TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சர்வதேச நீதிமன்றில் ஏறப்போகும் சிறீலங்கா

சர்வதேச நீதிமன்றில் ஏறப்போகும் சிறீலங்கா தமிழ்ப் புத்தாண்டில் உலகின் நியாயம் எமக்காய் திரும்புகின்றது?

தமிழருக்காயப் பிறக்கும் இந்தத் தைப் புத்தாண்டில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காய் சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றவாளியாக மக்கள் நீதிமன்றில் நிறுத்தப்படப் போகின்றது.

ரோமைத் தளமாகக் கொண்ட நிரந்தர மக்களுக்கான நீதிமன்றம் (permanent peopls tribunal) தனது அமர்வை ஜனவரி 14, 15களில் அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் கூடத் தயாராகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசும், அதன் இராணுவமும் மேற்கொண்ட மனித இனத்திற்கு எதிரான பாரிய போர்க் குற்றங்களை விசாரணை செய்ய இந்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது, சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் போருக்கு பின்னான மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் மற்றும் 2002 இன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கான உள்ளக மற்றும் சர்வதேசக் காரணங்களையும் ஆய்விற்கு உட்படுத்தவுள்ளன.

இவர்களது ஆய்வுகளினதும் விசாரணைகளினதும் தற்காலிக முடிவுகள் ஜனவரி 16 இல் வெளியாகும். இவ் அமர்வானது சிறீலங்காவில் அமைதிக்கான அயர்லாந்துப் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு அறிக்கையினை இதுதொடர்பில் வெளியிட்டுள்ளனர். எதற்காக சிறீலங்கா மீதான விசாரணை என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2002 இல் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம், 2006 இல் முற்றாக தோல்வியடைந்த பின்னர் யூலை 2006 இல் போர் தொடங்கியது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றி நிலங்களை மீட்பது என்ற காரணத்தைக் காட்டி சிறீலங்கா அரசு போரைத் தொடங்கியது.

மாபெரும் மனித அழிவை ஏற்படுத்தி போர் வெற்றி கொள்ளப்பட்டதாக மே 18 இல் சிறீலங்கா அரசு அறிவித்தது. இந்தப்போர் ‘சாட்சியங்கள் அற்றபோர்’ என சர்வதேச ஊடகங்களாலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஏனெனில் அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் சர்வதேசப் பணியாளர்களையும் இறுதிப் போருக்கு முன்னர் சிறீலங்கா வெளியேற்றியது. ஏப்ரல் 2008 இல் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி நாளன்றுக்கு வான் குண்டுத் தாக்குதலாலும் எறிகணைகளாலும் 116 பேர் வரை கொல்லப்படுவதாக தெரிவித்திருந்தது. இறுதிக்கட்டப் போரில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் பத்திரிகைகளின்படி குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கி வைக்கப்பட்டிருந்த மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட எறிகணை வீச்சு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையின்படி டிசெம்பர் 8 இல் இருந்து 2 மே வரை வைத்தியசாலைகள் மீது 30 தடவைகளுக்கு மேல் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் பிரெஞ்சு மருத்துவக் குழுவை ஆதாரம்காட்டி மக்கள் மீது கொத்துக் குண்டுகளும், வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதையும் உறுதி செய்துள்ளது. சித்திரவதைகளுக்கும் கூட்டுப்படுகொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டதற்கும் மற்றும் நீரையும் உணவையும் மக்களுக்கு எதிரான ஆயுதமாக பாவித்தமைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிராக காணொளி ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரில் உயிர்தப்பிய 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் சிறீலங்கா இராணுவத்தால் நடாத்தப்படும் தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

இந்த முகாம்களுக்குள்ளும் படுகொலைகள், காணாமல்போதல், பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கு உள்ளூர், சர்வதேச ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மீதும் பாரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் 11 ஆயிரம் பேர் எங்கு என்று சொல்லப்படாத ஒரு இடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய வெளித் தொடர்புகள் அனைத்துமே துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு வெற்றி கொண்டவர் கூறும் அமைதியானது பாரிய இராணுவ நடவடிக்கையின் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது 2002 இல் சர்வதேச சமூகம் இராணுவத் தீர்வை இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக்க முடியாது என்று கூறியதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கையாக இது உள்ளது.

