TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு பச்சை கேள்வி!

ஈழப்பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) தோழர்கள் எழுதிய நூல், பல தரப்பினரிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த நூலின் பெயர் ‘இலங்கையில் துப்பாக்கிகள் மௌனித்த வரலாறு’ என்ற இந்நூலை எழுதியவர்கள் என்.மருத்துவமணி, மா.ராமசாமி. ஈழப்பிரச்னையில் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை நிலைநாட்ட, இந்நூல் மூலம் திரும்பத் திரும்ப முயற்சிக்கின்றனர் இருவரும். இலங்கை இனப்பிரச்னை குறித்து, சி.பி.எம். அவ்வப்போது வெளியிட்டுள்ள அறிக்கைகளையும் அவர்கள் பல்வேறு கட்டங்களில் எடுத்த நிலைப்பாடுகளையும் அச்சரம் பிசகாமல், இந்நூலில் வெளியிட்டு, தங்கள் கருத்துக்களையும் சி.பி.எம். மின் நிலையை ஒட்டியே முன்வைத்துள்ளனர். தனி ஈழத்திற்கு எதிராக இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மார்க்சிஸ்ட் லெனினிய அடிப்படையில் இல்லை. மாறாக, அவை தனி ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டை மேலும் கெட்டிப்படுத்தவே பயன்படும்.

1983இல் அன்றைய சி.பி.எம். தலைவர் பி.ராமமூர்த்தி, தனது இலங்கைப் பயணத்தின் போது, ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய அருளுரையை இந்நூல் மேற்கோள் காட்டியுள்ளது. அதன் சுருக்கம் ‘‘சிங்களவருக்கு எதிரான இயக்கங்கள் அவர்களை கோபமூட்டுவதாகவே அமையும். அவை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் மேலும் ஆபத்தை விளைவிக்கும்” என்பதுதான். ஒரு போராளியின் இந்த அறிவுரை வியப்பை அளிக்கிறது. எந்தப் போராட்டம் எதிரிக்கு உவகையை அளித்துள்ளது? உலக வரலாற்றில் சேதாரம் இல்லாமல் எந்தப் போராட்டம் நடந்துள்ளது? பத்துக் கோடி மக்களை இழந்துதான் ஹிட்லரை, சோவியத் யூனியன் தோற்கடித்தது.

இந்த அறிவுரையை தர்க்கரீதியாக அதன் எல்லைக்கு எடுத்துச் சென்றால், இந்தியாவில் விடுதலைப்போரை நடத்தியே இருக்கக் கூடாது. வங்கதேசம் பிரிந்திருக்கக் கூடாது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் சரணடைந்து பாதுகாப்பைத் தேடிக் கொண்டிருக்கவேண்டும். ‘‘நம் கையில் என்ன ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நமது எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர்” என்று அடிக்கடி கூறும் மார்க்சிஸ்டுகள், ஈழத்தில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தான் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை உணராமல் போனது ஏன்? அடுத்து, ஈழத்தில் அன்று நிலவிய ஜாதிப் பிரிவினைகளையும், முஸ்லிம் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் ஈழப்போராளிகளால் புறம் தள்ளப்பட்டது குறித்தும் தேவையற்ற விவாதத்தை வலிந்து இந்நூல் முன்வைக்கிறது.

உண்மையில் போராளிகள் அனைத்து பிரிவுகளைச் சார்ந்தவர்களையும் ஜாதி, மத பேதமின்றி, சமமாகப் பாவித்தனர் என்பதே வரலாறு. ஆனால், இப்பிரிவினரிடையே மோதலை உருவாக்க இலங்கை உளவுப்படை தொடர்ந்து முயற்சித்ததும், அதற்கு சில தலைவர்கள் உடன்பட்டதும் பிளவுக்கு வழிவகுத்தது என்பதை இந்நூலின் ஆசிரியர்கள் அறிந்தார்களா? இல்லை, மறைத்தார்களா? அடுத்து. ஈழத்தில் இயங்கி வந்த சகோதர அமைப்புகளை விடுதலைப்புலிகள் திட்டமிட்டு அழித்துவிட்டதாக இந்நூலாசிரியர்கள் அங்கலாய்க்கிறார்கள். புலிகள் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு இது. இதுகுறித்து 1985 ஏப்ரல் 5ஆம் தேதியிட்ட ஃப்ரென்ட்லைன் ஆங்கில இதழில், கட்டுரையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.

‘‘தனி ஈழம் கோரிக்கையில் உடன்பாடு இருந்தாலும், புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை மற்ற இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளாததால், அவர்களிடையே பிளவு நிலவியது.” இப்பிளவு, மோதலாக வலுப்பெற்று, ஒருவரை ஒருவர் தாக்கும் நிலை ஏற்பட்டது. அதில் வலுவான புலிகள் வெற்றிபெற்றார்கள்.

