TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தொடர்ச்சியாக அடிமைப்படும் இனமே தமிழினம்

தொடர்ச்சியாக அடிமைப்படும் இனமே தமிழினம் என்பது தான் மகிந்தாவின் சித்தாந்தம்

நடைபெறவுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரு பிரதம வேட்பாளர்களின் பிரச்சார உத்திகளை நோக்கும் போது மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது, மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழமுரசிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதன் முழு வடிவம் வருமாறு:

ஈழமுரசு:– 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தவறிழைத்து விட்டனர். எனவே இந்த தேர்தலில் அவர்கள் வாக்களிக்க வேண்டும் என சிலர் கூறுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

அருஷ்: இரு சம்பவங்களையும் ஒப்பிடும் போது, முதலில் நாம் அதன் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளல் வேண்டும். 2005 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் நடைபெற்ற சமயம் விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ பலம் ஈழத்தமிழ் மக்களிற்கு இருந்தது. எனவே தென்னிலங்கையில் யார் வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசும் வல்லமையை தமிழ் மக்கள் கொண்டிருந்தனர். மேலும் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றிபெற்றிருந்தாலும் தமிழ் இனம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சந்தித்த இழப்புக்களை சந்தித்தே இருக்கும்.

ஏனெனில் நாலாவது ஈழப்போரை நடத்தியது இந்தியா தான். யார் அரச தலைவராக இருந்தாலும் அவர்கள் அதனை நடத்தியே இருப்பார்கள். ஆனால் தற்போது நிலமை முற்றிலும் மாறிவிட்டது. தென்னிலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் எமது அரசியல் நகர்வுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. எனவே தான் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்து சிறீலங்காவில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஒவ்வொரு முடிவுகளும் எடுக்கப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாது இரு தீர்மானங்களையும் நாம் ஒப்பிடுவதும், விமர்சிப்பதும் அறிவுடைய செயல் அல்ல.

ஈழமுரசு: பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் அல்லது தமிழ் மக்கள் அடைய எண்ணும் அனுகூலங்கள் என்ன?

அருஷ்: பொன்சேகாவை ஆதரிப்பதால் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் உடனடியாக தீர்ந்துவிடப்போவதில்லை. அவரும் பேரினவாத சிங்களத்தின் வழிவந்தவர் தான். ஆனால் சிங்கள இனத்திடம் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை எமக்கு சாதகமாக கொண்டு ஒருவரை கொண்டு மற்றவரை அழிப்பதற்கு எமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தென்னிலங்கையின் அரசியலில் ஒரு பலவீனமான நிலையையும் ஏற்படுத்த முடியும். அதனை நாம் தவறவிடலாகாது.

சில சந்தர்ப்பங்களில் நாம் எமது இராஜதந்திர வழிகளை கையாண்டு தான் எமக்கு அனுகூலமான அரசியல் வழிகளை எற்படுத்த வேண்டும். மேற்குலகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் போன்றவற்றின் அழுத்தங்களின் ஊடாக தென்னிலங்கையின் அரசியல் யாப்பில் முதலில் சில மாற்றங்களை எற்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்குண்டு. நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் பதவி உள்ளவரையிலும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கான நகர்வை மேற்கொள்ள முடியாது என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஈழமுரசு: ஜெனரல் சரத் பொன்சேகாவும் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர், எனவே அவரை தமிழ் மக்கள் எவ்வாறு ஆதரிக்கலாம் என சிலர் கூறுகின்றனர் அது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

அருஷ்: இரு தரப்பும் போர் குற்றங்களை மேற்கொண்டவர்கள் தான். ஆனால் மகிந்த ராஜபக்சாவின் பக்கத்தில் போர் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்ட ஒரு கூட்டம் உள்ளது. நீதிக்குபுறம்பான படுகொலைகளை மேற்கொண்ட துணை இராணுவக்குழுக்களும் அங்கு தான் அடைக்கலம் பெற்றுள்ளன. எனவே எமக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒரு தனிநபரை தண்டிப்பதற்கு பயன்படுத்துவது விவேகமானதா? அல்லது ஒரு கூட்டத்தை தண்டிப்பது விவேகமானதா? என சிந்திக்க வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் ஒரு எதிரியை வீழ்த்தவதற்கு மறு எதிரியை அணைக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுவதுண்டு. அதற்கு விடுதலைப்புலிகள் கூட பல உதாரணங்களை விட்டுவைத்துள்ளார்கள். 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்பாடு எற்பட்ட பின்னர் கேணல் தீபனும், ஜெனரல் (அன்று மேஜர் ஜெனரல்) சரத் பொன்சேகாவும் கைகுலுக்கி கொண்டனர். 1990களில் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்காக நாம் அன்றைய சிறீலங்கா அரச தலைவர் ஆர் பிரேமதாசாவுடன் கைகுலுக்கி கொண்டோம், ஆயுதங்களை பெற்றுக்கொண்டோம் எனவே இராஜதந்திர அணுகுமுறைகள் என்பது சில சமயங்களில் இன்றியமையாதது.

