TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முனைவாக்கம் பெற்றுள்ள தேசிய இன முரண்பாடுகள்

ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தேர்தலொன்று நடத்தப்பட்டுள்ளது.

அதிகளவு அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ள இப்பதவி, அகற்றப்பட வேண்டுமென்கிற எதிர்வாதங்கள் நீடித்தபடியே இதற்கான தேர்தலில் சகல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலும் அரசியல் சாசனத்திலும் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எந்த ஆட்சியாளரும் அக்கறை கொள்வதில்லை. பெரும்பான்மை இனம் ஏற்றுக் கொள்வதையே, சிறுபான்மை இனங்களுக்கு வழங்க முடியுமென்பதை தற்போதைய ஆட்சியாளர்களும் கூறுகின்றனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக மாகாண சபையை முன் வைத்தால் அம்முறைமை தென்னிலங்கையிலும் பிரயோகிக்கப்படும். மாவட்ட சபைக்கும் இது பொருந்தும். அதாவது வடக்கு கிழக்குக்கென்று தனித்துவமான எந்தவொரு அரசியல் நிர்வாகக் கட்டமைப்பினையும் உருவாக்க, பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் உடன்படுவதில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் இரண்டுவிதமான ஆட்சி முறைமை இருப்பது, தாயகத் தமிழ் பேசும் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தது போலாகிவிடுமென்கிற சிந்தனையே இதற்கு மூல காரணியாகும். அரசாகத் தோற்றம் பெறக்கூடிய சகல உட்பண்புகளையும் கொண்ட ஒரு தேசிய இனத்தை, அதன் குடிசனப் பரம்பலையும் தொடர்ச்சியான வாழ்விட நிலப் பரப்பையும் சிதைப்பதனூடாக வலுவிழக்கச் செய்யலாம்.

கல்லோயாக் குடியேற்றத்திலிருந்து இற்றைவரை, நில ஆக்கிரமிப்பின் ஊடாக திட்டமிட்டவகையில் இத்தகைய சிதைப்பு நகர்வுகளில் பேரினவாதிகள் தொடர்ச்சியாக ஈடுபடுவதைக் காணலாம். குடியேற்றத்தின் உச்ச நிலையாக புதிய மாவட்டங்களும் தேர்தல் தொகுதிகளும் உருவாக்கப்படுகின்றன. சேருவில மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதிகாமடுல்லவின் வரிசையில் மணலாறும் இணையக்கூடும். குடிசன மதிப்பீடுகள் வெளிப்படுத்தும் தரவுகள், இனப் பரம்பலில் நிகழும் தலைகீழான மாற்றங்களை தெளிவாகப் புலப்படுத்துகின்றன. அரச காணிகளை பயன்படுத்தும் அதிகாரம் மத்தியில் இருக்கும் போது அந்த மாகாண சபையின் ஆட்சியுரிமை, வெறும் நிர்வாகக் கட்டமைப்பு இயந்திரத்தின் தொழிற்பாடாகவே அமைந்து விடுகிறது.

நிர்வாகப் பரவலாக்கத்திற்கும் அதிகாரப் பரவலாக்கத்திற்குமிடையே எழும் முரண்பாடான தன்மை, 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் செயலிழக்கச் செய்து விடும். இங்கு அதிகாரப் பகிர்வு என்கிற பேச்சிற்கே இடமில்லை. இந்நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படலாமென்று வலியுறுத்தும் கூட்டமைப்பினர் அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி முறைமையொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை சிங்கள தேசத்திடம் விடுப்பது நடைமுறைச் சாத்தியமான விடயமாகத் தென்படவில்லை.
அதைச் சாதிக்கக் கூடிய வல்லமை அற்றுப் போனதால்தான் 30 ஆண்டு கால அறவழிப் போராட்டம் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகி ஆயுதப் போராட்டமாக மாற்றமுற்றது.

சமாதான காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை, விடுதலைப் புலிகள் சரியாகப் பயன்படுத்தத் தவறி விட்டார்கள் என்கிற ஒரு எதிர்வாதமும் முன் வைக்கப்படுகிறது. ஆனால், அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமலேயே ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. சுனாமி அழிவிலிருந்து மீண்டெழ உருவாக்கப்பட்ட பி ரொம் (க கூணிட்) கருவிலே சிதைக்கப்பட்டது. இவையிரண்டும் அடிப்படையில் தமிழர் நிலம் சார்ந்த விவகாரங்களாகவிருப்பதால் ஆட்சியாளர்கள் அதனை நிராகரித்தார்கள். வன்னி நிலப் பரப்பு இராணுவ மயமாக்கப்படுவதும் நிலக் கண்ணிவெடிக் கதை கூறி, மக்களின் மீள் குடியேற்றத்தை தாமதப்படுத்துவதும் நில ஆக்கிரமிப்பின் புதிய பரிமாண வெளிப்பாடுகளேயாகும்.

பாசிக்குடாவிலிருந்து நிலாவெளி வரையான கடற்கரைப் பிரதேசங்களில் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி என்கிற போர்வையில் குவி யும் முதலீடுகள், இன்னொரு வகையான நில அபகரிப்பாக மாற்றமடைகிறது. அத்தோடு மகாவலி அபிவிருத்தித் திட்டமானது கிழக்கு மாகாணத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலங்களை விழுங்கிக் கொண்ட வரலாறுகளை நினைவுபடுத்துகிறது. நிலம் பறிபோகும் நிகழ்வுகள், மிக வேகமாக முன்னெடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கும் தகவல்கள், தமிழர் களின் அரசியல் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதனை உறுதிப்படுத்துகிறது.

