TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

வரும் 26 ஆம் நாள் (26/01/2010) இலங்கையில் இடம்பெற இருக்கும் அதிபருக்கான தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு அமையவும் நடைபெறுமா என்னும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சென்ற 19/01/2010ல் இலங்கையின் தேர்தல் ஆணையாளரான தயானந்த திசாநாயக்கா வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், எதிர்வரும் ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பெருமளவில் தேர்தல் விதிகளை மீறிச்செயல்படுவதாகவும், இந்நிலையில் தாம் 26ந் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலின்போது, தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பொறுப்பேற்கவிருப்பதாகவும் ஏனைய தேர்தல் நடைமுறைகளைச் செயல்படுத்த இயலாதிருப்பதாயும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுதந்திர இலங்கையின் 62 வருடகால அரசியல் வரலாற்றில், அங்கு தேர்தலை நடாத்துவதற்குப் பொறுபாகவிருக்கும் தேர்தல் ஆணையாளர் ஒருவர், இவ்வாறு ‘நொந்து போய்’ அறிக்கைவெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இங்கு தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருப்பது போன்றே, வெளியுலகப் பார்வையாளர்களும்; இம்முறை இலங்கையில் இடம்பெறவிருக்கும் ‘அதிபருக்’கான தேர்தல் குறித்துக் கவலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வெளியுலகப் பார்வையாளர்கள், சென்ற வருட முற்பகுதியில் ‘முள்ளி வாய்க்கா’லில் நிகழ்ந்துகொண்டிருந்த ‘இனப் படுகொலை’களின் போதும் இவ்வாறு ‘கவலை’ தெரிவித்துக் கொண்டுதானிருந்தார்கள் என்பது வேறுவிஷயம். எனவே, இவர்கள் அங்கு தேர்தல் முடிவடைந்து யார் வெற்றிபெற்றுள்ளார் என அறிவித்ததும் உடனடியாக அவ்வெற்றியாளருக்கு வாழ்த்துச் சொல்ல முந்தி நிற்கப்போகிறார்கள் என்பதுவும் நாம் அறிந்தவை தாம்!

இந்த ‘லட்சணத்தில் தான்’ இனி இடம்பெறப்போகும் தேர்தலில், ஈழத்தமிழர்கள் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கப்போகிறார்கள் அல்லது வாக்களிக்க வேண்டும் என்னும் வினா உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதில் வேடிக்கை யாதெனில்……, தமிழர்களுக்கான உரிமைப்போராட்டத்தில்……. அது அரசியல் போராட்டமாயினுஞ்சரி அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்திலும்சரி ‘பிரிந்து நின்றே’ செயற்பட்ட ‘தமிழ்ப்பண்பு’ இப்போதும் மூன்று- நான்கு பிரிவுகளாகப் பிரிந்தே கிடக்கிறது!

ஈழத்தமிழினத்தின் கொலை நாயகர்கள் இருவருக்கிடையிலான போட்டியில் எமக்கென்ன வேலையிருக்கிறது என்று எண்ணித் தேர்தலில் எவருக்கும் ஆதரவாகச் செயல்படாது ஒதுங்கியிருக்க விரும்புபவர்கள்; இனக்கொலையின் சூத்திரதாரி மஹிந்தவேயன்றி பொன்சேகாவல்ல எனவே அவரை ஆதரிப்பதன்மூலம் ராஜபக்‌ஷேவுக்குப் பாடம் புகட்டுவோம் என நினைப்பவர்கள்; இப்போதுள்ள அதிபர் மேலும் ஆறுவருடங்களுக்குப் பதவியில் இருந்தால் தங்கள்பாடு கொண்டாட்டம் என்று எண்ணுபவர்களை ஆதரிப்பவர்கள் என மூன்றுபிரிவுகளாகப் பிளவுண்டுகிடக்கும் இந்த ஈழத்து அபலைகளிடையே நான்காவதாக சிவாஜிலிங்கம் என்னும் பெயரிலும் ஒரு தனிப்பிரிவு(?) கண்களில் தெரிகிறது!

தமிழர்கள்தான் இவ்வாறு பிரிந்துகிடக்கிறார்கள் என்பதல்ல. பெரும்பான்மைச் சிங்களர்களும் இப்போது ‘உண்மையான ஜனநாயம்’ பற்றிப்பேச ஆரம்பித்து விட்டார்கள்.அதிலும், முன்னாள் ராணுவத்தலைவரான சரத் பொன்சேகாவே, இந்நாள் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் எனக் குற்றம் சுமத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்ட சர்வதேச நாடுகள்; ராஜபக்‌ஷேயின் அரசியல் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துணைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

‘வன்னிப் பகுதியில்’ எரிகுண்டுகளுக்கு மத்தியில் அல்லாடிக்கொண்டிருந்த தமிழர்களைக் காப்பாற்ற மனிதாபிமானம் மிக்க சர்வதேச நாடுகளிடம் உலகத் தமிழினம் மன்றாடிக்கொண்டிருந்த சமயத்தில் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்ட பொன்சேகா, இன்று அதே சர்வதேச நாடுகளைத் தமது பதவி வேட்டைக்குத் துணைக்கழைப்பது வேடிக்கையாகத்தானிருக்கிறது. என்றாலும், இப்போதாவது சர்வதேசமும், ஏன் பொன்சேகாவுங்கூட இலங்கையின் அதிகாரவர்க்கம் புரியும் நியாயமற்ற செயல்களை உணர்ந்து செயற்பட்டால் இனிவரும் காலங்களாவது மனிதவிழுமியங்கள் அந்நாட்டில் காப்பாற்றப்பட உதவலாம்.

எது எவ்வாறாயினும், இலங்கையின் அடுத்த அதிபர் ராஜபக்‌ஷ அல்லது பொன்சேகா இவர்கள் இருவரில் ஒருவராகத்தானிருக்க வாய்ப்புண்டு. ஏனையவர்கள் யாவரும் தாமும் அதிபர் தேர்தலில் பங்குபற்றினோம் என்னும் ‘மன நிறைவை’ அல்லது தம்மைத் தேர்தலில் நிற்குமாறு தூண்டியவர்களது கட்டளையை நிறவுசெய்த திருப்பதியை அடைவார்களேயன்றி, இலங்கையை ஆளும் வாய்ப்பினைப் பெறப்போவதில்லை.

இந்த இருவருமே தமிழினத்தின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்பதுவும் நிச்சயமற்ற ஒன்று. ஆனால், இலங்கையின் குடிமகனாக இருக்கும் வரை, ஒவ்வொரு தமிழனும் தனது ஜனநாயகக் கடமையினை வழுவாது கடைப்பிடித்தல் அவசியம்.

தேர்தலில் வாக்களிப்பது என்பதுவும் இது போன்ற கடமைகளுள் ஒன்றாகையால், இருக்கும் ‘கொள்ளிகளுள் எது நல்ல கொள்ளி’ எனச்சிந்தித்துச் செயல்படுவதைத்தவிர ஈழத்தமிழினத்துக்கு நம்பிக்கைதரும் வேறு வழியெதுவும் இப்போது தென்படவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*