TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“படைப்பெருக்கம் ஏன்” தமிழினத்தின் இன்றைய கேள்வி

இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதத்தில் அரசபடைகளைப் பலப்படுத்தப் போவதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகா வாக்குறுதி ஒன்றைக் கொடுத்துள்ளார். அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவார் என்றும்- அவர் தனது அரசியல் நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகளை முதன்மைப்படுத்தி வருவது அதை நிரூபிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாகவும்- அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிறது.

இலங்கையில் இராணுவம் என்பது மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து விட்டதென்பதை இத்தகைய கருத்துகளில் இருந்து உணர முடிகிறது. மகிந்த ராஜபக்ஸவின் பதவிக்காலத்தில் தான் இரண்டரை இலட்சம் பேரைப் புதிதாகப் படைகளில் சேர்த்து நாட்டின் படைபலம் பெருக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஸவின் நான்கு வருட பதவிக்காலத்தில் இலங்கையின் படைக் கட்டமைப்பு என்றுமில்லாத பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது.

இரண்டு இலட்சம் பேர் முப்படைகளிலும், 20 ஆயிரம் பேர் சிவில் பாதுகாப்புப் படையிலும் சேர்ந்துக் கொள்ளப்பட்டனர். 118,000 ஆக இருந்த இராணுவத்தின் ஆளணிவளம் இப்போது 220,000ஐ எட்டியுள்ளது. ஓவ்வொரு மாதமும் 5000 பேர் படைகளில் சேர்க்கப்பட்டனர். 19,000 ஆக இருந்த சிவில் பாதுகாப்புப் படையின் ஆட்பலம் 41,500 ஆக அதிகரிக்கப்பட்டது. சிவில் பாதுகாப்பு படையினருக்கு ரி-56 துப்பாக்கிகள், சீருடைகள் வழங்கப்பட்டன. அத்துடன் இறுதிப்போரில் 4500 சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் பலப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் படைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக- நவீன மயப்படுத்துவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

இது அவர் ஒரு பலமான இராணுவப் பின்புலத்துடன் ஆட்சியில் அமர விரும்புகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது. சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது, இராணுவத்தின் ஆளணி வளத்தை 3 இலட்சம் வரை அதிகரித்து- பலம் மிக்கதொரு படையாக உருவாக்க வேண்டும் என்று கூறிவந்தார். அதற்காக அவர் அரசாங்கத்தின் அனுமதியையும் கோரியிருந்தார். தற்போது இலங்கை இராணுவம் 220,000 பேரைக் கொண்ட மிகப்பெரிய படையாக வளர்ந்துள்ளது. எனினும் இதை மேலும் நவீன மயப்படுத்துவது சரத் பொன்சேகாவின் கொள்கையாக முன்மொழியப்பட்டுள்ளது. மிகையான படைபலம் என்பது ஆபத்தானது என்பது பொதுவான கணிப்பீடு. இந்தநிலையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் சரத் பொன்சேகா பாதுகாப்புக் கட்டுமானங்களை பலப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தத் தவறவில்லை.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களே பெருவாரியாக உள்ளன- எனவே ஆயுதங்களைக் கொள்வனவு செய்யத் தேவையில்லை என்று அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்ததாகக் கூறிய அதே சரத் பொன்சேகா- இப்போது 21ம் நூற்றாண்டின் சவால்களைச் சந்திக்கக் கூடிய படையாக பலப்படுத்தப் போவதாகக் கூறியிருப்பது முரணானதாக இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் அயல்நாட்டு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாத நாடு. வேறு நாடுகளுடன் எல்லையைக் கொண்டிராத நாடு என்பதால் அத்தகைய பிரச்சினைகளுக்குள் சிக்குவதற்கும் வாய்ப்பில்லை. எனினும் சரத் பொன்சேகா நாட்டின் பாதுகாப்பைப்பலப்படுத்தப் போவதாகக் கூறியிருப்பதும் – ஆயுதப்படையினரில் 90 வீதமானோர் தன்னையே ஆதரிப்பதாகக் கூறியிருப்பதும் பலரையும் சந்தேகம் கொள்ளவே வைக்கிறது. இந்த விடயத்தில் சரத் பொன்சேகா வெளிப்படையான தன்மையுடன் நடந்து கொள்கிறாரா என்ற கேள்வி தென்னிலங்கையில் எழவே செய்கிறது. அதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கும் அடுத்த ஜனாதிபதியாகப் பதவிக்கு வரப் போகிறவருக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுக்க கூடிய விவகாரமாக சனல்-4 ஒளிப்பதிவு நாடா மாறி வருகிறது.