அதேவேளை சரத் பொன்சேகாவை வெளிப்படையாக ஆதரித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதாவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அரசாங்கத்திற்கு எதிரானவர்களை தனிமைப்படுத்த அல்லது அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகவே கருதவேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்க்கட்சிகள், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியை உயர்த்த முடியாமல் தடுமாறிய விவகாரத்தை மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதை அவதானிக்கலாம்.

மேற்குலக அரசியலில் கருத்தியல் ஆதிக்கம் செலுத்தும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு தேர்தல் தொடர்பாக விடுத்த அறிக்கையில் “அரசியல் தீர்விற்கான சாத்தியப்பாடுகள் குறைவடைவதையே இம் முடிவு எடுத்துக் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புறக்கணிப்பை மேற்கொண்ட வட மாகாண மக்கள், இத் தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்தது ஜனநாயக முறைமைக்கு கிடைத்த வெற்றியாகக் கருத வேண்டுமென அரசு தெரிவிக்கும் கருத்தினை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனும் ஆமோதிக்கிறார். ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பிய தமிழ் பேசும் மக்களின் ஜனநாயகக் குரல் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. எத்தனை வீதமான மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்குமப்பால் வாக்களித்தோர் கூறிய செய்தியின் அரசியல் பரிமாணங்கள் உள்வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் 182,132 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட விடயம் சில உண்மைகளை சுட்டிக் காட்டுகிறது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எம்.கே. சிவாஜிலிங்கம், வடக்கு கிழக்கில் பெற்ற மொத்த வாக்குகள் 5058, கிழக்கு மாகாணத்தில் 1304 வாக்குகளை மட்டுமே இவர் பெற்றிருந்தார். இரு பிரதான வேட்பாளர்களும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாமல் இரண்டாவது தெரிவினைக் கணக்கெடுக்கும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்படுவார்கள் என்கிற எதிர்வு கூறலும் பொய்த்து விட்டது. சிங்கள மக்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளாமல், பலவிதமான கருத்துகளும் முன் வைக்கப்பட்டன.
தமிழர் அரசியல் தரப்பினருக்கு அவசியமாகவிருந்த ஆட்சி மாற்றம், சிங்கள அரசியலுக்குத் தேவையற்ற விடயமாக இருந்திருக்கிறது.

தென்னிலங்கை மக்களிடம் சென்ற பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் எதிர்க்கட்சிகள், ஆட்சி மாற்றமொன்றிற்கான வலுவான காரணத்தை அவர்கள் முன்வைக்கவில்லை. போர் வெற்றியின் பிரதான பங்காளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை, மஹிந்தவுக்கு எதிராக முன்னிறுத்தியும், ஆட்சி மாற்றப்படுவதை சிங்கள மக்கள் ஆதரிக்கவில்லையென்பது தான் உண்மை. 2005 தேர்தலில் சுமார் 1,80,000 அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ, அதைப் போன்று பத்து மடங்காக 18 இலட்சம் அதிக வாக்குகளைப் பெறக் கூடியதாக இத் தேர்தல் அமைந்து விட்டது. கூட்டமைப்பைப் பொறுத்தவரை, முள்ளிவாய்க்கால் கோர நிகழ்வின் பின் தமது செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்தளவிற்கு உள்ளதென்பதை உரசிப் பார்க்கும் ஒரு பரீட்சார்த்த களமாக பார்க்கப்படுகிறது.

இவை தவிர தேர்தலின் பின்னர், தென்னிலங்கை அரசியலில் தீவிரமாகும் அறிக்கைப் போர், நாடாளுமன்றத் தேர்தல்வரை தொடரக்கூடும். ஜெனரல் சரத் பொன்சேகா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன. நாட்டைக் காட்டிக் கொடுக்க முற்பட்டமை, இராணுவ ஆட்சியொன்றை அமைக்க சதி செய்தமை, படையிலிருந்து தப்பியோடிய இராணுவத்தினரை அருகில் வைத்திருந்தமை, ராஜபக்ஷ குடும்பத்தை கொல்ல திட்டமிட்டமை போன்ற எதிரம்புகள் தொடர்ச்சியாக வீசப்படுகின்றன. சரத் பொன்சேகாவை சிறைக்குள் முடக்குவதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதான சிங்கள எதிர்க்கட்சியினரை செயலிழக்க வைத்து ஓரங்கட்டலாமென சிலர் கணிப்பிடக்கூடும். இருப்பினும் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை எவர் ஆட்சிக்கு வந்தாலும் தீர்வென்பது எட்டாக் கனியாக இருக்குமென்பதை உணர்ந்து கொள்ளும் அதேவேளை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லையே என்கிற ஆதங்கம் பலரிடம் இருப்பதையும் அறியக் கூடியதாகவிருக்கிறது.

ஆனாலும் பூகோள அரசியலில் ஏற்படும் மாறுதல்களையும் பிராந்திய அரசியலில் அவை உருவாக்கும் தாக்கங்களையும் மிக உன்னிப்பாக அவதானிக்கும் தேவையொன்று காணப்படுகிறது. தேசிய அரசியலில் இன முரண்பாடுகள் தீவிர முனைவாக்கத்திற்கு உட்படுவது போன்று பிராந்திய நலன் பேண விழையும் வல்லரசாளர்களுக்கிடையிலும் முரண் நிலைச் செயற்பாடுகள் வளரும் நிலை தோன்றுகிறது. இதனைச் சரியாக மதிப்பீடு செய்வதன் ஊடாக அடுத்த கட்ட அரசியல் நகர்வினை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டும்.

இதயச்சந்திரன்

நன்றி்:வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*