TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை: 17

ரணில் அரசுடன் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் லெப்.கேணல் தியாகராஜன் யாழ்ப்பாணத்தில் நின்று செயற்பட்டவர்.

அரசியல் வேலைத்திட்டங்களுடன் தன்னுடைய வேவுப் பணிகளையும் அங்கு திறம்படச் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து இவர் தனது வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். தனது நடவடிக்கைகளுக்காக இவர் அதிகமாக கரவெட்டி, நெல்லியடி பகுதிகளில்தான் நிலைகொண்டிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார். அதனால், இப்பிரதேசத்தின் பகுதிகள் இவருக்கு அத்துப்படியாகத் தெரிந்திருந்தன.

பின்னர் வன்னி திரும்பியிருந்த தியாகராஜன், போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் படையினர் மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்காகவும், புலனாய்வுச் செயற் பாடுகளுக்காகவும் யாழில் தனது அணியினுடன் சென்று தரையிறங்கியிருந்தார். யாழில், சற்று தொய்வடைந்திருந்த தாக்குதல்கள் தியாகராஜனின் வருகைக்குப் பின்னர் மீண்டும் புத்துயிர் பெறத்தொடங்கின. மீண்டும் சிறீலங்காப் படையினரின் முகாம்கள், ஊர்திகள், ரோந்து அணிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. நாள்தோறும் யாழில் படையினர் மீது அங்கு தாக்குதல், இங்கு தாக்குதல் என வெளிவந்த செய்திகளுக்குப் பின்னால் தியாகராஜனின் கைவரிசை இருந்தது.

அதிகரித்த இந்தக் தாக்குதல்களால் திக்குமுக்காடிய சிறீலங்காப் படையினர், தங்களைப் பாதுகாக்க ஈ.பி.டி.பி உட்பட தமது துணை இராணுவக் குழுக்களை களத்தில் இறக்கினார்கள்.
சிறீலங்கா துணை இராணுவ ஒட்டுக் குழுக்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களையும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதுபவர்களையும் படுகொலை செய்யவும், கடத்தவும், கைது செய்யவும், அச்சுறுத்தவும் தொடங்கினார்கள். நாளும் படுகொலை, கடத்தல்கள் எனும் அளவிற்கு இது மிக மோசமான கட்டத்தை அடைந்தது. குடும்பமாகவும் பலர் இந்தப் படுகொலைக்கு பலியானார்கள்.

ஒட்டுக் குழுக்களின் இந்நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்படத்தொடங்கியது. இராணுவ நகர்வுகள் தொடர்பாக மக்கள் விடுதலைப் புலிகளின் புலனாய்வாளர்களுக்கு வழங்கிய தகவல்களும் இதனால் குறைவடையத் தொடங்கின. இதனால், புலனாய்வுப் போராளிகளே களத்தில் இறங்கி தகவல்களை சேகரிக்கவும்நடவடிக்கையில் ஈடுபடவும்வேண்டிய நிலை எழுந்தது. வேவு நடவடிக்கைகளை மக்களோடு மக்களாக இணைந்திருந்தே மேற்கொள்ளவேண்டிய நிலையில், படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினரால் அடையாளம் காணப்பட்டு போராளிகள் இழப்புக்களைச் சந்திக்கத் தொடங்கினார்கள். மேஜர் புவியரசன் நெல்லியடி கொற்றாவத்தை என்னும் இடத்தில் வைத்து சிறீலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்படுகின்றார்.

மேஜர் கவியரசன், கப்டன் வினோத் ஆகிய போராளிகளும் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களில் வீரச்சாவடைகின்றார்கள். இவ்வாறு போராளிகளின் இழப்புக்களால் யாழில் நடவடிக்கைகள் மீண்டும் மந்த நிலையை அடைகின்றது. இந்நிலையில், தாக்குதல் நடவடிக்கைகளைவிட வேவுத் தரவுகளே அப்போதைய நிலையில் அவசியமாகக் கருதப்பட்டதால், தாக்குதல் நடவடிக்கைகளை தியாகராஜன் கைவிட்டு, எஞ்சியிருந்த தனது ஒரு சில போராளிகளுடன் வேவு
நடவடிக்கையில் இறங்குகின்றார்.மக்களோடு மக்களாக வாழ்ந்து வேவுத் தரவுகளை சேகரிக்கின்றார். அத்துடன், சிறீலங்காப் படை அதிகாரிகள் தங்கியிருக்கும் முகாம்கள், கனரக ஆயுத வெடிபொருள் களஞ்சியம், படை முகாம் நிலைகள், ஆட்லறி தளங்கள் என்பனவற்றை தனது வேவு நடவடிக்கை மூலம் அடையாளம் கண்டு பொறுப்பானவர்களுக்கு தகவல்களை வழங்குகின்றார்.

