TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழின அழிப்பின் உச்சம்

தமிழின அழிப்பின் உச்சம்: ஐ.நா சாசனத்தை முன்வைத்து ஒரு நோக்கு.

தனது இராணுவ இயந்திர மேலாதிக்க அடக்குமுறைக்கு ஊடாக தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவதும், தமிழினத்தை சரணாகதி அடைய வைத்தலுமே பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது.

காலங்காலமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகள், இராணுவ அடக்குமுறையைக் கருவியாகக் கொண்ட மூலோபாயத்தையே கையாண்டன. இன அழிப்பே பேரினவாத அரச இயந்திரத்தின் நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது.

இன்று தமிழர் தாயகம் முழுவதும் பௌத்த சிங்கள இன மேலாதிக்க ஆக்கிரமிப்பால் விழுங்கப்பட்டுள்ளது. முட்கம்பி வதைமுகாம்களாகவும், திறந்தவெளிச் சிறைச்சாலைகளாகவும், உயர்பாதுகாப்பு வலையங்களாகவும் வரலாற்றில் என்றுமில்லாத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இனப்படுகொலை மட்டும் இன அழிப்பு அல்ல. இன அழிப்பு என்பது, ஓர் இனத்தை பகுதியாகவோ, பூண்டுடனோ அழித்தொழிக்கும் திட்டமிட்ட நோக்கம் கொண்டது. தமிழின அழிப்பின் உச்ச வடிவம் இன்று வவுனியா வதைமுகாம்களில் அரங்கேறி வருகின்றது. 1948 இல் இன அழிப்பிற்கு (genocide) எதிரான சாசனம் ஐக்கிய நாடுகள் பேரவையினால் உருவாக்கப்பட்டது. இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனம்

இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை ஐ.நா சாசனம் பின்வருமாறு வரையறை செய்கின்றது:

* – ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது,

– ஒரு இனத்திற்கு அல்லது குழுமத்திற்கு வலிந்தும் திட்டுமிட்டும் பாரிய உடல்- உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது,

– சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது,

– இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்கா வகையில் (இன விருத்தியைத் தடுக்கும்) கொடுமைகளைப் புரிதல்

– பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவங்களை, அடையாளங்களை அழித்தல்

இன அழிப்பு நடவடிக்கைகளாக எவை கருதப்படுகின்றன என்பதை எடுத்துரைக்கும் சட்ட அடிப்படையிலான விளக்கங்களாக மேற்கூறப்பட்டவை உள்ளன.

உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இன அழிப்பினை அரங்கேற்றியிருக்கின்றன- அரங்கேற்றுகின்றன.

முதலாம் உலகப்போரின் போது நடந்தேறிய இனப்படுகொலைகளின் பாதிப்பே இன அழிப்பிற்கெதிரான அனைத்துலக சட்ட உருவாக்கத்திற்குரிய தூண்டுதலாக இருந்துள்ளது. போலந்து நாட்டைச் சேர்ந்த சட்டவாளர் Raphael Lemkin என்பவராலேயே இன அழிப்பிற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற சட்ட ஆலோசனை 1933 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

2ஆம் உலகப் போரிற்கு பிற்பட்ட காலத்திலேயே ஐக்கிய நாடுகள் அவையில் இன அழிப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிட்லரின் நாசிப் படைகள், யூதர்களைத் தேடித் தேடி அழித்த கொடுமைகளின் பின்னரே இன அழிப்பிற்கு எதிரான சாசனம் சட்ட அமுலாக்கம் கண்டது.

தண்டனை பெற்ற நாடுகள்

* 1990 களிலேயே முதன் முதலாக இன அழிப்பிற்கெதிரான சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ருவாண்டாவில் நடந்தேறிய இன அழிப்புக்கு பொறுப்பானவர்கள், அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் முன்நிறுத்தப்பட்டனர். கிட்லரின் யூத இன அழிப்பிற்கு அடுத்ததாக, பாரிய இன அழிப்பென்று 1994 ஆம் ஆண்டு நடந்தேறிய ருவாண்டா இன அழிப்பு குறிப்பிடப்படுகின்றது. 100 நாட்களில் 800 000 வரையான மக்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.