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் ஐ.நாவுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில்- புலிகள் இயக்க போராளிகளை அரசபடையினர் சுட்டுக் கொல்லும் காட்சி உண்மையானதே என்று கூறியிருக்கிறார். மூன்று சுயாதீன நிபுணர்களின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள அவர் இதுபற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார். ஏற்கனவே இந்த ஒளிப்பதிவு காட்சி வெளியானபோது- அது பொய்யானது என்று இலங்கை அரசாங்கம் கூறிவந்தது.

அது பொய்யானது என்று நிரூபிக்க பாதுகாப்பு அமைச்சு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது.

நாடு தேர்தலுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில் இந்த அறிக்கை வெளியாகியிருப்பது மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கும் சரி- சரத் பொன்சேகாவுக்கும் சரி சங்கடங்களை ஏற்படுத்;தும் வகையில் அமைந்துள்ளன. காரணம் போருக்கு உத்தரவிட்டு அதை நடத்தியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. அதேவேளை அந்தப் போருக்குத் தலைமை தாங்கி வழிநடத்தியவர் சரத் பொன்சேகா. இவர்கள் இருவருமே இந்தத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகியுள்ள நிலையில்- போர்க்காலத்தில் நடந்த குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் இருவரும் எப்படிப் பதிலளிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயங்களாகியுள்ளன. அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா- ஆரம்பத்தில்; போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அப்படியான எந்தப் போர்க்குற்றச் செயல்களும் போரின்போது இடம்பெறவில்லை என்பதையும் அவர்- திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கூறுவது அவரது இயல்பே. இருந்தபோதும் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், சனல்-4 ஒளிப்பதிவு மகிந்தவை விடவும் இவருக்குப் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் போருக்கு நேரடியாகத் தலைமை தாங்கியவர் என்ற வகையில் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண்டிய ஒருவராகவே இருப்பார். இது சிக்கலானதொரு நிலைக்குள் சரத் பொன்சேகாவைக் கொண்டு செல்லக் கூடும். அதேவேளை மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் இதே நிலை ஏற்படும்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசத் தலையீடுகள் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறிவருகிறது. இந்தக் கட்டத்தில் சரத் பொன்சேகா ஜனாதிபதியானால் அவர் சர்வதேசத்தை எப்படி அணுகப் போகிறார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. குறிப்பாக ஜேவிபி, தேசப்பற்று தேசிய இயக்கம் போன்ற அடிப்படைவாத சக்திகள் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவை. இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகாவினால் சர்வதேசத்தின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் நிலை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்நாட்டு அரசியல் சக்திகளின் விருப்பங்களை நிறைவேற்ற சரத் போன்சேகா முனையும் போது- சர்வதேச சக்திகளுடனான முரண்பாட்டுக்கு வழிவகுக்கும். மாறாக சர்வதேச சக்திகளின் ஆதரவைப் பெற விரும்பினால் அது உள்நாட்டு ஆதரவு சக்திகள் மத்தியில் உள்ள ஆதரவை அவர் இழக்க நேரலாம்.எனவே சரத் பொன்சேகாவோ அல்லது மகிந்த ராஜபக்ஸவோ யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை அரசாங்கம் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும் அதேவேளை பாதுகாப்பைப் பலப்படுத்தல், படைகளை நவீனமயப்படுத்தல் என்று சரத் பொன்சேகா முன்மொழியும் விவகாரம் மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தவே செய்கிறது. அவரது இராணுவப் பின்புலம் நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கவும் தவறவில்லை. அதேவேளை, மகிந்த ராஜபக்ஸவைப் பொறுத்தவரையில் படைபலப் பெருக்கத்தை இனிமேல் விரும்பமாட்டார் என்பது வெளிப்படை.

காரணம் அது அச்சமூட்டக் கூடிய தொன்றாக வளர்ந்திருப்பதேயாகும். ஏற்கனவே சரத் பொன்சேகா விடயத்தில் மகிந்த ராஜபக்ஸ நிறையவே பாடங்களைக் கற்றிருக்கிறார்.ஆனால் படைபலத்தை உறுதியாகப் பேணும் விடயத்தில் மகிந்த கொஞ்சமும் சளைக்காதவராகவே இருப்பார் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் படைகளின் செல்வாக்கு என்பது இலங்கையின் அரசியலில் பிரிக்கப்பட முடியாத சக்தியாக மாறிவிட்டது. அத்துடன் அது அரசியல் சக்திகளுக்குத் தலைவலியாகவும் மாறியிருப்பது கண்கூடு. இது இலங்கையின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து இப்போது வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கபிலன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*