TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வேலுப்பிள்ளையாரின் மரணமும் மகிந்தாவின் கொடுங்கோல் ஆட்சியும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் யனவரி ஆறாம் நாள் மேற்கு இலங்கையில் அமைந்துள்ள பனாகொட இராணுவப் பாசறையில் காலமானார். இவர் செய்த ஒரே குற்றம் பிரபாகரனை பெற்றது தான். வேலுப்பிள்ளை – பார்வதியம்மாள் தம்பதியர் தமிழருக்கு தந்த தானத் தலைவன் பிரபாகரன் என்று அனைவரும் போற்றுகின்றார்கள். சிறி லங்காவோ எண்பத்தாறு வயது வேலுப்பிள்ளையாரையும் என்பது வயதான அவர் மனைவி பார்வதி அம்மாளையும் தேசத் துரோகிகள் போன்று இராணுவ பாசறையில் சட்ட விரோதமாக அடைத்து வைத்ததில் இறுதியில் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்திவிட்டதாக இராணுவப் பேச்சாளர் அறிவிக்கின்றார். ஏற்கனவே புண்பட்டு இருக்கும் ஈழத்தமிழருக்கு இது ஒரு பேரடியாகவே இச்செய்தி இருந்தது.

சாவு என்பது ஒன்றும் உயிரினங்களுக்கு புதிதல்ல என்றாலும் வேலுப்பிள்ளையாரின் இழப்பு என்பதை வேறு விதமாக நாம் பார்க்க வேண்டும். காரணம் தள்ளாத வயதிலும் அடைபட்ட அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாது தம் கடைசிக் காலத்தில் தமது பிள்ளைகளை பார்க்க முடியாமல் போய்விட்டது. நான்கு பிள்ளைகளை பெற்றும் அவர்கள் இறுதி நிகழ்வுகளை தகப்பனாருக்கு செய்ய முடியாமல் போய்விட்டது என்றால் வேலுப்பிள்ளையாருக்கு கிடைத்த ஒரு துரதிர்ஷ்டம், என்று தான் சொல்லவேண்டும். ஒரு மகள் கனடாவிலும் மற்றொரு மகள் இந்தியாவிலும், மூத்த மகன் டென்மார்க்கிலும் வாழ்கின்றார்கள். சிறி லங்காவின் ஜனாதிபதியோ தான் செய்த மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கும் தமிழரின் ஓட்டுக்களை மட்டும் பெறுவதட்குமாக ஒரு அரசியல் காய் நகர்த்தலை மட்டுமே மேற்கொண்டார். அதாவது வேலுப்பிள்ளையாரின் பூதவுடலை அவரின் ஊரான வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லலாம் என்றும், அவரின் பிள்ளைகள் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிக்கை விடுத்தார்.
யாரின் அழைப்பை யார் கேட்பது?

ஜனாதிபதியின் அழைப்பை அவரது பிள்ளைகள் நிராகரித்தார்கள். அத்துடன் கனடாவில் வசிக்கும் மகள் சிறி லங்கா உயர் ஸ்தானிகராலயம் ஊடாக எழுத்து மூலமான சட்ட கடதாசிகள் கொடுத்த பின்னர் வேலுப்பிள்ளையாரின் பூதவுடலை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளருமான வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட சிவாஜிலிங்கம் பொறுப்பெடுத்து வவுனியா எடுத்து சென்று பின்னர் வல்வெட்டித்துறையில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு யனவரி பத்தாம் நாள் அவரின் பூதவுடல் எரியுட்டப்பட்டது.

வேலுப்பிள்ளையாரின் பிள்ளைகள் எடுத்த முடிவில் எந்தவித தடுமாற்றமும் இல்லை காரணம் சிறி லங்கா பாசிச அரசாங்கம் இவர்களையும் வரவழைத்து துன்புறுத்துவதுடன் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவித்து மகிந்த தனது அரசியல் வெற்றிக்காக எதுவும் செய்திருப்பார். அத்துடன் உலக சமுகத்தினரிடத்தில் தான் நல்ல பிள்ளையாக நடித்திருப்பார். அதாவது தன்னை மிகவும் மனிதாபிமான மனிதராய் சித்தரித்தும் மற்றும் அவரின் சகோதர்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்கு இந்த நிகழ்வை நிச்சயம் பிரயோகித்திருப்பார்.

