TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறிலங்காவில் இந்தியாவின் வகிபாகம்

சிறிலங்காவில் இந்தியாவின் வகிபாகம் போன்று வேறு எந்த ஒரு நாட்டினது வகிபாகமும் அதிகமாக விவாதிக்கப்பட்டதோ மிகக் குறைந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டதோ கிடையாது.

குடியரசு அதிபரா மகிந்த ராஜபக்ச இரண்டாவது ஆட்சிக் காலத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன் சேர்த்து, அதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்ற விவாதமும் கொழும்பில் எழுந்துள்ளது.

தனது நடவடிக்கைகளில் இந்தியாவிற்குக் கிடைத்தது வெற்றியா தோல்வியா என்பதே அந்த விவாதத்தின் மையம்.

சிறிலங்காவில் யார் ஆட்சியாளராக இருக்கிறார் என்ற விடயத்திற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவின் பிராந்திய நலன் சார் நகர்வுகளில் அந்த விடயம் நிச்சயம் பிரதிபலிப்பை உண்டாக்குகிறது. உண்மையை அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது.

சிறிலங்காவில் நடந்து முடிந்த தேர்தலைச் சுற்றி இந்தியாவிற்கு இரண்டு முக்கியமான கொள்கைகள் இருந்தன என்பதை உய்த்துணரலாம். இவ்வாறாக Times of India இதழுக்காக எழுதியுள்ள ஆய்வு ஒன்றி்ல் கே. வெங்கடறமணன் கூறுகின்றார். அவர் அங்கு மேலும் எழுதயுள்ளதாவது.

சிறிலங்காவில் நடந்து முடிந்த தேர்தலைச் சுற்றி இந்தியாவிற்கு இரண்டு முக்கியமான கொள்கைகள் இருந்தன என்பதை உய்த்துணரலாம்.
அதில் முதலாவது, ஓய்வுபெற்ற படைத் தளபதி சரத் பொன்சேகா அடுத்த அதிபராக வருவதை இந்தியா விரும்பியது என்பது.

மகிந்த ராஜபக்ச சீனா பக்கம் சாயும் வேகம் அதிகரிக்கின்றது என இந்தியா அஞ்சியதே அதற்குக் காரணம்.

இந்த நிலை இந்தியாவை அதிகம் எச்சரிக்கைக்கு உள்ளாக்கியது.

இரண்டாவது காரணம், திடீரென அரசியலுக்குள் நுழைந்த முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை அதிபராக்குவது இந்தியாவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பது.

அவர் பதவி ஏற்ற பின்னர் படை மயப்பட்ட ஒரு ஆட்சியை ஏற்படுத்தி விடுவார் என்ற சந்தேகம் அதற்குக் காரணம்.

சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் நடமாட்டம் இந்தியாவையும் அதன் பிராந்திய நலன் சார் கூட்டாளியான அமெரிக்காவையும் கவலை கொள்ள வைத்துள்ளன என்பது முதலாவது கொள்கையை ஆதரிப்பவர்களின் வாதம்.

தமிழர் பிரச்சினையைக் காரணமாக வைத்து இந்தியா தமது நாட்டு அரசியலில் அதிகம் ஆர்வம் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே சீனாவுடன் ராஜபக்ச நெருக்கம் காட்டுகிறார் என்பது அவர்களின் நோக்கு.

இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவாளர் எனக் கருதப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை இனத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கின்றன என்னும் உண்மை முதல் கொள்கைகயை ஆதரிப்பவர்களுக்குச் சார்பானதாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில், போருக்குப் பின்னான காலகட்டத்தில் தன்னால் அடையக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தருவார் என ராஜபக்ச வழங்கி உள்ள உறுதிமொழி இந்தியாவை மயங்க வைத்துள்ளது என்று கூறுகிறார்கள் இரண்டாவது கொள்கையை ஆதரிப்பவர்கள்.

