TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழருக்காக ஒன்றுபடும் நிலையில் தமிழகம் இல்லை

ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி தனி அணி அமைக்க முயற்சித்த போதும் பலன் கிட்டவில்லை

கடந்த தேர்தலின்போது ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி ஒரு தனி அணி அமைக்க முயற்சித்தேன். அதற்குப் பலன் கிட்டவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

அவர் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் நடந்தது. கவிஞர் குலாப் தலைமையில் நடந்த இந்த விழாவில் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் நூலை வெளியிட கவிஞர் தணிகைசெல்வன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.

* தமிழ் சமூகத்தின் ஒரு நல்ல புரட்சி நடக்க வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது உங்களுடைய கடமை. அந்த வரலாற்றுக் கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது குறிப்பிடும் திருமாவளவன்

தொடர்ந்து பேசுகையில் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடியினால் எனக்கு எழுந்த உணர்வுகளைச் சொற்களாக்கி எழுதினேன். அதைத் தான் நண்பர்கள் தொகுத்து கவிதை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஆதரித்து நான் கவிதைகள் எழுதினேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தேசிய விடுதலை களத்தில் நின்று போராடி வருகிறேன். 25 ஆண்டுகளாக இந்தக் களத்தில் ஊறிக் கிடக்கிறேன். என் மீது வீண்பழி சுமத்துவோர்,வீணான விமர்சனம் செய்வோர் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

கத்தியை எடுத்தவர் கத்தியால் தான் சாவான் என்று சொல்கிறார்கள். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி எதை எடுத்தார். தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகவே தி.மு.க.காங்கிரஸ் அணியில் இடம்பெற்றுள்ளேன். அந்த அணியில் இருந்தாலும் என்னுடைய கொள்கை இலட்சியத்திலிருந்து சிறிதும் மாறாமல் குரல் கொடுத்து வருகிறேன்.

குறிப்பாக காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தபோதும் அக்கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளது என்று பாராளுமன்றத்திலேயே நான் குற்றஞ்சுமத்தினேன்.

தலித் மக்களின் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன். கடந்த தேர்தலின் போது தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி ஒரு தனி அணி அமைக்க முயற்சித்தேன். அதற்குப் பலன் கிட்டவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இங்குள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு அக்கறை இருக்குமே என்றால் இதை ஊதிப் பெரிதாக்கி தமிழகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கலாம்.

ஆனால், ஏதோ ஒரு அரசியல் குறுக்கிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தவிர,வேறு யாரும் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் களத்திற்கு வரவில்லை. இப்படித்தான் நாங்கள் மட்டுமே தமிழ்த் தேசிய விடுதலைக்காகத் தனித்துக் குரல் கொடுத்துப் போராடி வருகிறோம்.

ஈழப்பிரச்சினைக்காகப் போராடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் 26 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இங்குள்ள கவிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ் சமூகத்தின் ஒரு நல்ல புரட்சி நடக்க வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது உங்களுடைய கடமை. அந்த வரலாற்றுக் கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*