TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றும், அன்றும், ‘மக்கள் முட்டாள்’ என்று எண்ணும் தலைமைகள்?

முடிவல்ல, புதிய தொடக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது வாக்களிப்பு அமையட்டும்: என மே 18 இயக்கம் தமிழ் மக்களுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வேண்டுகோளில் விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பதாக “மே 18 இயக்கம்” முடிவு எடுத்தமைக்கான காரணங்களையும் தெளிவாக விளக்கியுள்ளது. குறிப்பாக வெளிப்படையாகவே தமிழரது பிரிந்து போகும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்கும் ஒரு நேர்மையான இடதுசாரி வேட்பாளரை ஒடுக்கப்பட்ட நாமே ஆதரிக்கவில்லையானால், எப்படி இன்னொரு சிங்கள முற்போக்கு சக்தி தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வரும்? என கேள்வி எழுப்பியுள்ள மே 18 இயக்கம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னாவுக்கு தமிழர்கள் தமது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

மே 18 இயக்கம் வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு.

ஜனாதிபதி தேர்தலும்- தமிழ் மக்களும்

முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்பு நடைபெறும் முக்கியமான தேர்தல் இது. இதில் கலந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் அறவே இல்லை. இனப்படுகொலையை ஏவியவனும், அதனை கனகச்சிதமாக செய்து முடித்தவனும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, தமிழ் மக்களிடம் ஆதரவு தேட வந்துள்ளார்கள். சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளிகள் இவர்கள். இவர்களை நீதியின் முன்னிறுத்துவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இவர்கள் இருவரையும் நிராகரிப்பதன் மூலமாக இவர்கள் தொடர்பான தமது அபிப்பிராயத்தை அனைத்து உலகத்திற்கும் தெரியும் படி செய்தாக வேண்டாமா?

இந்த இரண்டு இன ஒழிப்பாளர்களுள் குறைந்த தீமை செய்தவர் யார் என்று யோசிப்பதற்கு இதுவொன்றும் பட்டிமன்றமல்ல. ஒரு தேசத்தின் எதிர்காலம் பற்றிய நிர்ணயமான கட்டம் இது. இந்த இரண்டு கசாப்புக் கடைகாரருக்கும் ஆதரவு தேட எம்மத்தியில் இருக்கும் குண்டர் படைகள் வேறு ஜனநாயக வேடமிட்டு வலம் வருகின்றன. சரி இப்போதாவது தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கு இருவரில் எவரிடமாவது தீர்வு இருக்கிறதா என்று பார்த்தால், அப்படிப்பட்ட ஒரு விடயம் தொடர்பாக பேசவே பயப்படும் கோழைகள் இவர்கள். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் தேசிய பிரச்சனையை உருவாக்கிவிட்டவர்களே இந்த இரண்டு கட்சிகளும்தான். சரி இப்போதாவது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக, ஜனநாயகபூர்வமாக முன்வைக்க முடியுமா என்றால் அதற்கும் உரிமைகள் அற்ற நிலைமை!

இருவருமே அயோக்கியர்கள் என்று கூறும் மக்களைப் பார்த்து தமிழ் பச்சோந்திகள் கூறுகிறார்கள் “தந்திரோபாயமாக “ வாக்களிப்பதாம் என்று! தந்திரோபாயம் என்ற பெயரில் நாம் கடந்த காலத்தில் செய்தவற்றை திரும்பிப் பார்க்கும் நேரம் இது.

* 1977 ம் ஆண்டு தேர்தலிலேயே எம்மில் பலருக்கு கூட்டணியின் வேடம் தெரிந்தே இருந்தது. ஆனாலும், தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்ற வாதம் எம்மை கட்டிப் போட்டிருந்தது. அத்தோடு கிழக்கிலும் வன்னியிலும் சிங்கள் கட்சிகள் வந்தால் நிலைமை மோசமாகிவிடுமோ என்ற பயம் இன்னும் பலரை வேறு திசையில் சிந்திக்க விடாமல் தடுத்தது.

* 1982 இல் ஜே. ஆருக்கு எதிராக கொப்பேகடுவவை ஆதரிக்க கோரப்பட்டோம். தேர்தல் தருணத்தில் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு போனார் அமிர்தலிங்கம். உள்ளூர் பத்திரிகைகள், தலைவர் ஜே. ஆருக்கு வாக்கு போடச் சொன்னதாக மோசடி செய்தன.

* ”சமாதான புறா “ சந்திரிகாவின் வருகையை ஆதரிக்குமாறு கேட்கப்பட்டோம். சந்திரிகா வந்தார். இரண்டு தவணைகள் பதவி வகித்தார். போனார். தமிழர் பிரச்சனையோ இன்னமும் மோசமாகி விட்டிருந்தது.

