TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஒரு சோகக்கதையா

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஒரு சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா?

பேராசிரியர் தீரன் -இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டள்ளார். கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது.

முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம்.

இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர்.

இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம்.

சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம். மேல் நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் ‘புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?’ என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம்.

1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால், உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா?

2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா?

3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம் அல்ல என மாற்றிச் சொல்ல இயலுமா?

4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஅழிப்பு நடவடிக்கைகளையும், இனங் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா?

பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது.

அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா? என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும்.

எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியிருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘ஙிமிகிதிஸிகி’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தெள்ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்.

நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம்.

இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள். இலங்கையின் நிலைமை ஈழத்தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை.

ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை. காரணம் விடுதலைப் புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப் புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது.

25,000க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ‘புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்’ என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வார்த்தைஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார்.

எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம்.

தொடரும்…

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*