கூற்டு (Hutu) இனவாதிகளால் றுற்சி (Tutsi) இன மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய இன அழிப்பு கொடூரம் இது. ஐ.நா வின் அமைதிப்படைகள் 1993 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் நிலைகொண்டிருந்தன. ஐ.நா படைகளின் பிரசன்னம் இருந்த காலப்பகுதியிலேயே இன அழிப்பு நடந்தேறியது. பிரான்ஸ் நாடும் ருவாண்டா இன அழிப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாகக்கூட பிந்திய காலப்பகுதியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பில் கிளின்ரன் தலைமையிலான அன்றைய அமெரிக்க அரசாங்கமும் பாராமுகமாய் இருந்தது.

கொசவோ, பொஸ்னியா, குறுவாட்சியா, ஸ்லோவேனியா போன்ற முன்னாள் யூகொஸ்லாவியா குடியரசு நாடுகள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்காக சேர்பிய அரசுத்தலைவர் ஸ்லோவடான் மிலோசவிச் மீது இன அழிப்பு போர்க் குற்றம் சுமத்தப்பட்டு, அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்நிறுத்தப்பட்டமை கவனிப்பிற்குரியது.

குர்தீஸ் மக்கள் மீதான சதாம் உசேனின் இன அழிப்பு, 1975 – 1979 காலப்பகுதியில் கம்போடியாவில் நடந்தேறிய இன அழிப்பு, இன்றைய சமகாலத்தில் சூடானின் டார்பர் பிரதேசம், கிழக்கு கொங்கோ மற்றும் பலஸ்தீனம் என்பன இன அழிப்பினை எதிர்கொண்டுள்ள நாடுகளாகும். சூடானின் டார்பர் பிரதேச மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்காக சூடானின் அரசுத் தலைவர் ஓமர் ஹசான் அல் பசிர் மீது அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் (International criminal court) கடந்த ஆண்டு கைது ஆணை பிறப்பித்தது.

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பின் உச்சம்

* பௌத்த சிங்கள போரினவாதமானது, மனித குலமே, வெட்கித் தலை குனியும் வகையில் கடந்த ஆண்டு புதுமாத்தளனிலும் முள்ளிவாய்க்காலிலும் 5 மாதங்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றழித்து, பாரிய இனப்படுகொலையை அரங்கேற்றி முடித்துள்ளது.

வேதியல் ஆயுதங்கள் (chemical weapons), நச்சுக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (cluster bomb) என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து நாசகார ஆயுதங்களையும் தமிழர்களுக்கு எதிரான போரில் பேரினவாத அரசு பயன்படுத்தியுள்ளது.

மே 16, 17 ஆகிய இரு நாட்களிலும் நடாத்தப்பட்ட கடைசி நேர இனவெறித் தாக்குதல்களில் மட்டும் 22 ஆயிரம் உயிர்கள் பலியெடுக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவையை மேற்கோள் காட்டிய தகவல்கள் வெளிவந்தமை உலகறிந்ததே. படுகாயமடைந்தவர்கள், பதுங்குகுழிகளில் உயிர்களைக் கையிலேந்திக் கிடந்தவர்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் புல்டோசர்களால் நெரிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துலக போர் நெறிகளை மீறியதற்கான தடயங்களை, சாட்சியங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் பேரினவாத அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வன்போர் முடிவடைந்து ஏழு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்ட தறுவாயில் கூட அனைத்துலக பிரதிநிதிகளோ, ஊடகங்களோ போர் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.

முட்கம்பி வதைமுகாம்கள்

* புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கிறோம் என்ற போர்வையில், சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், நலன்புரி முகாம்கள் என்ற போர்வையில்;, முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட, இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட வதைமுகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.

இளைஞர்கள், இளம் பெண்கள் தனித்தனியாகவும், குடும்பங்கள் பிரிக்கப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டுமிருந்தனர். உறவினர்கள் சென்று பார்க்க முடியாத நிலையிலும், வெளியில் செல்ல முடியாத நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையிலும் மக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தனர். முகாம்களுக்குள்ளிருந்து இளைஞர்கள் கடத்தப்படுதலும், காணாமற்போதலும் தொடர் அவலங்களாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் 12 000 பேரின் நிலை வெளியுலகம் அறிய முடியாதுள்ளது.

