TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலும் தமிழர்களும்

யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்து அங்கேயே அரசாங்க அதிகாரியாக பணியாற்றும் தமிழர் ஒருவருடனான சம்பாஷணையின்போது தேர்தல்களை தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக என்னால் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தென்னிலங்கையில் வெற்றிபெறும் தரப்பினர் மத்தியிலான மகிழ்ச்சி ஆரவாரமும் கொண்டாட்டங்களும் வழமையானதாகும். ஆனால், அவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தேர்தல் முடிவுகளையிட்டு அச்ச உணர்வையும் நிச்சயமற்ற தன்மையினையும வெளியிடுகிறார்கள் என்பதை உணர்த்தின. தென்னிலங்கையில் வெற்றிபெற்ற தரப்பினருக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்கள் “எங்களது அரசாங்கத்தை தெரிவு செய்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வர். ஆனால், வடக்கிலோ “அவர்களது அரசாங்கத்தை அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் என்ற உணர்வு காணப்படுகிறது. அந்த அரசாங்கத்தில் எந்தவித செல்வாக்கையும் தங்களினால் செலுத்தக்கூடியதாக இருக்குமென்று தமிழர்கள் கருதுவதில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முன்னைய தேர்தல்களை விடவும் வழமைக்கு மாறான ஒரு தன்மையைக் கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இத் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் சிறுபான்மையினங்களைச் சேர்ந்த மக்கள் தீர்க்கமான பங்கொன்றை வகிக்கப்போகிறார்கள். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் பிரவேசித்ததே இதற்குக் காரணமாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கப் படைகளுக்கு கிடைத்த வெற்றிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஏட்டிக்குப் போட்டியாக உரிமை கோரக்கூடியவராக ஜெனரல் பொன்சேகா விளங்குவதால் அவரை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகள் புத்தெழுச்சி பெற்றிருக்கின்றன. வடக்கையும் கிழக்கையும் சேர்ந்த தமிழர்கள் பெரிய சிறுபான்மையினக் குழுவினராக இருப்பதால் அவர்களது தெரிவு தேர்தல் முடிவுகளில் மிகவும் தீர்க்கமான முறையில் செல்வாக்கைச் செலுத்தும். இதன் காரணத்தினால் இரண்டு பிரதான வேட்பாளர்களும் வடக்குக்கு விஜயம் செய்து பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது. ஜனாதிபதி இரு தடவைகள் மேற்கொண்ட விஜயம் தமிழர்களின் ஆதரவைப் பெறுவதில் அவருக்கு இருக்கும் அக்கறையை வெளிக்காட்டியது. உள்நாட்டுப் போர் முடிவடைந்ததற்குப் பின்னர் நாட்டின் சகல பகுதிகளிலும் எந்தவித தடையுமின்றி வாக்களிப்பை நடத்தக்கூடியதாக இருப்பதனால் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்து, கடந்தகாலத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாமல் போன மக்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலத்துக்குப் பின்னர் முதல் தடவையாக ஜனநாயக செயல்முறையில் பங்கேற்கக்கூடியதாக இருக்கிறது. இந்தப் புதிய வாக்காளர்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கும் ஜனநாயக செயன்முறையில் பங்காளிகளாவதற்கும் சகலவிதமான உற்சாகமும் அளிக்கப்படவேண்டியிருக்கிறது. தேர்தலில் இந்த மக்களது பங்கேற்பு இன ரீதியாக தனித்துப் போகின்ற தன்மையைக் குறைத்து நாட்டின் ஐக்கியத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். வடக்கிலும் கிழக்கிலும் மோதல்கள் இடம்பெற்ற வலயங்களில் வாழ்ந்த இந்த மக்கள் மத்தியில் ஜனநாயக செயல்முறையின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது.

தமிழ் அரசியல் சமுதாயத்திற்கு சரித்திர ரீதியாக இருந்து வருகின்ற ஒரு அக்கறை பற்றி இந்த இடத்தில் சுட்டிக்காட்டவேண்டியது அவசியமாகும்.