ஈழமுரசு: பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு முக்கியமானதாக கருதப்படுகின்றது அது குறித்து உங்களின் கருத்து என்ன?

அருஷ்: கடந்த புதன்கிழமை (6) தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அது சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகவே தென்படுகின்றது. தமிழ் தேசிய கூட்மைப்பு இரு தரப்பினருடனும் பேச்சுக்களை மேற்கொண்ட பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மனிதாபிமான பிரச்சனைகள் மற்றும் அரசியல் தீர்வுதிட்டம் போன்றவற்றையே கூட்டமைப்பு முன்நிபந்தனையாக வைத்துள்ளது.

மகிந்தவை பொறுத்வரையிலும் அவர் வெளிப்படையாக ஒன்றை தெரிவித்து விட்டார் அதாவது 13 ஆவது திருத்தச்சட்டத்தின் நடைமுறை தான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்று. மேலும் போர் நிறைவடைந்துள்ள போதும் உயர்பாதுகாப்பு வலையங்களை அகற்றவும் மகிந்த மறுத்துவிட்டார். எனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இயங்கிவரும் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதையே தற்போதைய முடிவு எடுத்துக்காட்டுகின்றது.

ஈழமுரசு: மகிந்த ராஜபக்சாவின் பிரச்சார உத்திகள், ஜெனரல் பொன்சேகாவின் பிரச்சார உத்திகள் தொடர்பாக நாம் அறிந்துகொள்ள முடிவது என்ன?

அருஷ்: இரு தரப்பினரும் போரின் வெற்றிகளை தென்னிலங்கையில் தமது பரப்புரைகளாக மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் மக்கள் மீதான இனப்போரில் சிங்கள இனம் அடைந்த வெற்றி முடிந்துவிடவில்லை அது தொடர்ந்து ஈட்டப்பட்டு வருவதாகவே மகிந்த ராஜபக்ச காண்பித்து வருகின்றார். உதாரணமாக விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல் எனக் கூறி ஒரு கப்பல் ஒன்று கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு, அது சிங்கள மக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை கொண்டுவரப்போவதாக அரசு அறிவித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை (5) முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியோக ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதாக அரசு பெரும் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அங்கு கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பான எம்-16-ஏ-2 ரக எம்-203 கிரைனைட் செலுத்தியுடன் கூடிய ஆயுதத்தை 1986களில் விடுதலைப்புலிகள் சிறீலங்காவில் அறிமுகப்படுத்தியிருந்தனர்.

அதனை ஒவ்வொரு கட்டளை தளபதிகளும் கொண்டிருந்ததும் நாம் அறிந்தவையே. எனவே மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து நாம் ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார்.

ஈழமுரசு: வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பாக சில விசமிகளால் எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

அருஷ்: வட்டுக்கோட்டை தீர்மானம் தான் எமது போராட்டத்தின் அரசியல் அத்திவாரம். அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை பெறுவதற்கே 33 வருடங்களாக நாம் ஆயுதம் ஏந்தி போராடினோம். எமது படைவலு சிதைக்கப்பட்ட பின்னர் நாம் மீண்டும் அரசியல் வழிகளில் போராடுவதற்கு வட்டுக்கோட்டை தீர்மானம், அதற்கான ஆதரவுகள் போன்றவற்றை அனைத்துலகத்தின் முன் காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனை மீண்டும் மூன்று நாடுகளில் (நோர்வே, பிரான்ஸ், கனடா) வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டியுள்ளோம்.

எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் நாட்களில் ஜேர்மனி, பிரித்தானியா, சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதனையும் வெற்றிபெற செய்ய வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. மேலும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட போது பண்ணாகத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் தமிழர்களின் தந்தை என போற்றப்படும் தந்தை செல்வநாயகம் தான். எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை விமர்சிப்பது என்பது தந்தை செல்வநாயகத்தை விமர்சிப்பதற்கு சமனாகும்.

ஈழமுரசு:
எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கள் என்னவாக இருத்தல் வேண்டும்?

அருஷ்: புலம்பெயர் தமிழ் சமூகம் அரசியல் வழிகளில் மிகவும் முதிர்ச்சி பெற்ற சமூதாயமாக மாற்றமடைந்துள்ளது. அதனை நாம் அண்மையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் வெற்றிகளில் இருந்து அறிந்து கொண்டோம். எனவே அனைத்துலகிலும் மிகப்பெரும் சக்தியாக வளர்ச்சி கண்டுள்ள புலம்பெயர் தமிழ் சமூகம் தயாகத்து அரசியலிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும். அரசும், அரசுக்கு ஆதரவான துணை இராணுவக் குழுக்களும் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களையும், சலுகைகளையும் முறியடித்து சரியான திசையில் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பு அவர்களுக்கும் உண்டு. தாயகத்தில் உள்ள உங்களின் ஒவ்வொரு உறவுகளுடனும் பேசுங்கள், வாக்களிப்பின் முக்கியத்துவத்தையும் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக கூறுங்கள்.

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*