TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக…..

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக அமைந்து விட்ட ஜனாதிபதித் தேர்தல்
ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் முரணான வகையில் நடந்தேறியிருக்கிறது.

வன்முறைகள் அதிகம் நிகழும் என்ற எதிர்பார்ப்பு, நெருக்கமான போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு, சிறுபான்மையினரே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பர் என்ற எதிர்பார்ப்பு, ஆட்சிமாற்றம் நிகழலாம்- நிகழ்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு, தமது நிலைப்பாடுகளைத் தமிழ் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பர் என்ற தமிழ்க் கட்சிகளின் எதிர்பார்ப்பு- இப்படி எத்தனையோ எதிர்பாரப்புகள் மீது இந்தத் தேர்தல் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

தேர்தலுக்கு முந்திய கடைசி நாட்களில் மகிந்த ராஜபக்ஸ முன்னணியில் இருப்பதை தெளிவாகவே உணர முடிந்தது. வெளியான கருத்துக்கணிப்புகள் பலவும் அதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்த போதும், அவை ஆட்சியில் இருக்கும் தரப்பினால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் என்றே பலரும் நம்பினரே தவிர உண்மையை விளங்கிக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. பலமானதொரு கூட்டணியை அமைத்து மகிந்த ராஜபக்வைத் தோற்கடிக்கலாம் என்று புறப்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் பலத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

2005ம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் கடும்போட்டி இருந்தது. அதைவிடவும் கடுமையான- நெருக்கமான போட்டி இந்தத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவானதொரு பெரும்பான்மையை வெளிப்படுத்தியுள்ளன. ஆங்காங்கே சில தேர்தல் வன்முறைகள் பற்றிய புகார்கள் இருந்தாலும், அவை ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவளவுக்கு வலுவானதாக இருக்கவில்லை என்பது வெளிப்படை.

மகிந்த ராஜபக்ஸவுக்கு தென்னிலங்கை மக்கள் அமோக ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் ஜேவிபி- ஐதேக கூட்டணி பொருந்தாத திருமணம் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் ஜேவிபி- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக்கு இருந்த ஆதரவு, இந்தமுறை ஐதேகவுடன் வைக்கப்பட்ட கூட்டுக்கு கிடைக்கவேயில்லை. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்த வாக்குகள் கூட இந்தமுறை சரத் பொன்சேகாவுக்குக் கிடைக்கவில்லை என்பது தான்.

கடந்தமுறை சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் வாக்குகளால் தான் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். ஆனால் அதைவிட பத்து மடங்கு வாக்குகளால் இந்தமுறை சரத் பொன்சேகா தோல்வியடைந்திருக்கிறார். கடந்த முறை ஐதேக பெற்ற வாக்குகளை விடவும் 5 இலட்சம் வாக்குளைக் குறைவாகவே சரத் பொன்சேகா பெற்றிருக்கிறார். இந்தளவுக்கும் பலமானதொரு கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. பரந்துபட்ட அளவில்- பலமானதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கிய போதிலும் இந்தத் தேர்தலில் சரத் பொன்சேகாவினால் வெற்றிபெற முடியவில்லை.

சரத் பொன்சேகா இந்தளவுக்கேனும் வாக்குளைப் பெற்றதற்குக் காரணம் தமிழ், முஸ்லிம் மக்கள்; செறிவாக வாழும் பகுதிகளில் கிடைத்த வாக்குகள் தான்.
வடக்கு, கிழக்குப் பகுதி மாவட்டங்களிலும், மலையகத்தின் நுவரெலியவிலும் தான் சரத் பொன்சேகாவினால் வெற்றிபெற முடிந்தது. தொகுதி ரீதியாகப் பார்த்தால் தெற்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அவரால் வெற்றி பெறமுடிந்தது. தென்னிலங்கையில் ஜேவிபியும் ஐதேகவும் இணைந்து கொண்ட போதும் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களால் முடியாது போனது.

