TamilSpy

பொழுது போக்கு இணையம்…

‘போரின் சாட்சியாகின்றார்’ ஆகிறார் பொன்சேகா?

இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய்க் கிடக்கின்றன இலங்கை எதிர்க்கட்சிகள்.

‘சபாஷ், சரியான போட்டி’ என்று கடைசிவரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்த ஒன்று, இப்படி ஒரேயடியாகப் புஸ்வாணமாகி, ஒருபக்க ஆட்டாமாகிப் போய் முடிந்தது எங்ஙனம்? அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வளவு சுலபமாக வெல்லக்கூடிய வகையில் முடிவு வெளிவருவதற்கான மந்திர தந்திரம் எங்கு அரங்கேறியது? – என்பவையெல்லாம் தெரியாமல் விழி பிதுங்குகின்றது எதிரணித் தரப்பு. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா வெல்வார் எனக் கடைசி வரையில் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் இரண்டு மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று மஹிந்த ராஜபக்ஷவே மிகச் சுலபமாக வெற்றிவாகை சூடுவதற்கான காய் நகர்த்தல் எப்படி இடம்பெற்றது, எதிரணிக்கு ஆப்பு எங்கு வைக்கப்பட்டது என்பதில் மர்மம் நீடிக்கவே செய்கின்றது. இது உண்மையில் மக்களின் தீர்ப்பு அல்ல என்று எதிரணித் தரப்பில் முணுமுணுக்கப்பட்டாலும் தவறு எங்கு என்பதை அத்தரப்பினால் சுட்டிக்காட்ட முடியாத நிலைமையே நீடிக்கின்றது. அவ்வளவு தூரம் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கனகச்சிதமாக முடிக்கப்பட்டிருக்கின்றன.

தேர்தலன்று இரவு வாக்குகள் எண்ணப்படும் சமயத்தில், எதிரணிப் பொது வேட்பாளரும், ஏனைய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் கொழும்பு நகரில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த சமயம் இலங்கை ராணுவத்தின் பல நூற்றுக்கணக்கான சிப்பாய்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்வதேசக் கவனத்தை ஈர்த்தமை தெரிந்ததே.

அப்படி பொன்சேகாவும் அவரது அணியினரும் போய்ச் சிக்கிக்கொண்டமைக்கு அவரது தரப்பில் வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், இத்தேர்தலில் தமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே இப்படி அவரை அரசுத் தரப்பின் வலையில் கொண்டுபோய் வலிய விழவைத்தன என்கின்றன விஷயமறிந்த வட்டாரங்கள்.

வாக்களிப்பு முடிந்த அன்றிரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சமயம், தன்னையும் தனது மெய்ப்பாதுகாவலர்களையும், தனது அலுவலகத்தில் வைத்துச் சுற்றி வளைத்துக் கைது செய்ய ராகபக்ஷ தரப்பு நடவடிக்கை எடுத்தது என்றும், அது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததால்தான் இந்த ஓட்டலுக்குள் வந்து புகுந்துகொண்டார் எனவும் இப்போது புருடா விடுகிறார் பொன்சேகா. ஆனால் இது ‘திருடன், தலயாரி வீட்டில் ஒளிந்த’ கதையாகும். ஏனென்றால், இலங்கை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமான ஜனாதிபதி இல்லத்துக்கும் அவரது ஜனாதிபதி செயலகத்துக்கும் மிகமிக அருகில் – அதியுயர் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கும் Cinnamon Lake Side Hotel ல் போய்த் தஞ்சம் புகுவதாகக் கூறுவது, தானே வம்பை விலை கொடுத்து வாங்கும் வேலையின்றி வேறில்லை.

கொழும்பு நகரில் ராஜதந்திரிகள் உட்படப் பலரும் தங்கியிருக்கும் மிகப் பாதுகாப்பான பல ஓட்டல்கள் இருக்கையில், ஜனாதிபதி மாளிகைக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் மிகவும் அருகிலும், விமானப்படைத் தலைமையகத்துக்கு நேரே முன்னாலும் அமைந்திருக்கும் இந்த ஓட்டலுக்குள் பொன்சேகா போய் அன்றிரவு புகுந்து கொண்டதற்கு ஒரு காரணம் உண்டு.

