TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வன்முறைகள் கொடிகட்டிப் பறக்கும் ஆறாவது தேர்தல்

ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை ஆரம்பமாக இருக்கின்ற நிலையில்- தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பத்தியை எழுதும்போது தேர்தல் வன்முறைகளுக்கு நான்கு பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிகள், கைக்குண்டுகள் என்பனவற்றைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படுவது இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. தேர்தல் காலங்களில் வன்முறைகள் அதிகமாக இடம்பெறலாம் என்ற கருத்து ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்த போதும், ஏட்டிக்குப் போட்டியான படுகொலைகள் நடக்கும் அளவுக்கு எல்லை மீறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களின் போது பல சந்தர்ப்பங்களில் தேர்தல் வன்முறைகளுக்கு விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இப்போது விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், நிகழ்ந்து வரும் தேர்தல் வன்முறைகள் சர்வதேச அளவிலும் கவலையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா செயலர் பான் கீ மூன் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் வெளியாகியுள்ள கண்டனங்களும் கவலைகளும், தேர்தல் வன்முறைகளைக் குறைப்பதற்கு உதவுமா என்பது சந்தேகமே.

மிகவும் நெருக்கமான போட்டியின் விளைவாகவே இத்தகைய வன்முறைகள் நிகழ்வதாக ஒரு கருத்து நிலவுகிறது. தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தினமும் தமக்குக் கிடைக்கும் தேர்தல் வன்முறைகள் பற்றிய அறிக்கைகளைத் தயாரிப்பதிலேயே மும்முரமாகியிருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பினதும் தேர்தல் வன்முறைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பிரதான வேட்பாளர்கள் இருவரினதும் ஆதரவாளர்களே அதிகளவில் தேர்தல் வன்முறைகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஒரு தரப்பு மறுதரப்பின் மீது சுமத்தும் இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கொணடே இது நெருக்கமான போட்டியின் விளைவாக- தோல்வியின் பயத்னால் ஏற்பட்டிருக்கின்ற விளைவு எனக் கருத முடிகிறது.

* அரசியல் ரீதியாக வெற்றியின் மீது நம்பிக்கை கொள்ள முடியாமல் அதை குறுக்குவழியில் அடைவதற்கான ஆயுதமாகவே தேர்தல் வன்முறைகள் கையாளப்படுகின்றன. சர்வதேச ரீதியில் கண்டனங்கள் வரத் தொடங்கியதும் வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்தல் வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பவர்கள் படைகளில் இருந்து தப்பி ஓடியவர்களே என்று அது கூறியுள்ளது. சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களைத் தனது பாதுகாப்புக்காக பயன்படுத்துவதாக அரசாங்கம் ஏற்னவே குற்றம்சாட்டியிருந்தது. இதன்பின்னணியில் தான் அவர் மீது இப்படி மறைமுகமான குற்றச்சாட்டை முன்வைத்தது அரசாங்கம். துப்பாக்கிச் சூடு, கிரனேட் வீச்சு என்று மோசமான சம்பவங்கள் நிகழ்வதால்- தப்பியோடிய படையினரை இதில் இலகுவாக சம்பந்தப்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

வெளிநாடுகள் இதை மோசமானதொரு நிலையாகப் பார்க்கின்றன. குறிப்பாக வன்முறைகளில் இருந்து இலங்கைத்தீவு விடுபட்டு விட்டதான கருத்தை உடைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. போருக்குப் பிந்திய தேர்தல் முற்றிலும் அமைதியாகவும் நீதியாகவும் நடைபெற வேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் இலங்கையின் பிரதான அரசியல் சக்திகள் தவறிவிட்டன என்பது உறுதி.

