TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இறப்பினில் பிறந்தான், உயிர்த்தெழவைத்தான்

இறப்பினில் பிறந்தான், இனத்தையே உயிர்த்தெழவைத்தான்.

நினைவுப்பகிர்வு 1

தமிழினத்தின் சமீபகால வரலாறு அத்துணை சிறப்பானதல்ல. சில பத்தாண்டுகளாக அதன் பக்கங்கள் துரோகங்களாலும் இழப்புகளாலும் நிறைந்திருந்தது குறிப்பாக ஈழ விவகாரங்களில். அன்று மக்கள் அறிந்த தலைமைகளில் ஒரு பிரிவு ரத்தத்தை சுவைத்துக்கொண்டிருந்தது மற்றோர் கூட்டமோ கண்ணீரை அறுவடை செய்யக்காத்திருந்தது. சிறிய அளவு போராட்டங்களைக்கூட ஒடுக்கும் பெரும்பணியை கருணாநிதி செய்தார். அந்த பாக்கியம் கிடைக்காததை எண்ணி புலம்பினார் ஜெயலலிதா. ஏனைய சிறு தலைவர்கள் இவ்விரண்டுபேருக்குப் பின்னால் போவதைத்தவிர வேறு மார்கமில்லை என்று யதார்த்தவாதம் பேசினார்கள்.

மக்களின் போக்கும் நம்பிக்கை அளிக்கும்படியாக இல்லை. ஒரு பெரும் மனிதப் பேரழிவு கூப்பிடு தூரத்தில் நடந்துகொண்டிருக்க நாமெல்லோரும் உச்சு கொட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்க்கொண்டிருந்தோம். ஐரோப்பாவின் ஒரு மூலையில் உள்ள குருத்துவாராவில் துப்பக்கிசூடு நடந்ததற்கே பஞ்சாப் நாள் கணக்கில் முடக்கப்பட்டது. இங்கோ, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மீதமிருப்பவர்கள் உயிரை மட்டும் சுமந்து ஓடியபோது நாம் கருணாநிதியின் வாயைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

* ஒரு நெடுந்தொடர் கதாநாயகிக்கு கிட்டும் பரிதாபமும் கவனமும் இறந்துகொண்டிருக்கும் சகோதரிகள் மீது இல்லாதுபோனதை கேவலம் என்பீர்களா இல்லை துரதிருஷ்டம் என்பீர்களா ?

* ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் நாம் சுயமரியாதை உள்ளவர்கள் என்பதற்கான இறுதி ஆதாரமா?

* நீங்கள் காயமுற்று வீதியில் கிடக்கையில் உங்களை காப்பாற்றாமல் பிச்சையிட்டுப் போகிறவன் தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டால் அதை மண்டையை ஆட்டி ஏற்றுக்கொள்வீர்களா ?

* நாளை ஒரு வன்னித் தமிழனை சந்திக்க நேர்ந்தால் அவனுக்கு சொல்ல என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

இப்படி நமக்குள் எழும்பிய கேள்விகள் ஆயிரம். நல்ல பதில் சொல்வார்கள் என்று நம்பிய பலரும் புதிய கேள்விகளை உற்பத்தி செய்பவர்களாகத்தான் இருந்தார்கள் என்பது தமிழர்களின் தனிச்சிறப்பு கொண்ட தலைவிதி.

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டபோது வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றிய மக்கள் சிலர் கொஞ்சம் பிசியாக இருந்தார்கள். அக்கறை கொண்ட மக்களில் சிலர் எல்லாவற்றையும் பிரபாகரன் பார்த்துக்கொள்வார் என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்கள். பெரும்பான்மை மக்களோ பதற்றத்திலும் குழப்பத்திலுமே வாழ்ந்தார்கள். யாரை நம்புவது எனும் விடைகாண முடியாத கேள்வி எல்லோர் மௌனத்தினூடேயும் எதிரொலித்தது. நம்பிக்கையளிக்கும் செய்தி ஏதும் நம்மை வந்தடையவில்லை நாமும் நம்பிக்கையளிக்கும் காரியம் எதுவும் செய்திருக்கவில்லை. ஆட்சியாளர்களும் நம்மை கையாலாகாதர்வர்கள் என்று உறுதிசெய்துவிட்டமையால் வழக்கமான பணிகளுக்குத் திரும்பும் உத்தேசத்திலிருந்தார்கள், ஒரு இளைஞன் பெட்ரோல் கேனுடன் சாஸ்திரி பவனில் நுழையும் வரை.

