TamilSpy

பொழுது போக்கு இணையம்…

க.தமிழர்களின் பிரசன்னத்துக் கான காலம் கனிந்துள்ளது

கனடிய நாடாளுமன்றத்தில் கனடிய தமிழர்களின் பிரசன்னத்துக்கான காலம் கனிந்துள்ளது.

வயதில் இளையவரான இராதிகாவை இந்தத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் புதிய சனநாயகக் கட்சியைப் (NDP) பலப்படுத்துவதோடு தமிழர்கள் வேண்டும் அமைதி மற்றும் நீதி ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் ஒருவரையும் உங்களால் உருவாக்க முடியும்” இவ்வாறு புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யக் லேயிட்ரன் (Jack Layton) கடந்த ஞாயிற்றுக் கிழமை (சனவரி 17) புதிய சனநாயகக் கட்சி; சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் இராதிகா சற்சபேசன் அவர்களை ஆதரித்து அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு யக் லேயிட்ரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மங்கள விளக்கை யக் லேயிட்ரன், நக்கீரன், பீட்டர் யூலியன் ஆகியோர் ஏற்றி வைத்தார்கள். கனடிய தேசியப் பண்ணும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பிரவிதா ஜெயகாந்தன் அவர்களால் பாடப்பெற்றன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இனிய இளைய உயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், இந்திய சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்குப் பலியான பொதுமக்கள் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து யக் லேயிட்ரன் பேசும் போது “இலங்கையில் நடைபெற்ற கொடுமையான போருக்குப் பின்னர் அங்கு அப்பாவிப் பொதுமக்கள் முட்கம்பிச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வெளியில் விடப்பட்டவர்கள் சொந்த வீடுகளில் குடியமர்த்தாமல் மீண்டும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இலங்கை அரசோ அவர்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொய் கூறி வருகின்றது.

எனவே நான் இன்றைய தினம் கனடிய அரசிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். வவுனியாவிலும் ஏனைய இடங்களிலும் சிறைகளில் வாடும் தமிழ் மக்களை சென்று பார்ப்பதற்கு அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படுவதற்குரிய அழுத்தத்தை இலங்கை அரசிற்கு கனடியப் பிரதமர் கொடுக்க வேண்டும். அங்கு மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

என்டிபி கட்சிதான் வன்னியில் இடம்பெற்ற மனித அவலங்களையும் மனிதவுரிமை மீறல்களையும் கண்டிக்கு முகமாக கடந்த ஆண்டு கனடிய நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானத்தைக் கொண்டு வந்து ஒரு விவாதத்தை தொடக்கி வைத்தது. என்டிபி கட்சி இலங்கைத் தீவில் தமிழ்மக்கள் பெரும்பான்மை இன மக்களைப் போல் ஒத்த உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழும் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்கு குரல் கொடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நானும் எனது கட்சியும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.

அடுத்து புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் இராதிகா சிற்சபேசனை அவையோருக்கு அறிமுகப்படுத்தி நக்கீரன் உரையாற்றினார். “இராதிகா சிற்சபேசன் அகவையில் இளையவர். புதிய இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். கால்டன் பல்கலைக் கழகத்தில்(Carleton University) வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். குவீன்ஸ் பல்கலைக் கழகத்தில்(Queen’s University) தொழிற்துறை உறவில்(Industrial Relationship) முதுகலைப் பட்டம் வாங்கியவர்.

பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது பல்கலைக் கழக மாணவர் அமைப்புக்களில் சேர்ந்து உழைத்தவர். ஐந்து வயதில் கனடாவுக்குக் குடியேறிய இராதிகா தமிழில் சரளமாகப் பேசுகிறார். தமிழை மூன்று பேருந்துகள் பிடித்துச் சென்று படித்ததாக என்னிடம் சொன்னார். அவர்கள் எல்லோரும் வீட்டில் தமிழே பேசுகிறார்கள்.

“புதிய சனநாயக கட்சி சார்பில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வெற்றி அடைய வைப்பதன் மூலம் புதிய சனநாயக் கட்சியைப் பலப்படுத்துவதோடு கனடிய நாடாளுமன்றத்துக்கு ஒரு தமிழரை தெரிவுசெய்த பெருமையும் எமைச் சேரும்.