அந்த அடிப்படையிலேயே, இந்தத் தேர்தலில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் முயன்றார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்த போதே அந்த முயற்சி தோல்வி அடைந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய நிலைப்பாடு தொடர்பில் இந்தக் கொள்கைகளில் எந்த ஒன்றையும் தீர்மானகரமாக ஆதரிக்காத போதும், ராஜபக்ச தரப்பிடம் காணப்படும் சீன ஆர்வத்தைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தக் காரணம் பொன்சேகாவுக்கான ஆதரவான நிலைப்பாட்டை நோக்கி இந்தியாவை இட்டுச் செல்லக்கூடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

“தனது வடக்கு நண்பனை நாட்டில் இருந்து சிறிலங்கா வெளியேற்றுவது எந்தளவிற்கு விருப்பத்திற்குரியது இல்லையோ அந்தளவிற்கு எதிர்காலத்தில் இந்தியாவுடனான ராஜபக்ச அரசின் உறவுகளும் விரும்பப்படாது.

குறிப்பாக சீனாவுடன் கூட்டணி சேர்ந்து நிற்பதை சிறிலங்கா தொடர்ந்தும் அதிகரித்தால் இந்த நிலை ஏற்படும்”

என்று எழுதி உள்ளார் கலாநிதி கசுன் உபயசிறி [Dr Kasun Ubayasiri].

தெற்காசிய ஆய்வுக் குழு-வின் சிறிலங்கா தொடர்பான அவதானிப்பாளரான இவர் [Analyst of the Sri Lankan scene, for the South Asia Analysis Group] குடியரசு அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகத் தான் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வருவது, இந்தப் பிராந்தியத்தில் சீனா காட்டி வரும் இராஜீய மற்றும் மூலோயம் [Strategically] சார்ந்த ஆர்வத்திற்கு அனுகூலமாக இருக்கும்” என அவர் மேலும் கூறுகிறார்.

அதனால் தனது இக்கட்டு நிலையை தவிர்க்க பொன்சேகாவே இந்தியாவிற்கு இப்போதுள்ள ஒரே பிடிப்பு என்பது அவரது வாதம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்தே ஆயுதங்கள் வந்து குவிந்தன என்று போர் முடிந்த பின்னர் பொன்சேகா கூறியிருந்தார். இதில் இந்தியாவின் பெயரை இணைப்பதை அவர் தவிர்த்திருந்தார்.

“எதிர் காலத்தில் நடக்க இருக்கும் மோதல்களில் அவர் இந்தியா பக்கம் இருப்பார்” என்பதையே இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன என்று வாதிடுகிறார் உபயசிறி.

இந்தியாவின் இராஜீய மற்றும் மானசீக ஆதரவு காரணமாகவே சிறிலங்காவால் போரில் வெற்றிபெற முடிந்தது என்பது மறைக்க முடியாத உண்மை.

முக்கியமாக சிறிலங்காவின் நில ஒருமைப்பாட்டுக்கான அதாவது பிரிக்கப்படாத ஒரே நாட்டுக்கான [Territorial unity] முதல் உத்தரவாதத்தை இந்தியாவே வழங்கியது.

பொதுமக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து கோரி தனது மனிதார்ந்த கவலையை இந்தியா வெளிப்படுத்திய போதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு கோருவதில்லை என்ற தனது முடிவில் அது உறுதியாக இருந்தது.

தன்னுடைய வெற்றியின் பின்னால் இருந்த இந்தியாவின் பங்களிப்புக் குறித்து ராஜபக்சவே குறிப்பிட்டிருக்கிறார். அவர் திரும்பவும் அதிகாரத்திற்கு வந்தால் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் தொடரும்.

அதேசமயம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் முக்கிய உறுப்பு நாடு என்ற வகையில் சீனா சிறிலங்காவுக்கு மிகவும் உதவிகரமானது. பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு பாதகமான எந்த ஒரு பிரேரணையும் வராமல் அது பாதுகாப்புத் தரும்.

