TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்மக்களுக்குத்,: தலைமை தாங்க ஆசைப்படும் தலைமை

தமிழ்மக்களுக்குத்,:
தலைமை தாங்க ஆசைப்படும் “தலைமைகளுக்கு” புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது தமிழினம்….

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே வாக்களித்துள்ளனர்.

ஆகக் குறைந்த வாக்களிப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தான் பதிவாகியுள்ளது. அங்கு வாக்களித்தவர்கள் வெறும் 25.66 வீதத்தினர் தான். அதில் 3.65 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது வாக்காளர்களின் தவறினால் ஏற்பட்டதல்ல. ஏனென்றால் நாடு முழுவதிலும் ஒரு வீதத்துக்கும் குறைவான வாக்குகள் தான் நிராகரிக்கப்பட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தில் 6763 பேர் அதாவது வாக்களித்தவர்களில் 6 வீதத்துக்கும் அதிகமானோர் தமது வாக்குகளை நிராகரித்திருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற வகைக்குள் அடக்கப்படக் கூடியதே. இந்தவகையில் யாழ்ப்பாணத்தில் செல்லுபடியான வாக்குகள் 22 வீதம்; தான். இதுதான் உண்மையான வாக்களிப்பு என்ற கணக்குக்குள் அடக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் 72 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில்- வெறும் 22 வீதமானோர் மட்டுமே இந்தத் தேர்தலில் பங்கேற்றனர். வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொண்ட ஏனைய 50 வீதமான மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை- வாக்களிக்கச் செல்லவும் இல்லை. இது முக்கியமானதொரு விடயம். இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பது முக்கியமான விடயமல்ல. எவ்வளவு வீதமானோர் வாக்களித்தனர் என்பதே முக்கியமானது.

வடக்கு, கிழக்கில் சராசரியான அளவுக்குக் கூட வாக்களிப்பு இடம்பெறவில்லை. குறிப்பாக தமிழ்மக்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவேயில்லை என்பது தான் உண்மை. முஸ்லிம்கள், சிங்களவர்கள் அதிகளவில் வாகளித்தால் தான், கிழக்கு மற்றும் வன்னியில் வாக்களிப்பு வீதம் சற்று அதிகமாக இருந்தது. பெரும்பான்மையான தமிழ்மக்கள் வாக்களிப்பை புறக்கணித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்கள் ஏன் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இந்தத் தேர்தலின் ஊடாகத் தமிழ்மக்கள் சொல்லியருக்கும் செய்தி அதைவிட முக்கியமானது.

* சரத் பொன்சேகாவும், மகிந்த ராஜபக்ஸவும் தமிழ் மக்கள் மீது மிகவும் கொடுமையான போரை நடத்தியவர்கள். அவர்களில் யார் நல்லவர் என்று தீர்மானிப்பதற்குத் தாங்கள் தயாரில்லை என்பதை இருவருமே மன்னிக்கத்தக்க பேர்வழிகள் அல்ல என்பதையே இந்தத் தேர்தலின் மூலம் தமிழ்மக்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.

* எல்லாப் பழி,பாவங்களையும் செய்து விட்டு நல்லூரின் வாசலில் போய் சட்டையைக் கழற்றி விட்டு நின்றால் தமிழ்மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற சிங்கள அரசியல் சக்திகளின் நப்பாசை மீது மண் போடப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவான பதிலை எடுத்துக் கூறியுள்ளனர்.

மறப்போம்- மன்னிப்போம் என்ற தொனியில் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் துதி பாடிக் கொண்டு தூக்குக்காவடி எடுத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ்மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கிறார்கள். இயல்பாகவே யாழ்ப்பாண மக்கள் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் நாட்டம் காட்டுவதில்லை. இதுதான் வரலாறு.

அந்த வரலாற்றை மாற்றுவோம் என்று கூறிக் கிளம்பிய பழுத்த தமிழ் அரசியல் தலைமைகள் பேரம் பேசுகிறோம் என்று கூறிக் கொண்டு செய்த காரியத்தை தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமக்குள்ளே கூட மனம்விட்டுப் பேசிக் கொள்ளாமல்- மக்கள் என்ன நினைக்கிறார்கள்- என்ன பேசுகிறார்கள் என்பதையே தெரிந்து கொள்ளாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதன் விளைவு தான் இந்தத் தேர்தல் முடிவு. யார் யாரையோ திருப்திப்படுத்திக் கொள்வதற்காக முடிவுகளை எடுத்து விட்டு, அதைத் தமிழ்மக்கள் மீது திணிக்க முயன்ற இப்போதைய தமிழ்த் தலைமைகளுக்கு இது ஒரு வரலாற்றுப் பாடமாக அமைந்துள்ளது.

* கடந்த தேர்தலைப் புறக்கணிக்க புலிகள் எடுத்த முடிவு தவறானதெனக் கூறி எல்லாப் பழியையும் அவர்கள் மீது போட்டுத் தப்பிக்க முயன்றவர்கள் இந்தமுறை எடுத்த முடிவு மட்டும் சரியானதாக அமைந்ததா?

