TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கேள்விக்குறியாக மாறியிருக்கும் சரத் பொன்சேகாவின் எதிர்காலம்

தேர்தலுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார். அத்துடன் அவரது அரசியல் எதிர்காலமே இப்போது கிட்டத்தட்ட சூனியமாகி விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று நள்ளிரவில் சரத் பொன்சேகா தங்கியிருந்த விடுதி முற்றுகையிடப்பட்டது.

இது தற்காப்பு ஏற்பாடு என்றும் ஆயுதப் புரட்சியைத் தடுக்கின்ற நடவடிக்கை என்றும் அரசாங்கம் கூறியது. ஆனால் சரத் பொன்சேகாவோ தன்னைக் கைது செய்வதற்கு- கொலை செய்வதற்கான முயற்சி என்று அபாயக்குரல் எழுப்பினர். பெரும் பிரயத்தனங்களின் பின்னரே அவர் அந்த விடுதியில் இருந்து வெளியேற முடிந்தது.

சரத் பொன்சேகா தன்னைச் சுற்றி பாதுகாப்பு அதிகாரிகளாக வைத்திருந்தவர்கள் தப்பி ஓடிய படையினர் என்று அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.அவர்களில் பத்துப் பேரை படையினரிடம் ஒப்படைத்த பின்னரே சரத் பொன்சேகா அரசியல் புள்ளிகளின் பாதுகாப்புடன் வெளியேற முடிந்தது.

அரசாங்கம் எதற்காக அவர் மீது இத்தனை கண்டிப்புடன் நடந்து கொண்டது என்ற கேள்வி எழுகிறது. இராணுவத்தின் துணையுடன் ஆட்சியைப் பிடிப்பது என்ற பேச்சு தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே தீவிரமாகியிருந்தது. அதாவது அரசியலில் இராணுவம் தலையிடலாம என்ற கருத்து- அச்சம் வலுவடைந்திருந்தது.

மகிந்த ராஜபக்ஸ தோல்வியடைந்தால் அவர் இராணுவத்தின் துணையுடன் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு முனைவதாக சோமவன்ச அமரசிங்க, ரணில் விக்கிரமசிங்க போன்றோர் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வந்தனர். அதேவேளை அரசாங்கமும் சரத் பொன்சேகா அப்படியானதொரு முயற்சியில் இறங்கியிருப்பதாக குற்றம்சாட்டி வந்தது. அதாவது இராணுவத் தலையீட்டின் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள எதிர்த்தரப்பு முனைவதாக இரு தரப்பினரும் கூறிவந்தனர்.

இந்தக் கட்டத்தில் அரசியலுக்குள் இராணுவத் தலையீடு ஏற்படும் ஆபத்து இருப்பதாக பலமான அச்சம் ஒன்று உருவாகியிருந்தது. தேர்தல் தினத்தன்று கொழும்பு நகரின் முக்கியமான இரு ஹோட்டேல்களில் சரத் பொன்சேகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டது அரசாங்கத்துக்குப் பெரிதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்த ஹொட்டேல்களில் குறித்த தினத்தன்று 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது அரசாங்கத்துக்கு சந்தேகத்;தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே அரசாங்கம் திடீர் நடவடிக்கையாக சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹொட்டேலை இராணுவத்தை அனுப்பி சுற்றிவளைத்தது.

அதன்பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறும் வரைக்கும் பலத்த இழுபறிப் போராட்டங்கள் நடந்தன. சரத் பொன்சேகாவை வெளியே செல்ல அனுமதித்ததற்கு சர்வதேச ரீதியாக எழுந்த அழுத்தங்கள் காரணம் என்றும் ஒரு தகவல் பரவியது.

சரத் பொன்சேகா இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தனது தோல்வியை மறைக்கவும் சர்வதேச அனுதாபத்தைத் திரட்டிக் கொள்ளவும் முயன்றார்.ஆனால் அரசாங்கமோ அவர் மகிந்த ராஜபக்ஸவைக் குடும்பத்துடன் கொன்று விட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முற்பட்டதாக கூறுகிறது.

