TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வீரத்தமிழன் முத்துக்குமார் உலக தமிழருக்காய் எழுதிய மடல்

தமிழீழ தாயகத்தில் போரின் தீநாக்குகள் எமது தமிழ் மக்களை கொன்றொழித்துக் கொண்டிருந்தபோது, தமிழகத்தினது அரசியல்வாதிகளையும் இந்திய அரசையும் உலக சமுதாயத்தையும் வற்புறுத்தும் முகமாக தன்னையே எரித்து வீரகாவியமான வீரத்தமிழன் முத்துக்குமார், உலக தமிழ் மக்களுக்காக எழுதிய மடல் இது.

என் அருமைத் தமிழ் மக்களுக்கு,

முத்துக்குமார் எழுதுவது,

நலம், நலம் அறிய ஆவல் என்று என்னால் எழுத முடியாது. ஏனென்றால் நான் இறந்துபோய் விட்டேன். எனக்கு வயது 29, சினிமா உதவி இயக்குனராகவும், பத்திரிக்கையாளனாகவும் பணியாற்றினேன். திருமணமாகவில்லை. அம்மா இல்லை, அப்பா திருமணமான சகோதரி உண்டு.

கடந்த ஜன-29 (2009) அன்று உங்களுக்கெல்லாம் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எனது உயிரை அழித்துக்கொண்டேன். எனது கடிதம் உங்களுக்கெல்லாம் கிடைத்ததா? நான் செய்தது தற்கொலை அல்ல. தீர்க்க முடியாத கடனாலோ, தீராத நோயினாலோ, காதல் பிரிவின் துயரத்தாலோ நான் என்னை அழித்துக்கொள்ளவில்லை. உங்களை விழிக்க வைக்கவே என்னை அழிக்க நினைத்தேன்.

சினிமா பார்க்கவும் டி.வி.பார்க்கவும், கிரிக்கெட் பார்க்கவும் அன்றாட வேலைகளை பார்க்கவும் நீங்கள் விழித்தேதான் இருக்கிறீர்கள். இருந்தும் நீங்கள் விழிக்காமல் போனது சகமக்களின் துன்பங்களை பார்க்க என எண்ணுகிறேன். நமக்கு உணவளிக்கும் காவேரி, முல்லைப்பெரியாறு விவசாயிகளின் துன்பங்களை எண்ணிப்பார்க்க மறந்திருக்கிறோம். நமக்காக மீன்பிடிக்கச் சென்று சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 500 மீனவர்களின் வாழ்வை எண்ணிப்பார்க்க மறந்திருக்கிறோம்.

இந்த வழக்கத்தில்தான் காப்பற்றச் சொல்லி நம்மை நோக்கி கத்திக் கதறினார்களே பெண்களும், குழந்தைகளும், முதியவர்களுமாய் தமிழீழ மக்கள், அந்த மக்களின் துன்பங்களைக்கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்நிலையில் தான் நான் என் உயிரை தீயிட்டு அழித்தேன். யார் இவன்? எதற்காக உயிரை அழித்துக்கொண்டான்? என்று உங்கள் கவனம் என் பக்கம் திரும்பும், அப்படியாவது உங்கள் கவனம் ஈழமக்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்பதே எனது மரணத்தின் நோக்கம்.

செய்தியறிந்த மாணவர்கள், இளைஞர்கள் ஈழத்தின் பக்கம் திரும்பினார்கள். எனது மரணத்தின் செய்தி உங்கள் அனைவருக்கும் சேரா வண்ணம் அரசியல் இலாபங்களுக்காக பலர் அதை மட்டுப்படுத்தினார்கள். எனக்குப் பிறகு 18 பேர் தீக்குளித்து மாண்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 14 பேர். அதன் பிறகும் உங்கள் கவனம் ஈழமக்கள் பக்கம் திரும்பாததால் கடைசியில் எல்லோரும் பயந்தபடியே ஐம்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டே விட்டார்கள்.