அதுவும் தனியாக அவர் அங்கு செல்லவில்லை. அந்த ஓட்டலின் இரண்டாவது மாடித் தளத்தில் பல டசன் அறைகளை ஒன்றாக ‘புக்’ பண்ணி, ஒதுக்கியபடி, தமது ஆதரவாளர்கள் பலருடன் அன்றிரவு அங்கு குடிபெயர்ந்திருக்கிறார் பொன்சேகா. முன்னாள் ராணுவத் தளபதியான அவர், படையில் தம்முடன் முன்னர் பணியாற்றி, இப்போது படைகளை விட்டு விலகி அல்லது விட்டோடி இருக்கும் பல டசன் முன்னாள் ‘கமாண்டோக்கள்’ சகிதமாகவே அங்கே அன்றிரவு நுழைந்திருக்கின்றார். இந்தத் தேர்தல் வெற்றி மீதான உறுதியே அவரை இப்படிச் செய்ய வைத்திருக்கின்றது.

இத்தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வென்றாலும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை அவருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற பேச்சு தேர்தலின் இறுதிக்கட்ட வேளையில் பரபரப்பாக அடிபட்டது. அத்தகைய சூழல் உருவானால் – தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக வரும் சமயத்தில் ஆட்சியைத் தம்மிடம் விட்டுத்தர ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் மறுத்தால் – அதிகாரத்தை மடக்கிக் கைப்பற்றும் எண்ணத்துடனேயே அதிபர் மாளிகைக்கும், செயலகத்துக்கும் மிக நெருக்கமான ஓட்டலுக்குள் ஆள், அணி அம்போடு பொன்சேகா நகர்ந்திருக்கின்றார். நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் தமக்குச் சார்பாக வெளியாகத் தொடங்கினால் அருகில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்குள்ளும், செயலகத்துக்குள்ளும், அதிரடியாக நுழைந்து அதிகாரத்தைத் தேவைப்பட்டால் பலவந்தமாகவேனும் பிடுங்கிக் கொள்வதே பொன்சேகா அணியின் திட்டமாக இருந்தது.

வழமையாக ஜனாதிபதி தங்கியிருக்கும் ஜனாதிபதி மாளிகையை, மஹிந்த ராகபக்ஷ அதிகம் பயன்படுத்தியதில்லை. தாம் பிரதமராக இருந்தபோது பயன்படுத்திய அலரி மாளிகையே தனக்கு வசதியானதும், வாய்ப்பானதும், அதிர்ஷ்டமானதும் எனக் கருதுவதால் என்னவோ ஜனாதிபதி மாளிகையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலரி மாளிகையையே தமது உத்தியோகபூர்வ இல்லமாக மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்தி வருகின்றார். எனவே, ஜனாதிபதி இல்லத்தை ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி பயன்படுத்தாத இந்த நிலைமையைத் தேவைப்பட்டால் வசமாகப் பயன்படுத்தலாம் என்பது பொன்சேகா அணியினரது அப்போதைய திட்டமாக இருந்தது.

ஆனால், தேர்தல் காலம் முதல் பொன்சேகா தரப்பின் ஒவ்வொரு நகர்வையும் தனது உளவுப் பிரிவினர் மூலம் மிகத் துல்லியமாக அவதானித்து வந்த கோத்தபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகைக்கு மிக நெருக்கமாக உள்ள ஓட்டலுக்குள் பொன்சேகா அணி புகுந்ததை அறிந்ததும் மின்னலென நடவடிக்கைகளை எடுத்தார். அதிபருக்கு விசுவாசப் படையணி ஒன்று கனரக வாகனங்கள், ஆயுதங்கள் சகிதம் ஓட்டலை முற்றாகச் சுற்றி வளைத்தது. பல நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்ட துருப்பினர் ஓட்டலுக்குள் நுழைவோர், வெளியேறுவோர் எல்லோரையும் நோண்டி எடுத்தனர். வெளியில் இருந்தபடி ஓட்டலுக்குள் இடம்பெறும் நகர்வுகள் ஒவ்வொன்றும் நோட்டம் விடப்பட்டன.

