TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புதிய உபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய தமிழினம்

புதிய உபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய நிலைமையில் தமிழினம்……

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பெரு வெற்றி பெற்றிருக்கின்ற போதிலும், இன அடிப்படையில் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

மற்றொரு பதவிக் காலத்துக்கு நிறைவேற்று அதிகாரங்களுடன் இருக்கப்போகும் மகிந்த ராஜபக்ஷ, இந்த இன அடிப்படையிலான இந்தப் பிளவை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகளில் வெற்றி பெறுவாரா அல்லது சிங்கள மக்கள் மத்தியில் மேலும் இனவாத அடிப்படையிலான கருத்துக்களை விதைப்பதன் மூலம் இந்தப் பிளவை மேலும் அதிகப்படுத்துவதற்கு உதவுவாரா என்பது அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் வெளிப்படும் விடயமாக இருக்கும்.

தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகப்படியாக வசிக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நுவரெலியா மாவட்டத்திலும் எதிர்க்கட்சிகளின் பிரதான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவே வெற்றிபெற்றிருந்தார். இதனைவிட கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளின் வாக்குகளும் சரத் பொன்சேகாவுக்கே கிடைத்திருக்கின்றன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலேயே மகிந்த ராஜபக்ஷ அமோகமான வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கின்றார். இது போர் முடிவடைந்திருக்கின்ற போதிலும் மக்கள் இன அடிப்படையில் சமூகம் பிளவுபட்டுப்போயிருக்கின்றது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தலின் முடிவுகள் ஒருபோதும் போட்டியாளர்கள் வெளிப்படையாக முன்வைக்கும் கொள்கைப் பிரகடனங்கள் மற்றும், தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கும் திட்டங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதில்லை. வெளிப்படையாக முன்வைக்கும் கொள்கைத் திட்டங்களுக்குப் புறம்பாக தமக்கென வகுத்துக்கொண்ட இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் செயற்படுவதை எப்போதும் காணக்கூடியதாக இருக்கும். தமது கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் அனைத்தையும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளியிடுவதற்கு வேட்பாளர்கள் எவரும் துணிவதில்லை.

பதிலாக பிரச்ரக் கூட்டங்களில் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் உருவாகும் “”அலை தான் தேர்தலின் முடிவுகளை நிர்ணயிப்பதாக அமையும். அந்த வகையில் இந்தத் தேர்தலில் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ஷ அலையும், தமிழ்ப் பகுதிகளில் பொன்சேகா அலையும் அடித்துமுள்ளது எனக் குறிப்பிடலாம்.

தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இன நெருக்கடிக்கான தமது தீர்வு என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய நிலையில் அவர்கள் இருப்பதில்லை. அது எதிர்க்கட்சிகளின் பிரச்ரங்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். அதனால் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவது என்பது வெறும் சம்பிரதாயமான நிகழ்வுகளாகிவிட்ட நிலையில், அதற்குப் புறம்பான உடன்படிக்கைகளும், வாக்குறுதிகளும்தான் தேர்தல் பிரச்ரங்களின் கருப்பொருளாகின்றன. தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் வேட்பாளர்களின் கொள்கைகளையோ அணுகுமுறைகளையோ திட்டவட்டமாக மதிப்பிட்டுவிட முடியாது என்பதே உண்மை நிலையாகும்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் விவாதத்துக்குரிய பொருளாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக “இரகசிய உடன்படிக்கை பற்றிய செய்திகளே விவாதத்துக்குரிய முக்கிய பொருளாக இருந்துள்ளது. குறிப்பாக அரச தரப்பு இந்த இரகசிய உடன்படிக்கை என்பதையே தமது பிரச்சாரப் பீரங்கிக்கான பிரதான வெடிபொருளாகப் பயன்படுத்திக்கொண்டது.

ஆளும் கட்சியின் இந்த அணுகுமுறைக்கு தெளிவான சில காரணங்கள் இருக்கின்றன.

சரத் பொன்சேகா தமிழ் மக்களின் ஆதரவைத் தெளிவாகப் பெற்றிருந்தார். குறிப்பாக மனோகணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவற்றுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவும் அவருக்குக் கிடைத்திருந்தமை சிறுபான்மையினரின் வாக்குகள் அவரது பக்கத்துக்குச் சாயும் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன் அரசியலில் ஒரு மாற்றம் அவசியம் என்ற உணர்வும் தமிழர்களிடம் காணப்பட்டது. இந்த நிலையில், தமிழ் வாக்குகள் தமக்கு கிடைக்காது என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்திக்கொண்ட ராஜபக்ஷ தரப்பு, சிங்கள வாக்குகளைப் பெருமளவுக்குப் பெற்றுக்கொள்வதற்கான உபாயத்தையே வகுத்துச் செயற்பட்டது எனக் கூறமுடியும்.

பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை என்ற பிரச்சாரத்தை மகிந்த தரப்பு பிரச்ரத்தின் இறுதிக்காலத்தில் உரத்து ஒலித்ததன் பின்னணி இதுதான். நாட்டைப் பிளவுபடுத்தக்கூடிய வகையிலான இந்த இரகசிய உடன்படிக்கையை தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழித் தெறியப்போவதாகவும் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ரணில் பிரபாகரன் ஒப்பந்தத்தைக் கிழித் தெறிந்ததாகக்கூறிய ராஜபக்ஷ, இம்முறை பதவிக்கு வருவதன் மூலமாக பொன்சேகா சம்பந்தன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப்போவதாகக் கூறிவந்தார்.

ஆளும் கட்சியின் பிரதான பிரச்சாரப் பொருளாக இந்தத் தேர்தலில் இதுதான் இருந்துள்ளது. சிங்கள வாக்குகளை பெருமளவில் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் இந்தப் பிரசரங்கள் பொன்சேகா தரப்பைத் தடுமாற வைத்திருந்தது என்பது உண்மை. இவ்வாறான இரகசிய ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பதைச் சொல்வதற்கு பொன்சேகா தரப்பினர் கடுமையான பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. சிறுபான்மை இன மக்களின் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற பொன்சேகா தரப்பின் கணிப்பை மகிந்த வகுத்துக்கொண்ட உபாயங்கள் தவிடுபொடியாக்கிவிட்டுள்ளது.

இரகசிய உடன்படிக்கை தொடர்பாக மகிந்த தரப்பு மேற்கொண்ட தீவிர பிரச்சாரங்கள் பொன்சேகா தரப்பைத் தடுமாற வைத்தது என்பதற்கு மேலாக அவர்களை ஒரு தற்காப்பு நிலைக்கே தள்ளியிருந்தது எனக் கூறலாம். குடும்ப ஆதிக்கம், ஊழல் மோசடிகள் என பொன்சேகா தரப்பு மேற்கொண்ட தீவிரமான பிரச்சாரங்கள் இதற்கு முன்பாக பெரிதாக எடுபடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இரகசிய உடன்படிக்கை பற்றி உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் எதுவும் ராஜபக்ஷ தரப்புக்கு இல்லாத போதிலும், தமது பிரதான பிரச்சாரப் பொருளாக அதனை மாற்றியதன் மூலமாக எதிரணியினரை அதற்குப் பதிலளிப்பது என்ற குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்து வைப்பதில் ராஜபக்ஷ தரப்பு வெற்றி பெற்றிருந்தது.

அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் காலகட்டத்தில் அதற்குப் பதிலளிப்பது என்ற ஒரு குறுகிய தற்காப்பு நிலைக்கு அப்பால் சென்று ஆளும் கட்சியினர் மீது பாரிய தாக்குதல் ஒன்றை (பிரச்சாரத்தில்) நடத்தி அவர்களைத் தடுமாறச் செய்யும் இயலுமையை பொன்சேகா தரப்பு கொண்டிருக்கவில்லை.

* தேர்தலுக்கு முன்பாக இறுதிக்காலப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தப் பிரச்சாரங்கள் எதிர்காலத்தில் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கோ பேரங்களைச் பேசுவதற்கோ தேர்தல் சமயத்தில் பிரதான கட்சிகள் அச்சமடையும் ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது. அத்துடன் இறுக்கமான போட்டியைக் கொண்டுள்ள ஒரு தேர்தலில் தமிழர் தரப்புத்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்ற கருத்தையும் இந்த முடிவுகள் நிராகரித்திருக்கின்றன.

* ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றின் மூலம் தமது நியாயமான அரசியல் அபிலாஷைகளை முன்வைப்பதற்கோ அல்லது, அது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தி பேரங்களை மேற்கொள்வதற்கோ இயலாத ஒரு நிலையை இது சிறுபான்மையினருக்கு ஏற்படுத்துவதாக அமையலாம். அதேவேளையில், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சிறுபான்மையினருடைய ஆதரவு எந்த வகையிலும் அவசியமில்லை என பிரதான கட்சிகள் கருதிச் செயற்படக்கூடிய ஒரு ஆபத்தான நிலைமையையும் இந்த தேர்தல் முடிவுகள் சுட்டி நிற்கின்றன.

ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றின் மூலம் தமது உரிமைகளுக்காக பேரம் பேசமுடியும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு விழுந்துள்ள ஒரு அடியாகவும் இதனைக் கருத முடியும். நீண்ட கால ஆயுதப் போராட்டத்தின் பின்னர் ஜனநாயக அரசியலில் நம்பிக்கை வைத்து காய்களை நகர்த்திய தமிழ்த் தலைமைக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்திருக்கும்.

* இந்த நிலையில், எதிர்கால அரசியலைப் பொறுத்தவரையில் புதிய உபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய நிலைமையில் தமிழர் தலைமை உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இத்தேர்தல் முடிவுகளில் கவனிக்கக்கூடியதாகவுள்ள மற்றொரு அம்சம் என்னவென்றால், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்துக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள் என்பதாகும்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்களின் கோரிக்கைகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்பதும் தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படையாகியிருக்கின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான உபாயங்களை அரச தரப்பு வகுக்கத் தலைப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காண்டீபன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*