TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தோல்வியில் முடிந்த தேர்தல் இராஜதந்திரம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் முடிவுகளை எடுத்த கட்சிகளின் நிலை தப்பானதாக அமைந்து விட்டது. இதைத் தான் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.இந்தத் தேர்தலை தமிழ்க் கட்சிகள் பயன்படுத்திக் கொண்ட விதம் மிகமோசமான விளைவுகளுக்குக் காரணமாக அமைந்து விடுமா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

முன்னேப்போதும் இல்லாத வகையில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்தத் தேர்தலில் அணிசார்ந்து நின்றன.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இப்படியானதொரு நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் எடுத்தது- பிரதான வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் இறங்கியது இதுவே முதல் தடவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தன. ஈபிடிபி, இதொகா, மலையக மக்கள் முன்னணி, புளொட், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பன மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்தன.இரு தரப்புகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியதுடன் தாம் சார்ந்த வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காகப் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டன.

* ஆனால் தேர்தல் முடிவு தமிழ்க் கட்சிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்து விட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்ற சரத் பொன்சேகா தோல்வியைத் தழுவிவிட்டார்.அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு கொடுத்த போதும் பெரும்பான்மையான தமிழ்மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லை.

அடுத்து, ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இதொகா, மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் ஆதரித்த மகிந்த ராஜபக்ஸவுக்கு வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் தோல்வி ஏற்பட்டது. இந்தப் பகுதிகளில் மகநித ராஜபக்ஸவுக்கு மிகக் குறைந்தளவிலான வாக்குகளே கிடைத்துள்ளன. அந்தவகையில் தமிழ்க் கட்சிகளின் ஒட்டுமொத்த தேர்தல் இராஜதந்திரமும் தோல்வி கண்டிருக்கிறது.

சரத் பொன்சேகா தமிழ்ப் பகுதிகளில் வெற்றி பெற்றதற்காக கூட்டமைப்போ, மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதற்காக ஏனைய தமிழ்க் கட்சிகளோ, பெருமைப்பட முடியாத நிலையில் உள்ளன. காரணம் ஒருவர் தேசிய அளவில் தோல்வி கண்டுவிட்டவர். அடுத்தவர் தமிழ்ப் பகுதிகளில் தோல்வி கண்டவர். இந்த நிலையால் இலங்கையின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்மக்களே இருப்பதாக கூறப்பட்டு வந்து மாயை உடைக்கப்பட்டு விட்டது.

இதை வைத்துப் பேரம் பேசுவதற்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளும் சிதைக்கப்பட்டு விட்டன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக சூரிச்சில் ஒரு மாநாடு நடைபெற்றிருந்தது. அந்த மாநாபட்டில் அனைத்து தமிழ்பேசும் கட்சிகளையும் ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மாநாட்டின் நோக்கம் சரியானதென்றோ தவறானதென்றோ இங்கு நாம் கூறவரவில்லை. ஆனால் அனைத்துத் தமிழ்பேசும் கட்சிகளினதும் ஒற்றுமை என்பது மிக முக்கியமானது. அதன் ஊடாகத் தான் எதையும் சாதிக்க முடியும். அது இந்தத் தேர்தலில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சூரிச் மாநாட்டுக்குப் பிறகு அதன் ஏற்பாட்டிலோ அல்லது தன்னிச்சையாகவோ இணைந்து செயற்பட தமிழ்பேசும் கட்சிகள் முன்வந்திருந்தால், இந்தத் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருக்கலாம். தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்மக்கள் உருவெடுத்திருப்பார்கள் என்ற கற்பனைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் வெளியுலகுக்கு ஒரு செய்தியை சொல்வதற்கான களத்தை உருவாக்கியிருந்திருக்கலாம். தமிழ்மக்களின் எண்ணங்கள் எத்தகையதென்று வெளிப்படுத்தியிருக்கலாம். அந்த வாய்ப்பை அனைத்துத் தமிழ்க் கட்சிகளுமே தவறவிட்டு விட்டன.

