TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாரைக் காப்பாற்ற முனைகிறார் ஐ.நா செயலாளர் நாயகம்?

சிறீலங்காவில் நடைபெற்ற இனப்போரின் இறுதி நாட்கள் உலகில் எங்கும் நடைபெறாத மிகப்பெரும் அழிவுகளுடன் கடந்த வருடத்தின் மே மாதம் நிறைவடைந்திருந்தது.

அதிக தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டிருந்த உலகம் அங்கு நடைபெற்ற சம்பவங்களை செய்மதிகள் ஊடாக நேரடியாக பார்த்துக்கொண்டு தான் இருந்தன. இறுதிக்கட்ட சமரில் சிறீலங்கா இராணுவம் தன்னால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலையங்கள் மீதும், இடம்பெயர்ந்து தாக்குதலில் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியசாலைகள் மீதும் வெளிப்படையாகவே தாக்குதல்களை நடத்தியிருந்தது. அதற்கான செய்மதி ஒளிப்படங்களும் உள்ளன. அது மட்டுமல்லாது இறுதி நாட்களில் சரணடைய முற்பட்ட ஏராளமான போராளிகளும், தலைவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏறத்தாள 25,000 மக்கள் இறுதி நாட்களில் கொல்லப்பட்டதாக சிறீலங்காவில் பணிபுரிந்த தொண்டர் நிறுவனங்கள் ஐ.நாவுக்கு தகவல் அனுப்பியிருந்தன.

எனினும் அதனை வெளியிட ஐ.நா முன்வரவில்லை. இனப்படுகொலைகள் நடைபெற்றதற்கான செய்மதி ஒளிப்பட சான்றுகளும் வழங்கப்பட்டன. ஆனாலும் ஐ.நா மௌனமாகவே இருந்தது. சாட்சியங்களை தேடி வருவது போல பாசாங்கு செய்த ஐ.நாவின் செயலாளர் நாயகத்திற்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் திரு பா.நடேசன் அவர்கள் மிக முக்கிய சான்றுகளை ஏற்படுத்தி கொடுத்துவிட்டே மரணத்தை தழுவியிருந்தார். அதாவது அவர் தனது போராளிகளுடனும், குடும்பத்தாருடனும் சரணடைவதற்கு முன்னர் சரணடைவது தொடர்பாக சிறீலங்கா அரச தலைவர்களுடனும், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுடனும், இந்திய அதிகாரிகளுடனும், விஜய் நம்பியார் போன்ற ஐ.நா அதிகாரிகளுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், அனைத்துலக ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களுடனும் சரணடைவது குறித்தும், எவ்வாறு சரணடைவது என்பது தொடர்பான விளங்கங்களை பெற்றுமே சரணடைந்திருந்தார்.

சிறீலங்கா இராணுவமும், அதனுடன் இணைந்துள்ள துணை இராணுவக் குழுக்களும் தன்னை படுகொலை செய்யும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டபோதும், தனது மரணம் சிங்கள பேரினவாதத்தையும், அவர்களுக்கு துணைபுரியும் துரோகக்கும்பலையும் உலகின் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே திரு நடேசனும், புலித்தேவனும் தமது இறுதியான மணித்துளிகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்களின் உரையாடல்கள் எல்லோரிடமும் பதியப்பட்ட ஆவணங்களாக உள்ளன. அதனை முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூட ஒப்புக்கொண்டிருந்தார். எனினும் ஐ.நா எந்த காத்திரமான செயல்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

அதன் பின்னர் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு தமிழ் மக்கள் எவ்வாறு கொடூரமாக கொல்லப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரத்தை ஒரு இராணுவச் சிப்பாயிடம் இருந்து பெற்று வெளியிட்டிருந்தது. அதுதான் பிரித்தானியா சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்த காணொளிக் காட்சி. உலகில் உள்ள மனித மனங்களை ஒரு கணம் உறையவைத்த அந்த காட்சி தொடர்பில் ஐ.நா காத்திரமான நகர்வை மேற்கொள்ளவில்லை, எனினும் அதன் மூத்த அதிகாரியான, ஐக்கி நாடுகள் சபையின் நீதிக்கு புறம்பான படுகொலைகளுக்கு எதிரான சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தனது தனிப்பட்ட முயற்சியின் ஊடாக அந்த காணொளி உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அது பொய்யானது என்பதை உறுதிப்படுத்தி சிறீலங்கா அரசு தப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஐ.நா வழங்கிய போதும், அல்ஸ்ரனின் நடவடிக்கை அதனை முறியடித்துள்ளது.

