TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா கைது: ராஜபக்சவைக் கொல்ல முயன்றாராம்

ஜெனரல் சரத் பொன்சேகா கைது:
இலங்கை “இராணுவ வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஒழுக்காற்று” நடவடிக்கை

*
நடந்து முடிந்த சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இன்று திடீரெனக் கைது செய்யப்பட்டார். தற்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்கான இரகசியச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என படைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார். இரகசிய இடம் ஒன்றில் வைத்த அவர் விசாரிக்கப்படுகிறார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டபோது பொன்சேகா அவமானகரமாக நடத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கைது செய்த படையினர் தனது கண்களுக்கு முன்னால் தரதரவென இழுத்துச் சென்றனர் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனவரி மாதம் 26ஆம் நாள் நடைபெற்ற குடியரசுத் தேர்தலில் 4 மில்லியன் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா 6 மில்லியன் வாக்குகள் பெற்ற அதிபர் ராஜபக்சவிடம் தோல்வி அடைந்தார். எனினும், தேர்தலில் தானே வெற்றி பெற்றார் என்றும் அது தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது என்றும் தேர்தல் முடிவுகளைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் பொன்சேகா தெரிவித்திருந்தார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாகவும் அவர் சூளுரைத்தார். குடியரசுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையிலேயே அதிபர் ராஜபக்சவைக் கொல்ல பொன்சேகா முயன்றார் என்ற குற்றச்சாட்டு அரச தரப்பால் சுமத்தப்பட்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று தெரிவித்த பொன்சேகா தன்னைப் பழிவாங்குவதற்கான நடவடிக்கையே அது எனவும் கூறியிருந்தார். ன்சேகாவின் சதி முயற்சி என்று அரசு கூறுவது தொடர்பில் அவர் மீது படைய விசாரணை நடத்துவதற்கான சட்ட ஆலோசனையை அரசு கேட்டிருந்தது.

இன்று பகல் பொழுதில் தனது கணவர் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதை பொன்சேகாவின் மனைவி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட போது அவர் தனது அரசியல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். இந்தக் கைது திடீரென நடைபெற்ற நாடகம் என சம்பவத்தை வர்ணித்துள்ள பி.பி.ஸி. கொழும்பு செய்தியாளர் Charles Haviland. இது எதிர்க் கட்சிகளைப் பழிவாங்கும் பெரும் நடவடிக்கையின் ஆரம்பமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி எனவும் கூறி உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக சிறிலங்கா முன்னெடுப்பதற்குக் காரணமாக இருந்த படைத் தளபதி பொன்சேகா. ஆனால், போர் முடிந்த உடனேயே, சதிப் புரட்சியில் ஈடுபடுவார் என்ற சந்தேகத்தில் தரைப் படைத் தளபதி பதவியில் இருந்து அகற்றப்பட்ட அவர், முப் படைகளின் கூட்டு அதிகாரியாக அதிகாரமற்ற பதவி ஒன்றில் அமர்த்தப்பட்டார். போரின் வெற்றி யாருக்கானது என்பதில் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக குடியரசுத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

விரிவான செய்தி ஆய்வு

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதிப்புரட்சி தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றோ அல்லது அடுத்த நாளோ நடைபெறவிருந்ததாக கூறப்படும் சதிப்புரட்சி தொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாகப் பரப்பரப்புடன் வெளியாகின. ஜெனரல் சரத் பொன்சேகாவே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சதிப்புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டதாக அரசாங்கம் கூறிவருகின்றது. இதை அவர் மறுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அரசாங்க, பாதுகாப்புத்துறைகளில் ஒரு இரண்டுபட்ட நிலை தோன்ற ஆரம்பித்திருந்தது. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான அணி, மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான அணி என்ற நிலை உருவாகியிருந்தது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் மீது சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக பாதுகாப்புத் துறைகளில் அவருக்கு ஆதரவாகக் செயற்பட்டவர்கள் அல்லது அவருக்கு நெருங்கமாக இருந்தவர்கள் மீது சந்தேகிக்கப்படுவோராக மாறியுள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த 30ம் திகதி இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய- இராணுவக் கட்டமைப்பில் பல அதிரடி இடமாற்றங்களை அறிவித்தார். இதன் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் வெளியிட்ட அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கிய இராணுவ அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கீழ் இறக்கப்பட்டனர். சுமார் 30 வரையான உயர்மட்ட அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டனர். புனர்வாழ்வுப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2ம் திகதி இலங்கை இராணுவத்தின் 43வது தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக் கொண்டார். சரத் பொன்சேகாவினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவரே இவர்.

அதேவேளை,

சரத் பொன்சேகாவின் கீழ் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜனக வல்கம பாதுகாப்பு அமைச்சின் புனர்வாழ்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் கூட்டு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ பிரதித் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவும் கூட்டுப்படைகளின் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சிறிநாத் ராஜபக்ஸ கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் புலனாய்வுப் பணிப்பாளர் நாயகமாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தொண்டர் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே கூட்டுப்படைகளின் தலைமையக பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியான கையோடு ஓய்வு பெறுமாறு கேட்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சரத் பொன்சேகாவினால் ஓரங்கட்டப்பட்டிருந்த இரு பிரிகேடியர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரிகேடியர் நந்தன ராஜகுரு கிளிநொச்சி படைத் தலைமையக தளபதியாகவும், பிரிகேடியர் சுசில் உடுமல்லகல்லே கிழக்கு படைத்தலைமையக தளபதியாகவும் நியமிக்கபட்டுள்ளனர்.

