TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தென்னிலங்கையின் அரசியல் மாற்றமும் தமிழர் தரப்பின்

தென்னிலங்கையின் அரசியல் மாற்றமும் தமிழர் தரப்பின் மதிநுட்ப அரசியலும்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் உருவாகிய அரசியல் பதற்றங்கள் அரசியல் கட்சிகளின் வேட்புமனுத் தாக்கலுடன் வன்முறைகளாக வெடித்துள்ளன. தற்போது வரையிலும் ஏறத்தாழ 800 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தென்னிலங்கையில் பதிவாகியுள்ளன.

தேர்தல் வன்முறைகளில் இதுவரை நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்தும், பெருமளவான உடைமைகள் சேதமாக்கப்பட்டும் உள்ளன. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விட இந்த தேர்தல் வன்முறை மிக்கதாக மாற்றடைந் துள்ளதுடன், கடந்த 20 வருடங்களில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை விட தற்போதைய தேர்தல் வன்முறைகள் மிக அதிகம் என தேர்தல்கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன. இன்னும் இரு தினங்களே தேர்தலுக்கு உள்ள நிலையில் தென்னிலங்கையை பதற்றங்களும், பரபரப்பும் சூழ்ந்துள்ளன.

தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்ற போதும், தற்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ (64) மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா (59) ஆகிய வர்களுக்கு இடையிலான போட்டியே முதன்மையானது. அவர்கள் இருவரும் மொத்தமாக ஏதற்தாழ 141 இலட்சம் வாக்குகளை ஈர்க்கும் தகைமையை கொண்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 132 இலட்சம் (13.2 மில்லியன்) மக்கள் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருந்தனர். எதிர்வரும் தேர்தலில் 141 இலட்சம் (14.1 மில்லியன்) மக்கள் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குகளில் ஏறத்தாழ 36 தொடக்கம் 40 இலட்சம் வாக்குகள் வட கிழக்கு தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களான சிறுபான்மைச் சமூகத்தை சார்ந்தது. மிகுதி பெரும் பான்மைச் சமூகமான சிங்கள மக்களைச்சார்ந்தது.

தேர்தலில் போட்டியிடும் இரு பிர தான வேட்பாளர்களும் வன்னியில் நடைபெற்ற போரில் முக்கியபங்கு வகித்தவர்கள் என்பதால் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிந்துபோகும் நிலையை எட்டியுள்ளன. இந்த நிலையில் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளின் முக்கியத்துவம் உணரப்பட்ட போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற சிறுபான்மைச் சமூகத்தை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு தமது ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ளமை தற்போதைய அரசாங்கத்தின் நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த போது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறானதொரு கடும் போட்டி ஏற்படும் என்பதை அரசாங்கம் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

எனினும் இலங்கையில் இவ்வாறு ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியது யார் என்பதற்கான பதில்கள் தெளிவானவை. இலங்கை அரசுக்கும் மேற்குலகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மிகப்பெரும் விரிசல்தான் தற்போதைய நிலைக்கு முக்கிய கார ணம். மேற்குலகத்திற்கு எதிரான நாடுகளுடன் கைகோர்ப்பதன் மூலம் அவர்களை பணியவைக்கலாம் என அரசாங்கம் போட்ட கணிப்புக்கள் எதிர்மறையான பலன்களை தான் கொடுத்துள்ளன. அதாவது அவர்கள் தமது அழுத்தங்களை மேலும் இறுக்கியுள்ளனர். ஜி.எஸ்.பி வரிச்சலுகையின் நிறுத்தம் முதல் டப்ளின் நகரில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகள் வரைக்குமான நடவடிக்கைகளில் மேற்குலகத்தின் பங்களிப்புக்கள் கணிசமான அளவில் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

