TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேசியத் தலைமைக்கு துரோகம் இழைத்த சிங்களத்தை ஏற்கத் துணிந்துள்ள தமிழினம்

* “அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை… சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது… “

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரை 2005

கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமிழ்மக்களின் அங்கீகாரம் கிடைக்குமா?

நீண்ட இழுபறிகள்- கடுமையான வாக்குவாதங்கள்- அடுத்தடுத்து நடத்தப்பட்ட மந்திராலோசனைகளை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்று நீடித்து வந்த கேள்விக்கு இதன்மூலம் பதில் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவையே கூட்டமைப்பு எடுத்துள்ளதோடு இன்று தனது முடிவை நியாயப் படுத்தி வவுனியாவில் சரத் பொன்சேகராவுக்கு ஆதரவாக ஆரம்பித்துள்ளனர்.

உத்தியோகபூர்வமான இந்த முடிவை அறிவிப்பதற்கு கூட்டமைப்பு பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாயினும், இந்தத் தீர்மானம் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு விட்டது.அதாவது பேரம் பேசுதல் என்று கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபட்டதாயினும்- அது ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்த பின்னரே தனக்கென ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டே இயங்கியது என்பது வெளிப்படை.

தேர்தல் புறக்கணிப்பும் இல்லை- தேர்தலில் போட்டியிடுவதும் இல்லை- சுயேட்சை வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என்று கூட்டமைப்பு முடிவு செய்தபோதே, அது ஏதோ ஒரு அணியைச் சாரப் போகிறது என்பது உறுதியாகியிருந்தது. ஆனால் அது எந்த அணி என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தாலும் கடைசி நாட்களில் அது தீர்மானமாகி விட்டது.இப்போது அறிவிக்கப்பட்டது உத்தியோகபூர்வ அறிவிப்பே தவிர முடிவு என்பது கூட்டமைப்புக்கு பழைய செய்தி தான்.

மகிந்த ராஜபக்ஸவின் கடந்த நான்கு வருடப் பதவிக்காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் மற்றும் அவர் மீண்டும் பதவிக்கு வருவது தமிழ்மக்களுக்கு எந்த பயனையும் கொடுக்காது என்ற காரணத்தினால் தான்- எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்ததாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸ புரிந்து கொண்டிருப்பதை விட சரத் பொன்சேகா அதிகம் புரிந்து கொண்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருக்கிறார். அத்துடன் சரத் பொன்சேகா இப்போது ஒரு இராணுவ அதிகாரி இல்லை என்றும் அவர் நியாயம் கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் போட்டியிடுவதால் சரத் பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு செய்ததா அல்லது தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதான உறுதிமொழிகளுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது பற்றி கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தத் தவறியுள்ளது.

அதாவது சில பிரச்சினைகளை முன்வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பு கூறியுள்ள போதும் பிரதான விடயங்களில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் என்ன என்பதை அது வெளிப்படுத்தவில்லை.குறிப்பாக அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு, வடக்கு,கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களில் சரத் பொன்சேகாவிடம் இருந்து ஏதாவது உறுதிப்பாடுகளைப் பெற்றதா என்று தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு எதையும் கூறவில்லை.

* தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, வடக்கு- கிழக்கு இணைப்பு- இவை கட்டாயமானவை, விட்டுக் கொடுக்க முடியாதவை என்று கூறி வந்தார் கூட்டமைப்பின தலைவர் இரா.சம்பந்தன். ஆனால் அவை பற்றிய எத்தகைய நிலைப்பாட்டின் அடிப்டையில் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவை வழங்க முடிவு செய்யப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தத் தவறிவிட்டார்.

அரசாங்கமோ கூட்டமைப்புக்கு சரத் பொன்சேகா வழங்கியுள்ள வாக்குறுதிகள் ஆபத்தானவை என்றும் புலிகளை மீளவும் உயிர்பெறச் செய்யக் கூடியவை என்றும் நாட்டின் இறைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றும் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

அதேவேளை சரத் பொன்சேகா இந்த விடயத்தில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முன்வரவில்லை. அவரின் பின்னால் இருக்கும் ஜேவிபியோ- 13வது திருத்தம், அதிகாரப்பகிர்வு பற்றி எதுவுமே கூட்டமைப்புடன் பேசப்படவில்லை என்று கூறியிருக்கிறது. மொத்தத்தில் ஒரு மூடுமந்திரமான விடயமாகவே இது இருந்து வருகிறது. கூட்டமைப்பு தமது ஆதரவு சரத் பொன்சேகாவுக்கே என்று கூறியிருப்பினும் வெறும் அறிக்கையோடு நிறுத்திக் கொள்ளும் போலவே தெரிகிறது.

