TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“புழுதி வாரும் வழுதிக்கு ஒரு கடிதம்”

திரு. வழுதி

நாலு சுவர்களுக்க உள்ளே பேசப்பட வேண்டிய விமர்சனங்களை இப்படி புதினத்தில் எழுதி எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உமது புலம்பலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் புதினத்தின் நோக்கம் என்னவென்பதும் எனக்கு விளங்கவில்லை.

இதே புதினம்தான் லெனின்கிராட் போர் பற்றியும், சிங்கள இராணுவம் அகலக் கால் வைக்கிறது, வன்னி சிங்கள இராணுவத்தின் புதைகுழியாக மாறப் போகிறது என மனம் போன போக்கில் எழுதிய பரபரப்புக் கட்டுரைகள், அரசியல் களங்கள் முதலியவற்றையும் வெளியிட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

உம்மை ஒரு அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு அந்த மிதப்பில் இப்படியான கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என நான் எண்ணுகிறேன். நிகழ்வுகள் நடந்த பின்னர் அதன் பிழை சரி பற்றி எந்தப் பேயனும் விமர்சனம் செய்யலாம். அதைத்தான் நீர் செய்கிறீர். மறைந்த தேசத்தின் குரல் பாலசிங்கம் பற்றி எனக்கும் அவ்வப்போது சில கருத்து வேற்றுமைகள் எழுந்ததுண்டு.

அதற்காக அவரை விழுந்தடித்துக் கொண்டு விமர்சனம் செய்ய நான் நினைக்கவில்லை. அவர் தமிழீழ விடுதலைக்கு ஆற்றிய தொண்டு, அதற்காக அவர் கொடுத்த விலைதான் எனக்கு மேலாகப்பட்டது. இப்போது அவர் மறைந்துவிட்டார். மறைந்தவர் திரும்பி வரமாட்டார் என்ற துணிச்சலில் யாரும் அவர் சொன்னதாக எழுத முடியும். அதில் நீரும் ஒருவர்.

(1) “உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்” என எழுதியுள்ளீர்கள்.

நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர் எனத் தெரியவில்லை. மக்கள் “நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்” என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? யாரால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனச் சொல்லமுடியுமா? மக்கள் மடையர்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்? உண்மை என்னவென்றால் மக்கள் அந்தச் செய்தியை நம்ப மறுத்தார்கள். அதனை அவசர அவசரமாக வெளியிட்டுத் தலைவருக்கு “வீரமரணக்கம்” செலுத்த பத்மநாதன் எத்தனித்த போது மக்ககள்தான் அதனை நிராகரித்தார்கள்.

மக்களின் உணர்வுகளை வீரமரணச் செய்தியைக் காவிச் சென்றவர்கள், வானொலி, தொலைக்காட்சி மக்களால் துரத்தப்பட்டார்கள். கனடாவில் இதுதான் நடந்தது. பத்மநாதனை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு மக்களது உணர்வுகள் தெரிந்திருக்கவில்லை. அதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்க மாட்டேன். இப்போது கூட யார் யார் இறந்துபட்டார்கள் என்பதை அவர் பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சிறிலங்கா அரசு செய்யாத அல்லது செய்யநினைக்காத திருப்பணியை பத்மநாதன் செய்கிறார் என்பதுதான் எனது கவலை. கோபம். மற்றப்படி அவர் தலைவரின் வலது கையாக இருந்தார் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை. இந்திய இராணுவத்துக்கு எதிராக போராட முடியாது என்று கூறி பலர் இயக்கத்தில் இருந்து விலக முன்வந்த போது “போகிறவர்கள் போகலாம் . எனக்கு கே.பி. இருந்தால் போதும்” என்று தலைவர் சொன்னார்.

“ஆக, இப்போதிருக்கும் சூழலில் அந்த மனிதர் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு – கட்டுக்கோப்புடனும், ஒருங்கிணைவுடனும், கூட்டுச்சிந்தனையுடனும் உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் எல்லோருக்கும் நல்லது” என எழுதியுள்ளீர். மெத்த நல்லது.

ஆனால் இந்த சேறு பூசும் திருப்பணியை நீர்தான் முதலில் தொடக்கி வைத்தீர் என்பது நினைவிருக்கட்டும்.

“மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும். தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை” என அடித்துச் சொல்கிறீர்.

எந்த அடிப்படையில்? நீர்தான் களத்தில் இல்லையே? அந்த நிலைமை இப்போது இல்லாமல் இருக்கலாம் அது எப்போதும் அப்படி இருக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது.

(2) “மன்னிப்புக் கேட்டல்” என்ற நிலைக்குப் போகாமலும், அதற்கு ஒரு நூலிழை அளவு கீழே வரை சென்றும் – மிகவும் சாதுரியத்துடன் அவர் அன்று அந்தக் கேள்வியைக் கையாண்டார்” என்பது சரியாக இருக்கலாம். ஆனால் பாலசிங்கம் அதனை தன்னிச்சையாகவே செய்தார். அதுதான் அவர்விட்ட பிழை. அதுதான் தமிழ்ச்செல்வனை அப்படிச் சொல்லவைத்தது.