இதற்காகவே சர்வதேச சமூகம் ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்கியது. நோர்வே இரு தரப்பையும் சமமாகப் பாவித்து உடன்படிக்கை செய்தது. ஆனால், மே 2009 இல் சிறீலங்கா போருக்கு பின்னான நிலையை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டமை சர்வதேசத்தால் சமமாகப் பாவிக்கப்பட்ட ஒரு பகுதியினர் மீது மற்றப் பகுதியனரான சிறீலங்கா அரசு வெற்றிகொண்டதாக அறிவித்தது. இதுவரை இங்கு நிகழ்ந்த பாரிய மனித உரிமை மீறல்கள் எந்த சுதந்திரமான, தன்னிச்சையான நம்பிக்கையான அமைப்புக்களாலும் விசாரணை செய்யப்படவில்லை. சிறீலங்கா மீது கொண்டுவரப்படவிருந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் விசாரணைகளை புவிசார் அரசியல் இலாபங்கள் புறந்தள்ளிவிட்டன.

சிறீலங்காவின் அமைதிக்கான அயர்லாந்துப் பேரவையாகிய நாம் மனித உரிமைகளும் நீதிகளும் வழங்கப்பட்டால் மட்டுமே சிறீலங்காவில் அமைதி திரும்பும் என்று நம்புகின்றோம். இந்த நீதிமன்றத்தின் அமர்வானது இந்த இலக்கை நோக்கியதாகவே அமைகின்றது. மே 2009 இல் அயர்லாந்துப் பேரவையாகிய நாம் எமது ஐரோப்பிய சகோதரக் குழுக்களுடன் கலந்தாலோசித்து சர்வதேச சமூகத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களால் சிறீலங்காவின் தடை முகாம்களுக்கு சென்று வருவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கடிதம் எழுத முடிவு செய்தோம். ஆனால், இந்த அனுமதிக்கான தடையை இந்த தடை முகாம்களைப்பற்றி பேசிய ஊடகங்களும் குழுக்களையும் நாட்டைவிட்டு வெளியேற்றியதன் மூலம் அதனாலேயே நாம் ரோமில் இயங்கும் மக்களுக்கான நீதிமன்றத்தை அதன் பாரிய வரலாற்றையும், வியட்நாம், கௌதமாலா போன்றவற்றிற்கு நீதி வழங்கியதையும் அடிப்படையாகக் கொண்டு அணுகியது.

இவர்களுடனான பேச்சுவார்த்தைகள் prof franccois houtart ஏற்படுத்தியிருந்தார். இவர் மக்கள் நீதிமன்றில் வியட்நாம் முதல் ஈராக் வரையான விசாரணைகளில் பங்குபற்றிய அனுபவம் மிக்கவர். இந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக மக்கள் நீதிமன்றம் Bertrand russel-sartre முறையிலான விசாரணையை சிறீலங்கா மீது ஏற்படுத்த பின்வரும் காரணங்களின் அடிப்படையில் உடன்பட்டது.

1. மக்கள் நீதிமன்றமானது சிறீலங்கா அரசும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகள் மீதான இறுதி யுத்தத்தில் மேற்கொண்ட போர் குற்றங்களையும் பாரிய மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்யும்.

2. போரின் பின்னரான மனித உரிமை மீறல்களையும் 2002 இன் உடன்படிக்கை முறிவிற்கான உள்ளக சர்வதேச காரணங்களையும் முடிவு செய்யும். சட்டபூர்வமான மற்றும் மனித உரிமைக் குழுக்களினதும் ஆசிய, ஐரோப்பிய, ஐ.நா நிறுவனங்களிடம் இருந்தும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களினதும் போர்க் குற்றங்களினதும் அறிக்கைகள் பெறப்படும். இதன் நேரடி சாட்சியங்களும் அறிக்கைகளும் ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்படும். 2002 இல் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையானது நோர்வேயால் அனுசரணை செய்யப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளை இணைத்தலைமை நாடுகளாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இவ் யுத்த நிறுத்தம் நோர்டிக் நாடுகளால் கண்காணிப்பு செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட பிரதிநிதிகள் இங்கு சாட்சியங்களாக அழைக்கப்படுவார்கள். இதன் நடுவர்கள் குழு உலகின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்டு புவிசார் இலாபங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலமே நியாயமான இனங்களுக்கு இடையேயான நீதியை வழங்கமுடியும். அயர்லாந்தானது அதன் வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலும் காலணிய ஆதிக்கத்தில் இருந்து மீண்ட நாடு என்ற அடிப்படையிலும் வட அயர்லாந்தில் அமைதி நடவடிக்கைகள் வெற்றி பெற்ற அடிப்படையிலும் இதன் பாரம்பரியமான நடுநிலையான கொள்கைக்காகவும் தெரிவு செய்யப்பட்டது என்பதாக இந்த அறிக்கை அமைகின்றது.