சிறிலங்காவைக் கண்டித்து, அது புரிந்த போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையால் கடந்த ஜூன் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணை கொழும்புக்கு ஆதரவான நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது.

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட ஆதரவு வழங்கியது.

புதுடில்லியும் பீஜிங்கும் சிறிலங்காவில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

எனவே, அதிகாரத்தை வைத்திருப்பவர் யார் என்பதற்கு அப்பால் இந்தியா, சீனா இரு நாடுகளையும் சமமாகக் கையாள்வதற்கான காரணங்கள் எந்த ஒரு சிறிலங்கா குடியரசு அதிபருக்கும் இருக்கிறது.

அடிக்கடி மாறுபடுகின்ற நிலைமையை மனதில் கொண்டு செயற்பட வேண்டியதே அவரது தேவை.

எப்படி இருந்தாலும், சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா விழிப்புடனேயே இருக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவிய ஆயுத மற்றும் படைத் தளவாடங்களை சிறிலங்காவிற்கு விநியோகித்த முக்கிய நாடாக அது வளர்ந்த பின்னால் இந்தியா எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பது அவர்கள் கருத்து.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்படி இந்தியா வழங்கும் அழுத்தங்களைச் சமாளிக்கச் சீனாவுடன் தமக்குள்ள நெருக்கத்தை சிறிலங்கா இராஜதந்திரிகள் அளவுக்கதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது அண்மைக் காலங்களில் ஐயந்திரிபுறத் தெளிவாகியுள்ளது.

போருக்குப் பின்னான காலத்தில் சிறிலங்காவிற்கு அவசர மற்றும் முக்கிய படைத்துறைத் தேவைகள் ஏதும் இல்லாத போதும் தனது தடையில்லாத போர்த் தளபாட விநியோகத்தின் மூலம் இலங்கைத் தீவில் தனக்கான இடத்தை தானாகவே உறுதிப்படுத்தும் பெய்ஜிங்கின் போக்கு இந்தியாவைக் கவலை கொள்ள வைத்துள்ள முக்கிய பிரச்சினை.

இந்து சமுத்திரத் தீவு தொடர்பில் சீனா காட்டும் ஆர்வம் முக்கியமாக இராஜீய மற்றும் போர் உத்தி சார்ந்தது.

“சீனாவின் மிக நீண்ட கடல் வர்த்தகப் பாதைகளில் சிறிலங்கா ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தனது இந்து சமுத்திரப் பாதுகாப்புத் தேவைக்காக அந்தத் தீவை தனக்கு மிக மிக நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இராஜீய மற்றும் போர் உத்தி சார்ந்து பெய்ஜிங்கிற்கு உள்ளது” எனச் சொல்கிறார் ஓய்வு பெற்ற கேணல் ஆர். ஹரிஹரன்.

நீண்ட காலமாக இந்தப் பிராந்தியத்தைக் கண்காணித்து வரும் படைத்துறை ஆய்வாளர் அவர். இந்திய அமைதிப் படை சிறிலங்காவில் இருந்த போது அதன் உளவுத் துறைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

“சிறிலங்காவின் புவிசார் அமைவிடம் காரணமாக அது இந்தியாவின் தென்பகுதிப் பாதுகாப்பு முன்னணி நிலையாக இருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா தனக்குப் போட்டியான ஒரு சக்தி என்கிற நிலையில் அதன் அயல் நாடுகளில் தனது இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்குச் சீனா விரும்புகிறது” என அவர் விளக்கினார்.

உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் இந்தியாவின் அயல் நாடுகளில் தனது இருப்பை அதிகரித்து வரும் சீனாவின் கொள்கைகள் குறித்து புதுடில்லி போதிய கவனம் செலுத்தவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

உதாரணமாக, சிறிலங்காவின் தெற்குக் கரையோரமாக அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை சீனா கட்டி வருகிறது.

வடமேல் கரையோரம் புத்தளத்தில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் அமைக்க நிதி உதவி அளித்து வருகிறது.