* தமிழ் மக்களின் வாழ்வைப் பாதிக்கின்ற விவகாரங்களில் அவர்களினால் தெரிவுசெய்யப்படுகின்ற பிரதிநிதிகளுக்கு தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்கு வேண்டும் என்பதும் ஆட்சி முறைமையில் தங்களது குரலுக்கும் மதிப்பிருக்க வேண்டும் என்பதுமே அந்த அரசியல் சமுதாயத்தின் அக்கறையாகும். இந்த விவகாரம் தான் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சி உணர்வை வளர்த்து வந்தது. தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்து போராடுமளவுக்கு அவர்களை இந்தப் பிரச்சினை நிர்ப்பந்தித்தது.

* ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களது அக்கறைகளை கவனிப்பதற்குத் தயாராக இருக்கவில்லை. இதன் விளைவாக தேர்தல் தினத்தன்று தமிழ் வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்கச் செல்லும் சாத்தியமிருப்பதாக நம்புவதற்கிடமில்லை.

தேர்தலில் வெற்றி பெறாத பக்கத்துடன் சார்ந்து நின்றால் அரசியல் ரீதியில் பழிவாங்கலுக்குள்ளாகவேண்டியேற்படும் என்ற அச்சம் இந்த வாக்களிப்பில் உற்சாகமாக பங்கேற்பதற்கு தமிழ் மக்களை பின்னடிக்கு வைக்கக்கூடிய காரணிகளில் ஒன்று. அரசியல் பழிவாங்கல் பற்றிய அச்சம் தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல இலங்கையின் அரசியல் சமுதாயம் முழுவதிலும் காணப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் மிகவும் கடுமையான போட்டி இடம்பெறப்போகும் தேர்தலாக இருக்கிறது. நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் கைகளில் பெருமளவு அதிகாரமும் வளங்களும் குவிந்திருப்பதன் காரணமாக தேர்தல் முடிவுகள் தொடர்பில் பெருமளவு சந்தேகங்கள் கிளப்பப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

* அத்துடன் ஓரணியில் நின்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டவர்கள் தற்போது இரு முகாம்களாகி நின்று தேர்தல் களத்தில் போட்டியிடுவதால் கடுமையான கசப்புணர்வுகள் காணப்படுகின்றன. ஒரு தரப்பு மற்றைய தரப்புக்கு துரோகமிழைத்துவிட்டதாக பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

முன்னைய தேர்தல்களை விடவும் இத்தடவை தேர்தல் வன்முறைகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தேர்தலை நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தன்னால் எதையும செய்யமுடியாமல் இருப்பதாக விரக்தியடைந்து பதவியைவிட்டு இறங்கப் போவதாக அச்சுறுத்தல் விடுக்கின்ற அளவுக்கு வன்முறைகளும் முறைகேடுகளும் பாரதூரமானவையாக இருக்கின்றன. எனவே, தற்போதைய தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு இரு பிரதான வேட்பாளர்களும் எந்தவித தாமதமும் இன்றி வேண்டுகோள் விடுக்கவேண்டும். குறிப்பாக, அரசாங்கம் இது விடயத்தில் உடனடியாக செயற்படவேண்டியது அவசியமானது. தேர்தலுக்குப் பின்னர் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என்று ஜனாதிபதியும் ஜெனரலும் உறுதியளிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் தேர்தல்களில் பங்கேற்பதற்கு சகல சமூகங்களையும் சார்ந்த வாக்காளர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் முடிவுகளில் பங்கும் ஈடுபாடும் கொண்டவர்களாக அவர்களை உணரச்செய்யக்கூடியதாக இருக்கும்.

ஒரு ஜனநாயக செயன்முறையில் பங்கேற்பதென்பது தொடர்ந்தும் அத்தகைய செயன்முறைகளில் பங்கேற்பதை நியாயபூர்வமாக்கும் என்பதை நாம் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும்.

கொழும்பிலிருந்து ஆதவன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*