TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியாவின் ஆளுகைக்குள் நின்றே சமாதான முயற்சிகளை

இந்தியாவின் ஆளுகைக்குள் நின்றே சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம்: எரிக் சோல்கெய்ம்.

இந்தியாவின் ஆளுகைக்குள் நின்றே சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம்: -சமாதான முயற்சிகள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இந்தியாவிற்குத் தெரிவிக்காமல் நாம் செயற்படுத்தவில்லை.

* மத்திய கிழக்கில் எந்தளவிற்கு அமெரிக்க ஆளுகைக்கு உட்பட்டு சமாதான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டி வந்ததோ அதேபோன்று, இலங்கை இனப்பிரச்சினையிலும் இந்தியாவின் ஆளுகைக்குள் நின்றே தமது முயற்சிகளை மேற்கொள்ள முடிந்ததென நோர்வேயின் அபிவிரித்தி உதவிகள் அமைச்சரும் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான சமாதான முயற்சிகளில் முக்கிய பங்காற்றியவருமான திரு எரிக் சோல்கைம், நோர்வே நாட்டு தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி ஒன்றல் கலந்து கொண்டு உரையாடும்போது தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வியைத் தழுவியதைப் போன்றே சிறிலங்காவிலும் அதன் முயற்சிகள் பலனளிக்காமல் போனமை பற்றி நோர்வேயின் வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் மட்டத்தில் பலமாகப் பேசப்படும் பின்னணியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றிலேயே எரிக் சோல்கைம் இதனைத் தெரிவித்தார்.

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வியைத் தழுவியது என்பதை ஆராய்ந்தறிய, நோர்வே வெளிநாட்டமைச்சானது ஆய்வாளர்கள் சிலரை ஈடுபடுத்த உள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார்.

ஆழமான பார்வை அற்றிருந்த வெளிநாட்டமைச்சு

* நீண்ட காலமாக நோர்வேயின் சமாதான முயற்சிகளை அவதானித்து வருபவரும் இலங்கை இனப்பிரச்சினை பற்றி அறிந்தவருமான பேராசிரியர் ஒய்வின் புக்லருட் (Oyvind Fuglerud), சிறிலங்கா இனப்பிரச்சினையில் சமாதான முயற்சிகளை தீர்க்கமுடன் முன்நகர்த்திச் செல்லக்கூடிய ஆழமான அறிவினை நோர்வே வெளிநாட்டமைச்சு பெற்றிருக்கவில்லையென இந் நிகழ்ச்சியில் சாடியுள்ளார். இனப்பிரச்சினை பற்றிய கூர்மையான அறிவுள்ளவர்களை ஆரம்பக் கட்டங்களில் பயன்படுத்தாதது நோர்வே விட்ட மிகப் பெரிய தவறு எனவும் அவர் குறிப்பட்டார்.

தென்பகுதி சிங்களவர்கள் மத்தியில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றி தவறான பார்வைகள் இருந்ததாகவும் அதனைக் களையும் வகையில், புத்த பீடங்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான தொடர்புகளை நோர்வே பேணியிருக்க வேண்டுமெனவும் அப் பேராசிரியர் குறிப்பிட்டார். நோர்வேயின் நோக்கம் பற்றி சிங்கள ஊடகங்கள் மேற்கொண்ட தவறான பிரச்சாரங்களை சரியாக எதிர்கொள்ளாது போனமையும் நோர்வே வெளிநாட்டமைச்சு விட்ட தவறு என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ் விமர்சனங்களுக்குப் பதிலளித்த எரிக் சோல்கைம், இருதரப்பினருடனும் பல வருடங்களாக, பல நீண்ட சந்திப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் தமக்கு இப்பிரச்சினையில் ஆழமான பார்வை இருந்ததாகவும் ஆனால் சிறிலங்காவின் சமூக சமய மட்டங்களில் தமது நோக்கத்தினை உரிய முறையில் தெரிவிக்காதது ஒரு தவறுதானா என்பதை நோர்வேயின் முயற்சிகள் பற்றி ஆராயவுள்ள ஆய்வாளர்கள் கண்டுகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியற் கற்கை நெறிப் பேராசிரியர் ஹில்ட எரிக்சன் வோகெ (Hilde Eriksen Waage), மத்திய கிழக்கில் சமாதான முயற்சிகளின்போது சர்வதேச உறவுகளைப் பேணிய பலமான தரப்பு, சமாதான முயற்சிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தியது போன்றே சிறிலங்காவும் சமாதான காலத்தில் தனது நலன்களைப் பேணி வெற்றி பெற்றுள்ளது எனக் கூறினார்.

சொந்த நலன்களும் நோர்வேக்கு இருந்தன
* சிறிலங்காவில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திற்குப் புறம்பாக, சர்வதேச அரங்கில் சமாதான இராஜதந்திர நடவடிக்கையில் ஒரு அறியப்பட்ட நாடாகத் திகழவேண்டும் என்ற விருப்பும் இவ்விடயத்தில் நோர்வேக்கு இருந்துள்ளது என்ற கருத்தினையும் பேராசிரியர் வோகே தெரிவித்தார். சமாதான முயற்சிகள் ஊடாக ஏனைய நாட்டின் இராஜதந்திரிகளுடன் நெருங்கிய உறவினைப் பேணியமை, நோர்வேயின் வர்த்தக நலன்களுக்கும் உதவுவதாக இருந்தது எனபதையும் அப்பேராசிரியர் குறிப்பிட்டார்.

இறுதியில், இவ்வளவு அழிவுகளையும் ஏற்படுத்தி போர் முடிவுக்கு வந்தபோதும் சமாதானத்தினை ஏற்படுத்த முடியாமற் போனது ஏன் என்ற நிகழ்ச்சி நடத்துனரின் கேள்விக்கு பதிலளித்த சோல்கைம், சுயாட்சி அடிப்படையிலான தீர்வு ஒன்றுக்கு விடுதலைப்புலிகள் ஒத்து வராமையும் தமக்குள்ளே ஒரு இணக்கத்திற்கு வராத முக்கிய சிங்களக் கட்சிகளுமே சிறிலங்காவில் சமாதானம் ஏற்படாமைக்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்தார்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*