* அவர்கள் நினைத்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடிந்ததா?

எதுவுமே நடக்கவில்லை.

அணி சேரப் போய், தமிழ்மக்களை, ஓரங்கட்டப்பட்ட ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு நிலைக்குள் தள்ளிவிட்டது தான் மிச்சம். இந்தத் தேர்தலில் பெரும்பாலான தமிழ்மக்கள் வாக்களிக்கச் செல்லாததற்கு எத்தனையோ நியாயங்களைக் கூறுகின்றனர். ஆனால் வாக்களிக்க வேண்டும் என்று நினைத்த எவருமே இந்தமுறை வாக்களிக்க முடியாது போனது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவைப் புலிகள் எடுக்காது போயிருந்தாலும், தமிழ்மக்கள் இதுபோன்ற முடிவைத் தான் எடுத்திருப்பார்கள் என்பதையும் இந்தப் பழுத்த அரசில்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு எதிரான போரை நடத்திய இரண்டு பிசாசுகளில் எது நல்லது என்று தெரிவு செய்ய வேண்டியதொரு சிக்கலான கட்டம் ஏற்பட்ட போது இரண்டுமே வேண்டாம் என்ற முடிவுக்கே பெரும்பாலான மக்கள் வந்திருக்கிறார்கள்.

* இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் அதிகளவில் வாக்களிக்காது போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது முடிவு செய்ததோ அப்போதே அது தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்பது உறுதியானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறினால் என்ன- யார் வந்து கூறினாலும் தமது முடிவு இது தான் என்பதை தமிழ்மக்கள் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கும்போது வெளியே இருக்கும் சக்திகளை திருப்திப்படுத்த முனைந்தாலோ அல்லது தென்னிலங்கை சிங்கள சக்திகளின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தாலோ என்ன நடக்கும் என்பது இந்தத் தேர்தல் முடிவில் தெரியவந்திருக்கிறது. இது தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பாடம் மட்டுமல்ல. ஈபிடிபி, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், கருணா போன்றவர்களுக்கும் கூட இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவான பதிலைக் கூறியிருக்கிறார்கள். கூடாத கூட்டுக் சேர்ந்தால் என்ன நடக்கும் என்று எடுத்துச் சொல்லியுள்ளனர். தமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் நடத்த முனைந்தால் என்ன நடக்கும் என்பதை- தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க ஆசைப்படும் சக்திகள் அனைத்தும் இந்தத் தேர்தலின் மூலமாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லூரில் நடத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் கூட்டத்தில் விடுதலைப் போரில் மரணித்த மாவீரர்களுக்கு மௌன வணக்கம் செலுத்தியிருந்தது. இது மிகவும் கேவலமான- அரசியல் இலாபம் தேடும் முயற்சியாகும். மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஆயிரக்கணக்கான மாவீரர்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்தவர் சரத் பொன்சேகா. அவருக்குக் கொடி பிடிக்கும்- வாக்குப் போடுமாறு கோரும் கூட்டத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலை சரியான முறையில் பேரம் பேசுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தேர்தல் புறக்கணிப்பு ஒன்றின் ஊடாக-தமிழ் மக்களின் விருப்பங்களை வெளியுலகுக்குச் சொல்வதற்கு கூட்டமைப்பு முடிவு செய்திருந்தால், அதற்கு கடந்த முறை போன்று இம்முறையும் தமிழ் மக்கள் ஆதரவைக் கொடுதிருப்பார்கள். அந்தச் செய்தியை சர்வதேசம் ஏதோ ஒரு வகையில் புரிந்து கொண்டிருக்கும்.

இரு பிரதான சிங்கள வேட்பாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளை அவர்களின் வாக்குகளுக்காக அரவணைக்க முனைந்தனரே தவிர- தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற வாக்குறதியைக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. இதை வைத்தே சர்வதேசத்தின் முன்பான தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வைத் தரும்படியான புதியதொரு போராட்டத்துக்கான அடித்தளத்தை இட்டிருக்க முடியும். அதற்கு புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவையும் பெற்றிருக்க முடியும். அவையெல்லாம் இப்போது கானல் நீராகிப் போயுள்ளன. அதுமட்டுமன்றி எப்போதுமே தமிழ்மக்கள் கொழும்பின் ஆட்சியைத் திர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியாது என்பதை சிங்கள மக்கள் இந்தத் தேர்தலில் உறுதியாக எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்தத் தேர்தல் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியை மட்டும் தெரிவு செய்யவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கு- எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்குத் தலைமை தாங்க ஆசைப்படும் தலைமைகளுக்கு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இனிமேலாவது அவர்கள் சரியான வழியில் நடக்க முனைய வேண்டும். இல்லையேல் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் வரப் போகின்ற பொதுத்தேர்தலிலும் தமிழ்மக்கள் அவர்களுக்குத் தண்டனை கொடுக்கத் தயங்கமாட்டார்கள்.

தொல்காப்பியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*