TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழரின் அரசியல் பிரச்சினை மறக்கப்பட்டு விட்ட ஒன்றா?

தமிழரின் அரசியல் பிரச்சினை மறக்கப்பட்டு விட்ட ஒன்றா?

* சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்ஸவும் தடைகளை அகற்றி ஒரு சமாதானப் புறச்சூழலை உருவாக்குவதில் முன்னின்றிருந்தால் நான்காவது கட்ட ஈழப்போர் நிகழ்ந்திருக்காது. ஒரு கொடிய போருக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு வந்திருக்காது. அவர்கள் மனங்களில் ஆறாத ரணங்கள் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களை இத்தனை துயரங்களுக்குள்ளேயும் தள்ளியவர்கள்- தமது வெற்றிக்குத் தேவைப்படும் வாக்குகள் சிங்களவர்களிடம் இருந்து கிடைத்தால் மட்டும் போதாது என்ற நிலை வந்தபோது தான் தமிழர்களிடம் கையேந்த வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் முடிந்து போன போருக்குப் பின்னர்- தமிழ்மக்கள் சிக்கல் நிறைந்த கேள்வி ஒன்றினுள் சிக்கிப் போயிருக்கின்றனர்.

* வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதா- இல்லையா? வாக்களிப்பதாயின் அது யாருக்கு?

என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சிகள் தாயகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்மக்கள் மத்தியில் குழப்பம் இன்னும் அதிகரித்துள்ளது. ஆட்சி மாற்றம் ஒன்றைக் கருத்தில் கொண்டும்- மகிந்தவைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கிலும் தான் இந்த முடிவுக்கு வந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயம் கூறுகிறது. அதேவேளை, தென்னிலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சரத் பொன்சேகாவுக்கு இடையில் இரகசிய உடன்பாடு இருப்பதாக இனவாதம் கிளப்பப்படுகிறது. ஆனால் அப்படி எந்த இரகசிய உடன்பாடும் கிடையாது என்று சரத் பொன்சேகாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மறுத்துள்ளன.

வெறுமனே ஆட்சி மாற்றத்துக்காகவும்- பழிதீர்க்கும் எண்ணத்துக்காகவும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் துணிவது சரியானதா?

* முதலில் மகிந்த ராஜபக்ஸவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று பார்க்க வேண்டும்.

* அடுத்து இவர்களில் யார் தமிழருக்கு நன்மைகள் செய்யக் கூடியவர் என்று பார்க்க வேண்டும்.

* அதற்கு அவர்களின் கடந்தகால வரலாற்றை நடந்து கொண்ட முறைகளைப் பார்க்க வேண்டும்.

நல்லூர் ஆலயத்துக்குள் சட்டையைக் கழற்றி விட்டு கையேந்தி நிற்கும் சரத் பொன்சேகாவும், மகிந்த ராஜபக்ஸவும்- இதே ஆலய வீதியில் நரவேட்டையாடியதை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் இன்று நல்லூர் கந்தன் முன்பாக கையேந்தி நிற்பதையிட்டு நம்மில் பலர் பெருமை பேசுகிறோம். கந்தனின் கருணையென்றும்-அவனது விந்தையென்றும் போன்றுகிறோம்.

* தமிழ்மக்களை ஓடஓட விரட்டி வேட்டையாடியவர்கள் இன்று அவர்களின் கண்முன்னே வந்து கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதையிட்டுப் பெருமை பேசிக் கொள்வதால் எமது பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

* மறப்பதும் மன்னிப்பதும் தான் மனிதனின் உயரிய குணம் என்பார்கள். அப்படித் தமிழ் மக்கள் இவர்களின் கடந்த காலங்களை மறக்கப் போகிறார்களா?

* இவர்கள் செய்த பாவங்களை மன்னிக்கப் போகிறார்களா?

* மறப்பது- மன்னிப்பது என்ற உயரிய பண்பையே அறியாதவர்களுக்காக- தமிழ் மக்கள் தமது சுயத்தை இழக்க வேண்டுமா?

* ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னர் முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரங்களை எப்படி மறக்க முடியும்?

* இவர்கள் இருவருக்கும் பழையதை மறந்து மன்னிக்கும் பக்குவம் இருந்திருந்தால்- அந்த மனிதப்பேரழிவு நிகழ்ந்திருக்குமா?

* அவர்களுக்கு மறக்கவோ- மன்னிக்கவோ பக்குவம் இல்லாத போது தமிழ் மக்களுக்கு மட்டும் அது தேவையென்று வலியுறுத்துவதில் என்ன நியாயம்?

தமிழ் மக்களின் வரலாற்றில் மிக மோசமான- கறைபடிந்த காலம் மகிந்தவின் ஆட்சிக்காலம். அந்தக் காலத்தில் நடந்த அத்தனை கொடுரங்களுக்கும் அநியாயங்களுக்கும் காரணமானவர் சரத் பொன்சேகா. இவர்களில் எவரேனும் ஒருவரைத் தெரிவு செய்வது தான் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே தெரிவா?