ஆனால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) சேர்ந்த வரதராஜப் பெருமாள் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘‘தனி ஈழம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் ஈழமக்களுக்குப் பெரிய ஆபத்துதான் விளையும்” என்று கூறியுள்ளார். புலிகளோடு முரண்பட்ட கருணா, தற்போது ராஜபக்ஷேவின் அமைச்சரவையில் இடம் வகிப்பதோடு, ஈழப்போரை காட்டிக் கொடுத்த ‘நவீன எட்டப்பன்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்படிப்பட்டவர்களுடன் புலிகள் சமரச சகவாழ்வு வாழ்ந்திருக்கவேண்டும் என்று இந்நூலாசிரியர்கள் வலியுறுத்துகிறார்களா?

அது கிடக்கட்டும். இவர்கள் சார்ந்துள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் இந்தியாவில் சகோதரப்போரில் ஈடுபடவில்லையா? சீனப்போரின்போது, இவர்களில் ஒரு சாரார் சிறை வைக்கப்பட்டபோது கட்சியின் மறுசாரார் அதை ஆதரிக்க வில்லையா? கட்சி பிளவுபட்ட பின்பு, அவசர சட்டத்தின் கீழ் ஒரு கட்சியினர் சிறையில் வதைபட்ட போது, அதன் சகோதரக்கட்சி ஆட்சியாளர்களுக்கு வெண் சாமரம் வீசிக்கொண்டிருக்கவில்லையா? பின்னர் 1968இல் சி.பி.எம்.மிடமிருந்து பிரிந்தவர்கள் தானே இன்றைய மாவோயிஸ்டுகள். தற்போது, மே.வங்கத்தில் இந்தச் சகோதரர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்து, சகோதரப்போரில் மாண்டு கொண்டிருப்பது ஏன்? புலிகள் மீது இந்நூலில் இவர்கள் வைக்கும் அடுத்த குற்றச்சாட்டு, ‘‘போர் மீது அவர்களுக்கு வெறுப்பெல்லாம் கிடையாது.

கடந்த காலங்களில் போர் நிறுத்தங்களை தன்னிச்சையாக உடைத்தவர்கள் அவர்கள்.” ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டாலும், அதை அமல்படுத்துவதில் ஆரம்பத்தில் புலிகள் முழு ஒத்துழைப்பை அளித்தனர். ஆனால், ஒப்பந்தப்படி தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை இலங்கை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் போர் நிறுத்தத்தையும் ஒப்பந்தத்தையும் பல கட்டங்களில் மீறியது இலங்கை அரசுதான் என்பதை இந்திய அமைதிப்படையின் தளபதி ஏ.எல்.கல்கத் தெளிவாகக் கூறியுள்ளார்.

அடுத்து, நார்வே தூதுக்குழுவின் மேற்பார்வையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, புலிகள் முன்வைத்த இடைக்கால சுயாட்சி திட்டத்தை பிரதமர் ரணில் ஒப்புக்கொண்டபோதும், அதிபர் சந்திரிகா அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, நார்வே தூதுக்குழுவையே வெளியேறச் சொன்னார். இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு? நேட்டோ அணியில் நார்வே இருப்பதைச் சுட்டிக்காட்டி, நார்வே தூதுக்குழுவை அமெரிக்காவின் கைக்கூலிகள் என்ற ரீதியில் இந்நூலாசிரியர்கள் வசைபாடுவதோடு, ரணிலையே அமெரிக்காவின் அடிவருடி என்ற அளவில் நா கூசாமல் கூறுகிறார்கள். இவர்கள் யார் பக்கம்?