* தற்கொலை தமிழகத்திற்கு புதிதல்ல, தினத்தந்தியின் இரண்டு பத்தி செய்தி அளவுக்கே அது தகுதியுடையது. ஆயினும் முத்துக்குமரா, உனது உயிர்தியாகம் ஆள்பவர்களுக்கு அச்சத்தையும் குறைந்தபட்ச சொரணை உள்ளவர்களுக்கு குற்ற உணர்வையும் ஒருங்கே விதைத்தது.

* உன் மரணச்செய்தி கிடைத்த வினாடியில் (நான் அறிந்த ) பலருக்கும் தோன்றிய உணர்வு இதுதான் ” நாம் ஏதேனும் உருப்படியாய் செய்திருந்தால் இவனை இழந்திருக்கமாட்டோம் “. ஒரு உயிரின் இழப்பு மட்டுமே தமிழர்களை துயிலெழுப்பும் எனும் உனது கணிப்பு உண்மையானது. ஆயிரமாயிரம் மரணங்களை அமைதியாகக் கடந்துபோன தமிழினத்தை ஒரு தற்கொலை கோபம்கொள்ள வைக்கும் என்று உலகம் எதிர்பார்த்திருக்காது.

தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர் கூட்டம் கொளத்தூரை முற்றுகையிட்டது. உன் கடிதம் கிடைத்த மக்கள் யாவரும் உறக்கம் கலைந்து எழுந்தார்கள். திமுக அதிமுக என்ற பின்புலத்துடன் மாலை சுமந்து வந்தவர்கள் பாரபட்சமில்லாமல் செருப்பு வீச்சுக்கும் கல்வீச்சுக்கும் ஆளானார்கள். வீசிய கற்களின் அடித்தளத்தில் கம்பீரமாக நின்றது தமிழனின் கவுரவம். ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் காண சாத்தியமில்லாத இக்காட்சியை உன் தியாகம் உலகமே காணும்படி செய்தது. இருபெரும் துரோகிகளில் ஒருவர் வைகோவை முன்னிருத்தி பின்வாங்கினார் இன்னொருவருக்கோ ஒளிந்துகொள்ள முதுமையையும் முதுகுவலியைத் தவிர வேறெதுவும் கிட்டவில்லை. நாற்பது எம்பி சீட்டுக்கு பயந்து மத்திய அரசின் சிவசங்கர் மேனனும் பிணம் தின்னிகள் இரண்டு நாட்கள் விரதமிருப்பார்கள் என்று அவசர அறிக்கை வாசித்தார்.

* நன்றி சகோதரனே, உன் உயிர் பிச்சையில்தான் நாங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆம் நீ உயிரை பிச்சையாக எமக்கு தந்திருக்காவிடில் எதையும் எதிக்கத்தெரியாத சவங்களாகத்தான் நாங்கள் நடமாடிக்கொண்டிருப்போம்.

* நன்றி சகோதரனே,உன் உடல் கொளத்தூரில் வைக்கப்பட்டது முதல் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது வரையிலான மூன்று நாட்கள்தான் தமிழர்கள் தமிழர்களாக வாழ்ந்த தினங்கள்.

* நன்றி சகோதரனே, நம்பிக்கை இழந்துபோயிருந்த உலகத்தமிழனுக்கும் உள்ளூர் தமிழனுக்கும் அந்த நாட்களில் உன் தியாகம்தான் முதல் வெளிச்சம்.

* நன்றி சகோதரனே, ஈழ ஆதரவு இயக்கங்களில் உன் இறுதி ஊர்வலத்தைத் தவிர வேறொரு குறிப்பிடத்தக்க போராட்டம் எங்கள் வசமில்லை.