ஆக வேலுப்பிள்ளை – பார்வதி தம்பதியினரின் பிள்ளைகள் அறிவற்ற மானிடர்களா என்ன, மகிந்தாவின் அரசியல் நாடகத்தை புரியாதவர்களா அல்லது அவர்கள் தங்கள் தமிழ் இனத்தின் மீது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டு அராஜகத்தை கட்டவிழ்த்தி விட்டு தமிழர்களை கொன்று சிறைப்பிடித்து ஏன் தமது தள்ளாத வயதில் எந்தவித பாவமும் செய்யாத பெற்றோரை இராணுவ முகாமில் அடைத்தும் மனித நாகரிகமே கண்டிராத நிகழ்ச்சியை நிகழ்த்தி விட்டு தமிழருக்கு சொல்லோனாத் துயரத்தை உண்டாக்கியவர்களின் அழைப்பைத்தான் ஏற்பார்களா? இவர்களும் என்ன டக்ளஸ், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, வரதராஜபெருமாள் பேர்வழிகளைப்போல் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு துணைபோவார்களா?
வேலுப்பிள்ளையார் குடும்பம் ஒரு சாதாரனமானதொரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். அதாவது அவர்கள் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்களாக இன்று இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கையை நடத்துகின்றார்கள். அவர்கள் மற்றவரின் உழைப்பில் வந்த பணத்தை கொண்டு தமது சுகபோகத்திற்காக வாழமாட்டார்கள் என்பது வேலுப்பிள்ளையாரின் சாவு ஒரு உதாரணம். யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த வேளை பிரபாகரன் நினைத்து இருந்தால் அவரின் பெற்றோரை அன்ரன் பாலசிங்கத்தை எப்படி பாதுகாப்பாக லண்டனுக்கு பல தடவைகள் அனுப்பி வைத்தாரோ, அதுபோல் இவர்களையும் அப்படி அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் சாந்தமும் எளிமையும், ஏன் சமாதானத்தை விரும்பும் ஒரு ஆன்மீக வேலைகளில் ஈடுபடும் ஒருவர் தானும் தன்னுடைய மனைவியையும், தங்களது மக்களோடு இருக்கவேண்டுமென்று கருதி, தமது மக்களுடன் சேர்ந்து தாமும் ஓமந்தை வழியாக வந்து, மனிக் பண்ணை என்ற ஒரு கொடிய வதைக்கூடத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் மக்களுடன் சேர்த்து அடைத்துவைக்கப்பட்டார்கள். பின்னர் சிறி லங்காவின் இராணுவம் விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பேரில் பதினைந்தாயிரத்திற்க்கும் மேலான தமிழ் இளைஞர்களுடனேயே இந்த வயதானவர்களையும் கடத்தி அடைத்தார்கள்.

சட்டத்துக்கு முரணாக அடைத்தார்கள்

சிறி லங்கா அரசியல் யாப்பின் படி காவல்துறையினரால் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். ஜெயவர்த்தனா கொண்டு வந்த கொடிய சட்டமான பயங்கரவாதிகளை எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைத்திருக்கலாம் என்றதன் மூலம் பல தமிழ் இளையோர் சித்திரவதைப்படுத்தப்படுகின்றார்கள். ஆயினும் வேலுப்பிள்ளை – பார்வதி தம்பதியர் மீது எந்தவித குற்றச்சாட்டும் போடாமலேயே ஒரு சர்வாதிகார நாட்டில் என்னவாறு நடைபெறுமோ அதை மகிந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
உலக விசாரணைக்குழு ஒன்று கடந்த சில வாரங்களாக கூடி எப்படி சிறி லங்காவை தண்டிக்கலாம் என்று நடவடிக்கைளில் இறங்கியிருக்கின்றார்கள். ஏன் தமிழருக்கு இன்னுமொரு செய்தியொன்று பிரான்சிலிருந்து வந்திருக்கின்றது. அதாவது பிரான்ஸ் ஒரு குழுவை நியமித்து உலகில் எந்த மூலையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றாலும் அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதோடு நின்றுவிடாமல் தமது நாட்டு சட்டதிற்குப்பட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு இனிப்பான செய்திதான், காரணம் பல அரசு சார்பற்ற நிறுவன ஊழியர்களையும் மற்றும் பிரெஞ்சு அமைப்புகளின் பல ஊழியர்களை சிறி லங்கன் இராணுவம் கொலை செய்து எறிந்தார்கள். ஆக, மகிந்த மற்றும் அவர் சகோதரர்கள் மற்றும் முன்னோடி அதிகாரிகள் நிச்சயம் உலக நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்படவேண்டும். ஆக வேலுப்பிள்ளையாரின் சாவும் சட்டவிரோதமாக உலக நியதிகளுக்கு அப்பாற்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டு நிகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.