முன்னாள் ராணுவத் தளபதியான ஜெனரல் பொன்சேகா தமக்கு ஆதரவான சில படை அணிகள் மூலம் ராணுவச் சதி ஒன்றை மேற்கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அதிபரின் மாளிகைக்கு அருகில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்து கொண்டிருப்பதால் அவரை அதிபருக்கு விசுவாசமான படையினரின் சுற்றி வளைப்பில் தாங்கள் வைத்திருக்கிறோம் என்ற தகவல் ராஜதந்திர வட்டாரங்களுக்கு அரசுத் தலைமையால் நள்ளிரவே கசிய விடப்பட்டது.

தேர்தல் முடிவுகள் விடிகாலையில் அதிபர் ராஜபக்ஷவுக்கு ஆதரவான விதத்தில் வெளியாகத் தொடங்கியபோதுதான் படைத்தரப்பின் முற்றுகைக்குள் தம்மைத் தாமே சிக்கவைத்துக் கொண்டுள்ளோம் என்ற யதார்த்தம் பொன்சேகா அணிக்கு உறைக்கத் தொடங்கியிருக்கின்றது. அதன் பின்னர் முன்னாள் ராணுவத் தளபதி என்ற முறையில் தமக்குக் கிட்டியிருந்த மெய்ப்பாதுகாவலர்கள், காவல் வாகனங்கள் எல்லாவற்றையும் பறிகொடுத்து, ‘வெறுங்கையுடன் இலங்கை புக்கும் இராவணன்’ போல பொன்சேகா ஓட்டாண்டியான நிலையில் வீடு திரும்ப வேண்டியவரானார்.

அதிகாரக் கனவோடு ஜனாதிபதி மாளிகைக்குப் பக்கத்தில் இருக்கும் ஓட்டல்வரை முன்னேறிய பொன்சேகாவை அதற்கு அப்பால் நகரவிடாது, அவரது கனவைக் கலைக்கும் விதத்தில் தேர்தல் முடிவுகள் இப்படியானது எங்ஙனம் என்பதுதான் அவருக்கு இன்னும் புரியவில்லை.

தேர்தல் சமயத்தில் இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த தலைவரான இரா.சம்பந்தனோடு அவர் உடன்பாடு கண்டதும், அந்த இணக்கத்தின் மூலம் புலிகள் இயக்கம் மீள எழுச்சி பெறவும், தமிழருக்கு ஈழத்தை வழங்கவும் பொன்சேகா எழுத்தில் சம்மதித்துவிட்டார் என்று அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அரச ஊடகங்கள் மூலம் பெரும் எடுப்பில் மேற்கொண்ட இனவாதப் பிரசாரமும், பௌத்த சிங்கள இனவாதத்தில் ஊறித் திளைத்துக் கிடக்கும் தென்னிலங்கையில் ஆழமாக வேலை செய்திருக்கின்றன என்கிறார்கள் அவதானிகள். தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் என இலங்கையின் சிறுபான்மை இன மக்கள் வசிக்கும் இடமெங்கும் ஜெனரல் பொன்சேகா பெரு வெற்றியீட்டியமைக்கும், ஏனைய இடங்களில் எல்லாம் – பெரும்பான்மைச் சிங்களவர்களால் – பெரிய அளவில் தோற்கடிக்கப்பட்டமைக்கும் இந்தப் பேரினவாதப் பிரசாரமும் அத்தகைய கருத்தியல் சிந்தனைக்குள் சிங்கள மக்கள் சிறைபட்டுக் கிடக்கின்றமையுமே காரணம் என்பதை இதுவரை அந்தப் பேரினவாதத்துக்காகத் தமது ரத்தத்தையும் சிந்திப் போர் புரிந்த பொன்சேகா இப்போதுதான் உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருப்பார் என்கிறார் தமிழர் தலைவர் ஒருவர்.-

சரி. இனி பொன்சேகாவின் நிலைமை என்ன?

* ‘ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். அதுமாதிரியே பொன்சேகா அதிகாரத்துக்கு வந்தாலும், அதிகாரத்துக்கு வராவிட்டாலும் அதிபர் மஹிந்த தரப்புக்கு தலையிடி கொடுக்கும் சிக்கல் நபரே என்பது மறுக்கப்படக் கூடியதல்ல.