ஏனெனில், அதே அமெரிக்கா, பயங்கரவாத இயக்கம் எனக் கூறி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்தது. அதற்கு முன்பு இந்திராகாந்தியுடனான ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனே மீறியதால்தான், தனி ஈழம் என்ற கோரிக்கையையும், அதன் போராளிகளையும் இந்திராகாந்தி ஆதரித்தார். புலிகள் செய்த மிகப் பெரிய தவறு, ராஜீவைக் கொலை செய்ததுதான் என்று இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதை முட்டாள்தனமான செயல் என்பது தான் சரியாக இருக்கும். அதேபோல், ‘புலிகள் ஆயுதப்போராட்டத்தை முழுக்க நம்பி, வெகுஜன இயக்கங்களை பின்னுக்குத்தள்ளிவிட்டனர். அதுதான் கடும் தோல்வியில் முடிந்தது’ என்கிற ரீதியில் இவர்கள் சொல்லியிருப்பதும் ஏற்கத்தக்கதே. மேலும் பல தவறுகளை செய்திருந்தாலும் ஈழப்போரில் புலிகளின் அளப்பரிய தியாகங்களையும் உறுதியையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஸ்டாலின் குறித்து சி.பி.எம். ஆவணம் கூறுவதென்ன? கட்சியின் சட்ட திட்டங்களையும் ஜனநாயக நெறிமுறைகளையும் ஸ்டாலின் ஏதேச்சாதிகாரமாக மீறியுள்ளார். ஆனால், சோவியத்தைக் கட்டியமைப்பதிலும், ஹிட்லரைத் தோற்கடித்ததிலும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மனதில் இருத்தி, விமர்சனத்தோடு அவரை ஏற்றுக்கொள்கிறோம் என்று தானே..? அதே போன்று விமர்சனங்களோடு புலிகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது? ஈழப்போரில் தமிழர்களை கூண்டோடு கொன்று குவிக்க, இந்தியா வழங்கிய ஆயுதங்கள் உதவின என்று கூறும் இவர்கள், தங்களது தோழன் சீனா செய்த உதவியை மறைப்பதேன்? தெற்காசியாவில் தங்கள் மேலாண்மையை நிறுவ, இந்தியாவும் சீனாவும் கடும் போட்டியில் இறங்கி உள்ளதால்தான், பேரினவாத மற்றும் மதவெறி பிடித்த இலங்கை அரசுக்கு போட்டிபோட்டு உதவுகின்றன என்று பேருண்மையை இவர்கள் நூலில் எங்காவது சுட்டிக்காட்டியிருக்கிறார்களா? என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்கவேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியாவுடன் சீனாவும் சேர்ந்து தோற்கடித்து, இன அழிப்புப்போரில் கோர நர்த்தனம் ஆடிய இலங்கை பேயாட்சியைத் தப்பிக்கச் செய்ததையும் இவர்கள் சுட்டிக்காட்டவில்லை. தங்கள் தோழன் சீனா கோபித்துக் கொள்ளும் என்ற பயமா? மேலும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து, ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் படிப்பது நல்லது. பிரிந்து போகும் உரிமை யாருக்கு உள்ளது என்பது குறித்து மூன்று முக்கியக் காரணிகளை ஸ்டாலின் வரையறுத்துள்ளார்.

1. அவர்கள் பொதுவான ஒரு மொழி பேசும் தனி இனமாக இருக்கவேண்டும். ஜாதியோ, மதமோ ஓர் இனத்திற்கான அடையாளங்கள் ஆகமாட்டா.

2. அந்த இனம் தொடர்ச்சியான நிலப்பரப்பில், பாரம்பரியமாய் வாழ்ந்து வரவேண்டும்.

3. அவர்களின் மொழி, கலாசாரம் போன்ற அடையாளங்கள் பேரினவாதத்தால் அழிக்கப்பட்டும், அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டும், ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டும் வந்திருக்கவேண்டும்.

இந்த வரையறைகள் ஈழத்தமிழருக்குப் பொருந்துமா? இல்லையா? என்று இவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். பிரிட்டனிடமிருந்து தனிநாடு கோரிப்போராடிய அயர்லாந்து மக்களை ஆதரித்து, கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளதை இந்நூலாசிரியர்கள் கவனத்தில் கொள்வது நல்லது. ‘‘இங்கிலாந்தில் உள்ள ஆளும் வர்க்கம் அயர்லாந்து விவகாரத்தில் என்ன கொள்கையைக் கடைப்பிடிக்கிறதோ, அந்தக் கொள்கையைத்தான் அங்குள்ள பாட்டாளி வர்க்கமும் (தொழிலாளர் கட்சி)கடைப்பிடிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் அயர்லாந்தில் இயங்கும் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணக்கமான கொள்கையை வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இவ்வாறான ஒடுக்கும் நாடுகளில் எழும் வர்க்கப் போராட்டத்திற்கும் நசுக்கப்படும் தேசங்களில் எழும் தேசிய எழுச்சிகளுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத தொடர்பு உண்டு.” மேற்கண்ட மார்க்சின் கூற்றில் இங்கிலாந்துக்குப் பதிலாக இந்தியாவையும் அயர்லாந்துக்குப் பதிலாக தமிழ் ஈழத்தையும் பொருத்திப் பார்த்தால், இன்றைய நிலை தெளிவாகும்.

இறுதியாக, இந்நூலில் தரப்பட்டுள்ள சிங்களப் பெண் எழுத்தாளர் ரசியா பரூக்கின் கூற்றையே, இந்த நூலாசிரியர்கள் மீண்டும் படிப்பது நல்லது.

‘‘பிரபாகரன் ஒன்றும் திடீரென தீவிரவாதியாக முளைத்துவிடவில்லை. அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவாக, அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. இந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டு, தீர்வு காணப்படவேண்டும். இல்லாவிடில், 26 ஆண்டுகால போருக்குப்பின் நாம் பாடம் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள், அந்தப் பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிவரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை!”

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*