மலேசியாவில் திருவேங்கடம் தம்பதியினருக்கு தை மாதம் 1924 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்தார். அவரின் ஐந்தாவது வயதில் அவரின் தாயார் இறந்தார். பின்னர் அவரின் தந்தையார் தனது புகையிரத மேற்பார்வையாளராகப் வகித்த பதவியை விட்டு விலகி தமது பூர்வீக ஊரான வல்வெட்டித்துறைக்கு குடிபெயந்தார்கள். சமய ஈடுபாட்டுடன் தனது மகனை திருவேங்கடம் அவர்கள் வளர்த்து படிப்பித்து சிறி லங்கா பொதுச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டார். பின்னர் 1946 ஆம் ஆண்டு வடமராட்சியில் உள்ள பிரபல்யமான துறைமுக ஊரான பருத்தித்துறையை சேர்ந்த பார்வதியை மணந்து மனோகரன் என்ற பிள்ளையாக 1948 ஆம் ஆண்டு பெற்று பின்னர் இரு மகள்களையும் இறுதியாக சிங்கள ஆட்சியாளர்களுக்கே சிம்ம சொர்ப்பனமாக கருதிய பிரபாகரன் பிறந்தார்.

வேலுப்பிள்ளையாரின் உண்மையான மனிதாபிமானத்தை பலரும் மெச்சியுள்ளர்கள். பிரபாகரன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கும்போது அவர் தனது சமுகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த நிகழ்வை உணர்ந்து ஒரு ஆயுத போராட்டத்தை நடாத்தித்தான் தமிழரின் உரிமைகளை வெல்லவேண்டும் என்ற சிந்தனையுடம் பல அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். ஒரு நாள் அதிகாலை வேளை மூன்று மணியளவில் காவல்துறைப் பட்டாளமே அவரின் வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினார்கள். இதை பார்த்தவுடன் பிரபாகரன் வீட்டில் இருந்து தலைமறைவாகி கொண்டு தன்னையே ‘ஈழத் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்’ என்ற ஆத்ம கொள்கையோடு இணைத்துக் கொண்டு புறப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பெற்றோருக்கே பிரபாகரன் ஏதோ அசம்பாவிதங்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்து இருந்தும் வேலுப்பிள்ளையார் பிரபாகரன் இருந்த இடத்தை தேடிப் போய் வீட்டுக்கு வரும்படி அழைக்க, தான் வீட்டுக்கு உதவமாட்டேன் என்றும் தான் நாட்டுக்கே தன்னையே அர்ப்பணிக்கிறேன் என்று சபதம் எடுத்த பின்னர் தனது வீட்டுக்கே திரும்பாமல் ஒரு நிழல் போல் தமிழீழ அரசாங்கத்தையே வன்னியில் நிறுவி நடாத்தி வந்தார். 2002 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னர் வேலுப்பிள்ளை தம்பதியினர் தமிழ் நாட்டின் திருச்சி மாநகரில் இருந்து ஈழம் திரும்பி மக்களோடு மக்களாக வசித்து வந்தார்கள். சிங்கள இனவெறி அரசாங்கம் விடுதலைப் புலிகளின் அரசாட்சி முறையை பார்த்தும் கேட்டும் சகிக்க முடியாமல் ஒரு கூண்டுக்குள் இருந்த பறவைகளை சின்னாபின்னமாக்கியது இதன் விளைவாய் இன்று தமிழ்மக்கள் சொல்லனாத் துயரை அனுபவித்துகொண்டிருகின்றார்கள். ஆக வேலுப்பிள்ளையாரின் மறைவு ஒரு சாதாரணமான மறைவே அல்ல. அவரும் ஈழத் தமிழருக்காக தன்னையும் அர்ப்பணித்திருக்கின்றார். அவரின் சாவும் மகிந்த அரசின் மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்க்கப்படுகின்றது. ஆக சொந்தப் பிள்ளைகளை தமது தந்தையின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் உண்டுபண்ணிய மகிந்த கொடுங்கோல் ஆட்சி நிச்சயம் அவரது ஆத்மாவோடு சேர்ந்து பல ஆயிரம் ஆயிரம் ஆத்மாக்கள் மகிந்தாவைச் சூழ்ந்து நீதிமுன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பது தான் அனைவரினதும் பிரார்த்தனை.

அனலை நிதிஸ் ச. குமாரன்

இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு மின்னஞ்சல்:
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*