சிறிலங்காவில் சீனாவின் இருப்பை சமன் செய்வதற்கு வசதியாக, கிழக்கில் இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள திருகோணமலையை இந்தியா அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது ஹரிஹரனின் பரிந்துரை.

1980-களின் நடுப்பகுதியில் திருகோணமலையில் அமெரிக்கா கால் ஊன்றக்கூடிய நிலைமை தோன்றியது.

அதுவே சிறிலங்காவின் இனப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் திலையிடக் காரணமாயிற்று.

திருகோணமலையின் செல்வாக்கு மிக்க பகுதிகளை தொடர்ந்து கொழும்பே வைத்திருப்பதை 1987-இல் கைச்சாதிடப்பட்ட சிறிலங்கா – இந்தியா ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது.

அத்துடன், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அந்தக் கிழக்கு நகரத்தில் கட்டப்பட்ட 102 எண்ணெய்க் குதங்களைப் புனரமைக்க சிறிலங்கா முடிவு செய்தால் அதனை நிராகரிக்கும் உரிமையும் அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்தது.

ஆனால், 2002ஆம் ஆண்டு அத்தனை எண்ணெய்க் குதத் தொகுதிகளையும் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் ஒப்படைத்தார்.

சீனா என்கிற துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதை எந்த ஒரு சிறிலங்கா ஆட்சியாளரும் நிறுத்தப் போவதில்லை என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும்.

அதேசமயம், கொழும்பை நோக்கி இந்தியா அனுகூலமான பார்வையைச் செலுத்துவதற்கு சீனாவின் இருப்பு சிறந்த ஊக்கியாக இருக்கும் என்று சிறிலங்காவில் உள்ள பலரும் நம்புகிறார்கள்.

ஆனால், அதே அளவிற்கு உண்மையானது, சிறிலங்காவின் நில ஒருமைப்பாட்டை ஒருபுறத்தில் ஆதரிக்கும் இந்தியா, மறுபுறத்தில் ஒன்றிணைந்த நாட்டுக்குள் தமிழர்களுக்கு அரசியல் சமத்துவமும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமின்றி உறுதியாக இருக்கிறது என்பது தான்.

இருந்தாலும், பாக்கு நீரிணையின் இரு புறமும் உள்ள தமிழர்கள் (ஈழம், தமிழகம்) இந்தியா மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.

மிக மோசமான, கொடூரமான போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அதனை நிறுத்துவதற்கு ‘லக்ஷ்மன்-ரேகா’ கொள்கையைத் தாண்டிச் சென்று இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அதற்குக் காரணம்.

போரை நிறுத்தும்படி கேட்டு கொழும்பு மீது அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்படக் கூடிய அழுத்தம் இரு தரப்பு உறவுகளை மிக மோசமாகப் பாதிக்கும், சிறிலங்காவிற்குள் புகுந்து விளையாடக் காத்திருக்கும் சீனா போன்ற நாடுகளுக்கு அது மேலும் சாதகமாகப் போய்விடும் – என்பதுதான் ‘லக்ஷ்மன் – ரேகா’ கொள்கை. இந்தியாவின் நடவடிக்கைகளை வரையறைக்குள் கொண்டு வந்தது இதுதான்.

இந்த விடயத்தில் முடிவான ஆய்வு என்னவெனில், மௌனமான ஆதரவு, அதே நேரத்தில் தலையிடாமை என்கிற இந்தியாவின் இரட்டைக் கொள்கையின் விளைவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவு.

அதன் மூலம் சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் எதிர்பார்க்கப்படாத ஒரு முடிவுக்கு வந்தது.

சிறிலங்காவில் இருந்து ஏனைய சக்திகள் (முக்கிய நாடுகள்) வெளியேறலாம், வெளியேறாமலும் போகலாம்.

ஆனால் – இந்தியா ஓய்ந்துவிட முடியாது.

