TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து

அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்!

சிங்கள தேசத்தின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26-ம் திகதி நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் விடுதலை பெறும்வரை அல்லது அவர்களை விடுவிக்கும்வரை அவர்களது தலைவிதியை சிங்கள தேசமே நிர்ணயிக்கப் போகின்றது என்பதனால், ஈழத் தமிழர்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகி நிற்க முடியாது.

மிகப் பெரிய தமிழின அழிப்பை நிகழ்த்திய சிங்கள இனவாதிகள் இருவர் தேர்தல் களத்தில் முன்நிலை வகுப்பதால், விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழர்கள் இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் மக்களின் வாழ்வை நிருமூலமாக்கியவர்களே, அவர்களைத் தேடிச் சென்று வாக்குப் பிச்சை கேட்தும் காட்சி மாற்றங்களும் அரங்கேறியுள்ளன.

எங்களைக் கொன்றவனுக்கா…? அல்லது கொல்லச் சொன்னவனுக்கா…? வாக்களிப்பது என்று தமிழீழ மக்களது மனம் தவித்தாலும், கொரூரங்கள் நிறைந்த பலம் குறைந்த எதிரியைப் பதவியிலேற்றியாவது சற்று உயிர் மூச்சை உள்ளிழுத்து விடலாம் என்றே அவர்களது முடிவு அமைந்துள்ளது. அவர்களது இந்த முடிவு குறித்து புலம்பெயர் தமிழர்கள் கூட குறை கூறிவிட முடியாது. அவர்களது இந்த முடிவு அவர்களது உயிர்வாழ்தலுடன் தொடர்புடையது.

நாளைய ஒரு பொழுதாவது நல்லதாக விடியாதா? என்ற அவர்களது மிகக் குறைந்த எதிர்பார்ப்புடன் தொடர்புடையது. சிங்கள இராணுவத்தின் இனக் கொடூரமற்ற ஓர் இரவையேனும் அவர்கள் வரமாகக் கேட்கிறார்கள். ஒட்டுக் குழுக்களின் அச்சுறுத்தல்களின்றி நடமாடும் ஒரு பகனையேனும் தரிசித்துவிடத் துடிக்கிறார்கள்.

மாற்றங்கள் உடனடியாக வந்துவிடா விட்டாலும், மாறாக் கொடூர அரசாட்சியை மாற்றியமைக்க எம்மாலும் முடியும் என்ற பேரம் பேசுதலினூடாகவேனும் சாய்ந்துபோன தம் வாழ்வுதனைச் செப்பனிட விரும்புகின்றார்கள். அவர்களது எண்ணங்களை வழிநடத்தும் உரிமைக்கு அருகதை யாருக்கும் கிடையாது. ஏனென்றால், அவர்கள் இனக் கொடூரமுடன் மூர்க்கம் கொண்டு மிருகஙடகளாகவே மாறிப்போன சிங்கள இனத்துடன் வாழச் சபிக்கப்பட்டவர்கள்.

அடுத்த நாளுக்கான வாழ்வுக்காக ஏங்கும் தமிழீழ மக்களுக்கு அடுத்த யுகத்திற்கான ஆலோசனை வழங்கும் பல புத்தி ஜீவிகள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் உருவாகிவிட்டார்கள். இலவச ஆலோசனை வழங்கும் புதிய பல இணையத்தளங்களில் தமது இதய தாகங்களைப் பதிவு செய்கிறார்கள். கொள்வார் இல்லாவிட்டாலும் கவலையே இல்லாமல் தமது கையிருப்புக்களுக்குத் தொடர்ந்தும் கடை விரிக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் வரையும், அல்லது அதற்குப் பின்னரும் விடுதலைப் போருக்குப் பின்னால் அணிவகுத்தார்களோ, அல்லது ஆதரவு நல்கினார்களோ தெரியாது. ஆனாலும் விடுதலைப் புலிகளின் இலட்சியங்களும், தியாகங்களும் விமர்சிக்கப்படுகின்றது. தேசியத் தலைவர் அவர்களது போர் வியூகங்களும் அலசப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் முக்கிய பொறுப்பை தேசியத் தலைவர் அவர்களது தலையில் சுமத்திவிட்டால், போர்க் களத்தின் சூத்திரதாரிகளான இந்தியாவை பழியை இலகுவாகத் துடைத்துவிடலாம் என்ற வெட்கம் கெட்டதனங்களும் அங்கே வெளிச்சமாக்கப்படுகின்றன.