தமிழ்மக்களின் வாக்குகள் தேவை என்றவுடன் ஓடிவந்து கைகூப்பும் இவர்களின் கடந்த கால வரலாறு இரத்தக் கறைபடிந்தது. அதை மறந்து விட்டு- மன்னித்து விட்டு வாக்களிக்கத் துணிந்தால் தமிழ் மக்களுக்கு பதில் கைம்மாறாக இவர்கள் எதைச் செய்யப் போகிறார்கள்.

இந்தக் கேள்விக்கு பதில் தேடுவது மிகவும் அவசியம்.

இன்று தமிழ் மக்கள் ஆயுதவழிப் போராட்டத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். அந்த வரலாற்றுப் பாடம் அரசியல்வழித் தீர்வுக்கு இன்னும் உரம் சேர்த்திருக்கிறது. அரசியல் வழித் தீர்வில் அதிகம் நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு மகிந்த ராஜபக்ஸவோ- சரத் பொன்சேகாவோ எத்தகைய அரசியல் தீர்வைத் தரத் தயாராக இருகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.

* தமிழ் மக்கள் தமது தாயகத்தில் நிம்மதியாக- சகல உரிமைகளோடும் வாழக்கூடிய நீதியானதும், கௌரவமானதுமான அரசியல்தீர்வு மிகவும் அவசியமானது. வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகம்- சுயநிர்ணய உரிமை யுடன் கூடிய வாழ்வு, தமிழ்த் தேசிய இனம் என்ற அங்கீகாரம் இவற்றைத் தான் தமிழர்கள் கோருகின்றனர். ஆனால் அவற்றில் எதற்குமே இடம் கொடுக்காதவர்களாகத் தான் சரத் பொன்சேகாவும்- மகிந்த ராஜபக்ஸவும் இருக்;கின்றனர். இவர்கள் இருவரினது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்த்தால் இது தெளிவாகவே புலப்படுகிறது.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளைப் புறம் தள்ளி விட்டு- அதைப் பற்றிய எந்த வாக்குறுதிகளுக்குள்ளேயும் சிக்கிக் கொள்ளாமல் மிகவும் தந்திரசாலிகளாக நடந்து கொள்ளப் பார்க்கின்றனர்.

* தேர்தல் வரைக்கும் தமிழ் மக்களின் காலில் விழுவதற்குக் கூடத் தயாராக இருக்கும் இவர்கள்- ஏ-9 வீதியைத் திறந்து விடுதல், உயர்பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்வுக்கு அனுமதி என்று வசியம் செய்யப் பார்க்கின்றனர். தேர்தலை முன்னிட்டு- தமிழர்களுக்காகத் திறந்து விடப்படும் இந்த வீதிகளும் உயர்பாதுகாப்பு வலயங்களும் இதுவரை அவர்களை அடிமை கொள்ளவும், அவர்களைச் சிரமப்படுத்தவுமே போடப்பட்டிருந்தன என்பது இப்போது நிரூபணமாகிறது. இதன்மூலம் இவர்கள் சாதித்தது தான் என்ன?

* சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்ஸவும் இது போன்ற தடைகளை அகற்றி ஒரு சமாதானப் புறச்சூழலை உருவாக்குவதில் முன்னின்றிருந்தால் நான்காவது கட்ட ஈழப்போர் நிகழ்ந்திருக்காது. ஒரு கொடிய போருக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு வந்திருக்காது. அவர்கள் மனங்களில் ஆறாத ரணங்கள் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களை இத்தனை துயரங்களுக்குள்ளேயும் தள்ளியவர்கள்- தமது வெற்றிக்குத் தேவைப்படும் வாக்குகள் சிங்களவர்களிடம் இருந்து கிடைத்தால் மட்டும் போதாது என்ற நிலை வந்தபோது தான் தமிழர்களிடம் கையேந்த வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்?

யாருக்காக வாக்களிக்கப் போகிறார்கள் என்பது கேள்வி. தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைத்தாலும் நிச்சயமாக இந்த இருவரில் ஒருவர் தான் ஜனாதிபதியாகப் போகிறார் என்பது தெளிவு. அதேவேளை, இந்த இருவரில் எவருக்கேனும் வாக்களிப்பதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டி விடாது. ஆட்சி மாற்றமோ அல்லது இப்போதைய ஆட்சியின் நீட்சிக்கான அங்கீகாரமோ தமிழ் மக்களின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற, வாதம் சரி, அப்படியான கருத்தியலும் சரி ,.. தவறானவை.

* தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் எந்தவொரு சிங்கள அரசியல் தலைமையும் நியாயமான-நீதியான- கௌரவமான தீர்வை வழங்கத் தயாரில்லை. இந்த உண்மையை இன்னொரு தடவை தமிழ் மக்கள்- இவர்களின் கையால் குட்டுப்பட்டுத் தான் அறிந்து கொள்ள வேண்டுமா?

சிந்தனைக்கு தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வாசகம்

* “அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை… சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது… ”

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரை 2005

தொல்காப்பியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*