TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சுதந்திரத்தை இழந்து நிற்கும்; தமிழ் மக்கள்

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இலங்கைத்தீவு விடுபட்டு 62 ஆண்டுகள் நிறைவடைவதை சிங்களதேசம் இன்று பெருமெடுப்பில் கொண்டாடுகிறது. விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்து விட்ட வெற்றியின் திமிரில் இருந்து கொண்டு இந்தக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதேவேளை, ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இலங்கைத்தீவு விடுபட்டு 62 வருடங்களாகியும் அங்கு வாழும் தமிழர்கள் தமது சுதந்திரத்தை இழந்தவர்களாக- வாழ்விடங்களைத் தொலைத்தவர்களாக- தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்களாக-உறவுகளையும், சொத்துகளையும் தொலைத்தவர்களாக- நடைப்பிணங்கள் போன்று அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தநிலைக்கு காரணம் சிங்களப் பேரினவாதமே.

தமிழ் மக்கள் மீது கொடியபோரை ஏவிவிட்டு அவர்களை எதுவுமேயில்லாதவர்களாக மாற்றிவிட்டிருக்கிறது. தமிழ் மக்களை ஆயுதமேந்திய போருக்குள் தள்ளிவிட்டதும் சிங்களப் பேரினவாதமே அவர்களை ஆயுதப்போரில் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதும் சிங்களப் பேரினவாதமே.

* தமிழ்மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடிய போது அதைப் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி இலட்சக்கணக்கான மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிட்டு, இன்று சிங்களதேசம் வெற்றிப் பெருமிதத்துடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

பிளவுபட்டிருந்த தேசத்தை ஒன்றாக்கி விட்டதான நினைப்பில் சிங்களப் பேரினவாத சக்திகள் இந்த நாளை தமது வெற்றியின் உச்சமென்று புகழ்ந்துரைப்பதையும் காணமுடிகிறது.

* மூன்று தசாப்த காலப்போர் இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் உள்ளனவென்பதை உலகுக்கு காட்டியிருந்தது.

ஆனால் இன்று அந்த நிலையை மாற்றி விட்டதாக சிங்கள அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒரேகுடையின் கீழ் நாட்டைக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறிக் கொள்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுபட்ட தினத்தை சிங்களதேசம் கொண்டாடுகின்ற அதேவேளை தமிழ்மக்கள இந்தநாளை அத்தகைய பூரிப்பில் கொண்டாடும் நிலையில் இல்லை என்பதே உண்மை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தநாள் அப்படியானதொரு விடுதலையை- சுதந்திரத்தை ஒருபோதும் பெற்றுக் கொடுத்ததில்லை. அதை அவர்கள் அனுபவித்ததும் இல்லை.

காலத்துக்குக் காலம் இனக்கலவரங்களின் பெயரால் தமிழ்மக்கள் துரத்தப்பட்டதும் கொல்லப்பட்டதும் முன்னைய வரலாறாக இருந்தது. பின்னர் போரின் பெயரால் அதை நிறைவேற்றியது சிங்களதேசம். இப்போதும் ஒரு இட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்விடங்களை நெருக்கக்கூட முடியாத வகையில் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருபக்கத்தில் அடிபட்ட காயங்களின் வடுங்களைச் சுமந்து, நடுத்தெருவில் நிற்கும் மக்கள், இனனொரு பக்கத்தில் அவர்களை வெற்றி கொண்ட திமிரில் இருக்கும் இனம்.

இருவேறு துருவங்களாக இருக்கும் இரண்டு மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஆழமான விரிசல் விழுந்து விட்டது. இப்படியான நிலையில் தமிழ்மக்களால் எந்தவகையிலும் இதையொரு சுதந்திர நாளாகக் கருதவே முடிவதில்லை. ஆங்கிலேய ஆக்கிரமிப்பில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்புக்கு கைமாறிய தினம் என்ற வகையினலான உணர்வே தமிழ்மக்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது.

இந்த உணர்வை சரியாகப் புரிந்து கொள்வதற்கு சிங்களத் தலைமைகள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அப்படி உணர்ந்திருந்தால்- இனப்பிரச்சினைக்கு உருப்படியானதொரு தீர்வைக் கண்டு தமிழ் மக்களை நிம்மதியாக வாழ வழிவகுத்திருந்திருப்பார்கள். ஆனால் சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகள் அனைத்துமே தமிழ்மக்களை அழிப்பதிலும், அவர்களைப் பாரம்பரிய தாயகத்தில் இருந்து துரத்துவதிலும் தான் தீவிரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையினால் தான் இலங்கைத்தீவு இரண்டு தேசங்களாகப் பிளவுபட்டு நிற்கின்றது.

பூகோள ரீதியாக, சிங்கள அரசு போரின் மூலம் இரு தேசங்களையும் இணைத்து வைத்திருப்பினும் இரு இனங்களுக்கும் இடையில் தோன்றி;விட்ட பிளவையும் இலகுவாக ஒன்றாக்கி விட முடியாது. இதை அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலும் உறுதிப்படுத்தியுள்ளது.

தென்னிலங்கை முழுவதும் ஏற்றுக் கொண்ட-ஆதரித்த மகிந்த ராஜபக்ஸவை தமிழர் தாயகப் பகுதி மக்கள் நிராகரித்துள்ளனர். அதைவிட பெரும்பாலான தமிழ்மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். சிங்கள தேசத்தின் இறைமையை நிராகரிப்பதாக- தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.இந்தத் தேர்தல் முடிவு தமிழர் தாயகத்துக்கும் சிங்களதேசத்துக்கும் இடையிலான பிளவை மிகவும் நுட்பமான முறையில் வெளிப்படுத்தியுள்ளது.

முப்பதாண்டு ஆயுதப் போராட்டத்தின் மூலம் கூறிய அதேசெய்தியை ஜனநாயக ரீதியான தேர்தலும் வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு புலிகள் கோரவில்லை. ஆனால் அதையே பெரும்பாலான மக்கள் செய்துள்ளனர். சிங்களதேசம் தமிழ்மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வை வழங்குவதற்கு மறுக்கின்ற போக்கில் இருந்து விடுபடாதுள்ள நிலையில் தமிழ் மக்களும் ஒன்றுபட்ட தேசமாக வாழுகின்ற மனோநிலைக்குத் திரும்மாட்டார்கள். இதையே தான் ஜனாதிபதித் தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.

* சுதந்திரதினத்தை சிங்களதேசம் கொண்டாடுவதும், தமிழர் தேசத்தில் அது சோபையிழந்து- துக்கதினம் போன்றிருப்பதும் காலம்காலமாக நடக்கப் போகிறது. இதற்குக் காரணம் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களே. தமிழ்மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதாத்தின் அவா இலங்கைத் தீவையே பேரழிவுக்குள் தள்ளிவிட்டதை மறந்து போக முடியாது. அதேபோக்கில் இருந்து அவர்கள் விடுபடாத வரைக்கும் தமிழ்மக்களின் தனித்துவமான போக்கில் மாற்றங்கள் ஏற்படவோ அல்லது விடுதலை உணர்வை அனுபவிக்கவோ வாய்ப்ப்பில்லை என்பதே உண்மை.

தொல்காப்பியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*