தனது தளத்தில் சிறீலங்காவின் போரில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும் ஒன்றரை மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மக்கள் நீதிமன்றமானது திபெத், மேற்கு சகாரா, ஆர்ஜென்ரீனா, எரித்திரியா, பிலிப்பைன்ஸ், எல்சல்வடோர், ஆப்கானிஸ்தான், கிழக்கு தீமோர், சையர், கௌதமாலா ஆகிய நாடுகளின் வழக்குகளிலும் ஆர்மேனியாவின் இனப்படுகொலைகள் மற்றும் நிக்கரகுவா, பிரேசிலியன் அமேசன் மீதான அமெரிக்க ஊடுருவல் போன்ற வழக்குகளிலும் நீதியை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நீதிமன்றம் தனது சிறீலங்கா மீதான விசாரணையோடு நின்றுவிடாது இந்தப் படுகொலைகளை ஊக்குவித்த இந்திய அரச நிர்வாகத்தையும், சீனாவையும், பாகிஸ்தானையும், ஐ.நாவையும் வாஷிங்டனையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

மக்களை வன்னியை விட்டு வெளியேற்றி இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வரும்படி திரும்பத் திரும்ப அழைப்புவிடுத்த இந்த நாடுகளும் ஐ.நாவும் வந்த மக்கள் சிறீலங்கா அரசின் அரச பயங்கரவாதத்திற்குள் சிக்கி அழிவதை தடுக்க முன்வரவில்லை. அதுமட்டுமல்லாது ஐ.நாவும், இந்தியாவும் சிறீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த மக்கள் தொகையை வேண்டுமென்றே குறைத்துக்காட்டி உலகின் கவனம் திரும்பாதவண்ணம் பார்த்து தமிழின அழிவை ஊக்குவித்தது. இப்படியான விசாரணைகள் ஆரம்பித்தபின்னாவது ஐ.நாவும் மற்றைய நிறுவனங்களும் தம்மிடமுள்ள இனப்படுகொலை ஆதாரங்களையும் செய்மதிப் படங்களையும் வழங்க முன்வரவேண்டும்.

ஒரு வரலாற்று இனத்தின் படுகொலையில் ஈடுபட்ட நாடுகள் தங்கள் பாவங்களைக் கழுவ முன்வரவேண்டும். சர்வதேசத்தின் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டு அழிந்த எம் இனம் நியாயம் பெறவேண்டும். இதே நாடுகளை செயற்படக் கேட்கும் நாம், இதேவேளையில் என்ன செய்யப்போகின்றோம். எமக்காக எவர் எவரோ குரல்கொடுத்து செயற்படத் தொடங்கும்வேளையில் நம் குரல்கள் என்ன செய்யப்போகின்றன. நம்மையே நாம் கேள்வி கேட்கவேண்டிய தருணம் இது. எம் இழப்பிற்கான சர்வதேச குரல்கள் ஒலிக்கும் வேளையில் நாமும்? இறங்கி குரல்கொடுக்காவிட்டால் இழந்த எம் இனம் மீளமுடியாது. தமிழ்ப் புத்தாண்டில் உலகின் நியாயம் எமக்காய் திரும்புகையில் நம் குரல்களும், கரங்களும் ஒன்றிணைந்து போர்க் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றவேண்டும். இழந்த இனம் மீண்டெழவேண்டும்.

சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • csj says:

    It is real சர்வதேச நீதிமன்றில் ஏறப்போகும் சிறீலங்கா but China can use super power? other than that Globel is shame for it too.

    January 19, 2010 at 04:51

Your email address will not be published. Required fields are marked *

*