TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை அரசியலில் எதிர்நீச்சலிட்ட ஒரு தலைவரான

இலங்கை அரசியலில் எதிர்நீச்சலிட்ட ஒரு தலைவரான தோழர் என். சண்முகதாசன் பற்றிய நினைவுப் பதிவு …
இன்றைய சமூக, அரசியல் வாழ்வின் அவலத்தின் மத்தியில் சண்முகதாசன் பற்றிய நினைவு …

பாராளுமன்ற அரசியல் ஒரு சறுக்குப்பாதை. அதையே தமது அரசியல் மார்க்கமாக முன்னெடுத்த எல்லா இடதுசாரிகளும் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர். சிலர் எப்படியாவது தமது பாராளுமன்ற இருப்பைப் பேணிக் கொள்வதற்காக எவ்விதமான கீழ்த்தனமான அரசியலிலும் இறங்கத் தயங்காமல் தம்மை சீரழித்துக்கொண்டார்கள். இன்றைய பாராளுமன்ற இடதுசாரிகள் எல்லோரும் அத்தகைய ஒரு பாரம்பரியத்துக்குரியவர்களே.

1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற இடதுசாரிகள் தமது முகவரியைத் தொலைத்துக் கொண்டனர். அதன் பின்பு அவர்களுக்கு மீட்சியே இல்லாதவாறு பேரினவாத முதலாளியக் கட்சியொன்றின் ஒரு பகுதியாகவே அவர்கள் ஆகிவிட்டனர். எனினும், அவர்களையும் இடதுசாரிகள் என்கிறார்கள். இடதுசாரிக் கோஷங்களை எழுப்பி பேரினவாதத்தை முன்னெடுத்து இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஏறத்தாழ 1 இலட்சம் உயிரிழப்புகளுக்கு வழிசெய்து இன்று பேரினவாதத்தை விட வேறு எதுவுமே இல்லாத ஜனதா விமுக்தி பெரமுனயை (ஜே.வி.பி.) யும் இடதுசாரிக் கட்சி என்கிறார்கள். அவ்வாறு சொல்வோர் இடதுசாரிகளை விரும்புவோர் அல்ல. பெருமளவும் வெறுப்பவர்களே. எனவே தான் ஏமாற்றுக்காரர்களை இடதுசாரிகள் என்கிறார்கள். இந்த அவலத்தின் நடுவேதான் புதிய நம்பிக்கைகளைத் தேடுகிறோம்.

உலகச் சூழல் புதிய நம்பிக்கைகளை வழங்குகிறது. தென்னாசியச் சூழல் புதிய நம்பிக்கைகளை வழங்குகிறது. இலங்கையிலும் அதற்கான வாய்ப்புகள் உருவாகிவருகின்றன. எனினும், இன்னும் சில காலத்திற்காவது கடுமையான எதிர் நீச்சல் தேவைப்படுகிறது. இந்த நிலைமைகளின் கீழ்தான் இடதுசாரி இயக்கம் ஒரு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கிய போது எதிர்நீச்சலிட்ட ஒரு தலைவரான தோழர் என்.சண்முகதாசனை நினைவு கூருகிறோம்.

தோழர் சண்முகதாசனின் நினைவு தினம் பெப்ரவரி 8 ஆம் திகதியாகும். இலங்கையின் இடதுசாரி இயக்கத்தில் திறமையும் செயலூக்கமும் மிக்க ஒரு தொழிற்சங்கவாதியாகவும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பிய அமைப்பாளர்களில் முக்கியமான ஒருவராகவும் இருந்து மார்க்சிய தத்துவார்த்த விவாதங்களில் தளராமல் போராடி மார்க்சிய லெனினியத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவரான தோழர் சண்ணின் பெருஞ் சிறப்பு அவரது கொள்கைப் பற்றும் மன உறுதியும் அரசியல் நேர்மையும் எனலாம்.

