TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மகிந்த ராஜபக்ஷ எதிர்கொள்ளப்போகும் சவால்கள்

இரண்டாவது பதவிக்காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ முன் காத்திருக்கும் நீண்டதொரு பட்டியல் பதவிக்காலத்திற்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் தீர்மானத்தினால் ஏற்பட்டிருந்த கடுமையான போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தின் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் சாத்தியம் காணப்படுகிறது.

மற்றொரு 6 வருட பதவிக்காலத்திற்கு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்திற்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக ஆழமாக துருவமயப்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய தேவையும் காணப்படுவதாக ஏசியா டைம்ஸ் நேற்று புதன்கிழமை சுட்டிக்காட்டியிருக்கிறது.

நேற்றுப் புதன்கிழமை அரச தொலைக்காட்சி ராஜபக்ஷவின் வெற்றியை அறிவித்திருந்தது. வாக்கு எண்ணிக்கை பூர்த்தியடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே அரச தொலைக்காட்சி வெற்றியை அறிவித்திருந்தது. ராஜபக்ஷவின் பிரதான தேர்தல் போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை படையினர் சூழ்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பொன்சேகாவுடன் ஹோட்டலில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய சுமார் 100 பேர் தங்கியிருந்ததாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

பொன்சேகா கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவத்தின் சிரேஷ்ட வட்டாரமொன்றும் ஜனாதிபதியின் உதவியாளரும் தெரிவித்தனர். சதிப்புரட்சியை நோக்கி அவர் முதல் அடியை எடுத்து வைப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர் செய்திச் சேவை கூறியிருந்தது. இலங்கை அரசியலானது புதிய கட்டத்திற்குள் பிரவேசித்திருப்பதாக தோன்றுகிறது. தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. பொன்சேகா அரசாங்கத்தினால் கைது செய்யப்படும் சாத்தியமிருப்பதாகவும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பிரசாரம் மிகவும் கசப்பானதாகக் காணப்பட்டது. ராஜபக்ஷவும் பொன்சேகாவும் அவர்களின் ஆதரவாளர்களும் தனிப்பட்ட ரீதியில் கடுமையாக விமர்சித்து வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வன்செயல்களும் இடம்பெற்றிருந்தன. நாடு எதிர்நோக்கும் முக்கியமான விடயங்களை விவாதிப்பதிலும் பார்க்க இதரவிடயங்கள் தொடர்பாக பிரசார மேடைகளில் இரு பிரதான போட்டியாளர்களும் விமர்சித்து வந்த தன்மை தேர்தல் வேளையில் காணப்பட்டது. ராஜபக்ஷவும் பொன்சேகாவும் சிங்கள தேசியவாத கடும் போக்காளர்களாகக் கருதப்படுபவர்கள் சிங்கள மக்களால் அவர்கள் இருவரும் யுத்த கதாநாயகர்களாகக் கருதப்பட்டவர்கள். ஆனால், கிராமப் புற சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ஷவிற்கு அதிகளவு ஆதரவு இருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. இந்த இரு பிரதான போட்டியாளர்கள் மத்தியிலும் சிங்கள மக்களின் வாக்குகள் பிளவுபட்டிருந்த நிலையில், தமிழ் மக்கள் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் முக்கிய காரணியாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை நடந்து முடிந்த தேர்தல்கள் முடிவுகள் மாற்றியமைத்துள்ளன.

* வட, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவுக்குத் தேர்தலில் ஆதரவளித்த போதும் பொன்சேகா பெற்ற வாக்குகளில் பாரிய வித்தியாசத்தை தமிழ் வாக்குகள் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அங்கு வாக்களிப்பு வீதம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் ராஜபக்ஷவிற்கு சாதகமான நிலைமை ஏற்பட்டதாகத் தோன்றுகிறது. அரசினால் அந்நியப்படுத்தப்பட்ட தன்மையும் வேட்பாளர்கள் மத்தியிலான எவரைத் தேர்ந்தெடுப்பதென்ற விடயமும் அவர்களை வாக்களிப்பில் இருந்தும் தூரவிலத்தி வைக்கும் தன்மையை ஏற்படுத்தியிருந்தது.

* தனது இரண்டாவது பதவிக் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய நீண்ட பட்டியலை ராஜபக்ஷ கொண்டிருக்கிறார். உடனடியாக இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டிய தேவை அவர் முன் உள்ளது. அத்துடன் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பிரச்சினையும் அவரின் கவனத்திற்காகக் காத்துநிற்கிறது. இனநெருக்கடி மிக மோசமானதாக இருந்து வருகிறது. இதற்குத் தீர்வு காணப்படாவிட்டால் தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்பட்ட தன்மை அதிகரிப்பதுடன், மீண்டும் ஆபத்தான நிலைமை ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது.

சிங்களவர்கள் மத்தியில் அரசியல் ரீதியில் துருவமயப்படுத்தப்பட்ட தன்மை காணப்படுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு முன்னர் இந்தத் தன்மை பாரியளவில் காணப்படவில்லை. ஆட்களின் பேரைக் குறிப்பிட்டு தனிப்பட்ட ரீதியில் விமர்சித்தல் தேர்தல் பிரசாரங்களில் அதிகமாகக் காணப்பட்டது. உயர் மட்டத்தில் கூட இந்த விடயம் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படவில்லை. இது ஆத்திரம், பழிவாங்கும் தன்மை என்பனவற்றைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இவற்றுக்கு தீர்வு காணப்படவேண்டிய தேவை உள்ளது. தேர்தல் பிரசார வேளையில் காணப்பட்ட இந்தத் தன்மையானது தேர்தலுக்கப் பின்னர் சுலபமாக இல்லாமல் போய்விடுமென கூறிவிட முடியாது.