போர் தான் முடிந்ததே, விட்டார்களா என்ன?. போரில் மிஞ்சிய பொதுமக்கள் 3.5 இலட்சம் பேரையும் கைது செய்தார்கள். அத்தனைபேருக்கும் முள்வேலியால் பிரம்மாண்ட சிறை செய்தார்கள். பெயருக்கு பதிலாக அனைவருக்கும் நம்பர் போட்டு இழிவுபடுத்தினார்கள். இளைஞர்களையெல்லாம் கொல்லக் கூப்பிட்டுப் போய்விட்டார்கள். உச்சக்கட்ட பட்டினி போட்டு தமிழ் பெண்களின் உடலை சோற்றுக்கு விலைபேசி விட்டார்கள். போரின் இறுதி 48 மணி நேரத்தில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

இச்செய்தியைக் கூட ஈழத்தில் இருந்து 10 மைல் தொலைவிலுள்ள தமிழக தொலைக்காட்சிகளோ, செய்தித்தாள்களோ வெளியிடவில்லை. பல ஆயிரம் மைல் தள்ளியிருக்கும் டைம்ஸ் என்ற உலக புகழ்பெற்ற ஆங்கில இதழ் வெளியிட்டது. இந்த நேரங்களிலும் கூட நமது தொலைக்காட்சிகள் சிரி சிரி, சிரிப்பொலி, சிரிப்பு வருது…. என்றெல்லாம் காட்டி நம்மை சிரியாய் சிரிக்க வைக்கிறார்கள். அந்த பக்கம் மனிதநேயம் நம்மைப் பார்த்து சிரியாய் சிரிக்கிறது.

விவரம் அறிந்த ஐரோப்பிய இனத்தவர்கள் கேட்கிறார்கள். 6.5 கோடி தமிழர்கள் பக்கத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்களுக்கு எப்படித்தெரியும்.! நாமெல்லாம் தமிழ்த் தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்ல, சன்டிவியின் தமிழ்மாலையால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது! என் அருமைத் தமிழ் மக்களே, என்ன செய்தால் நீங்கள் ஈழமக்கள் பக்கம் திரும்புவீர்கள் என எனக்கு தெரியவில்லை. மீண்டும் எனது உயிரை மாய்த்து உங்களுக்கு செய்தி சொல்ல என்னிடம் இன்னொரு உயிர் இல்லை. விழியுங்கள், இப்போதாவது விழியுங்கள், ஈழமக்களின் வேதனைகளை ஏறெடுத்துப்பாருங்கள்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் ஆயிரம் ஆயிரமாய்; கணவரை இழந்த மனைவியர், மனைவியரை இழந்த கணவர்கள் ஆயிரம் ஆயிரமாய்; உயிரோடு இருந்தும் கை, கால்கள், கண் என உடலுறுப்புகள் பல இழந்து நடைபிணமாய் வாழ்பவர்கள் ஆயிரம் ஆயிரமாய்; போதும் இத்தோடு எல்லாம் போதும், கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை இரண்டு இலட்சத்தோடாவது தடுத்து நிறுத்துவோம்.

என்ன செய்யலாம் இதற்காக? ஒன்றே ஒன்று செய்வோம் இதற்காக, நாம் அன்றாடம் பல செய்திகளை முணுமுணுப்பது போல ஈழமக்களுக்காக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்களிடம் முணுமுணுப்போம். அது போதும் 6.5 கோடி மக்களின் முணுமுணுப்பு என்பது பேரிரைச்சல் அல்லவா? இப்பேரிரைச்சல் ஈழ விடுதலையை உலகின் செவிகளில் ஓங்கி ஒலித்துவிடும். உங்களுக்காக உயிர் கொடுத்தவன் என்ற உரிமையில் உங்கள் உணர்வுகளை நான் புண்படுத்தி எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும்.

இப்படிக்கு

இறந்தும் உங்களுடன் வாழும்

முத்துக்குமார்

குறிப்பு: மேலதிக தகவல்களுக்கு பிரபாகரன் [email protected] This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*