* இதோ இன்று உன் நினைவு தினம். எனினும் உனக்கு அஞ்சலி செலுத்தும் துணிவு எமக்கில்லை. என்ன தகுதியோடு நாங்கள் அதைச் செய்வது?

* என் உடலை வைத்து அரசியல் செய் என இறுதிக்கடிதம் எழுதிவைத்தாய். என் மரணத்தை அரசியலாக்கு என்றாய் நீ, ஆனால் மரணத்தை அரசியலாக்கக்கூடாது என்று சொன்ன குழுவினரிடம் தோற்றோம். என்ன சொல்லி அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் ஈழ ஆதரவுப்போராட்டத்தில் உன்னை மிஞ்சிய போராளி இல்லை என்றா?

* அல்லது இனியொரு முத்துக்குமார் உருவாதற்கான காரணங்கள் இங்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதென்றா?

* ஜெயலலிதாவா கருணாநிதியா என விவாதிக்கும் சூழல் மறைந்து மகிந்தாவா – பொன்சேகாவா என்று விவாதம் செய்யும் நிலைக்கு முன்னேறிய இழிநிலையைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா அல்லது ஆயிரமாயிரம்பேரைக் கொன்ற பேரினவாதம் கடைசியில் தமிழீழத் தேசியத்தின் ஆத்மாவை முள்ளிவாய்காலில் வைத்து தன் கடமையை முடித்துக்கொண்டது என்ற தகவலைச் சொல்லி அஞ்சலி செலுத்தவா?

* இல்லை சோனியாவின் விசுவாசமான கையாள் கருணாநிதி இன்று தனக்குத்தானே உலகத்தமிழர்களின் ரட்சகராக பட்டம் சூட்டிக்கொண்டதையும் அவரிடம் நக்கிப்பிழைக்கும் கூட்டம் இன்று பல்கிப்பெருகிவிட்டதையும் சொல்லி அஞ்சலி செலுத்துவதா?

நேர்மையாக சொல்வதானால், நீ உயிரைக்கொடுத்து ஏற்றிய நெருப்பை நாங்கள் உன் சிதைக்கு தீயிட்ட கணத்திலேயே ஏறத்தாழ அணைத்துவிட்டோம். ஈழப்போரின் கடைசி நாட்களில் ஐம்பதாயிரம் பேர் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. ஈழப்போராட்டத்தைபோல நம் போராட்ட குணமும் அதன் ஆரம்பநிலைக்கே போனது. சொல்லிக்கொள்வதற்கு நல்ல செய்தி ஏதுமில்லாமல் வெறுமனே புகைப்படத்துக்கு பூத்தூவுவதில் எனக்கு சம்மதமில்லை.

ஆயினும் உனக்கும் எனக்கும் சொல்வதற்கு செய்தி ஒன்று என்னிடம் உண்டு. காலம் ஒரு தரப்புக்கு மட்டும் நம்பிக்கையளிப்பதாக எப்போதும் இருந்ததில்லை. தமிழ்நாட்டின் எதிர்ப்புணர்வு இன்னும் தொலந்துவிடவில்லை என்பது உன் இறுதி ஊர்வலத்தின்போதே நிரூபனமாகிவிட்டது. துரோகங்களையும் நயவஞ்சகங்களையும் தேவைக்கதிகமாகவே பார்த்து பயிற்சி பெற்றுவிட்டோம். எல்லா மட்டத்திலும் கைவிடப்பட்டவர்கள் இனி நமக்கான உரிமைகளை நம்மால்தான் பெற முடியும் என்ற ஞனோதத்தை பெற்றிருப்பார்கள். வன்னித் தமிழனுக்கு எதிரானவன் உள்ளூர் தமிழனை எந்தநாளும் நேசிக்கமாட்டான் என உணர்ந்திருப்பார்கள்.

ஆகவே நாங்கள் நம்புகிறோம் நண்பனே, உனக்கு அஞ்சலி செலுத்த சீக்கிரம் வருவோம். அப்போது நிச்சயம் அதற்கான தகுதியுள்ளவர்களாக நாங்கள் இருப்போம்.

