TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு கணிக்க முடியாத கடும் போட்டி

பிரசாரங்கள் 23.01.2010 சனி நள்ளிரவுடன் ஓய்ந்து- நாளை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. கடும்போட்டி நிலவுகின்ற ஜனாதிபதித் தேர்தலாக- இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு- அவற்றில் ஒன்று நிராகரிக்கப்பட்டதால்-22 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருந்தனர். அவர்களில் இருவர் போட்டியில் இருந்து விலகிவிட இப்போது பகிரங்க தேர்தல் களத்தில் 20 வேட்பாளர்கள் இருக்கின்றனர்.

(ஆனால் வாக்குச்சீட்டில் 22 வேட்பாளர்களும் இடம்பெற்றிருப்பர்) இவர்களில் பிரதான இரு வேட்பாளர்களே வெற்றி வாய்ப்புள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாகக் கூடிய நிலை காணப்படுகிறது.

அதேவேளை விக்கிரமபாகு கருணாரத்ன மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. கடும்போட்டி நிறைந்த தேர்தலாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில்- யாருக்கு வெற்றிவாய்ப்பு என்ற கருத்துக்கணிப்புகளும் தாராளமாகவே வெளியாகின்றன.

ஆனால் வெற்றி என்பது எந்த வேட்பாளருக்குமே இலகுவாகக் கிடைக்க முடியாத ஒன்றாகவே இருப்பது கண்கூடு.இந்தத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைப்பதில் இரு பிரதான வேட்பாளர்களும் அதிக அக்கறை காண்பித்ததை மறுக்க முடியாது. ஆனால் இரு பிரதான வேட்பாளர்களுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எத்தகைய அரசியல்தீர்வை முன்வைக்கப் போகிறோம் என்பதை வெளிப்படுத்தவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

அதாவது தமிழ்மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் அக்கறையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு வாக்குகளைப் பெறுவதே அவர்களின் நோக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைவிட இந்தத் தேர்தலில் நிறைவேற்றுவதாக இருதரப்பும் கொடுத்த வாக்குறுதிகளை விடவும் எதிர்த்தரப்பு மீது வீசிய குற்றச்சாட்டுகளும், வசைமாரியும் தான் அதிகம்.

மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தை சந்திக்கு இழுத்து விமர்சிப்பதில் எதிர்க்கட்சிகள் அதிக அக்கறை காட்டி வந்தன. அதேவேளை சரத் பொன்சேகாவையும் அதே வகையில் சிக்க வைக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. ஊழல்,மோசடி, முறையற்ற ஆட்சி, இராணுவ ஆட்சிநிலை என்று பலதரப்பட குற்றச்சாட்டுகளை இருதரப்பும் பொழிந்து கொள்வதில் காலத்தைக் கடத்தினவே தவிர உருப்படியான எந்தத் திட்டத்தையும் முன்வைத்து வாக்குக் கேட்கின்ற நிலை இருக்கவில்லை. ஜனநாயகம் விருத்தியடைந்த நாடுகளின் தேர்தல்களில் அபிவிருத்தி நோக்கிய கொள்கையும் அதையொட்டிய விளக்கங்களுக்கும், விவாதங்களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் அத்தகைய எந்த விழுமியங்களுக்குள்ளேயும் இலங்கை இன்னமும் வரவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது.

தனிமனித காழ்ப்புணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து –பொதுநலனை பின்னிலைப்படுத்தும் வகையில் அமைந்த இந்தத் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்ற சரியான கணிப்புக்கு எவராலுமே செல்ல முடியாது. சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரையில் ஐதேக, ஜேவிபி என்று இதுவரை இணைக்க முடியாத துருவங்களாக இருந்த அரசியல் சக்திகளை ஒரே கோட்டுக்குக் கொண்டு வந்தவர். அதேவேளை சிறலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற சிறுபான்மையினரின் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருப்பது இவரது பெரும் பலம்.

மகிந்த ராஜபக்ஸவுக்கோ இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் கைகொடுப்பதற்கு ஈபிடிபி, வன்னியில் கைகொடுக்க புளொட், கிழக்கில் கைகொடுப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தேசிய ஐக்கிய முன்னணி என்பனவற்றை நம்பியிருக்கிறார். மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளான இதொகாவும், மலையக மக்கள் முன்னணியும் மகிந்த ராஜபக்ஸவின் பின்னால் இருப்பது அவரது பெரும்பலம் எனலாம். ஒரு பக்கத்தில் சிறுபான்மையினரின் தயவில் தான் அடுத்த ஜனாதிபதி தெரிவாகப் போவதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறிப் போவதற்கு இருக்கின்ற சாத்தியங்களையும் மறுக்க முடியாது. அதேவேளை அபிவிருத்தி நோக்கியதான கொள்கைகளை முன்வைப்பதில் இருபிரதான வேட்பாளர்களுமே கவனத்தைச் செலுத்தவில்லை என்பதே உண்மை. போருக்குப் பிந்திய நாட்டை கட்டியமைத்தல் தொடர்பாக தெளிவான கொள்கைகள் முன்வைக்கப்படவில்லை.