தமிழ் மக்களிடம் போய் சரத் பொன்சேகாவுக்காக வாக்குக் கேட்கச் செல்லாது என்றே எதிர்பார்க்கப்பட்டது ஆனாலும் அது இன்று சரத்தொன்சேகாவை நியாயப்படுத்தி மக்கள் 75 வீதம் வாக்களித்து வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளது.

கூட்டமைப்புக்குள் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் விடயத்தில் இருந்த வந்த இழுபறியும்- குழப்பம் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம்.ஆனால் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவுக்கான முழுப் பொறுப்பும் இரா.சம்பந்தனையே சாரும் என்று பத்திரிகைச் செய்திகளில் இருந்து உணர முடிகிறது. அவரே இந்த இணக்கப்பாட்டை எட்ட வைப்பதற்கு கூட்டமைப்புக்குள் போராடியதாகவும் செய்திகள வெளியாகின. அவை எதையும் அவர் மறுக்காத நிலையில் இந்த முடிவின் மீதான தாக்கங்கள் அனைத்தும் அவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்துள்ள முடிவினால் அரசாங்கம் விசனடைந்துள்ளது. அத்துடன் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றுவதாகக் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை முன்கூட்டியே நிறைவேற்றவும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சரத் பொன்சேகாவின் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தேர்தலுக்கு முன்னரே அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இது தமிழ் மக்களின் வாக்குளைப் பெறுவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியாக இருந்த போதும் -இதற்கு கூட்டமைப்பு காரணமாக இருந்த போதும்- இந்த முடிவின் பலாபலன்களை கூட்டமைப்பு அனுபவிக்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே. காரணம் என்னவென்றால் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை சார்ந்து எடுத்துள்ள இந்த முடிவு கத்திமேல் நடக்கின்ற பயணம் போலவே அமைந்துள்ளது. சற்று பிசகினால் கூட காலைக் கிழித்து விடும். அது சரத் பொன்சேகாவுக்கோ மகிந்தவுக்கோ பிரச்சினையாக மாட்டாது. கூட்டமைப்புக்கே ஆபத்தாக அமையும். அதாவது கூட்டமைப்பு சரத் பொன்சேகாவைச் சார்ந்துள்ள நிலையில் அவர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களின் விடயத்தில் அக்கறையின்றிச் செயற்பட்டாலோ- கொடுத்த வாக்குறுதிகளை மீறி நடந்து கொண்டாலோ அதற்கான பொறுப்பை கூட்டமைப்பே ஏற்ற நேரிடும்.

* ஜனாதிபதித் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடக்கப் போகிறது. அதற்குள் சரத் பொன்சேகா தான் கொடுத்த வாக்குறதிகளைக் காப்பாற்றத் தவறினால் அதன் விளைவுகளைப் பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு சந்திக்கும். அதேவேளை, சரத் பொன்சேகா தான் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறினால் அதன் மூலம் அவரது அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. ஆனால் கூட்டமைப்பு தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தூக்கியெறியப்படும் நிலை உருவாவதைத் தடுக்க முடியாது. அதேவேளை இன்னொரு விளைவாக மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெறுவாரேயானால்- அதுவும் கூட்டமைப்புக்கு ஆபத்தாகவே முடியும். அதற்குப் பின்னர் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக அரசாங்கத்துடன் எந்தவகையிலும் நெருங்க முடியாது போகும்.

மேலும் பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிகளையும் அது பாதிக்கலாம். இன்னொரு விதத்தில் தற்போது கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு கொடுத்துள்ள ஆதரவை தமிழ் மக்கள் அங்கீகரிக்கத் தவறினால் அதுவும் கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் மக்கள் மத்தியில் கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை என்ற கருத்து உருவாகி விட்டால்-தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிந்து கொண்டால் பொதுத்தேர்தலில் வாக்குகள் திசை மாறலாம். அப்படியான நிலை கூட்டமைப்பின் பலத்தை சிதைத்து விடும்.

* தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் முக்கியமானதொரு கட்டத்தில் எடுத்துள்ள இந்த முடிவு அதற்கு சாதகமாக அமையுமா பாதகமாக மாறுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தேர்தலும் அதனை ஒட்டிய அரசியல் நகர்வுகளும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் விடயத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தப் போவதாகத் தெரியவே இல்லை

மீண்டும் தலைவரின் சிந்தனை ஒன்றோடு…

* “நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்கலளது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரை 2007

கபிலன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*