TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் கோடீஸ்வரர்களாகும்

புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் கோடீஸ்வரர்களாகும் சிங்களவர்கள்! சென்று இரு இதழ்களின் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி இது. செட்டிகுளம் முகாமில் இருந்து மருத்துவச் சான்றுகளை காட்டி வெளியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்வதற்கு அங்குள்ள மருத்துவர்கள் அனுமதித்தார்கள்.

இவ்வாறான அனுமதி ஆண்களுக்கு வழங்கப்படவில்லை. வயோதிபர்கள், பெண்களே இவ்வாறு மருத்துவர்களால் மேலதிகசிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். சிலருக்கு மட்டுமே இந்த மேலதிக சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க வரும் சிங்கள மருத்துவர்களுக்கு பணம் கொடுத்து வெளியே சென்று சிகிச்சை பெறுவதற்கான அனுமதியைச் சிலர் பெற்றுக்கொண்டார்கள். வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட இவர்கள் அங்கு சென்று சிகிச்சை பெறாமல் வவுனியாவில் உள்ள தங்களுக்கு தெரிந்த உறவினர்களின் வீடுகளில் சென்று தங்கிக்கொண்டார்கள்.

இதனை அவதானித்த சிறீலங்கா காவல்துறையினர் வவுனியா மருத்துவமனையினை காவலரணாக மாற்றி அங்கு வருபவர்களை பதிவுகளிற்கு உட்படுத்தத் தொடங்கினார்கள். ஏற்கனவே பல்வேறு பதிவுகளுடன் தான் மருத்துவமனையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இது மேலும் இறுக்கமடைந்தது. அத்துடன், செட்டிகுளமுகாமில் இருந்து வவுனியா மருத்துவமனைக்கு வந்த நோயாளர்கள் வெளியில் செல்லமுடியாத தடுப்பு நிலை ஏற்படுத்தப்படுகின்றது. சிறீலங்காப் படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு மக்கள் பதிவுகள் சோதனைகள் உட்படுத்தப்படுகின்றார்கள் தற்போதும் இதுதான் நிலை.

இந்நிலையில்தான் மருத்துமனையில் இருந்துகொண்டு அங்கிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தேடினார்கள். தமிழ் மக்களிடம் இருந்து பணத்தை கறந்து பழக்கப்பட்ட தரகர்கள் பலர், வவுனியா மருத்துவமனையையும் மொய்த்திருந்தார்கள். அங்கிருந்து மக்களை வெளியேற்றும் வாய்ப்புக்களைக் கூறி அவர்களை நம்பவைத்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். மருத்துவமனையில் இருந்து வெளியில் கொண்டுசென்று விடுவதற்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் வரை பண வசூலிப்பு இடம்பெற்றது. இவ்வாறு வெளியில் கொண்டுவரப்படுபவர்கள், கொண்டுவரும் இடைத்தரகர்களால் படும் இன்னல்கள் அதிகம்.

வெளிநாடுகளுக்கு வருபவர்கள் குறிப்பாக பெண்கள் முகவர்களால் பட்ட, படும் இன்னல்களைப் போன்றுதான் இந்த இடைத்தரகர்களால் மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டுவரப்படும் பெண்களுக்கும் நிகழ்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தங்களுக்கு நடந்த கொடூரங்களை வெளியில் சொல்லமுடியாமல் உள்ளுக்குள்ளேயே வெந்துபோயிருக்கின்றனர். மரத்தாலை விழுந்தவர்களை மாடேறி மித்த கதைதான் இவர்களுடையது. இதில் ஒரு சம்பவத்தை கூறலாம் என்று நினைக்கின்றேன். அந்தப் பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். ஒரு குழந்தையின் தாயான அவரது கணவர் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்றார். வவுனியா மருத்துவமனைக்கு வந்த இப்பெண், அங்கிருந்து வெளியே வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தனது துணைவரை தொடர்பு கொண்டு கேட்கின்றார். வவுனியாவில் அறிந்தவரோ தெரிந்தவரோ அவருக்கு இல்லை.

