TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழர் தேசியக் கூட்டமைப்பா? தனித்துவமும் தன்மானமுமா ?

நாய்கள் இனத்துக்கு இரண்டு இயல்புகள் உண்டு. முதலாவதாகக் காணப்படுவது, நாம் நன்றி எனத் தவறாக எடை போடும் துளி அளவும் துணிச்சல் காட்டாத அடிமைப் புத்தியாகும். ஒரு வாய் உணவு ஒருமுறை கிடைத்து விட்டாலே போதும், தன் உயிர் போவதானாலும் விட்டு விலகாத அடிமை உணர்வு. இரண்டாவது இயல்பு, தான் உண்ட உணவே தனக்கு உபத்திரவம் தர அதனை வெளியே கக்கி விட்டுப் பின் அந்தக வான்தியை (கக்கலை)த் தானே மனம் உவந்து சாப்பிடும் அறிவீனம் ஆகும். இந்த இரண்டு கேவலங்களையும் ஈழத் தமிழினம் செய்ய வேண்டும் என தமிழர்(?) தேசியக்(?) கூட்டமைப்பும்(?) அதன் தலைவரும் (?) வெட்கமின்றிக் கேட்பது மன்னிக்கமுடியாத செயல்.

சிங்கள இனம் தமிழினத்துக்கு எதுவித நல்லதும் செய்யாது என்ற பட்டறிவில் எழுந்ததே தமிழர் விடுதலைக் கூட்டணியும் அது நிறைவேற்றிய வட்டுக் கோட்டைப் பிரகடனங்களும். 1850களில் இருந்தே சிங்கள இனவாத அரசியல் அன்றைய டேவிட் ஹேவவிதாரண என்ற அநகாரிக தர்மபாலாவின் கருத்துருவாக்கம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது.

1915ல் அவரது தூண்டுதலால் எழுந்த முதல் சிங்கள இனவெறித் தாக்குதலில் அதிகம் உயிர் இழப்பு பொருள் இழப்பைச் சந்தித்த மக்கள் இந்திய வர்த்தகரும் இஸ்லாமியத் தமிழ் மக்களுமே. அதன் காரணமாகப் பிரித்தானிய அரசால் சிறை விதிக்கப்பட்டுச் சிறை சென்ற தர்மபாலா உட்பட டி.எஸ்., மற்றும் எப்.ஆர். சேனாநாயக்க உள்ளிட்ட பல சிங்கள அரசியல் வாதிகளும் அடங்குவர். அன்று இலங்கையில் இருந்த 9 மாகாணங்களில் சிங்களம் 7 மாகாணங்களில் இந்த வெறியாட்டத்தைச் செய்தது.

அப்போது 103 முஸ்லீம் பள்ளி வாசல்கள் அழிக்கப்பட்டன, 25 முஸ்லீம்கள் கொல்லப் பட்டனர்,189 பேர் காயமுற்றனர், 4075 முஸ்லீம் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. அன்றைய மதிப்பில் ரூபா.7000 000.00 சொத்துக்கள் அழித்தும் சூறையாடப்பட்டும் போயின. பிரித்தானிய அரசு 140 பேரின் மரணத்துக்காக 8736 சிங்களவர் கைது செய்து 4497 பேருக்குச் சிறைத் தண்டனை வழங்கியது. இப்படியானவர்களின் விடுதலைக்காகப் பிரித்தானியா சென்று வாதாடி வென்று சேர் பட்டம் வாங்கியவர் தான் பொன்.இராமநாதன்.

இப்போது பல்லாயிரம் தமிழ் முஸ்லீம் மக்களின் உடமை உயிர் மானம் மரியாதை எல்லாவற்றையும் சூறையாடி வீர விளையாட்டு ஆடி வெற்றித் திலகத்துடன் வலம் வரும் மகிந்தவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் வக்காலத்து வாங்கும் இன்றைய இராமநாதன்களான இரா.சம்பந்தன், ஸ்ரீகாந்தா, சிவநாதன் கிஷோர், மாவை சேனாதிராக்களுக்கு சிங்கள அரசு என்ன கைம்மாறு செய்யப் போகிறது?

உலக நாடுகளில் பல இன்று மகிந்த, பொன்சேகா மற்றும் இராணுவத் தலைவர்களை மனித உரிமை மீறல், போர்க் குற்றம், இன அழிப்புக் குற்றங்களுக்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முனையும் நேரத்தில் முழுத் தமிழ் இனத்தையும் அரசு அதிபர் தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்கும் படி கேட்டு உதவும் இவர்களைத் தமிழ் மக்கள் எப்படித் தமது தலைவர்களாக ஏற்க முடியும்? அல்லது அவர்களின் சொல்லுக்குப் பணிந்து இக் கொலை வெறியர்களுக்கு வாக்களிக்கத்;தான் முடியுமா? அதுவும் சிங்களத்தின் சிறைகளிலும் முட்கம்பி முகாம்களிலும் சித்திர வதைக்குள்ளான நிலையில் வாக்குப் பிச்சை கேட்கிறார்கள். தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை தேவாரம் கேட்கிறதா?