நினைவுப்பகிர்வு 2

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….

சென்ற வருடத்தில் ஜனவரி 29 ஆம் தேதி நடுப்பகல் 12 மணி அளவில் அவசரமும், பதட்டமும் நிறைந்த ஒரு குரலின் மூலம் முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செய்தியை நான் அறிந்தேன். தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத ஒரு இளைஞன் தன்னையே எரித்துக் கொள்வதான மனநிலை என்னை முற்றிலும் சிதைத்துப் போட்டது. அன்றைய காலக் கட்டத்தில் நமது கையறு நிலையின் உச்சம் முத்துக்குமாரின் தியாகம்.அந்த சமயத்தில் மட்டுமல்ல..இப்போதும் கூட முத்துக்குமாரின் மரணம் எனக்கு மிகுந்த குற்ற உணர்வாக வலியினை கொடுக்கிறது. என் கண் முன்னால் நடந்த…நடக்கின்ற… வேதனைகளை..கொடுமைகளை சகிக்கும் என் மனநிலையின் மீது ஆறாத வெறுப்பாய் கவிழ்ந்திருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாட சுகங்கள் மீதான நுகர்வு கூட என்னை மிகுந்த பதற்றம் உடைய மனிதனாக..குற்ற உணர்வு கொள்பவனாக மாற்றி வைக்கிறது. நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற தமிழின இளைஞர்கள் இவ்வாறு தான் ஈழம் சிதைந்துப் போன வலியோடு..துயரோடு… வாழ்கிறார்கள். ஆனால் முத்துக்குமாருக்கு மட்டும் சுயநலத்தினை மீறிய இனநலன் சார்ந்த மனநிலை வாய்த்திருக்கிறது.

பாருங்கள்…உலகத்தீரே…

* பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஒரு தேசிய இனத்தின் வழி தோன்றியவன் …உலகத்திற்கு கலை, பண்பாடு, இலக்கியம், நாகரீகம், அரசு,வீரம் என அனைத்தையும் போதித்த இனத்தின் புதல்வன் … தன் சொந்த சகோதர, சகோதரிகள் தன் கண் முன்னால் அழிவதை கண்டு சகிக்க முடியாமல் தன்னை தானே எரித்து மரித்துப் போனான்.

* உலகத்தின் மெளனம், இந்தியத்தின் வேடம், தமிழக அரசியல்வாதிகளின் துரோகம் ..இவைதான் எங்கள் ஈழத்தினையும் அழித்தன. எங்கள் முத்துக்குமாரையும் பறித்தன.

* அறம் செய்ய விரும்பிய இனத்தின் பிள்ளையான முத்துக்குமார் தன் உளச் சான்றுக்கு நேர்மையாக இருந்து விட்டு போனார். …

ஒரு மரணத்திற்கு முன்னதான பொழுதுகளில் முத்துக்குமார் கடைப்பிடித்த நிதானம் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியது. ஒரு மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவல்ல என்பதனை முத்துக்குமார் நிறுவியுள்ளார்.

இத்தனைக்கும் அந்த மனிதன் சமூகத்தின் மிகச் சாதாரணப் பகுதியில் இருந்து தான் என்ன செய்கிறோம் என்பதனை முழுக்க ஆராய்ந்து..இனிமேலும் பொறுப்பதற்கோ, இழப்பதற்கோ ஏதுமற்ற நிலையில் தன்னையே ஒரு தீபமாக்கி கொண்டு ஊருக்கு வெளிச்சமாகிப் போனார் முத்துக்குமார். ஈழ அழிவின் கடைசிக் காலங்களில் தன் சொந்த சகோதர சகோதரிகள் தங்கள் கண்ணெதிரே அழிவதை கண்ட தமிழ்ச் சமூகம் என்ன செய்வது எனப்புரியாமல் கண் கலங்க நின்றது. நாமெல்லாம் ஏதாவது அதிசயம் நடக்காதா…