(3) “கர்வத்துடனும், கெளரவத்தடனும் வாழ்ந்த எமது மக்கள் கம்பி வேலிகளுக்குப் பின்னால் கண்ணீரோடு நிற்கின்றார்கள்; அவர்களைப் பக்குவமாக மீட்டெடுத்து அவர்களது பழைய கம்பீர வாழ்வை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். இத்தனை ஆண்டு காலம் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் பலர் சிங்களத்தின் சிறை முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்; அவர்களையும் மெதுவாக மீட்டெடுத்து அவர்களது சகவாழ்வுக்கு நாம் வழிசெய்ய வேண்டும்.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் பணிகள் நிமித்தம் அனுப்பப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த எமது போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்.” என எழுதுகிறீர்கள். என்னைக் கேட்டால் மக்கள் இன்னும் 6 மாதங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். அதற்கான அழுத்தத்தை எம்மால் அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்த முடியும். ஏற்பட்டு வருகிறது.

அது சரி “போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்” என்பது சரிதான். அந்த “நுட்பம்” என்ன என்பதை சொல்லவில்லையே? போரில் தோற்றவர்களை போர்க் கைதிகளாக கருதி அவர்கள் பன்னாட்டு சட்டங்கள் மரபுகளுக்கு இசைவாக நடத்தப் படவேண்டும். ஆனால் சிங்களக் காட்டுமிராண்டிகளிடம் அதனை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். வெள்ளைக் கொடியோடு போனவர்களுக்கு என்ன நடந்தது?

(4) “ஆயுதப் போராட்டத்தைப் பின்புலமாக வைத்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் காலம் – உண்மையில் செப்ரெம்பர் 11, 2001 அன்றுடன் இந்த உலகத்தை விட்டும், கடந்த மே 18, 2009 அன்றுடன் தமிழர்களை விட்டும் போய்விட்டது” என்பது முழுதும் சரியில்லை. செப்தெம்பர் 11, 2001 க்குப் பின்னர்தான் சொசோவோ சுதந்திரநாடாக முகிழ்ந்துள்ளது. அதனை உருவாக்கியவர்கள் இதே மேற்குல நாட்டுத் தலைவர்கள்தான்.

கொசோவோ விடுதலை இராணுவத்துக்கும் வி.புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்கும் கொசோவோ நாட்டுக்கும் தமிழீழத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. 1984 இல் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் சுடப்படாது இருந்திருந்தால் எமது போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். வட – கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு தன்னாட்சியை உருவாக்குவதில் இந்திரா காந்தி உறுதியாக இருந்தார். இராசீவ் காந்தியின் முட்டாள்த்தனத்தால்தான் எல்லாம் கெட்டது.

இந்தியாவைப் பகைக்கக் கூடாது என்ற கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். ஆனால் அதனை சேரடியாகச் செய்ய முடியாது. தமிழகத்தின் ஊடாகத்தான் செய்ய முடியும். சென்ற தேர்தலில் அந்த முயற்சி தோற்றாலும் அது முழுத் தோல்வி அல்ல. சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தமிழ் உணர்வாணர்களின் கடுமையான உழைப்பால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழீழ போராட்டத்தின் நான்காவது கட்டம் பற்றி அதன் நன்மை தின்மை சாதக பாதகம் வெற்றி தோல்வி பற்றிய விமர்சனத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் விட்டுவிடுவோம். நாம் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை எந்த வடிவத்தில் எந்தப் பாதையில் நகர்த்துவது என்பதுபற்றி மட்டும் எல்லோரும் சிந்தித்துச் செயல்படுவோம்.

ஊத்தைத் துணிகளை தெருவில் வைத்துத் துவைப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் யாழ்ப்பாண மாநகரசபை வவுனியா நகரசபைக்குத் தேர்தல் வருகிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.

இது நாம் எல்லோரும் செய்யக் கூடிய உடனடிப் பணி. தமிழீழ மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுதலை செய்து விட்டோம் என ஆளுவோர் கொக்கரிக்கிறார்கள். ஆளும் கட்சி வெற்றி பெற்றால் அது உண்மையாகி விடும்.

நக்கீரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
  • Akilan Swiss says:

    வழுதி அவர்களே நீங்கள் நாலு சுவர்களுக்குள் பேச வேண்டிய விடயங்களை எதற்கு விளம்பரம் பண்ணி பேசுறியள்? உங்களால் முடிந்தால் மூன்று லட்சம் மக்களையும் மேதாவி தனத்தால் காப்பாத்த முயற்சி செய்யுங்கள்.தலைவர் உண்மையில் செய்த ஒரே பிழை இந்த பரதேசி காட்டி கொடுக்கிற பதவி ஆசை பிடித்த தன்னை தானே அறிவாளி என்று அலைகிற பச்சோந்தி தமிழனுக்கு போராட வந்ததே அவர் செய்த மிக பெரிய வரலாற்று பிழை அதை நிஇங்க எல்லோரும் மன்னிக்கணும்

    July 1, 2009 at 15:14

Your email address will not be published. Required fields are marked *

*