இவர்களில் எவரும் மக்களின் அபிமானத்தால் அல்லது இவர்கள் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகத் தலைவர்களானது கிடையாது. அத்தகைய நம்பிக்கை பெறும் அளவுக்கு ஒரு சிலரே தகுதி கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போராட்ட வெற்றிகளாலும் ஒப்பற்ற தியாக அர்ப்பணிப்பாலும் உருவான அமைதி உடன் படிக்கைக் காலத்தில் உலக ஒப்பனைக்குப் பாராளுமன்ற அரசியலைப் பயன் படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

* பாராளுமன்ற அரசியல் தமிழனுக்கு வாய்கரிசி மட்டுமே போடும் என்ற பட்டறிவில் எழுந்ததே வட்டுக் கோட்டைப் பிரகடனமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும். 1977 தேர்தல் 1982 திம்புப் பேச்சு வார்த்தை இப்பிரகடனத்தை ஒட்டியே நடைபோட்டன. விடுதலை இயக்கங்கள் அனைத்தும் தனித் தமிழீழ அரசு நோக்கியே ஆயுதம் எடுத்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி தறுதலைக் கூட்டணியானதால் தமிழ்த் தேசயக் கூட்டமைப்பு உருவாக்கம் கண்டது. அதன் தேவையும் நோக்கமும் சுதந்திரத் தழிழீழத் தனியரசு ஒன்றே அல்லாது பாராளுமன்ற கதிரைகள் அல்ல. ஆனால் இந்த உண்மையை த.தே.கூட்டமைப்பும் அதன் உறுப்பினர்களும் மறந்ததோடு மிகத் துணிச்சலோடு தமிழ் மக்களையும் இனத் துரோகம் செய்யத் துணைக்கு அழைக்கின்றனர்.

ஒட்டு மொத்தத் தமிழினமும் இன்று அடிமையாக்கப்பட்டு ஒரு இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்துள்ள மிகப் பரிதாபமான நிலையில், தமிழினத்தின் உண்மையான தலைமை என்ன செய்திருக்க வேண்டும்?

* உலக நாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் திரட்டித் தமிழரின் தாயகக் கனவான சுதந்திர தமிழீழத் தனி அரசுக்கு வழி தேடவேண்டுமே அல்லாது அந்நியன் காலடியில் அடிமைச் சேவகம் செய்ய அழைப்பு விடுப்பதா? அத்தோடு ஒற்றியாட்சிக்குள் தீர்வு என்ற உபதேசம் வேறு…?

இன்று சம்பந்தனும் அவரோடு சம்பந்தப் பட்டவரும் பாடும் பாட்டு மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே. அதற்காக இவர்கள் யாரை வெற்றி பெற வைக்கப் பாடுபடுகிறார்கள்? செம்மணிப் படு கொலைகள் முதல் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் ஈறாகப் பல்லாயிரம் கிருஷாந்திகளையும் கோணேசுவரிகளயும் கதறக் கதறக் கருவில் குழந்தைகளையும் கெடுத்துக் கொன்றொழித்த அதே இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெற்றி பெறக் கேட்கும் அந்தப் புத்தியை எதைக் கொண்டு கழுவுவது?

தமிழ் இனத்தின் தன்மானத்தையும் தனித்துவத்தையும் இவர்கள் மதிப்பவர்களகாக இருந்தால் (அல்லது இவர்கள் சொல்வது போல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என சொல்வதை ஏற்றுக்கொண்டாவது) தாமாகவே ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும் அல்லது சுயேட்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கக் கேட்க வேண்டும். அதற்குத்தான் துணிச்சல் இல்லையா? மூன்றாவது ஒரு நபருக்கு வாக்களிக்கக் கேட்கலாம் அல்லது இது காலவரை இருந்தது போல் வாயை மூடிக் கொண்டே இருக்கலாமே!

தமிழ் இனத்துக்கு தன்மானமா தமிழர் தேசியக் கூட்டமைப்பா முக்கியமானது எனத் தீர்மானித்துச் செயற்படும் காலம் வந்துவிட்டது. யார் வந்தாலும் எமது நிலை ஒன்றுதான் எனத் தெளிவாகத் தெரிந்த பின்னர் ஏன் இத்தனை கூத்து? இந்த இருவரைத் தவிர தமிழர் யாருக்கு வாக்களித்தாலும் தமிழினத்தின் மானமாவது அழியாது நிலைக்கும். தமிழினத்துக்கு தன்மானங்கெட்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பா ? தன்மானமா தேவை?

த.எதிர்மன்னசிங்கம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*