TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரபாகரன்! மதிவதனி! இசைப்பிரியா!: நினைவலைகள்!

பிரபாகரன்! மதிவதனி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்!

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை “அய்யோ… தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்’ என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த சூழலில், நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் 2 வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இசைப்பிரியாவையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார் என்கிற தகவல்களை பகிர்ந்து கொண்டனர் ஈழ ஆதரவாளர்கள். பேராசிரியர் அறிவரசனை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, “”நெல்லை கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து 1996-ல் ஓய்வு பெற்றுவிட்டேன்.

தமிழ்ப் பணி மட் டுமே என் மூச்சு!என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந் திருந்தனர். 2006-ல் அவர்களிட மிருந்து “தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா? விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா?’ என்று எனக்கு அழைப்பு வந்தது. அப்போது யுத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம். அவர்களின் அழைப்பை ஏற்று, முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப்பாளர்கள், “அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை தகுதியுள்ளவர்களாக உருவாக்க வேண்டும். அப்படி தமிழாசிரியர்களாக உருவாக்க 40 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்களுக்கு பயிற்சியளித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்றனர். மேலும், “இதற்கான பாடத் திட்டங்களையும் நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பணி முடிய எவ்வளவு நாட்கள் ஆகும்?’ என்றனர்.

நான், “இரண்டு ஆண்டுகள் ஆகும்’ என்றேன். உடனே அவர்கள் “இரண்டு ஆண்டுகள் பணி செய்ய இயலுமா அய்யா’ என்று கேட்க, “எனக்கு முழு சம்மதம்’ என்று கூறி ஒப்புக் கொண்டேன். எனக்கான அனைத்து வசதிகளையும் பொறுப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர். அங்கு பணி செய்த இரண்டாண்டுகளும் எந்த குறையும் எனக்கில்லை. 40 பேருக்கும் தமிழ் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக உருவாக்கினேன். 40 பேருமே தேர்ச்சி பெற்றனர். சங்ககால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் ஆரம்பித்து அனைத்து இலக்கண பயிற்சியும் அவர்களுக்குத் தரப்பட்டது. தவிர… பிறமொழி கலப்பில்லாமல் பேசும் பயிற்சி, எழுதும் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தனர். இந்தத் தமிழ்ப் பணிக்காகத்தான் நான் அழைக்கப்பட்டிருந்தேன். இந்த பணிக் காலத்தில் ஒருநாள், இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் 8 மாணவிகளும் பயிற்சிக் கூடத்திற்கு வந்தனர்.

“சில பயிற்சிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறோம் அய்யா’ என்றனர். அந்த வகையில் தமிழின் அடிப்படை இலக்கணம் குறித்து 8 மாதங்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டனர் அவர்கள். தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் மதிவதனி. எந்த ஒரு பயிற்சியை கொடுத்தாலும் மற்ற மாணவிகளை விட முதன்முதலாக பயிற்சியை முடித்து “சரியாகச் செய்திருக்கிறேனா அய்யா’ என்று ஓடோடி வந்து நோட்டுகளை காட்டுவார் மதிவதனி. உலகத் தமிழர்கள் போற்றும் ஒரு மாமனிதரின் மனைவிக்கு தமிழ்ப் பயிற்சி கொடுத்தேன் என்பதில் எனக்கு பெரு மிதம் உண்டு. மாலை 7 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே புலிகளின் “தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’ ஒலிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது.

ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன். துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதனால், அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது, இசைப்பிரியாவை சந்தித்தேன். அப்போது அவரிடம், “”இசை சரி… பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே…’ என்றேன். அதற்கு அவர், “இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர்.

ஆனால் இசைப்பிரியா… இசைப்பிரியா… என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்ததால், அதுவே நிலைத்துவிட்டது’ என்றார். இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர். ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக் காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரிய மாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண், ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன்”என்றார் அறிவரசன்.

அவரிடம், “”பிரபாகரனை சந்தித்தீர்களா?” என்று கேட்டபோது, “”தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த 2 வருட காலத்தில் 2 முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பணியை துவக்கிய காலகட்டத்தில் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தபோது மிகுந்த கம்பீரமாகவும் இயல்பாகவும் இருந்தார். என்னிடம், “உங்களுக்கான வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா அய்யா. ஏதேனும் வசதி குறைவாக இருந்தாலோ பிரச்சனைகள் இருந்தாலோ தாராளமாக என்னிடம் சொல்லுங்கள்’ என்றார். மன நிறைவாக இருக்கிறது என்று கூறினேன். நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும் மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், “யுனெஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த்துள்ளனர். எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள். தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுகாக்கவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழியவிட மாட்டோம்’ என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்தது. இப்படிச் சொன்னவர் சட்டென்று, “என் பெயர் (பிரபாகரன்) தமிழ்தானே அய்யா?’ என்றார்.

நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ “எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ் பெயர்தானே?’ என்றார். உடனே நான், “மிக அழகான சரியான தமிழ்ப்பெயர்’ என்றேன். மகிழ்ந்து சிரித்தார். “உங்களின் தமிழ்ப் பணி எங்களை நெகிழ வைக்கிறது’ என்று கூறி அனுப்பி வைத்தார் பிரபாகரன். இதற்கு பிறகு, 2008 மார்ச்சில் என் பணியை நிறைவு செய்துவிட்டு கிளிநொச்சியிலிருந்து தமிழகத்திற்கு புறப்பட வேண்டிய நாளில், விடைபெற்றுச் செல்வதற்காக அவரை சந்தித்தேன்.

சிங்கள அரசு யுத்தத்தை துவக்கியிருந்த நேரம் அது. அந்த சூழலிலும் முகம் மலர்ந்து பேசிய அவர், “அய்யா வந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன?’ என்றார். “சரியாக இரண்டு வருடம்’ என்றேன். “அப்பா… இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டனவா?’ என்று ஆச்சரியப்பட்டார். “தமிழீழம் மலர்ந்தால் நீங்களெல்லாம் இங்கு வந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் அய்யா’ என்று கூறி வழி அனுப்பி வைத்தார் பிரபாகரன். கிளிநொச்சியில் இரண்டு வருடம் தமிழ்ப்பணி செய்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். அந்த 2 வருடங்கள்தான் என் தமிழ்ப்பணியில் மறக்க முடியாத நாட்கள். அங்குதான் தமிழ் வாழ்கிறது” என்றார் பேராசிரியர் அறிவரசன்.

நன்றி:விகடன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*