தனது மனைவியையும், குழந்தையையும் வெளியே கொண்டுவருவதற்கு தனக்கு தெரிந்தவர்களுடன் தொடர்புகொண்டு ஒரு இடைத்தரகருக்கு கணவர் ஏற்பாடு செய்கின்றார். இவரை வெளியே கொண்டுவருவதற்கு ஒரு முஸ்லீம் இடைத்தரகரே ஏற்பாடாகியிருந்தார். கணவரால் அனுப்பப்பட்ட பணம், கைகள்மாறி அந்த இடைத்தரகரைச் சென்றடைந்ததையடுத்து, அந்தப்பெண் மருத்துவமனையில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டாள். சிறீலங்கா காவல்துறையினருக்கு பணம்கொடுத்தது வெளியே கொண்டுவந்த அப் பெண்ணையும் அவரது குழந்தையையும் தனது பாதுகாப்பில் வவுனியாவில் உள்ள விடுதியன்றில் தங்கவைக்கின்றார் அந்த இடைத்தரகர். அந்த விடுதி அவருக்கு வேண்டப்பட்ட விடுதி என்பதை அப்பெண் அவரது செயற்பாடுகளில் இருந்து அறிந்துகொண்டிருந்தாள்.

இவளது கணவனுடன் தொடர்புகளைப் பேணிய அந்த இடைத்தரகர், தான் நல்லவன் போன்று அவருக்கு காட்டிக்கொண்டான். கணவனின் வேண்டுகோளுக்கு இணங்க கடவுச்சீட்டு மற்றும் கொழும்பில் சென்று தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்கென மேலும் மேலும் அவரிடம் இருந்து பணம் பிடுங்கிக்கொண்டிருந்தான். மனைவியினதும், குழந்தையினதும் நிலையை அறிந்து கணவனும் அவன் கேட்கும் இலட்சக்கணக்கான பணத்தை அனுப்பி வைத்தார். அத்துடன் திருப்திப்படாமல் ஒருநாள் அப்பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்டான் அந்த இடைத்தரகன். அதற்கு முன்னதாக பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கணவனுடனான தொடர்புகள் அப்பெண்ணுக்கு கிடைக்காத வண்ணம் செய்திருந்தான். தப்பி வெளியில் சென்றால் சிறீலங்காப் படையினரிடமும் காவல்துறையினரிடமும் சிக்கிக்கொள்ள நேரிடும்.

முகாமில் இருந்து தப்பிவந்ததற்காக அவர்களின் சித்திரவதையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்து அப்பெண்ணை தனது விருப்பம்போன்று பயன்படுத்திக்கொண்டான். அத்துடன், அவளது பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாது இழுத்தடித்து, தொடர்ந்தும் அவளை அந்த விடுதியில் வைத்து அச்சுறுத்தி அனுபவித்தான். தன்னை அனுப்பாமல் அங்கு வைத்திருந்து அனுபவிப்பதுதான் அவனது நோக்கம் என்பது அப்பெண்ணுக்குப் புரிந்தது. ஆனால், வெளியில் சென்று படையினரிடம் அகப்பட்டால் நேரும் கொடூரத்தை நினைக்கவும் அச்சமாக இருந்தது. ஆனாலும் சில நாட்களில் அப்பெண் சில துணிச்சலான முடிவுகளை எடுத்து அங்கிருந்துகொண்டு சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமையை விளக்கியுள்ளார்.

அதன்பிறகே அவர் அங்கிருந்து மீளமுடிந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அப்பெண் கண்ணீருடன் என்னிடம் கூறியபோது, இவ்வாறு எத்தனை பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டார்களோ என்ற வேதனையும் கோபமுமே எழுந்தது. இவ்வாறுதான் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை. எனவே, முகாம்களில் இருந்து வெளியே எடுப்பவர்கள் குறித்து புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து பணத்தினை இறைப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது. இதேவேளை, முகாம்களில் இருந்து எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு பணம் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாக சிறீலங்காப் புலனாய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது.

தப்பிச் சென்ற இவர்கள் கொடுத்த பணத்தில்தான், இந்த பண வசூலில் ஈடுபட்டவர்கள் இப்போது வீடுகள், கடைகள், நிலங்கள் என வாங்கி தங்கள் வசதிகளைப் பெருக்கிக்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. தமிழ் மக்களின் பணத்தில் கோடீஸ்வரர்களாகிய இவர்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. சூடுகண்ட பூனை மீண்டும் மீண்டும் அடுப்பங்கரையை நாடுவதுபோல், இன்னும் எவ்வாறெல்லாம் தமிழர்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கலாம் என்பதிலேயே இவர்கள் குறியாக இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. இதனை புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் புரிந்துசெயற்படவேண்டும்.

சுபன்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*