கடுமையான அனைத்துலக அழுத்தங்களாலும், அரச தலைவர் தேர்தல் நலன்களுக்காகவும் குறிப்பிட்ட தொகை மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களில் பல ஆயிரக்கணக்கானோர் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படவில்லை. மாறாக பெயர் அறியப்படாத வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டுமுள்ளனர். வவுனியாவில் இராணுவச் சுற்றிவளைப்பு முகாம்களுக்குள் இன்னமும் 140 000இற்கும் மேற்பட்ட மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துலக சமூகத்தின் பாராமுகமும் கையறு நிலையும்

* சிறிலங்கா பேரினவாதம் அரங்கேற்றிய இன அழிப்பு இரத்தக்களரிக்கும், சாட்சியங்களற்ற படுகொலைகளுக்கும், அனைத்துலக போர் நெறிகளை மீறிய காட்டுமிராண்டித் தனங்களுக்கும் அனைத்துலக சமூகத்தின் மௌனமும் பாராமுகமும் துணை நின்றமையானது, இன்றைய உலகின் மனித நேய முழக்கங்களை பாரிய கேள்விக்குள்ளாக்குகின்றது.

இத்தனை பாரிய மனிதப் பேரவலங்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்புகூட, மனித அவலங்களை நிகழ்த்தியோருக்கு எதிராக எதுவித நீதி விசாரணைகளையும் கோருவதற்கு திராணியற்று, கையறு நிலையில் நிற்கின்றது அனைத்துலக சமூகம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தார்மீக நியாயம்

* 60 ஆண்டுகளுக்கு மேலான கால நீட்சியுடைய சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்பினை வரலாற்று ரீதியாக, தர்க்க ரீதியாக ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய தெளிவு அவசியமானதாகும்.

இராணுவ இயந்திரத்தைக் கருவியாகக் கொண்ட, நிறுவன மயப்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் எதிர்வினையே ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அறவழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை ஆயுதமுனையில் அடக்கும் மூலோபாயத்தையே சிறிலங்கா அரசு கையாண்டது. 1956, 1958, 1961, 1974 1977 மற்றும் 1983 காலப்பகுதிகளில் கொடூரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

தமிழீழ மக்களின் அரசியல் போராட்டம் எழுபதுகளின் முற்பகுதி வரை அறப் போராட்டமாகவும், பிற்பட்ட பகுதியிலிருந்து ஆயுதப் போராட்டமாகவும் மாற்றமடைந்தமை வரலாறு. இற்றைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பல படிநிலைகளுக்கூடாக தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமாக அது பரிணமித்தமையும் வரலாறு.

இவ்வாறான பின்புலங்களின் அடிப்படையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நியாயமான அரசியல் அடித்தளங்களைக் கொண்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த- முன்னெடுக்கின்ற எந்தவொரு இனங்களைப் பார்க்கிலும் தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய இனம் தமிழினம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறிய (1948 ஆம் ஆண்டு) தறுவாயிலிருந்தே, பௌத்த சிங்கள இன மேலாதிக்கம், தமிழின அழிப்பு என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கியது. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின அழிப்பினை மிக நுட்பமாகத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்துள்ளனர்.

இன அழிப்பு – போர்க் குற்றம் – மனிதத்திற்கு எதிரான குற்றம்

* ஐ.நா சாசனத்தில் இன அழிப்புக் குற்றங்களென எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ – போர்க் குற்றங்களென எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ – மனிதத்திற்கு எதிரான குற்றங்களென எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ – இன அழிப்பின் கூறுகள் என எவை வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்தையும் சிறிலங்கா பேரினவாத அரச இயந்திரம் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தியிருக்கின்றது – நிகழ்த்தி வருகின்றது.

தமிழர்களின் இருப்பை இல்லாமற் செய்வதற்கும், தனித்துவத்தை இழக்கச் செய்வதற்குரிய மூலோபாய திட்டங்களை வகுத்து, படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றது. பாராளுமன்ற பெரும்பான்மை மூலமாக தமிழரெதிர்ப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சட்டங்களாக்கப்பட்டன. சட்டங்களின் துணையோடு இராணுவ இயந்திரம் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்டு, அடக்குமுறை படிப்படியாக கட்டவிழ்த்து விடப்பட்டது.

