும் இரசாயன வழியிலான எரிக்கும் வல்லமை கொண்ட ஆயுதங்கள் உட்பட்ட எறிகணைத் தாக்குதல்களை ஈவிரக்கமின்றி மேற்கொண்ட போதிலும் அதனைத் தடுத்து நிறுத்த எந்த நாடுகளுக்கும் திராணி இருக்கவில்லை. அல்லது தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க மகிந்தவின் கூட்டு நாடுகள் இடமளிக்கவில்லை.

அதேபோல ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகிய பான்கிமூன் தெரிவு செய்யப்பட்டது கூட சீனாவின் தயவால் தான். அவர் கூட சொந்தச் சகோதரர்களுக்குக் கூட காட்டாத அதி கூடிய விசுவாசத்தை மகிந்தமீது தொடர்ந்தும் மேற்கொண்டே வருகின்றார். இன அழிப்பு தீவிரப்படுத்தப்பட்ட காலம் முதல் தற்போது பொன்சேகா கைதான நேரம் வரை எந்த இடத்திலும் வாய் தவறியேனும் மகிந்தவிற்கு எதிரான நிலைபாட்டினையோ ஏன் கருத்தினையோ வெளியிடவில்லை. இவர் தொடர்பான குற்றச்சாட்டினை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வமான இன்ரர் சிற்றி பிறஸ் என்ற நிறுவம் தொர்ந்தும் முன்வைத்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தனை விடயங்கள் அனைத்தும் நன்குணர்ந்து தனக்கான சரியான சந்தர்ப்பத்தினை அமெரிக்கா எதிர்பார்த்தே வந்துள்ளது. இதற்கு உதாரணமாக சில விடயங்களை நோக்கலாம். போர்த்தீவிர காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்படுகின்ற செய்மதிப்படங்கள், ஜேர்மனியினல் இருந்து சனல் – 4 தொலைக்காட்சியின் ஒளிப்பட வெளியீடு போன்றனவற்றின் பின்னால் அமெரிக்கா இருப்பதனை அவதானிக்கலாம். இன்னும் பொருத்தமான சந்தர்ப்பமாக பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரவேசத்தை மிகவும் சரியாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்கா எண்ணியிருக்க, அதன் பின்விளைவுகளை பிராந்திய வல்லரசுகள் மகிந்தவின் துணை கொண்டு முறியடிக்க முன்வந்திருக்கின்றன. தேர்தல் வெற்றி தொடர்பில் தற்போதும் பல்வேறு சந்தேகங்கள் வெளிவந்தவண்ணமே உள்ளன.

பொன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைய வரும் போது அவர்களையும் குடும்பத்தினரையும் படையினர் சுட்டுக் கொன்றதாக வெளியான குற்றச்சாட்டினை நிராகரித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர் நவநீதம் பிள்ளையிடம் விளக்கமளிப்பதற்காக சிறீலங்காவின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்தசமரசிங்க ஜெனீவா பயணித்த வேளை பொன்சேகா பத்திரிகையாளர் சந்திப்பினை மேற்கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கப் போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார். இந்த நிலையில் அவரது இந்த அறிவிப்புக்குப் பின்னால் அமெரிக்கா செயற்ப்பட்டிருக்கலாம். அல்லது தேர்தலின் பின்னர் தனக்கு நிகழ்ந்து வருகின்ற எதிர்நிலைப்பாடுகளின் விளைவாய் ஆத்திரமடைந்த நிலையில் அவர் இவ்வாறான அறிவித்தலை விடுத்திருக்கலாம். என்று எண்ண முடிகின்றது. இந்த இரண்டு தெரிவில் முதலாவது தெரிவே பொன்சேகாவின் ஊடகச் சந்திப்பிற்கான காரணம் என்றால்.

இன்னொரு நடவடிக்கையினை அமெரிக்கா முன்னெடுத்திருக்குமா, அல்லது நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ரணில்விக்கிரமசிங்க, சோமவன்ச அமரசிங்க ஆகியோர் பொன்சேகாவை ஒரு நடவடிக்கைக்காக உந்தியிருப்பார்களா? என்பதுதான் தற்போதைய கேள்விக்குரிய வியடம். அது என்னவென்றால், பொன்கேசா எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம் என்பது சாதாரண எவருக்கும் தெரியும். அவர் கைது செய்யப்பட்டால் அவரை இறுதிவரையில் யாராலும் சந்திக்கமுடியாத சூழல் கூட நிலவலாம். அவரது போர்க்குற்றச்சாட்டு சாட்சியங்களை ஏற்கனவே பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டுள்ளனவா? அவ்வாறு பதிவிற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் மகிந்தவினதும் அவரது குடும்பத்தினதும் ஏன் அவரது காலை நம்பி நிற்போரதும் எதிர்காலத்தினை மிகவிரைவில் கேள்விக்குள்ளாக்கியிருக்கலாம். இன்னமும் சின்னப் பிள்ளை அரசியல் இலங்கையில் நடத்தலாம் என்று அவர்கள் எண்ணிச் செயற்பட்டிருந்தால் அது அவர்களின் அழிவிற்கு அவர்களே தேடிக்கொண்ட முயற்சியாகக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் பொன்சேகாவின் கைதினை அடுத்து அமெரிக்கா கடும் தொனியிலான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் கிரௌலி கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்கா நிலைமையை அவதானித்து வருகின்றது. அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பதாக அவதானிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். தேர்தலின் போது இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவரது உரிமை தொடர்பில் அந்த நாடு கோரிக்கை விடுத்தால் அதற்கு பதலளிக்க வேண்டிய தேவை மகிந்தவிற்கு இருக்கின்றது. ஆனால் பொன்கேசாவின் குடியுரிமை அடிப்படையிலான நகர்வாக தமது அணுகுமுறை இருக்காது என்று அவர் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் எங்கள் உயிர்கள் கொல்லப்பட்டும், ஏதிலிகளாக்கப்பட்டும், சொத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டும் சூறையாக்கப்பட்டும், வந்தோர்க்கு விருந்தோம்பிய கைகளை கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியவர்களில் ஒருவர் சிறைக்குள் இருப்பது குறித்து தமிழ் உள்ளங்கள் எதுவும் கவலை கொள்வதற்கில்லை. காலப்போக்கில் இன்னமும் இது போன்ற அற்புதங்கள் நிகழ்ந்தேறத்தான் போகின்றன. நிகழ்ந்தேறியே ஆகவேண்டும். நீதி தன் வேலையைத் தானே செய்யும்.

இராவணேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • thondaiman says:

    thamizhina padukolaiglai seidha kayavargalin kabada naadagam idhu. namadhu munneduppugalai dhisaithiruppum velaiai seigiraargal. idherkellam moolai congrass’um adhan kaikooliana karunanidhumdhan.

    February 11, 2010 at 13:00

Your email address will not be published. Required fields are marked *

*