ஏதோ ஒரு அற்புத நொடியில் நம் ஈழம் அழிவிலிருந்து மீளாதா என்ற பரிதவிப்பில் நின்றுக் கொண்டிருந்தோம். மனித சங்கிலியாக கொட்டும் மழையில் நின்றுப் பார்த்தோம். சாலை மறியல், தொடர்வண்டி மறியல், போராட்டம், உண்ணாவிரதம் என அனைத்தும் செய்தோம். இன்று அப்பட்டமான போலிகளாக நம் முன்னால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னமும் வேஷமிட்டு திரியும் வேடதாரிகளை நம்பிக் கிடந்து நாசமாய் போனோம்.உணர்வு மிக்க இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடக்கும் போது கண்கலங்க கடந்துப் போனார்கள்.

சீமான் அண்ணன், கொளத்தூர் மணி அண்ணன்,அய்யா மணியரசன் போன்றோர் தேசியத்தினை(?) பாதுகாக்க கைது செய்யப்பட்டனர். இறுதியாக திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலை என்ற முடிவோடு அமர்ந்தார். நாம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். என்ன நடந்ததோ, ஏது விளைந்ததோ தெரியவில்லை. சில பேருந்துகள் எரிந்ததை தவிர எவ்வித பலனும் இல்லை. மீண்டும் கலங்கி நின்றோம் . என்ன செய்வது என்ற தயக்கத்தின் ஊடான தேக்கம் நம் தொப்புள் கொடி உறவுகளை காப்பற்ற கடைசி முயற்சிகளையும் தளர வைத்தது.

* அந்த நேரத்தில் தான் தமிழின இளைஞர்களின் உணர்வின் வெளிப்பாடாக முத்துக்குமார் உயிராயுதம் எடுத்தார். ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகங்கள் வெகு சாதாரணமானவைதான் என்றாலும் முத்துக்குமாரின் தியாகம் தனிவகையானது. நின்று.. நிதானித்து .. அறிவின் ஊற்றாய் நிலை நிறுத்தப்பட்டு வழங்கிய ஒரு அறிக்கையின் மூலம் முத்துக்குமாரின் தியாகம் ஆவணப்படுத்தப் பட்டு விட்டது.

அது வெறும் அறிக்கையோ அல்லது மரண வாக்குமூலமோ அல்ல. தமிழனின் கடந்த ,நிகழ்கால வரலாற்றினை மீள் பார்வைக்கு உட்படுத்தும் நீதிமன்றக் கூண்டு. இவ் உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் உள் மன சான்றினை உலுக்கிய பேரிடியாக விளங்கிய அந்த அறிக்கை, பதவிக்காக எதையும் இழக்க துணியும் போலி அரசியல் ஒப்பனை முகங்களை கிழித்தெறிந்தது. அரசியல் வியாபாரம் செய்து ,தன்னை விற்று, தன் இனத்தினை விற்று..மிஞ்சி இருப்பதை விட்டு விட மனமில்லாமல் புறங்கையை நக்குபவர்களையும், ஓட்டு பிச்சைக்காக ராணுவம் அனுப்பி நாடு வாங்கித் தருவேன் என்று நாடகமாடிய நயவஞ்சக எதிரியையும், தமிழன்னையை மறந்து பதவிக்காக இத்தாலி அன்னையிடம் அனைத்தையும் இழந்த துரோகிகளையும் அந்த அறிக்கை மிகச் சரியாக அடையாளமிட்டுக் காட்டியது. இனி மக்களிடமிருந்து தமிழுணர்வு மிக்க தலைமை உருவாக வேண்டும் என புது திசை வழி காட்டியது.

* இன உணர்வு மிக்க இளைஞர்களின் ஆழ் மன வெளிப்பாடாய் முத்துக்குமாரின் ஈகை விளங்கியது. தமிழினத்திற்காக தன்னையே அளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் நடக்கையில்… மனசாட்சியை , இன மாட்சியை தலைநகரில் அடகுவைத்து விட்டு ஈழ ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பிறந்தநாள் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் தலைவர்கள். சாப்பிட்டீர்களா தலைவர்களே… அதில் எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் மாமிசமும் இருந்திருக்குமே… ! எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார்?

* ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும், ஒரு குவார்ட்டர் பாட்டிலும், 500 ரூபாய் நோட்டிற்கும் இனத்தினை அழித்தவர்களுக்கே மீண்டும் வாக்களித்து தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் இவர்களுக்காகவா..?

* இனம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் .. மானடவும்,மயிலாடவும் கண்டு விட்டு.. தோற்பதன் துயரம் கூட உணராமல்.. சாதியால் பிளவுண்டு.. மதத்திற்கு முன்னால் மண்டியிட்டு சாதாரண வாழ்க்கையில் சாக்கடையாய் போன இவர்களுக்காகவா..?

பின் யாருக்காக ..எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார்..?
.
லட்சியவாதிகளின் மரணம் ஒரு துவக்கமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தார் முத்துக்குமார். தன் இரத்த உறவுகளுக்காக உயிரையும் கொடுப்போம்- என கொடுத்து ஈழ மக்களின் கண்களில் துயரத்தின் ஊடான கண்ணீரில் நன்றியாய் கசிந்தவர் முத்துக்குமார். தன் உடலைக் கூட துருப்புச் சீட்டாய் பயன் படுத்த கோரிய முத்துக்குமார் – தாயக தமிழகத்தின் தலைச் சிறந்த கரும்புலியாக நம் நினைவில் வலம் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்.

* ஆயுதங்கள் பிணங்களை உருவாக்கின – ஈழத்தில். ஆனால் இங்கோ ஒரு பிணம் ஆயுதமாகிப் போனது. முத்துக்குமார் சாதித்தார்.
முத்துக்குமார் முடிவல்ல. அது ஒரு தொடர்ச்சி. எதுவுமே முடிந்து விடாது.முடிந்து விட்டது என நினைத்தப் போதுதான் முத்துக்குமார் என்ற துவக்கம் நிகழ்ந்தது. முத்துக்குமார் – தான் வாழ்விற்கான முழுமையான பணியை தன் அறிக்கையின் வழியாக ஒவ்வொருவரின் ஆழ்மனதில் ஊடுருவி அறிவின் தெளிவாய்..இன மான உணர்வாய் வெளிப்பட்டு செய்து கொண்டே இருக்கிறார் . இனி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது முத்துக்குமாருக்கான உண்மையான அஞ்சலி.
.
ஆம்.

முத்துக்குமார்..என்பது

வெறும் பெயர்ச்சொல் அல்ல.. வினைச்சொல். ..

எம் அன்பார்ந்த ஈழ உறவுகளே…

* முத்துக்குமார் பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறோம்.

உங்களின் வலியையும், உங்களின் இழப்பினையும் நாங்கள் எங்கள் துயரமாக உணருகிறோம். எங்கள் மனதின் அடி ஆழத்திலும் தோல்வியின் வன்மமும், மீளுவதற்கான கனவும் கசிந்துக் கொண்டுதான் இருக்கிறது. நீங்களும் ,நாங்களும்..வேறல்ல.. ஒரு தியாகம் செறிந்த இனத்தின் மிச்சங்கள் நாம். நமக்கு பிறக்கும் பிள்ளைகளை முத்துக்குமாராக வளர்ப்போம். நாம் வாழ்ந்த கதையையும்…துரோகத்தின் ஊடாக வீழ்ந்த கதையையும் சொல்லி வளர்ப்போம். உலகில் வாழும் ஒரு தொன்ம இனத்திற்கான நாடு தமிழீழ நாடு. ஒரு கனவினை 24 கோடி விழிகள் சுமக்கின்றன. காத்திருப்போம். வலியோடு.வன்மத்தோடு.
.
இன்றல்ல..ஒரு நாள்..ஈழம் மலரும்..
அன்றுதான் நம் காலை புலரும்.
.
அது வரை இருண்டு கிடக்கும் நம் வாழ்வில் முத்துக்குமார் என்ற ஆன்ம ஒளி பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.

* மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ;

(புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்)

பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர்.

தமிழகத்திலிருந்து சட்டவாளர் மணிசெந்தில். மற்றும் வில்லவன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*