கிளிநொச்சி படைத் தலைமையக தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க யாழ்.படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் தான் பிலிப்பைன்ஸ்சில் உயர்கல்வியை முடித்து நாடு திரும்பியவர்.நாடு திரும்பியதும்அவர் துணுக்காயில் 65வது டிவிசன் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

சில வாரங்களில் கிளிநொச்சி படைத் தலைமையக தளபதியானார். இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த யாழ்.படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக தொண்டர் படைகளின் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் தீபால் அல்விஸ் பட்டலந்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் பிரதித் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் அத்துல ஜெயவர்த்தன முல்லைத்தீPவு படைகளின் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் முல்லைத்தீவு படைத் தலைமையக தளபதி மாற்றப்பட்டிருப்பது இது மூன்றாவது முறையாகும்.

மேல் மாகாணம் மற்றும் புத்தளம் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடுகேவுக்கு இராணுவ மருத்துவப் படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவரே வன்னி மீதான தாக்குதலை ஆரம்பித்தவர். 57 வது டிவிசனின் முதல் தளபதியாக நியமிக்கப்பட்டு தாக்குதலைத் தொடங்கிய போது- புலிகளின் பதில் தாக்குதலில் படையினருக்கு ஏற்பட்ட சேதங்களை அடுத்து அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சரத் பொன்சேகாவினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இவரே தேர்தல் தினத்தன்று சினமன் லேக்சைட் விடுதி முற்றுகைக்குப் பொறுப்பாக இருந்தார்.

மேஜர் ஜெனரல் லக்சிறி அமரதுங்க 59வது டிவிசன் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்திலும், கூட்டுப்படைகள் தலைமையகத்திலும் முக்கிய பதவிகளை வகித்த சிரேஷ்ட அதிகாரி.

வன்னிப் படைகளின் பதில் தளபதியாகவும் இருந்தவர். ஆனால் இவர் இப்போது ஒரு டிவிசன் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மார்க்ஸ் காலாற்படைகளின் பணிப்பாளராகவும், மேஜர் ஜெனரல் மனோ பேரேரா 11வது டிவிசன் தளபதியாகவும், பிரிகேடியர் குமார் ஹேரத் 65வது டிவிசன் தளபதியாகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இராணுவத் தலைமையக பயிற்சிப் பணிப்பாளராக நியமிக்கப்படடார்.

மேஜர் ஜெனரல் ராஜித சில்வா 58 வது டிவிசன் தளபதியாகவும் நியமிக்கப்பட்ட போதும், அடுத்து சில நாட்களிலேயே ஓய்வு பெறுமாறு கேட்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் நிகழ்ந்த சில தினங்களிலேயே மற்றொரு நடவடிக்கையாக 14 இராணுவ அதிகாரிகள் சேவையில் இருந்து விலகி செல்லும்படி பணிக்கப்பட்டுள்ளனர். அதாவது கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள்.

அவர் இராணுவத் தளபதியாக இருந்த போது இவர்கள் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கட்டாய ஓய்வில் அனுப்பட்ட அதிகாரிகளில் ஐந்து பேர் மேஜர் ஜெனரல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டர் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே, மேஜர் ஜெனரல் ராஜித டி சில்வா, மேஜர் ஜெனரல் ஜெயநாத் பெரேரா, மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன, பிரிகேடியர் டயஸ், பிரிகேடியர் ஹெனிடிகே, பிரிகேடியர் மகோற்றி, பிரிகேடியர் குமாரப்பெரும, கேணல் அபயவர்த்தன, லெப்.கேணல் ஜெயசுந்தர, கப்டன் ரணவீர, கப்டன் கிரிஷாந்த ஆகியோரே கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களை விட மேலும் ஒரு தொகுதி படைஅதிகாரிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளோரின் பட்டியலில் உள்ளனர்.

சரத் பொன்சேகா அரசியலில் இறங்க எடுத்த முடிவை அடுத்து பாதுகாப்புத் தரப்புக்குள்; ஏற்பட்டுள்ள இந்த இரண்டுபட்ட நிலையை நீக்குவதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் வரும் காலத்தில் பாதுகாப்புத் தரப்பின் தலையீடுகளை அரசியலுக்குள் குறைத்துக் கொள்ளவும் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த வாரம் நடந்த சுதந்திரதின நிகழ்வுகளில் படைபலத்தை வெளிப்படுத்தும் எந்த நிகழ்வுகளும் நடத்தப்படவில்லை.

சாதாரண அணிவகுப்பு நிகழ்வுகளே நடைபெற்றிருந்தன. ஆயுத தளபாடங்களைக் காட்சிப் படுத்தும் அணிவகுப்புகள் இடம்பெறவில்லை.

அதேவேளை தற்போது இராணுவக் கட்டமைப்பில் இடம்பெற்று வரும் மாற்றங்கள் எதிர்வரும் வாரங்களில் மேலும் தொடரும் எனவும் தெரிகிறது. காரணம், இதுபற்றிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் அரசாங்கம் இந்த விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்படவே முற்படும்.

இலங்கை இராணுவதின் வரலாற்றில் ஐந்து மேஜர் ஜெனரல்கள், ஐந்து பிரிகேடியர்கள் என பத்து உயர்நிலை அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டது இதுவே முதல் முறை.

1999 இல் வன்னியில் புலிகளின் தாக்குதல்களால் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா உள்ளிட்ட ஏழு அதிகாரிகளை அரசு கட்டாய ஓய்வில் அனுப்பியிருந்தது. அதற்குப் பி ன்னர் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஒழுக்காற்று நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

பின்னிணைப்பு

கேள்விக்குறியாக மாறியிருக்கும் சரத் பொன்சேகாவின் எதிர்காலம்

காணொளி இணைப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*