நான் ஒரு புதிய சனநாயகக் கட்சி அனுதாபி. குடியுரிமை கிடைத்த பின்னர் இந்தக் கட்சிக்குத்தான் தேர்தல்களில் தவறாது எனது வாக்கை அளித்து வருகிறேன். 1993 இல் மட்டும் கொன்சவேட்டிவ் கட்சிக்கு எதிராக லிபரல் கட்சிக்கு வாக்களித்தேன். ஆனால் 1995 ஆம் ஆண்டு உலகத் தமிழர் அமைப்பின் பொறுப்பாளர் சுரேஷ் மாணிக்கவாசகம் கனடிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் நீடித்த விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு நாடு கடத்த தீர்ப்பளிக்கப்பட்டது. சுரேசுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த குடிவரவுச் சட்ட விதியை லிபரல் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது நெல்சன் மன்டேலாவை மேற்கோள் காட்டிக் கடுமையாக எதிர்த்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த போது அதே விதியைப் பயன்படுத்தி லிபரல் கட்சி அமைச்சர் சுரேசை கைது செய்யத் தேசியப் பாதுகாப்புச் சான்றிதழில் கையெழுத்திட்டார். அதன் பின்னர் லிபரல் கட்சியைத் தலைமுழுகி விட்டேன்.

“தொடர்ந்து பேசிய நக்கீரன் “கனடா ஒரு செல்வந்த நாடாக இருந்தாலும் பணம் படைத்தோருக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அகன்று கொண்டு செல்கிறது. 2008 ஆம் ஆண்டு இங்குள்ள உச்ச வருவாயுள்ள 100 நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சராசரி சம்பளம் 7..35 மில்லியன் டொலராகும். இந்தச் சம்பளம் ஒரு சராசரி கனடியனது சம்பளத்தோடு ஒப்பிடும் போது (42,305 டொலர்) 174 மடங்கு அதிகமாகும். இந்த மடங்கு 1995 இல் 85 ஆகவும் 1998 இல் 104 ஆகவும் இருந்திருக்கிறது. 2010 இல் இந்த மடங்கு 200 அய்த் தாண்டிவிடும்.

2008 இல் தொமாஸ் றொயிற்றேஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு வழங்கப்பட்ட சம்பளம் 36.60 மில்லியன் டொலர்களாகும். அடுத்து ரெட் றொஜேர்ஸ் நிறுவன நிறைவேற்று அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 21.48 மில்லியன் டொலர்களாகும். இதே நேரம் நாளாந்த ஊழியம் பெறுபவர்களது குறைந்தபட்ச மணித்தியாலக் கூலி 1987 இல் 4.55 ஆக இருந்தது. இன்று 9.50 ஆகக் கூடியுள்ளது.

ஆக ஆண்டொன்றுக்கு சராசரி 22 சதமே அடிமட்ட உழைக்கும் மக்களது கூலி உயர்ந்துள்ளது. எனவேதான் ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால் பதிய சனநாயகக் கட்சியை நாம் ஆதரிக்க வேண்டும். அந்தக் கட்சிதான் உழைக்கும் மக்களது நண்பனாக விளங்குகிறது. மற்ற இரண்டு கட்சிகளான லிபரலும் கொன்சவேட்டிகளும் பணக்காரர்களது கட்சிகளாகும். இந்தத் தொகுதி நா.உறுப்பினர் டெரிக் லீ 22 ஆண்டுகள் நீடித்து இருந்து விட்டார். இப்போது ஒரு மாற்றம் – புதிய முகம் – தேவைப்படுகிறது. எனவே அவர் ஒய்வெடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் கூறினார்.

“கடந்த ஆண்டு நாம் வீதியில் இறங்கி எம் மக்களைக் காப்பாற்றுமபடி போராடிய போது எங்களுக்குக் கைகொடுத்து எங்களோடு தோளோடு தோள் நின்று எங்களுக்காக குரல் எழுப்பிய – ஒரேயொரு கட்சியாக இருப்பது புதிய சனநாயகக் கட்சியும் (NDP) அதன் தலைவர் யக் லேயிட்ரன் (Jack Layton) மட்டுமே என்பதை யாரும் மறுக்க மடியாது. அன்று பாராளுமன்ற முண்றலில் இருந்த மேடையில் வந்து பேச ஏனைய கட்சித் தலைவர்கள் பின்னடித்தபோது யக் லேயிட்ரன் மட்டுமே மேடையில் தோன்றிச் பேசினார்” இவ்வாறு புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கார்த்திகா சற்சபேசன் பேசும் போது குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும் போது “புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராக என்னைத் தெரிவு செய்ததில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். தமிழ் மக்கள் மத்தியில் NDP கட்சியின் வரவு புதியதல்ல. நாங்கள் இந்த நாட்டுக்குப் பெருமளவு வருகை தரத் தொடங்கிய காலத்தில் தொழிற்சாலைகளிலும் உணவகங்களிலும் நீண்ட நேரம் பணிபுரியும் தொழிலாளர்களாக இருந்தோம். வேலைத் தளங்களில் மிகவும் கஸ்டப்பட்டு உழைத்தோம்.தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், நலன்கள் போன்றவற்றை மேம்படுத்துவதிலும் அவர்களது தொழிலைத் தக்கவைப்பதிலும் புதிய சனநாயகக் கட்சியும் அதன் ஆதரவுத் தொழிற்சங்கங்களுமே உழைத்து வருகின்றன.

இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த அடிப்படையில் என்டிபி கட்சி தமிழ்மக்களுக்கு மட்டும் அல்லாது கனடா வாழ் அனைத்து உழைக்கும் மக்களது உரிமைகளுக்காவும் பாடுபடும் கட்சியாக விளங்குகின்றது. புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராக என்னைத் தெரிவு செய்ததில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இதுவரை காலமும் எங்களுக்காகக் குரல் கொடுப்போம் எனச் சொல்லி வந்தவர்களை நாம் நம்பினோம், ஆதரித்தோம், வாக்களித்தோம்.

ஆனால் எமது வேதனையான – சோதனையுமான காலங்களில் அந்தக் குரல்கள் எமக்காக ஒலிக்கவில்லை. லிபரல் குரல்களும் கொன்சவேட்டிவ் குரல்களும் ஒலிக்கவே இல்லை. எமது நலன்களைக் காப்போம் என்றவர்கள், எமது உடன் பிறப்புக்கள், சொந்தங்கள், உறவுகள் குண்டுகள் போட்டுக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டபோது -உதவுங்கள், உதவுங்கள் – என்று பல மணித்தியாலங்கள், நாள்கள், கிழமைகள் இரவு பகல், பனி மழை, கடுங்குளிர் ஆகியவற்றின் மத்தியில் வீதிகளில் இறங்கிக் குரல் கொடுத்தோம் – தவம் கிடந்தோம் – அழுது புரண்டோம் – யார் வந்தார்கள்? எமது மக்கள் வேதனையின் உச்சிக்குத் தள்ளப்பட்ட போது அவர்கள் எமக்குச் சொன்னதெல்லாம் ‘அதைச் செய்யாதீர்கள்’ ‘இதைச் செய்யாதீர்கள்’, ‘அப்படிச் செய்யாதீர்கள்’ ‘இப்படிச் செய்யாதீர்கள்’ என்று சொன்னார்களே ஒழிய எமக்காக, எம் மக்களுக்காக, யாருமே கை கொடுக்கவும் இல்லை – கதவுகளைத் திறக்கவுமில்லை. அவநம்பிக்கையும் அதனால் ஏற்பட்ட கோபமும் அழுகையுமே தமிழ்மக்களைப் பெருந்தெருவை நோக்கித் தள்ள வைத்தன.

அப்படியான ஒரு முடிவை எம் மக்கள் எடுத்தார்கள் என்றால் எப்படியான வெறுப்பும், வேதனையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்? ஆனால் இந்த அரசியல்வாதிகள் அதனை உணரவில்லை. எமது கூக்குரல்களை அவர்கள் செவிமடுக்கவில்லை. எம்மைப்பற்றி எந்தவிதமான அக்கறையும் அவர்களிடத்தில் இருக்கவே இல்லை. மாறாக அநீதி இழைக்கப்பட்ட மக்களிடமே ஒழுங்கு பற்றிக் கதைத்தார்கள். அவ்வாறான மிகவும் அவலமான ஒரு நிலையில், எங்களுக்குக் கைகொடுத்து, எங்களோடு தோளோடு தோள் நின்ற – இன்று வரை நின்று வருகின்ற – எங்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சியாக, ஒரே ஒரு கட்சியாகப் புதிய சனநாயகக் கட்சியும் (NDP) அதன் தலைவர் யக் லேயிட்ரன் மட்டுமே இருந்து வருகின்றார்கள். இதனை என்பதை யாருமே மறுக்க முடியாது.

அன்று பாராளுமன்ற முன்றலில் இருந்த மேடையில் வந்து பேச ஏனைய கட்சித் தலைவர்கள் பின்னடித்தபோது யக் லேயிட்ரன் மட்டுமே எங்கள் மேடையில் தோன்றிப் பேசினார். ஸ்காபரோ றூச் றிவர் தொகுதியில் பெருந்தொகையான தமிழர்களும் குடிவரவாளர்களும் ; வசிக்கின்றார்கள். மேலும் தொழிலாளர்களை, உழைப்பாளர்களை அதிகளவில் கொண்டதாகவும் இத் தொகுதி அமைகின்றது. இந்த மக்களை உரியமுறையில் பிரதிநிதித்துவம் செய்வதென்பது என்டிபி கட்சியினால் மட்டுமே முடியும். எனவே இம்முறை என்டிபி கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு உங்கள் ஆரவைத் தாருங்கள். அதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்” என்றார்.

கூட்டத்தில் பீட்டர் யூலியன் நா.உ.(Peter Julian, MP (Burnaby-New Westminster) மற்றும் ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர் அடம் ஜியம்புறோனி(Adam Giambrone, Toronto City Councillor) ஆகியோரும் பேசினார்கள்.

அவையோரது கேள்விகளுக்கு யக் லேயிட்ரன், பீட்டர் யூலியன் மற்றும் இராதிகா பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியை பிரகலால் திரு தொகுத்து வழங்கினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*