TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எடடி மண்வெட்டி! நடவடி அம்பாந்தோட்டைக்கு!!

தேர்தல் களத்தில் நாளுக்கு நாளான கருத்து மோதல்களும் அதனூடான உளறல்களும் அதிகரித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் தமது குடும்ப அரசியலை யாராலும் அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த மகிந்த குடும்பம் தற்போது அச்சத்தால் வெருண்டிருப்பதை அண்மைய நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.

“நாட்டின் ஆட்சியின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளமையால் அதனைக் காக்கும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபடவேண்டும்” என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எதனைக் கருத்திற் கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார் என்று புரிகின்றது.

உண்மையில் தற்போதைய எதிர்க் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அவர் அச்சம் கொண்டுள்ளமையை அவரது அண்மைய நடவடிக்கைகளின் மூலம் அவதானிக்க முடிவதாக கொழும்பின் ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்தார். வழமையாக மதுப்பாவனையில் ஈடுபடுகின்ற மகிந்த ராஜபக்ச தற்போது வழமையிலும் பார்க்க மிக அதிகமாக குடிபோதையில் ஈடுபடுவதாக தாம் அறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மகிந்தராஜபக்ச தனக்கு எதிரான வாக்குகள் தொடர்பில் நான்கு விடயங்களில் அச்சம் கொண்டிருக்கின்றார் என்றே கொள்ளலாம்

1. முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் சரத்பொன்சேகாவிற்கான ஆதரவு

2. ஐக்கியதேசியக் கட்சிக்கான மக்களது பரம்பரை ரீதியான அல்லது வழமையாகக் கிடைக்கப்பெறுகின்ற ஆதரவு

3. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைபாட்டிற்கான தமிழ் மக்களின் ஆதரவு

4. தமது குடும்ப ஆட்சி மற்றும் மோசடி இன அழிப்பு என்பவற்றுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு

தனது உரைகளில் வடக்கு கிழக்கு இணைப்பினை ஏற்படுத்த முடியாது, பொலிஸ் நிர்வாகம் வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படுவது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஒவ்வொரு கூட்டங்களிலும் அவர் புலம்புவதை அவதானிக்கலாம். இந்த விடயங்களை சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் அவர் கூறுவதுதான் முக்கிய விடயமாகும். உரைகளில் அவர் தெரிவிக்கும் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பிலான கருத்துக்களை, சரத் பொன்சேகா தரப்போ கூட்டமைப்பு தரப்போ உத்தியோக பூர்வமாக வெளியிடாத நிலையில் மகிந்த கடும் பிரயத்தனப்பட்டு தொடர்ந்து வெளிப்படுத்துவதன் நோக்கத்தினை பார்த்தால், மகிந்த தனது தேர்தல் வெற்றியினை இனவாதத்தை வலியுறுத்துவதன் மூலமே எட்டுவதற்கு எண்ணுகின்றார் என்பதனைப் புரிந்து கொள்ளமுடிகின்றது. இந்த விடயங்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கின்ற போது சிங்கள மக்களின் இனவாத வாக்குகள் தமக்குக் கிடைக்கும் என எண்ணுகின்றார்.

அதேபோன்று கிராமத்தில் இருந்து வந்த தனக்கும் பாரபட்சம் பார்க்கின்றார்கள் எனவே தன்னை ஆதரியுங்கள் என அனுதாப வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அவர் பிரயத்தனப்படுகின்றார். இதுபற்றி அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆதங்கப்பட்டதாக அறியப்படுகிறது. அதற்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் இன்னும் சுவாரசியமானவை. மகிந்த மோசடி செய்துவிட்டார் எனக்குறிப்பிடும் எதிர்க்கட்சிகள் கூட, தன்னை கிராமத்தான் என காட்டுவதற்காக பெரிய மோசடிகள் செய்துவிட்டேன் என குற்றஞ்சாட்டுவது இல்லையாம். சாப்பாட்டுக்கடை வைத்து ஊழல் செய்துவிட்டான் என்பது போன்ற சில்லறைத்தனமான ஊழல்களையே தனக்கு எதிராக சொல்வதன் மூலமும் தன்னை மட்டம்தட்டவே முயல்வதாக குறைபட்டுக் கொண்டார்.

இதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பு, காவல்துறை நிர்வாகம் உட்பட கூட்டமைப்பிற்கு பொன்சேகா, ரணில் தரப்பால் வழங்கப்பட்டதாக மகிந்த கூறும் வாக்குறுதிகள் தொடர்பில் எதிரணியும் கூட்டமைப்பும் பகிரங்கப்படுத்தாமைக்கான காரணங்களை இலகுவில் புரிந்து கொள்ளலாம்

எதிரணி இந்தவிடயங்களை வெளிப்படுத்தினால் பொன்சேகாவிற்கு கிடைக்கக் கூடிய வாக்குகளில் இனவாதப் போக்குடைய மக்களின் வாக்குகள் கிடைக்காமல் போவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. ஆனாலும் தமிழ் மக்களுக்கு இது தொடர்பான சரியான விளக்கம் வழங்காமையானது அவர்களது தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கையில் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கூட ஏற்படுத்தலாம். எது எவ்வாறாயினும் இறுதி நேரத்திலாவது சரியான விளக்கம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் மகிந்த தெரிவிக்கும் கூற்றுக்கள் தொடர்பில் எதிரணியோ, கூட்டமைப்போ மௌனம் சாதிப்பது என்பது ஏதோ ஒரு செய்தியை தமிழ் மக்களுக்கு இலகுவில் புரிய வைக்கின்றது என்றே கொள்ளலாம். நடைபெறும் தேர்தல் மீண்டும் அவரது கிராமத்திற்கே அவரையும் அவரது குடும்பத்தையும் அழைத்துச் செல்லும் என்றே எதிர்பார்க்க முடிவதாக சொல்கிறார் அரசியல் நண்பர் ஒருவர்.

இராவணேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*