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி வன்முறைகளுக்கு இடமில்லாமல் செய்யப் போவதாக அரசாங்கம் உறுதி கூறியுள்ளது. அதேவேளை, அரசாங்கம் இராணுவ டாங்கிகளை கொழும்புக்கு நகர்த்துவதாகவும் இராணுவத்தின் துணையுடன் ஆட்சியை நீடிக்க மகிந்த ராஜபக்ஸ முனைவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளார் சரத் பொன்சேகா. அதாவது இந்தத் தேர்தலுக்குள் பாதுகாப்புத் தரப்பை இழுத்து வரும் முயற்சிகளில் இரு வேட்பாளர்களும் இறங்கியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதற்கு படை அதிகாரிகள் பலரை ஊடகங்களின் முன்னால் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அதேவேளை சரத் பொன்சேகாவுக்கும் அதே பின்புலமும்- முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் பலரின் ஆதரவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இரு வேட்பாளர்களுக்குமே ஆயுதப்படைகளுடனான பரிச்சயமும் அறிமுகமும் இருப்பது ஒரு வகையில் வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கலாம்.ஆனால் இந்தத் தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு இரு பிரதான அரசியல் சக்திகளுமே முனைந்ததாகத் தெரியவில்லை.

வன்முறைகளைத் தூண்டி விடும் வகையிலான கருத்துகளை பரப்புவதில் பிரதான வேட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதையும் மறுக்க முடியாது. இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்வதான குற்றச்சாட்டை இருதரப்புமே சொல்வது தான் ஆச்சரியமான விடயம்.

* ஜனநாயக சூழலில்- நீதியான தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கொண்டிருந்த மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் இது கவலையை ஏற்படுத்தக் கூடியதொன்று என்பதில் சந்தேகமில்லை.இராணுவ சூழல் ஒன்றுக்குள் இலங்கை சிக்கிப் போயிருப்பது உண்மை. கடந்த முப்பதாண்டு காலமாக நடந்த போரின் விளைவாக ஊதிப் பருத்துப் போயிருக்கும் பாதுகாப்புக் கட்டமைப்பை விலக்கியதாக எந்த முடிவையோ தெரிவையோ மேற்கொள்ள முடியாத நிலை அரசியல் தலைமைக்கு இருப்பது வெளிப்படை.

இந்த நிலையில் இராணுவ ஆட்சி பற்றிய இப்படியான குற்றசாட்டுகள் சுமத்தப்படும் போது அது அச்சமூட்டக் கூடியதொன்றாகவே பார்க்கப்படும். தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதும், இராணுவத்தின் பங்கு பற்றிய பிரசாரங்களும் இந்த ஜனாதிபதித் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமான ஒன்றாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பவே செய்துள்ளது.
இந்தத் தேர்தல் சுதந்திரமான முறையில் நடைபெறுவற்கு தான் எடுத்த முயற்சிகளுக்கு அரசியல் கட்சிகள் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்ற தேர்தல் ஆணையாளரின் விசனம்- அதன் விளைவாக தேர்தல் முடிந்ததும் பதவி விலகப் போவதாக கூறியுள்ளது ஆகியன சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதொன்றாகவே பார்க்கப்படும்.

அதாவது அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகளை இத்தகையதொரு பின்னணியில் வைத்து எடை போடும் போது எப்படித் தான் நீதியான முறையில் தேர்தல் நிகழ்ந்தாலும் அதைச் சந்தேகத்துடன் பார்க்கவே வழிவகுக்கும். வன்முறைகளில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற கோணத்தில் இலங்கையைப் பார்க்க முற்படும் சர்வதேசத்துக்கு- இங்கு நிகழும் தேர்தல் வன்முறைகள் ஒரு உறுத்தலான விடயமாகவே இருக்கும். தமது கருத்தை மீளாய்வு செய்வதற்கு அந்த நாடுகள் முனைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

பிரதான வேட்பாளர்கள், அவர்களுக்குப் பின்னால் இயங்கும் அரசியல்கட்சிகள் அனைத்தும் தாம் சார்ந்த வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதிலேயே கரிசனையாக இருக்கின்றன. தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் தமக்கு இருக்கும் கூடுதல் பங்கு பற்றி சிந்திக்கத் தயாராக இல்லை. இந்த நிலையானது வன்முறைமயப்பட்ட அரசியல் நிலையில் இருந்து இலங்கை விடபடவில்லை என்ற உண்மையையே உலகுக்கு எடுத்துக் கூறப் போகிறது.

சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*