சிங்கள இனவாத அலைகள் மேற்கிளம்புவது குறித்துத் தொடர்ந்து அவதாவனிக்க வேண்டிய சுமையை இந்தியா தாங்கியே ஆக வேண்டும்.

அதனால், சிறிலங்காவில் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவது இனிமேலும் தாமதிப்படுத்த முடியாது.

சீனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறிலங்காவில் இந்தியா வேறு விதங்களில் காலூன்றி வருகிறது.

அதனிடம் நீண்ட ‘செய்யப்பட வேண்டியவைகள்’ பட்டியல் உண்டு.

புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்பனவும் அதற்குள் உள்ளடக்கம்.

சிறிலங்காவின் வட பகுதியில் தொடருந்துப் பாதையை மீளமைப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான மனிதார்ந்த உதவிகளை வழங்குவது, வருமானம் தரும் வழிவகைகளை உருவாக்குவது, தமிழ் இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சிகளை வழங்குவது போன்றன இந்தியாவின் திட்டங்களில் அடங்கும்.

இவற்றை நோக்கிய நகர்வுகளில், ஏற்கனவே வடக்கில் தொடருந்துப் பாதையை அமைப்பதற்காக 425 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.

அதே சமயம், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம், வீடமைப்பு போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 500 கோடி இந்திய ரூபாய்களைச் செலவிடுகிறது புதுடில்லி.

இவையெல்லாம் அடுத்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விடாது என்பதில் புதுடில்லி உறுதியாக இருக்கின்றது.

இந்தியாவின் உதவிக் கரம்:

* முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்காக உலர் உணவு, துணிமணி, உபகரணங்கள் அடங்கிய 2.5 லட்சம் குடும்பப் பொதிகளைத் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பிவைத்தது. போர் நடைபெற்ற காலத்தில் – மார்ச் மாதம் முதல் செப்டெம்பர் வரையான ஆறு மாத காலத்திற்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் 60 பேரைக் கொண்ட கள வைத்தியசாலை ஒன்றை அமைத்து மருத்துவ உதவிகளை வழங்கியது.

50,000 மக்களுக்கு இந்த வைத்தியசாலை சிகிச்சை அளித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சத்திரசிகிச்சைகள்.

இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் மற்றும் புனர்வாழ்வுக்காக மத்திய அரசு தனியாக 500 கோடி இந்திய ரூபாயை வழங்கியது.

சிறிலங்காவின் முன்னாள் போர்ப் பகுதிகளில் இந்தியாவின் கண்ணிவெடி அகற்றும் அணிகள் 6 பணியாற்றுகின்றன.

கிட்டத்தட்ட 300 தொண் நிறையுடைய தகரங்களையும் கூடாரங்களையும் வழங்கி உள்ளது.

போரால் விதைவையாக்கப்பட்டவர்கள் போன்ற உதவி தேவைப்படும் மக்களுக்கான திட்டங்களில் இந்திய அமைப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழ் இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சிகளை வழங்குவதிலும் அவர்களது ஆளுமையை விருத்தி செய்வதிலும் இந்தியப் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை:

* வடக்கில் ஓமந்தையில் இருந்து பளை வரையிலும் தலைமன்னாரில் இருந்து மடு வரையிலுமாக இரு தொடருந்துப் பாதைகள் 425 மில்லியன் டொலர் கடன் உதவியின் கீழ் இந்தியாவால் அமைக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத் துறையில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் செய்யும் இந்திய அரச நிறுவனமான RITES India இதற்கான மூலப் பொருட்களை வழங்குகிறது.

இந்திய முதலீட்டுடன் கூடிய தனியார் நிறுவனங்கள் :

* Airtel Sri Lanka
ICICI Bank Sri Lanka
HDFC Bank
Taj Lanka Hotels Ltd
Asian Paints
CEAT-Kelani
Mackwood Infotec (Pvt) Ltd
Bensiri Rubber Products (Pvt) Ltd

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*