இப்போது சரத் பொன்சேகா தான் எங்கு தங்கியிருக்கிறேன் என்பதைக் கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார். விரைவில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. பெரும்பாலும் அவர் கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.இது அவரது எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து விலகிக் கொண்ட சரத் பொன்சேகா பிரசாரங்களின் போது மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுளை சுமத்தி வந்தார்.

* அவையெல்லாம் இப்போது அவருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.தேர்தல் முடிவுகள் தவறானவை என்றும், அதை ஏற்கமுடியாதென்றும் கூறும் சரத் பொன்சேகா அரசியலில் அனுபவமில்லாதவர் என்பதை தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறார்.தேர்தல் தினத்துக்கு மறுநாள் ஹொட்டேலுக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போது- தன்னைக் கொல்லச் சதி என்று அவர் வெளியிட்ட கருத்து அவரது அச்சத்தை வெளிப்படுத்தியது. ஒரு இராணுவத் தளபதிக்குரிய பக்குவமோ துணிவோ அவரிடத்தில் இருக்கவில்லை.அதேவேளை தன்னைக் கொல்லச் சதி என்ற கூறிய குற்றச்சாட்டும் அவரது அரசியல் அனுபவமின்மையின் வெளிப்பாடாகவே அமைந்தது.அப்படி சரத் பொன்சேகாவைக் கொலை செய்வதற்கு அரசு ஒருபோதும் துணியாது.

தேர்தல தினத்தன்று பிரதான வேட்பாளரைக் கொலை செய்வது எந்தளவுக்கு ஆபத்தான விளைவுளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் அறியாதா என்ன? அப்படியானதொரு சம்பவம் நடந்தால், சர்வதேச அரங்கில் இலங்கை அரசு எத்தகைய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை சரத் பொன்சேகா அறியாது போனது வியப்பே.இப்போது அரசுக்கு எதிரான ஆயுதப்புரட்சியை முன்னெடுக்கத் திட்டமிட்டதான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சரத் பொன்சேகா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லவே விரும்புவதாகத் தெரிகிறது. அவர் அவுஸ்ரேலியா செல்வதற்கு விரும்புவதாகவே தகவல்.ஆனால் அப்படித் தப்பிச் செல்வது இலகுவான காரியமாக இருக்கமாட்டாது.

தன்னை வெளிநாடு செல்ல முடியாத வகையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு உததரவு வழங்கப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகாவே கூறியிருந்தார்.ஆனால் அதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.அப்டியான எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.எனினும் அவர் வெளிநாடு செல்ல முனைந்தால்- அது அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்;.இத்தகைய கட்டத்தில் சரத் பொன்சேகா அரசின் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்வதை விட வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றால் அது மிகப் பெரிய நெருக்கடிளை அவருக்கு ஏற்படுத்தும். அவரைத் துரோகியாகக் காண்பித்து அரசாங்கம் இன்னமும் பெரியளவிலான பிரசாரங்களை முன்னெடுக்கும். அதேவேளை பொதுவேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்குத் தனியான அரசியல் பின்னணி எதுவும் கிடையாது.

இந்தநிலையில் அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டால் அவருக்காக குரல் கொடுக்க எத்தனை கட்சிகள் முன்வரும் என்பது சந்தேகம்.எவ்வாறானயினும் இனிமேல் சரத் பொhன்சேகாவினால் இலங்கையின் அரசியலில் நிலைத்திருப்பதென்பது கடினமே.அப்படி நிலைத்திருக்க விரும்பினால் அவர் பல்;வேறு அக்னிப் பரீட்சைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.அதற்கான துணிவு அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் சரத் பொன்சேகாவுக்கு இப்போதுள்ள ஒரே தெரிவு அரசியலை கைவிட்டு ஒதுங்கிக் கொள்வதாகவே இருக்கிறது. சரத் பொன்சேகா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதைக் பொறுத்தே அரசின் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் அமையப் போகின்றன.

கொழும்பிலிருந்து சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*