சமசமாஜக் கட்சியிலிருந்த ட்ரொட்ஸ்கியக் குழுவொன்றின் சூழ்ச்சியால் வெளியேற்றப்பட்டவர்கள் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் இளமையிலேயே இணைந்த தோழர் சண்முகதாசன் அக்கட்சியின் சிந்தனையாளர்களுள் முக்கியமான ஒருவராகத் தன்னை விரைவிலேயே அடையாளப்படுத்திக் கொண்டார். அதனால் ட்ரொட்ஸ்கியத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தில் தோழர் சண்ணின் மார்க்சிய ஆய்வுத் திறன் பட்டை தீட்டப்பட்டது. அது ட்ரொட்ஸ்கியவாதிகளின் வரலாற்றுத் திரிப்பையும் அரசியல் வெறுமையையும் அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் திரிபுவாதம் தலையெடுத்து பாராளுமன்றப் பாதையாக சோவியத் யூனியனின் திசைதவறிய தலைமையால் ஊக்குவிக்கப்பட்ட போது தோழர் சண் கட்சிக்குள் நடத்திய தத்துவார்த்தப் போராட்டத்திற்கு ஈடுகொடுப்பதற்கு கட்சியின் திரிபுவாதத் தலைவர்களால் முடியவில்லை. தோழர் சண் கட்சியின் கீழ் மட்டங்களிலும் தொழிற்சங்க இயக்கத்திலும் அந்த விவாதத்தை திறமையுடன் கொண்டு சென்றதன் விளைவாக கட்சியின் உறுப்பினர்களிலும் தொழிற்சங்க உறுப்பினர்களிலும் பெரும்பாலானவர்கள் அவருடனேயே சென்றனர்.

தோழர் சண்முகதாசனை நேர்மையாகப் போராடி முறியடிக்க இயலாத நிலையிலே திரிபுவாத (பாராளுமன்றவாத) கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் பேரினவாதத்தைப் பயன்படுத்த முற்பட்டனர். அது அப்போது வெற்றியளிக்கா விட்டாலும் சோவியத் யூனியனில் இருந்து விரட்டப்பட்ட, ஒரு மார்க்சியலெனினிய புரட்சிவாதியாகத் தன்னைக் காட்டிக் கட்சிக்குள் ஊடுருவிய ரோஹண விஜேவீரவால் கட்சியின் இளைஞர் அணிக்குள் பேரினவாத விதைகளைத் தூவ முடிந்தது. 1966 ஆம் ஆண்டு விஜேவீரவின் பேரினவாதச் சூழ்ச்சி அம்பலமானது. அதன் பின்விளைவாக ஏற்பட்ட பல்வேறு பிளவுகள் மார்க்சிய லெனினியத்தை முன்னெடுத்த தோழர் சண்ணின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியை சற்றே பலவீனப்படுத்தின. அதேவேளை, தேசிய மட்டத்தில் திரிபுவாதிகளும் ட்ரொட்ஸ்கியவாதிகளும் பேரினவாத அரசியலுக்கு ஒத்தூதத் தொடங்கினர். இச் சூழலில் மார்க்சியலெனினிய கம்யூனிஸ்ட் கட்சி இழைத்த சில தவறுகள் காரணமாக சந்தர்ப்பவாதிகளாலும் பேரினவாதிகளாலும் அக்கட்சிக்கு குழிபறிக்க முடிந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சோசலிச ஆட்சியைக் கொண்டுவருவதாக வீரம் பேசிய திரிபுவாத கம்யூனிஸ்ட்டுகளும் சமசமாஜக் கட்சியினரும் தங்களிடம் எஞ்சியிருந்த சோசலிசத்தையும் தொலைத்து ஜே.ஆர்.ஜெயவர்தனவின் தலைமையில் நாடு அழிவுப் பாதையில் போக வழிசெய்தனர். அதன் விளைவுகளை கடந்த 32 வருடங்களாக நாடு அனுபவித்துள்ளது.

இன்று நாட்டிற்கு ஒரு புதிய பாதை தேவை என்பது மக்களுக்கு மெல்ல மெல்லத் தெளிவாகி வருகிறது. எனினும், மக்களைத் திரும்பவும் பாராளுமன்ற அரசியல் சந்தர்ப்பவாதத்தினுள்ளும் கருத்துள்ள எந்த அரசியல் அடிப்படையுமற்ற கூட்டணிக்குள்ளும் கொண்டு செல்கிற அரசியலிலேயே பழைய இடதுசாரிப் பாரம்பரியமும் “சிவப்புப் பேரினவாத ஜே.வி.பி.யும் குறுந்தேசியவாத அரசியல்வாதிகளும் சிக்குண்டு கிடக்கின்றனர். இவர்களால் நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சி அல்லா விட்டால் இன்னொரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஏகாதிபத்தியத்திற்கும் பிராந்திய மேலாதிக்கத்திற்கும் அடிமைப்படுத்த இயலுமை ஒழிய எவ்வகையான விடிவுக்கும் வழிகாட்ட இயலாது.