ஊழல்,மோசடிகளை ஒழிப்பதை முதன்மை இலக்காகக் குறிப்பிடும் சரத் பொன்சேகா அறவித்த பல பல திட்டங்களை அரசாங்கம் தேர்தலுக்கு முன்னரே நிறைவேற்ற ஆரம்பித்தது தான் ஆச்சரியம். சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிப்பு, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று அரசாங்கம் தேர்தலை அண்டிய காலத்தில் விடுத்த அறிவிப்புகள், வேலைவாய்ப்புகள் தொடர்பான உறுதிமொழிகள் கவனத்தில் கொள்ளத் தக்கவையாக இருந்தன.

அதேவேளை தான் பதவிக்கு வந்தால் 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப் போவதாகவும், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாவும் வேலையற்ற இளைஞர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவு வழங்கப் போவதாகவும் சரத் பொன்சேகா விடுத்துள்ள அறிவிப்பும் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்தன. இறுக்கமான போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை பிரதான வேட்பாளர்களால் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி ஒருபக்கம் இருக்கின்ற அதேவேளை இனவாதத்தை கிளப்பும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதையும் மறுக்க முடியாது. குறிப்பாக சரத் பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய உடன்பாடு என்ற குற்றசாட்டை முன்னிலைப்படுத்துவதற்காக சிங்களத் தேசியவாத சக்திகள் இனவாதக் கருத்துக்களை முன்வைக்கவும் தவறவில்லை. என்னதான் புலிகளைத் தோற்கடித்து விட்டதாக மகிந்த ராஜபக்ஸவும் சரத் பொன்சேகாவும் உரிமை கோரி- அந்த வெற்றியில் பங்கு கேட்டு நின்றாலும் புலிகளை வைத்து அரசியல் நடத்தும் வங்குரோத்து நிலையில் இருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை என்பதை இந்தத் தேர்தல் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

புலிகளைச் சம்பந்தப்படுத்தி அரசியல் நலன்களைப் பேணும் முயற்சிகளில் பிரதான வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இருதரப்பும் ஈடுபட்டதை யாரும் மறுக்க முடியாது. தென்னிலங்கையில் சிங்கள மக்களின் ஆதரவு மகிந்த ராஜபக்ஸவுக்கு கணிசமாக இருப்பதாகவும்- வடக்கிலும் கிழக்கிலும் பொன்சேகாவின் அலை வீசுவதாகவும் கருத்துக்கணிப்புகள் கூறினாலும்- பெரும்பாலும் இந்தத் தேர்தலில் ஒருதரப்புக்கு ஆதரவான அலை சீரானமுறையில் வீசவில்லை என்பது வெளிப்படை.

அதாவது 1994இல் சந்திரிகா அலை வீசியது போல யாருக்கு ஆதரவாகவும் அலை ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் போட்டி கடுமையாகிப் போயுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் என்பது சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் மட்டும் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியதொன்றல்ல. இதற்கு அப்பால் 50வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால் தான் வேட்பாளர் ஒருவரின் வெற்றி முதல் சுற்றிலேயே ஊறுதி செய்யப்படும்.

* சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு போன்றோருக்கு கிடைக்கும் வாக்குகள் பிரதான இரு வேட்பாளர்களுக்கும் முதல் சுற்றில் 50 வீத வாக்குகளைப் பெறமுடியாத இக்கட்டான நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை. இறுக்கமான போட்டியும் காட்டிக்கொடுப்பு, தேசத்துரோகம், ஊழல்,மோசடி என்பன போன்ற குற்றச்சாட்டுகள், வசைமாரிகளும் மலிந்து போயுள்ள இந்தத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கப் போவது யார்?

புதிர் நிறைந்த இந்தக் கேள்விக்கான விடை மட்டுமல்ல- பல அரசியல் திருப்பங்களுக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் காரணமாக அமையலாம்.

கொழும்பிலிருந்து எமது கட்டுர்ரையாளர் கபில்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*