அணிசார்ந்து- பிரிந்து நின்றால் ஒன்றுமே மிஞ்சாது என்பதற்கு இன்றைய நிலை உதாரணமாகியிருக்கிறது. இப்போது அனைத்துத் தமிழ்க்கட்சிகளுக்கும் உள்ள செல்வாக்கு தெளிவாகப் புரிந்து விட்டது. சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டபைப்பும் ஒரு காரணம். ஆனால் அதைவிட மகிந்த ராஜபக்ஸ அரசின் மீதான வெறுப்பே பிரதான காரணமாக அமைந்தது என்பது மிகையான கருத்தல்ல.

அரசின் செயற்பாடுகளின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு இருந்த ஒரு தெரிவு இதுதான். அதேவேளை கூட்டமைப்புக்காகவும் குறிப்பிடத்தக்க வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தன. அப்படி வாக்களித்த போதும் எந்தப் பயனையும் தமிழ்மக்கள் அனுபவிக்கப் போவதில்லை. தீருமானிக்கும் சக்தி என்ற தகைமை இப்போது பறிபோயிருக்கிறது. அணிசாரந்து நின்றதால் தமிமக்கள்pன பிரச்சனைகள் துஸக்கிவீசப்படக்கூடிய சூழைல உருவாக்கபடடுள்ளது.

* பேரம் பேசுதல் என்பது இப்போது நடக்கவே முடியாத காரியமாகியிருக்கிறது. இவற்றைவிட சர்வதேச அரங்கில் பல முரண் விளைவுகளையும் இந்தத் தேர்தல் முடிவு ஏற்படுத்தப் போகிறது. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு கொடுத்த ஆதரவைக் கொண்டு, அவர் தன் மீதுள்ள கறைகளைப் போக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்.

போரில் தமிழ்மக்கள் மீது புரியப்பட்ட அத்தனை கொடுமைகளுக்கும் சரத் பொன்சேகாவும் ஒருவகையில் பொறுப்பாளியாக இருந்தவர். அவரைத் தமிழ்மக்கள் ஆதரித்திருப்பது- அங்கீகரித்திருப்பது சர்வதேச அரங்கில் ஒரு மதிப்பு மிக்க மனிதராக உயர்திக் காண்பிக்கவே உதவியுள்ளது. தமிழ் மக்கள் அவரை மன்னித்து விட்டார்கள் என்றோ- அவர் எதையும் செய்யாதவர் என்றோ கருதப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில் ஜனநாயக ரீதியான தேர்தல் முடிவுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பவை. மக்களின் கருத்தை தேர்தலின் மூலம் தீர்மானிப்பவை. எனவே சரத் பொன்சேகா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் போகிறார். அதற்குத் தமிழ் மக்களைத் துணைபோக வைத்திருக்கின்றன தமிழ்க் கட்சிகள். இன்னொரு வகையில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஸவின் கொள்கைகள், கடந்த காலச் செயற்பாடுகளை முற்றாகவே நிராகரித்துள்ளனர். அதேவேளை தமிழ்க் கட்சிகளின் தவறான முடிவுகளின் விளைவாக தமிழ் மக்கள் இப்போது கறிவேப்பிலை போலத் தூக்கியெறியப்படும் நிலைக்குள்ளாகியிருக்கின்றனர்.

வரும் காலத்தில் தமிழ் மக்களின் சார்பாக எடுக்கப்படக் கூடிய எந்த முடிவின் மீதுமே இந்தத் தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்துப் போகிறது. சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் விருப்பங்கள்- அபிலாஷைகளை எடுத்துச் சொல்வதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பைத் தமிழ்க் கட்சிகள் தொலைத்து விட்டு நிற்கின்றன. இதுபோன்ற வாய்ப்பு இன்னொரு தடவை கிடைக்குமா என்பது சந்தேகமே.

கொழும்பிலிருந்து ஹரிகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*