நான் முன்னர் கூறியது போல மேற் குலகத்தின் நகர்வுகள் ஒரு நோக்கத்தை கொண்டவையாகவே இருந்துள்ளன. அதாவது இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தை அவர்கள் விரும்புகின்றனர். நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என அமெரிக்கா மீண்டும் மீண்டும் தெரிவித்து வரும் போதும் அவர்கள் பொன்சேகாவின் ஆட்சியை விரும்புவதை அறிக்கைகளின் ஊடாக அறிய முடிந்துள்ளது. மேலும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடைபெறவேண்டும் என்பதை மேற்குலகமும், ஐ.நாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சுதந்திரமான தேர்தல் நடைபெறாது விட்டால் ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை முற்றாக நிறுத்தும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அது மட்டுமல்லாது தவணை அடிப் படையில் வழங்கப்படும் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி உதவி யையும் சில மாதங்களுக்கு தாமதப்படுத்தும் படி அமெரிக்காவின் காங்கிரஸ் சபை தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து ஐ.நா.வும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதாவது இலங்கையில் நடை பெறப்போகும் தேர்தல் தொடர்பில் மேற்குலகம் மிக உன்னிப்பாக அவதா னித்து வருகின்றது என்பதையே இந்த அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரத்தில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகளும் இலங்கை அரசிற்கு பாதகமான முடிவை தான் கொடுத்துள்ளன. இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முற்றாக முறிந்து போகும் நிலையை எட்டியுள்ளதோ என்ற கருத்துக்கள் எழுந்துள் ளன.

டப்ளின் நகரத்தில் நடைபெற்ற இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை (19) கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு நேர்காணலை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித ஹோகன்னா தெரிவித்த கருத்துக்களில் இருந்து இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்களை புரிந்து கொள்ளமுடியும். அதாவது தமக்கு எதிராக அனைத்துலக சமூகம் செயற்படவில்லை எனவும், மேற்குலகத்தின் சில நாடுகளே தமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் தமக்கு ஆதரவாக உள்ள நாடுகள் என அவர் குறிப்பிட்ட நாடுகளில் மேற்குலகத்தின் எந்தவொரு நாடும் இடம் பெறவில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ஆபிரிக்கா, நைஜிரியா என வலிமை மிக்க நாடுகள் தமக்கு ஆதரவாக உள்ளதாக ஹோகன்னா தெரிவித்துள்ளார். இலங்கை எவ்வாறான ஒரு அழுத்தத்தில் சிக்கி உள்ளது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. மனித உரிமை மீறல்களை வலுவாக உறுதிப்படுத்தியவாறு பொருளாதார அழுத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இலங்கையை மற்றுமொரு சிம்பாப்வேயாக மாற்றுவதற்கு மேற்குலகம் காய்களை நகர்த்தி வருகின்றது. எனினும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறப் போகும் தேர்தலை அவர்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகளை பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. இலங்கையின் தென்னிலங்கை அரசியலில் தற்போது மிகவும் சிக்கல் நிறைந்த ஒரு அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது.

இலங்கையின் இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் ஒருபுறம், இலங்கை மேற்குலகம் என தோற்றம் பெற்றுள்ள வெளியுலக அரசியல் நெருக்கடிகள் மறுபுறம். இந்த சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்கு இந்தியாவின் உதவியை தற்போதைய அரசு நாடிய போதும் இந்தியா தற்போது தன்னை பாதுகாக்க போராடவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மதிநுட்பம் அதிக பலனை கொடுக்கலாம் என நம்பப்படுகின்றது. ஊடகவியலாளரான பரணி கிருஷ்ணரஜனி கூறியதைப் போல மிகவும் சூழ்ச்சி மிக்க அரசியல் நகர்வுகள் தான் தற்போதைய தருணத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்குள் நகர்த்தும் திறன் கொண்டது. அதனை தான் தமிழர் தரப்பும் மேற்கொண்டு வருகின்றது. புலம்பெயர் தமிழ் சமூகம் எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கொண்ட நிலைப்பாடும் அதனை தான் பிரதிபலிக்கின்றன. ஆனால் இலக்கை அடைவதற்கு இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புக்களும் தேவை.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி்:வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*