நிறுவன மயப்படுத்தப்பட்ட அடக்குமுறை

* 1949இல் மலையகத் தமிழர் குடியுரிமை பறிப்பிலிருந்து இன்றைய முட்கம்பி வேலி வதைமுகாம்கள் வரை தொடர்கின்றது பௌத்த சிங்கள இன மேலாதிக்கத்தின் தமிழின அழிப்பு.

1956 இல் ‘சிங்களம் மட்டும்’ (singhala only) சட்டம் மூலம் தமிழ் மக்களின் மொழி உரிமை பறிக்கப்பட்டது. மொழியுரிமை பறிப்பு என்பது இனத்துவ அடையாளம், சமூக பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் சூட்சும் கொண்டதுமாகும். அரச நிர்வாகங்களில் ‘சிங்களம் மட்டும்’ பயன்பாட்டினால், தமிழர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது.

தொடர்ச்சியாக 1972 இல் கல்வித் தரப்படுத்தல் சட்டமாக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே பல்கலைக் கழக உள்நுளைவுக்கு தெரிவாக முடியுமென்ற பாரபட்ச நிபந்தனை கல்வித் தரப்படுத்தல் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளத்தினையும் மேம்பாட்டினையும் தடுப்பதற்குரிய மூலோபாயம் இதுவாகும்.

1981 இல் யாழ் நூலக எரிப்பென்பது, தமிழ் கல்விச் சமூகத்தை சிதைக்கும் திட்டமிட்ட இன அழிப்பு நோக்கம் கொண்டது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமென்று பெயர் பெற்ற, நூறாயிரம் வரையான அரிய பல்துறை நூல்களையும், தமிழின வரலாற்று ஆவணங்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம் என்பது பலரும் அறிந்ததே.

ஒட்டுமொத்தமாக இவ்வாறான தமிழர் விரோத சட்டங்கள் மூலம், தமிழ் மக்கள் இன- மொழி–அரசியல்-சமூக-பொருளாதார-கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்டனர்.

ஆட்சியதிகாரம், பாராளுமன்ற ஜனநாயகம், நீதித்துறை என்பன அரசியல் விழுமியங்களின் தார்மீக ஒழுக்க அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களால் கைக்கொள்ளப்படவில்லை. நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்கள பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது.

திட்டமிட்ட குடியேற்றம்: தாயகக் கோட்பாட்டை மறுதலிக்கும் மூலோபாயம்

* தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட, வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இது மக்கட்தொகை சமநிலையை- மக்கட்தொகை பரம்பலை (demographic balance) குழப்பும் நோக்கம் கொண்டது. திட்டமிட்ட குடியேற்றங்களால் தென் தமிழீழம் பாரிய அளவு விழுங்கப்பட்டுள்ளது. இன அழிப்பினை இலக்காகக் கொண்ட அரசுகள் கையாளும் முதன்மை மூலோபாங்களில் இது ஒன்றாகும். இவ்வாறே பலஸ்தீன மக்களின் பாரம்பரிய நிலங்களை யூதக்குடியேற்றங்கள் மூலம் இஸ்ரேல் விழுங்கி வருகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1940களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தாயகப் பிரதேசங்களை அபகரித்து சிங்களவர்களின் பரம்பலை அதிகரிப்பதன் மூலம், தமிழர்கள் சிறுபான்மையினர் என்ற கருத்துருவாக்கத்தை வேரூன்றச் செய்வதே பேரினவாத அரச இயந்திரத்தின் நோக்கம். தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து வடக்கினையும் கிழக்கினையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு திட்டமிட்ட குடியேற்றம் கருவியாய் கைக்கொள்ளப்பட்டது.

இன்று வன்னிப் பெருநிலப்பரப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கும், நிரந்தர இராணுவ மயப்படுத்தல் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டியது அதீத முக்கியத்துவம் வாய்ந்த பணி. முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு அனைத்துலக சமூகத்தினூடான அழுத்தங்களை சிறிலங்கா அரசிற்கு இடைவிடாது கொடுக்க வேண்டும். வன்னி மக்களின் முழுமையான மீள்குடியேற்றம் மூலமே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க முடியும் என்ற யதார்த்தமும் ஆழமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அதனூடாகவே தமிழ் மக்களின் விடுதலை வேணவாவினை உயிர்ப்புடன் பேணி, நியாயமான அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.

ரூபன் சிவராஜா (நோர்வே)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*