TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மீது சிறிலங்கா சீற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் சிறிலங்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை கடினமானதாக்கி உள்ளதால் சிறிலங்கா சீற்றமடைந்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா நாட்டின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க “அவருடைய அறிக்கைகள் இந்த நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டும் விடயத்தை எமக்குக் கடினமானதாக்கி உள்ளன. அத்துடன் அவரின் அலுவலகத்துடன் நெருக்கமாகச் செயற்படுவதையும் கடினமானதாக்கி உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கான அவரின் பயணத்தையும் கடினமாக்கி இருக்கிறது’ என்றும் கூறியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க, அரசாங்கம் தனது மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேற்படுத்துவதற்கும் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயற்படக்கூடிய விதத்தில் தமக்கு உதவியாக இல்லையென்று தான் கூறியுள்ளேன் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பத்திரிகையொன்றுக்கு கருத்து வழங்கிய அமைச்சர் சமரசிங்க, ததற்போதைய தருணத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் சிறிலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.

உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் உள்ளார். அவர் ஐ.நா.வின் நாட்டுக்கான பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து செயற்படுவதுடன் கிரமமாக உயர்ஸ்தானிகரின் அலுவலகத்துக்கு அறிக்கைகளை அனுப்பி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக இந்தியாவிடமிருந்தும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.

சிறிலங்காவிற்கு எதிரான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் தனது பதவியை நவநீதம்பிள்ளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று இந்தியா விமர்சித்திருந்தது. மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வின் தீர்மானத்தை உயர்ஸ்தானிகர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதுவர் கோபி நாத் அச்சம் குலங்கரி தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவைக் காப்பாற்ற இந்திய பகீரதப்பிரயத்தனங்களை எடுத்து வருவது தெரிந்ததே. சிறிலங்கா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை விட இந்தியா சிறிலங்காவைக் காப்பாற்ற அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*