* ரணிலின் சர்வதேச வலைப்பின்னலை முறியடிப்பதற்காக விடுதலைப்புலிகள் எடுத்த முடிவுகள் (திருத்தம் செய்யப்பட்டது)

* கடந்த காலங்களில் தந்திரோபாயத்தின் பேரால் வாக்களிக்கக் கோரியவர்கள் அதன் விளைவுகளுக்கு ஒருபோதும் பொறுப்பெடுத்ததும் கிடையாது. இப்போது இன்னோர் தடவையும் எந்தவிதமான சங்கடமும் இன்றி, தந்திரோபாயமாக வாக்களிக்கும் படி கேட்கப்பட்டுள்ளோம்.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் தேசிய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்த பின்பும் நாம் ஏன் இந்த கானல் நீருக்கு பின்னால் எமது சக்தியை செலவளிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் சிங்கள இடதுசாரிகளது இனவாதம் குறித்தும், அவர்கள் தமிழ் மக்களது உரிமைகள் பற்றி பாராமுகமாக இருந்ததாகவும் திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டும் நாம், எமது மனச்சாட்சியை தொட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே சிங்கள் இடதுசாரிகள் யாருமே தமிழ் மக்களது உரிமைகளில் அறவே கரிசனை காட்டவில்லையா? இல்லை காட்டினார்கள்! ஆனால் அவர்கள் வெல்லமாட்டார்கள் என்பதால் அவர்கள் எமக்கு கவர்ச்சியானவர்களாக இருக்கவில்லை. அத்தோடு தமிழ் வலதுசாரித் தலைமை உண்மைகளை தெரிந்து கொண்டே தமது வர்க்க நலன்கள் காரணமாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்தினார்கள். எமக்கு தேவைப்பட்டதெல்லாம் வெல்லும் ஒரு குதிரை! ஆனால் அப்படிப்பட்ட ஒரு குதிரைக்கு இனவாதம் என்ற தீனி தேவைப்பட்டது என்பதை நாம் கவனிக்கத் தவறினோம். நாம் அற்புதங்களை எதிர்பார்த்தோம். மீண்டும் தோல்விகளையே சந்தித்தோம்!

வெளிப்படையாகவே தமிழரது பிரிந்து போகும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்கும் ஒரு நேர்மையான இடதுசாரி வேட்பாளரை ஒடுக்கப்பட்ட நாமே ஆதரிக்கவில்லையானால், எப்படி இன்னொரு சிங்கள முற்போக்கு சக்தி தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வரும்? அதுவும் சிங்கள பேரினவாத அலைக்கு எதிராக நீச்சல் போட்டுக் கொண்டு!

தமிழ் மக்கள், சிங்கள் மக்களோடு ஐக்கியப்பட்டோ அல்லது தனியாக பிரிந்து போவதன் மூலமாகவோ தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வது என்பது, தென்னிலங்கையில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் பலம் பெறுவதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஆதலால் நாம் உடனடியான தேர்தல் வெற்றி என்ற இலக்கைக் கடந்து சரியான சக்திகளை இனம் கண்டு, அவர்கள் பலத்தில், எண்ணிக்கையில் சிறியவர்கள் ஆனாலும் சரியான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருப்பார்களானால், அவர்களை ஆதரிக்க துணிந்து முன்வர வேண்டும். “சொற்பமே ஆயினும் சிறந்ததே நன்று “என்பதை நாம் மறக்கலாகாது. இப்படியாக நாம் கொடுக்கும் ஆதரவுகள் தாம் எதிர்காலத்தில் தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் படிப்படியாக பலம் பெறவும், இன்னும் பலர் வெளிப்படையாக வந்து தமிழர் உரிமைக்கான போராட்டத்தை ஆதரிக்கவும் வழி வகுக்கும். இப்போது நாம் செய்வது எமது எதிர்கால வெற்றிக்கான அரசியல் முதலீடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீண்ட கால நோக்கில் சிந்திக்காத எவருமே விடுதலையை வென்றெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் புலிகளது தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டாக வேண்டும்.

அந்த வகையில் நீண்ட காலமாக, பல்வேறு நெருக்கடிகளையும் மீறி தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்திற்கு துணிச்சலாக முகம் கொடுத்துவரும் நவ சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த தோழர் விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பதாக “மே 18 இயக்கம்” முடிவு செய்துள்ளது. இது இவர் கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்புகள் இப்படிப்பட்ட ஒரு ஆதரவைப் பெறுவதற்கு இவரை தகுதியானவராக ஆக்குகிறது. மற்றும் எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய தமிழ் மக்களின் உரிமைக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்களது ஆதரவானது உரமாக அமையட்டும்.

தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் கடந்த காலத்தில் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாம் அறிவோம். தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு சக்திகள் என்ற வகையில் சிறீலங்கா அரசின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தமிழ் மக்களின் தலைமை என்ற வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்ததில் எவ்வித தவறும் இருப்பதாக நாம் கருதவில்லை. வேறு முற்போக்கு சக்திகள் களத்தில் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்திருப்பது என்பது இன்னொரு விதத்தில் சிங்கள பேரினவாதத்திற்கு துணையாக செயற்படுவதாகவே அர்த்தப்பட்டிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்கிறோம்.

அதே வேளை இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இன அழிப்பு யுத்தத்தை நடத்தியவர்களுடன் கைகோர்த்து நிற்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை இன்னமும் அடையவில்லை என்பதை இந்த இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் எதிராக வாக்களிப்பதன் மூலமாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியாக வேண்டியுள்ளது. அத்தோடு வாக்களிக்காமல் விடுவது என்பது கள்ள வாக்களிப்புக்களுக்கும் மற்றும் பலவித தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்கலாம் என்பதால் தேர்தலில் வாக்களிக்குமாறும் நாம் தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

* முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல, புதிய தொடக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் • அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் கைகோர்ப்போம். என மே 18 இயக்கம். தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*