இந்தியா குறித்த பிரமிப்பைத் தமிழினத்திற்கு ஏற்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர்களை மீண்டும் இந்திய தாசர்களாக்கும் சூழ்ச்சியும் எரிச்சலை மூட்டுகின்றது. தமிழினத்தை இரக்கமே இல்லாமல் அழித்துத் துடைத்த மகிந்தவை மீண்டும் ஆட்சியில் ஏற்றும் ஆர்வமும் அதில் பளிச்சிடுகின்றது. « இப்போது இந்தியாதான் உலகம். சீனப் பூதத்திற்கு ஈடுகொடுக்க மேற்குலகம் ஒன்றாய்த் திரண்டு முண்டு கொடுப்பதால் – ஆகக் குறைந்தது அடுத்த 30 வருட காலத்திற்கு இந்தியா தான் உலகம் » என்று ஒரு கற்பனாவாத கதைகளும் அளக்கப்படுகின்றது.

இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம் என்பதையோ, அதில் தமிழ் நாடும் அடக்கம் என்பதையோ இந்த இந்திய விசுவாசிகள் மறந்து விடுகிறார்கள். ஈழத் தமிழர்களின் தூரதிர்ஷ்டம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பின்னர் தமிழர்களுக்கான தலைவர் ஒருவரும் ஆட்சிக்கு வரவில்லை. இப்படியே கலைஞர் ஆட்சி நீடிக்கும் என்றோ, இன்னொரு தமிழர்களுக்கான தலைவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வரமாட்டார் என்றோ, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் நிலைக்கும் என்றோ நிட்சயப்படுத்திக்கொள்ள முடியாது.

காங்கிரஸ் கட்சி கோலோச்சிக்கொண்டிருந்தபோதுதான் தமிழர்களின் தலைவராக அறிஞர் அண்ணா அவர்கள் உருவாகினார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, தி.மு.க. ஆட்சியை உருவாக்கினார். மீண்டும் ஒரு தமிழர்களுக்கான தலைவர் தமிழகத்தில் உருவாகமாட்டார்கள் என்றோ, மேலும் பல முத்துக்குமாரன்கள் தங்களுக்கே தீ மூட்டாமல் அக்கிரமத்திற்கும், கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் தீ வைக்கமாட்டார்கள் என்றோ முடிவு செய்துவிட முடியாது.

« மாற்றம் ஒன்றே மாறாதது » மாற்றத்தை யாசிக்கும் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் அனைவரும் நம்ப வேண்டும். தங்களால் முடியாது என்ற தீர்மானத்துடன் சிங்களக் காடையர் கூட்டத்திற்குப் பயந்தோடிய ஈழத் தமிழர்களை, திருப்பி அடிக்க வைக்கும் துணிவை ஏற்படுத்திக் கொடுத்த தேசியத் தலைவர் அவர்கள் பிறந்த சமூகத்தை மீண்டும் கோழைகளாக்கும் கொடூரங்களை அரங்கேற்றவும் பலர் துடிப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இங்கே, புலம்பெயர் தமிழர்களின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதை நன்றாகப் புரிந்து கொண்ட தேசியத் தலைவர் அவர்கள், 2008 மாவீரர் உரையின்போது விடுதலை போரை முன்நகர்த்தும் பணியை புலம்பெயர் தமிழர்களிடம் கையளித்திருந்தார். இன்னமும் சில வருடங்களில், புலம்பெயர் தேசங்களின் பல உயர் பதவிகளில் எமது இளைய சமூதாயம் உட்காரப்போகின்றது. அவர்கள், தமது ஆற்றல்களை தமிழீழ விடுதலைக்கு அர்ப்பணிக்கும் தீர்மானங்களை எடுத்துவிட்டால் இந்தப் புலம்பெயர் தேசங்கள் நிச்சயம் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு செவி மடுத்தே தீரும்.

ஆகாயத்தில் பறக்க ஆசைப்பட்ட மனிதனால் வானில் வலம்வர முடிந்தது. நிலவைத் தொட நினைத்த மனிதனால் நிலவில் கால் பதிக்க முடிந்தது. சுதந்திரமாக வாழ ஆசைப்படும் தமிழனால் தமிழீழத்தை மீட்க முடியாதா? நீங்கள் எங்களைப் பிளவு படுத்தாமல் விடுதலைப் புலிகளாக ஓர் அணியில் நிற்க விடுங்கள். அது போதும், தமிழீழத்தை மீட்க! உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்!

நன்றி: பரிஸ் ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*