யாழ்குடாவிற்கு மேலும் அதிகளவான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையில், அடுத்த கட்டமாக விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வேவுப்படை அணிகள் தரையிறக்கப்படுகின்றன. தீவுப் பகுதிகள் ஊடாகவும் மற்றும் பருத்தித்துறை பகுதி ஊடா
கவும் யாழப்பாணத்தில் கடல்வழியாக தரை இறங்கிய அவர்கள் ஆங்காங்கே நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதன்போது புலனாய்வுத்துறை அணியின் போராளி ஒருவர் சிறீலங்காப் படையினருக்கு எதிரான நடவடிக்கைக்காக தன்னை தயார்படுத்தி செல்லும் வேளை, படையினரின் சுற்றிவளைப்புக்குள் அகப்பட்டு சயனைட் அருந்துவதற்கான கால அவகாசம்கூட இல்லாதளவிற்கு உயிருடன் பிடிபடுகின்றார். கடுமையான சித்திரவரை விசாரணைகளால் இவரிடம் இருந்து சில வெடிபொருட்கள் வைத்திருக்கும் இடங்களையும், சில ஆதரவாளர்
களையும் படையினர் இனம்கண்டுகொள்கின்றார்கள்.

இது யாழ்குடாவின் நடவடிக்கையில் ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்துகின்றது.
இதனால், அடுத்தகட்ட முடிவொன்றை விடுதலைப் புலிகள் அவசரமாக எடுக்கின்றார்கள். அதாவது படையினரிடம் எதிர்பாராமல் அகப்பட்டுக்கொண்டால் விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு அமைய சயனைட் அருந்துவதற்கு பதிலாக வெடிகுண்டை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிக்கொள்வது. இதன்மூலம் தானும் உயிரிழப்பதுடன், எதிரிக்கும் சேதங்களை ஏற்படுத்தமுடியும். அத்துடன், குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவினாலும் இதனால், மேலும் சில நெருக்கடிகள் இருந்தன.

குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவும் போராளிகளிடம் இருக்கும் சில தடயங்கள் மற்றும் சில தரவுகளை வைத்துக்கொண்டு ஆதரவாளர்களை இனம்கண்டுகொள்கின்ற, விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்கின்ற நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்ட நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இதனால், யாழ்குடாவில் நடவடிக்கைகளுக்கு செல்பவாகளுக்கென உடலோடு பொருத்தப்படும் ஜக்கற் (வெடிகுண்டு) புதிதாக வடிவமைக்கப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணத்தில் நிற்கும் அனைத்துப் போராளிகளுக்கும், இதுதொடர்பாக புலனாய்வுத்துறையினரின் தலைமைப்பீடத்தினால் கட்டளையும் வழங்கப்படுகின்றது.

எக்காரணம் கொண்டும் எதிரியின் கையில் உயிருடன் பிடிபடக்கூடாது. உங்களை அழித்துக்கொள்ளவேண்டிய அவசியம் எழுந்தால், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரண்டு எதிரியையாவது அழிக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு கட்டளை வழங்கப்படுகின்றது. இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் நின்ற, புதிதாகச் செல்லும் அனைத்து போராளிகளுக்கும் ஜக்கற் வழங்கப்படுகின்றது இவ்வாறு இறுக்கமான காலகட்டத்தில் இறுக்கமான நிலமையில்தான் யாழ்ப்பாணத்தில் புலனாய்வுப் போராளிகளின் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், கரவெட்டி அரசடிப் பகுதியில் தியாகராஜனை அடையாளம் கண்டுகொண்ட சிறீலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினர் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்துகின்றார்கள். இதன்போது லெப்.கேணல் தியாகராஜன் வீரச்சாவைத் தழுவிக்கொள்கின்றார்.

இதேவேளை, போராளிகள் இருக்கும் இடமொன்றை அறிந்துகொண்ட சிறீலங்காப் படையினர், மிக இரகசியமாக அப்பகுதியைச் சுற்றிவளைத்து அவர்களை உயிருடன் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். இதன்போது, நிலைமையை உணர்ந்துகொண்ட போராளிகள், மிகவும் பொறுமையோடு தங்கள் இலக்குக்குள் படையினர் வரும்வரை காத்திருந்து, தங்களிடம் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தங்களைத் தாங்களே அழித்ததுடன், கைது செய்யவந்த படையினர் சிலரையும் உயிரிழக்கவும் வைக்கின்றார்கள். தங்களையும் அழித்து, தங்களிடம் இருந்த வெடிபொருட்கள், மற்றும் வேவுத் தரவுகளையும் அழித்து எதிரிக்கும் அழிவை ஏற்படுத்தி, இந்த மண்ணிற்காக ஒரு அற்புதமான தியாகத்தைப் புரிந்துகொண்டார்கள் அந்தப் போராளிகள்.

இதேவேளை, படையினரிடம் அகப்படும் நிலையில், அவர்கள் முன் தாங்கள் கட்டியிருந்த ஜக்கற் குண்டினை வெடிக்க வைத்து வீரச்சாவடையும் சம்பவங்களும் இதனால், படையினர் இழப்புக்களைச் சந்திக்கின்ற சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கின. இவை சிறீலங்காப் படையினர் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் அத்துடன், பல புதிய சிக்கல்களையும் இது ஏற்படுத்தியிருந்தது. தங்களையும் அழித்து எதிரிக்கும் அழிவை ஏற்படுத்தும் ஒரு கரும்புலிகள் அணிபோன்று யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த போராளிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்வதற்கு படையினர் அஞ்சுகின்ற அளவிற்கு நிலைமையை கொண்டுசென்றிருந்தது.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*