ஜேவிபியின் கோட்டை எனப்படும் திஸ்ஸமகராமவிலும், சொந்த தொகுதியான அம்பலாங்கொடவிலும் சரத் பொன்சேகா பெற்ற தோல்விகள் முக்கியமானவை. அதுபோலவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட- சரத் பொன்சேகா அலை வீசுவதாகக் கணிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தைக் கூட அவர் கோட்டை விட்டிருக்கிறார். கொழும்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்;த முடிவு மகிந்த ராஜபக்ஸவுக்குச் சார்பாகவே வந்திருக்கிறது. அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தமிழ்மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தான் சரத் பொன்சேகா வெற்றியீட்டியிருக்கிறார். இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

* மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக- அவரது கடந்த கால செயற்பாடுகள் மீதான வெறுப்பை வெளியிடும் வகையிலான – அவரது கொள்கையை நிராகரிப்பதாக தமிழ் மக்களின் கருத்து வெளிப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கருத்து வெளிப்பட்டாலும், பெரும்பான்மையான தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் செல்லுபடியான வாக்குகள் வெறும் 22 வீதம் தான். அங்கு மக்கள் தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர் என்றே கருத வேண்டும். இரு பிரதான வேட்பாளர்கள் மீதான வெறுப்பு இந்தத் தேர்தலிலும் பிரதிபலித்திருக்கிறது. குறைந்தளவு வன்முறைகளோடு- தேர்தல் நடந்து முடிந்திருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்னர் வன்முறைகள் அதிகமான நிகழ்ந்த போதும்,தேர்தல் தினத்தன்று மிகக் குறைந்தளவு வன்முறைகளே இடம்பெற்றிருந்தன. இது மற்றொரு சாதனை என்று கூடச் சொல்லலர்ம். ஆட்சிமாற்றம் என்பது இப்போது சாத்தியமற்றது என்பது உறுதியாகி விட்டது. தென்னிலங்கையில் சிங்கள மக்கள தெளிவான பெரும்பான்மை பலத்தைக் கொடுத்திருப்பதன் மூலம் வேறெந்த இனத்தவருமே ஆட்சியை நிர்ணயிக்க முடியாது என்று எடுத்துக் கூறியுள்ளனர். அத்துடன் தென்னிலங்கையில் சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஒரு காரணமாக, சம்பந்தன்- சரத் பொன்சேகா உடன்பாடு பற்றிய பிரசாரம் அமைந்திருந்தது.

அப்படியொரு உடன்பாடே கையெழுத்திடப்படாத போதும் அதைப் பிரசாரப்படுத்தியதற்கான பலனை அரசாங்கம் பெற்றிருக்கிறது. ஒருவகையில் இனவாத நோக்கில் பரப்பப்பட்ட இந்த பிரசாரத்துக்கு தென்னிலங்கை செவிசாய்த்திருக்கிறது. அதுமட்டுமன்றி சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறும் எவருமே ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதையும் சிங்கள மக்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அடுத்து நடக்கப் போகும் பொதுத் தேர்தலில் இந்த முடிவுகள் கனமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. கூட்டணிகள் அமைப்பதில இருந்து கொள்கைகளை வரைவது வரைக்கும் இந்த தாக்கம் அமையலாம்.

* தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவது என்ற நிலையில் இருந்த ஐதேக போன்ற கட்சிகளை, இன்னொரு திசையில் பயணிக்க இந்த முடிவு அழுத்தம் கொடுக்கலாம். சிங்கள மக்களின் தயவு தான் அனைத்துக் கட்சிகளுக்கும் முதன்மையான தேவையாக இருக்கும். எனவே சிங்கள மக்களின் மத்தியில் இழந்து போன ஆதரவை மீளப்பெறுவதற்காக தென்னிலங்கையின் பிரதான அரசியல்கட்சிகள் வரும் நாட்களில் புதிய வகையிலான முயற்சிகளில் இறங்கலாம். அவை தமிழ் மக்களுக்கு விரோதமான வகையில் அமைந்தாலும் கூட ஆச்சரியப்பட முடியாது. ஏனென்றால் இப்போது அதுதான் அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தரக் கூடிய மந்திரமாக மாறியிருக்கிறது.

கொழும்பிலிருந்து கபில்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*