எனவே தான் ஒரு மூன்றாவது பாதைக்கான தேடல், கட்சி தாவியும் அணிதாவியும் அமைகிற பேரினவாதத் தலைமைகளின் கீழான இரண்டு கூட்டணிகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டியுள்ளது. அதற்கான தலைமைத்துவம் எந்தவிதமான வர்க்க சமரசமும் சந்தர்ப்பவாத விட்டுக்கொடுப்பும் அற்றதாக அமையவேண்டியுள்ளது. அதை எண்ணும்போது அர்ப்பணிப்பு மிக்க பல மார்க்சியலெனினியத் தலைவர்கள் மனதிற்கு வருவார்கள். ஒவ்வொருவர் மனதிலும் தவறாமல் வருகிற ஒருவராகத் தோழர் சண்முகதாசன் இருப்பார்.

தோழர் சண் என்றுமே பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டிலிருந்து விலகாதவர். தொழிலாளர் போராட்டங்களில் உறுதியான நிலைப்பாட்டுடன் போராடும் அதேவேளை, தொழிலாளர்களின் போராட்ட ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்காக விட்டுக்கொடுப்புகளுக்கும் ஆயத்தமானவர். மலையகத்தில் 1947 இற்குப் பிறகு இடதுசாரித் தொழிற்சங்கங்களின் வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டது. அந்த இருண்ட சூழலில் செங்கொடிச் சங்கம் என அறியப்பட்ட இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஒரு வர்க்க உணர்வும் அரசியல் விழிப்புணர்வும் கொண்ட போராட்ட சக்தியாக வளர்த்தெடுத்ததில் அவரது தலைமைத்துவத்தின் ஒரு பண்பு முக்கியமானது. அவர் நியாயமான ஊதியத்திற்காக முன்னெடுத்த போராட்டம் அன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் காட்டிக்கொடுக்கப்பட்டது போல இன்றுவரை நடந்துவந்துள்ளது. எனினும், செங்கொடிச் சங்கத் தலைமை ஒருசிலரால் கடத்திச் செல்லப்பட்டு சீரழிக்கப்பட்ட துரோகம் மலையகத்தில் இடதுசாரி இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு மட்டுமல்ல மலையகத்தை முற்றுமுழுதாகவே ஏமாற்றுக்காரத் தலைமைகளிடம் பறிகொடுத்த காரியமுமாகிவிட்டது.

இன்று இலங்கையின் சமூக, அரசியல் வாழ்வின் அவலத்தை நோக்கும் போது தோழர் சண்ணும் அவரை ஒத்த சீரிய மார்க்சிய, லெனினியத் தலைவர்களும் நம்மிடையே இல்லாமையைத் தான் நினைத்துக்கொள்கிறேன்.

தோழர் சண்ணிடம் குறைபாடுகள் இருந்தன. ஏனெனில், அவர் எல்லோரையும்போல ஒரு மனிதர். ஆனால், அக்குறைபாடுகளில் அரசியல் நேர்மையீனம், பொருளாசை, வஞ்சகம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான துரோக சிந்தனை, தடுமாற்றம் என்பன நிச்சயமாக மருந்துக்கும் இல்லை.

கடந்த 30 ஆண்டு கால இலங்கை அரசியல் வரலாற்றை நோக்கும் போது இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் சரிவு நமது அரசியல் தலைமைத்துவத்தின் இழிநிலைக்கு எத்தகைய பங்களித்துள்ளது என்பது விளங்கும். எங்கள் இளைய தலைமுறையினர் தோழர் சண்முகதாசனின் அர்ப்பணிப்பையும் ஒடுக்கப்பட்டோரின் விடிவும் விடுதலையும் பற்றிய ஆர்வத்தையும் பின்பற்ற முற்பட்டால் இலங்கை ஒரு புதிய நாடாகும்.

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர முன்னோடியான என். சண்முகதாசனின் 17 ஆவது நினைவு தினம் பெப்ரவரி 8 ஆம் திகதியாகும்.அவர் நினைவாக இன்றைய தினம் இக்கட்டுரை பிரசுரமாகிறது.

கொழும்பிலிருந்து ஆதவன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*