அல்ஸ்ரன் அதனை ஐ.நாவிடம் சமாப்பித்திருந்தால் 25,000 மக்கள் கொல்லப்பட்டதாக அனுப்பப்பட்ட தகவல்கள் எவ்வாறு ஐ.நா அலுவலகத்தின் பூட்டிய பெட்டிக்குள் முடங்கி கிடக்கின்றதோ அதனை போல இதுவும் வெளிவாராது முடங்கிப்போகலாம் என்று அஞ்சியதனால் தானோ என்னவோ அவர் அதனை தானே நேரடியாக ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். அவரின் அறிக்கை சிறீலங்கா அரசிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது, அதனால் பல அறிக்கைகளை சிறீலங்கா அரசு வெளியிட்டுவருகின்றது. எனினும் அல்ஸ்ரனின் அறிக்கை தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகத்தின் பதில் என்ன? என்பதே பலரினதும் எதிர்பார்ப்புகளாக இருந்தது. ஆனால் ஐ.நா செயலாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களை மட்டுமல்லாது உலகின் மனிதாபிமான சிந்தனைகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது அல்ஸ்ரனின் அறிக்கை தனிப்பட்ட கருத்து என்பதை கூறி சிறீலங்கா அரசை காப்பாற்ற முனைந்துள்ளார் பான் கீ மூன். அதாவது இனப்படுகொலைகள் தொடர்பாக மீண்டும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அதனை ஐ.நாவின் செயலாளர் நாயகம் முக்கியமானதாக கருத முன்வரவில்லை. அதனுடன் தொடர்பற்ற விடயங்களை அவர் பேசுகிறார், மகிந்தவின் உறுதிமொழிகளை பேசுகிறார், மீள்குடியேற்றம் தொடர்பாக பேசுகிறார், கையில் கிடைத்த ஆவணத்தை விடுத்து வேறு ஆவணங்களை தேடுகிறார். பான் கீ மூனின் இந்த நகர்வுகள் பல சந்தேகங்களையும், கேள்விகளையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வன்னியில் நடைபெற்ற நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பாக பான் கீ மூனுக்கு முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்ததா? அவரின் அனுசரணையுடன் தான் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இந்திய அரசின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலைகளுக்கு ஆதரவாக இருந்த ஐ.நாவின் அதிகாரியான விஜய் நம்பியாரை பான் கீ மூன் காப்பாற்ற முயல்கிறாரா? ஆசிய பிராந்திய வல்லரசுகளின் வட்டத்திற்குள் மூன் முடங்கி விட்டாரா? கினியா பகுதியில் 157 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் விசாரணைக்குழுவை அமைத்துள்ள பான் கீ மூன் ஏன் சிறீலங்காவில் பல ஆயிரம் மக்கள் ஆதாரங்களுடன் படுகொலை செய்யப்பட்ட போதும் மௌனம் காத்து வருகிறார்?

மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் கிடைக்க வேண்டுமானால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் அழுத்தங்கள் முழு வீச்சுடன் ஐ.நாவை நோக்கி திருப்பப்பட வேண்டும். ரஸ்யாவின் எதிர்ப்பையும் மீறி கினியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்த பிரான்ஸ், ஏன் சிறீலங்கா விடயத்தில் அதிக அழுத்தங்களை கொடுக்கவில்லை என்பதற்கான விடையையும் நாம் கண்டறிய முற்பட வேண்டும். மூனின் இரண்டாவது பதவிக்கான வாய்ப்பை விரும்பாத பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அவரை ஒரு அழுத்தத்திற்குள் கொண்டு வந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறியுள்ளன.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஐ.நாவின் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவதன் மூலம் சிறீலங்காவில் தமிழ் இனம் சந்தித்த கொடூரமான இனப்படுகொலைகளை உலகின் முன் நிறுத்தி எமது உரிமைகளின் அவசியத்தை வெளிப்படுத்த முடியும். அதனை நாம் விரைவாகவும், பெருமெடுப்பிலும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தற்போது எம்முன் உள்ள அவசர பணியாகும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*