தேர்தல் சமயத்தில் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சிகள், செய்திப் பத்திரிகைகள் என்பனவற்றை ராஜபக்ஷவின் முகாமானது அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்ட தன்மையைப் பார்க்கையில் இந்த விடயத்தை அரசியல் எதிரிகள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள் என்ற தன்மை காணப்படுகிறது.

தனது அரசியல் எதிரிகளுடன் ராஜபக்ஷ நல்லிணக்க கரத்தை நீட்டுவாரா? இந்த விடயத்தில் சாத்தியமற்ற தன்மையே காணப்படுகிறது. விடுதலைப் புலிகள் தோல்வி கண்ட பின்னர் தமிழர்கள் மீது நல்லிணக்கக் கரத்தை நீட்டுவதற்கு விருப்பமற்ற தன்மையையே அவர் வெளிப்படுத்தியிருந்தார். இப்போது அவர் அதனை வெளிப்படுத்துவது சாத்தியமற்றதாகக் காணப்படுகிறது.

தேர்தல் போட்டியில் பொன்சேகா இறங்கிய போது தன்னை ஓரங்கட்டியதாக ஜனாதிபதிக்கு எதிராக அவர் பழிவாங்கும் விதத்திலான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். அந்தத் தன்மையே அவரின் முன்னகர்வுகளின் நோக்கமாகக் காணப்பட்டது. இலங்கைக்கு எதனைச் செய்ய அவர் விரும்புகிறார் என்ற தொலைநோக்கு வெளிப்படுத்தப்பட்ட தன்மை காணப்படவில்லை. இப்போது எதிர்வரும் மாதங்களில் இந்தப் பழிவாங்கும் தன்மை ராஜபக்ஷவின் நடவடிக்கைகளில் மேலோங்கும் தன்மை காணப்படுகிறது. பொன்சேகாவின் விசுவாசமற்ற தன்மையை அவர் மறந்துவிடும் சாத்தியம் இல்லை. அல்லது அவர் தெரிவித்த பாரதூரமான குற்றச்சாட்டுகளையும் மறந்துவிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படவில்லை. இந்த விடயமானது பொன்சேகாவிற்கு பாடம்படிப்பதற்கான சகல வழிமுறைகளையும் ராஜபக்ஷவின் அரசாங்கம் பயன்படுத்தும் என்ற எண்ணப்பாட்டைத் தோற்றுவிக்கிறது.

செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு நடந்த சில மணிநேரத்திலேயே ஜெனரலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டங்களை ராஜபக்ஷ முகாம் சுட்டிக்காட்டியிருந்தது. வாக்காளர் இடாப்பில் தனது பெயர் இல்லாததால் பொன்சேகாவால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. இது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியற்றவர் என்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர்களும் ஆளுங்கட்சித் தலைவர்களும் தொடுப்பதற்குக் காரணமாகக் காணப்பட்டது. இந்த உண்மையை அதாவது வாக்காளர் இடாப்பில் தனது பெயரில்லாத உண்மையை மறைத்து வைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லையென தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியது.

இனப் பிரச்சினைக்கும் ஏனைய விடயங்களுக்கும் தீர்வு காண்பதற்கு ராஜபக்ஷவிற்கு 6 வருடங்கள் இருக்கின்றன. இந்த வருடங்களை பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் செலவழித்தால் அது பரிதாபத்திற்குரிய விடயமாக அமையும். பாதுகாப்புத் தொடர்பான விடயங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக பொன்சேகாவின் குடும்பத்திற்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் தோண்டி எடுத்து வெளிப்படுத்தும் சாத்தியப்பாடும் காணப்படுகிறது.

பொன்சேகா அரசியலுக்குள் பிரவேசித்தமையானது இராணுவத்தை அரசியல் மயமாக்கிவிட்டதாகக் குற்றச்சாட்டு ஒன்றும் தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இராணுவத்தை அரசியல் மயமாக்கல் விவகாரமானது அண்மைய வாரங்களில் புதிய பரிமாணத்திற்கு இட்டுப் சென்றது. இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு விதத்தில் பொன்சேகா பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். சிரேஷ்ட பல இராணுவ அதிகாரிகள் அரச ஊடகங்களில் பேட்டிகளை வழங்கியுள்ளனர்.

இராணுவத்தை அரசியல் மயமாக்குதல் பல தசாப்தங்களாக நீடித்திருப்பதாக அரசியல் விமர்சகர் டி.பி.எஸ்.ஜெயராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்ஷவின் முதலாவது பதவிக் காலத்தின் போது சிங்கள பௌத்த கடும் போக்குக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய போன்றவை படைகளுக்கு ஆட்திரட்டுவதற்கு மிக உற்சாகமாக ஊக்குவிப்பை வழங்கிவந்தன.

பொன்சேகா இராணுவ சதிப்புரட்சிக்குத் திட்டமிடுவதாகக் கடந்த வருடம் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதிக்கும் ஜெனரலுக்கும் இடையிலான உறவுகள் விரிசலடைந்ததன் பின்னணியில் இது முக்கியமான காரணியாக இருந்ததாக நம்பப்படுகிறது.

பொன்சேகா சதிப்புரட்சியை மேற்கொள்ளத் திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் தற்போது ஈட்டியிருக்கும் வெற்றியை பொன்சேகா பறித்துக் கொள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ ஒருபோதுமே இடமளிக்கப்போவதில்லை.

கொழும்பிலிருந்து எமது ஆய்வாளர் ஆதவன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*