நாட்டுக்காகப் போராடி, யமலோகத்தின் வாசலை இரண்டு தடவைகள் தட்டிப்பார்க்கும் அளவுக்கு செத்துப் பிழைத்து வந்த தம்மைத் தேர்தல் காலத்திலும், பின்னரும் எவ்வளவு கேவலமாக ‘ராஜபக்ஷ அண்ட் பிரதர்ஸ் கம்பெனி’ நடத்தி வந்தது என்ற செமகடுப்பில் இருக்கும் பொன்சேகாவைத் தேர்தல் சமயத்தில் அரசுத் தரப்பால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குளறுபடிகள், தேர்தல் தோல்வி பற்றிய அறிவிப்பு போன்றவை எல்லாம் மனப் புகைச்சலின் உச்சத்துக்கே கொண்டுபோக வைத்துவிட்டன என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

தமக்குரிய பாதுகாப்பு அனைத்தையும் அரசுத் தலைமை வாபஸ் பெற்றுவிட்டமையால், நடுவீதியில் நிற்கும் தாம் வேறு வழியின்றி மாற்று மார்க்கமாக, தற்காலிகமாக வெளிநாடொன்றில் போய்த் தங்கப்போவதாக பொன்சேகா ஏற்கனவே கோடி காட்டியிருக்கின்றார். அப்படி பொன்சேகா வெளிநாட்டுக்கு வெளியேறினார் என்றால் ராஜபக்ஷ சகோதரர்களுக்குப் பெரிய ஆப்பு – பேராபத்து – காத்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கண்மூடித்தனமாகக் கொன்றொழித்த குற்றத்துக்காக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை என்ற கத்தி இலங்கை அரசுத் தலைமையின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையானது.

நடந்து முடிந்த தேர்தலில் பொன்சேகா வென்று ஆட்சிக்கு வந்திருந்தால், இக்குற்றங்களின் பெயரால் மஹிந்த ராஜபக்ஷ அணியை அப்படியே பிடித்துக் கொண்டு போய் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஒத்துழைத்திருப்பார் அல்லது கண்டும் காணாதவர் போல நடந்து அத்தகைய நடவடிக்கைக்கு உதவி புரிந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது தேர்தலில் தோற்றுவிட்ட அவரை இதற்குப் பின்னராவது தாஜா செய்து சமாளிப்பதை விடுத்து, அவருக்கு மேலும் வெறுப்பூட்டும் விதத்தில் நடந்து கொள்கின்றது மஹிந்த தரப்பு.

ஏற்கெனவே தேர்தல் பிரசார சமயத்தில் இந்தப் போர்க்குற்ற விவகாரங்கள் பற்றிய ஒரு சில தகவல்கள் தம் வாயால் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வெளியிட்டு, சிங்கள மக்கள் மத்தியில் அதற்காக செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் பொன்சேகா.

அவர் இப்போது வெளிநாடு போனால் அந்த யுத்த சமயத்தில் அரங்கேறிய போர் அட்டூழியங்கள், அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள், அராஜகங்கள் பற்றியெல்லாம் சர்வதேசத் தரப்புகளுக்குப் போட்டுக் கொடுத்து, ‘அப்ரூவர்’ ஆகி, மஹிந்த அரசை குறிப்பாக மஹிந்தரையும் அவரது சகோதரர்களையும் – சர்வதேசச் சிக்கல்களில் மாட்டி வைத்துவிடுவார் என்ற கருத்து நிலவுகின்றது

* சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஈழத் தமிழர் நலன் சார்ந்த இயக்கங்கள், சர்வதேச யுத்தக் குற்றங்களைத் தடுக்கும் விஷயங்களில் உறுதியாக நிற்கும் ஆர்வலர்கள் போன்றோரைப் பொறுத்தவரை பொன்சேகா இப்போது பொன் முட்டை இடக்கூடிய வாத்து. அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு எதிராக பொன்சேகா கொண்டிருக்கும் சீற்றத்தை – பழிவாங்க வேண்டுமென்ற வெறுப்புணர்வை – சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான வாய்ப்பாக மாற்றச் செய்வது இத்தரப்புகளின் சமயோசிதத்தில் தான் தங்கியுள்ளது. அதற்கு அமெரிக்காவின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. தேர்தலில் தோல்வியுற்ற ஜெனரல் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேற மஹிந்த அரசு அனுமதிக்குமா என்பதுதான் அது. அதில்தான் எல்லாமே தங்கியுள்ளது என்பதும் மறுக்கக் கூடியதல்ல.

என்.வி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*