TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழரின் தலைமைத்துவம் இப்போ யார் கையில்?

கடந்த அரை தசாப்தங்களில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அபிவிருத்திகளில் ஒரு முக்கியமான விடயம் சிறுபான்மைக் கட்சிகளினுள் ஏற்பட்ட பாரதூரமான பிளவு ஆகும். குறிப்பாக எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த கட்சிகள் இப்பிரச்சினையை பாரதூரமான ஒரு மட்டத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் இவ்விடயத்தில் ஒருவித நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட ஒரு விதிவிலக்காக இருந்தது. ஒரு வகையில் இதன் முக்கியத்துவம் நாம் எண்ணுவதிலும் அதிகமானது ஆகும். ஏனெனில் த.தே.கூட்டமைப்பு என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி அல்ல. அது பலகட்சிகளின்கூட்டு ஆகும். ஒரு வகையில் அது தமிழ் அரசியலின் சந்தானய ஆகும். ஒரு கட்சியுடன் ஒப்பிடுகையில் சந்தானய இலகுவில் பிளவுபடக் கூடியதாகும்.

இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி கடந்த காலத்தில் பரவலாகக் கேட்கப்பட்டதுண்டு. பொதுவாகக் கூறப்பட்ட பதில் எ கிளிநொச்சி அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் கூட்டமைப்பு மீது கொண்டிருந்த பிடியே பிளவைத் தடுத்திருந்தது என்று பொதுவாகக் கருதப்பட்டு வந்தது. இருப்பினும் கிளிநொச்சி தளர்த்ததன் பின்னரும் ஒருமைப்பாடு உறுதியாகவே இருந்து வந்தது. பின்புலிகள் காலத்தில் அரசாங்கத்துடன் இ(அ)ணைய விரும்பியவர்கள் கூட திரைமறைவிலேயே தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததே அன்றி நேரடியாகச் சென்று அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முடியவில்லை. எனவே, கூட்டமைப்பை ஒன்றாக வைத்திருந்த வரை வெறுமனே கிளிநொச்சி மட்டுமல்ல வேறு காரணங்களும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் புலிகள் இல்லாத நிலையிலும், உணர்வுபூர்வமான ஒரு சிக்கல் நிலையிலும் கட்சி தனது ஒருமைப்பாட்டை பேணிக்கொள்ள முடிந்திருப்பது போல் தோன்றுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை உணர்வு பூர்வமானதும் சிக்கலானதுமான ஒரு விடயமாக அமையும் என்பது தெளிவானதாகவே இருந்தது. அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கு தீர்மானம் மேற்கொள்ளும் நெருக்கடி ஒன்றை தோற்றுவிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. நெருக்கடி எந்த அளவிற்கு மோசமானது எனில் இதுவரைக்காலமும் பிளவுகளை வெற்றிகரமாகச் சமாளித்துவந்த கூட்டமைப்பே பிளவுபட்டு விடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. ஏற்பட்டிருந்த பாரதூரமான கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் தற்போது கட்சி தனது ஒருமைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது போன்று தோன்றுகின்றது. கட்சியின் பெரும்பான்மை அபிப்பிராயத்தில் இருந்து வேறுபட்ட இரண்டு போக்குகள் காணப்பட்டன. முதலில் தனித்துப் போட்டியிடுகின்ற சிவாஜிலிங்கத்தின் தீர்மானம் பாரிய கரிசனை ஒன்றைத் தோற்றுவிக்கக் கூடியது என்று கூற முடியாது. ஏனெனில் அது அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் விடுதலை இயக்கத்தின் தீர்மானம் போலத் தோன்றவில்லை. அது ஒரு தனி நபரின் தீர்மானமாக இருந்திருப்பின் கூட்டமைப்பு அதுபற்றி தீவிரமாகக் கவலைப்பட்டிருக்கத் தேவை இல்லை.

இருப்பினும், கட்சியைப் பிளவுபடுத்தி, ஒருவகையில் தனது அரசியல் எதிர்காலத்தைப் பணயம் வைத்து தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் ஏன் சிவாஜிலிங்கத்திற்கு ஏற்பட்டது என்பது ஒரு வகை மர்மமாகவே இருந்தது. இந்தக் காலத்தில் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக மட்டும் ஒருவர் தனது அரசியல் எதிர்காலத்தைப் பணயம் வைப்பார் என்பதை நம்புவது சற்றுக்கஷ்டமானதாகவே இருந்தது. இதன் காரணமாகவே இத் தீர்மானத்தின் பின்னணியில் வேறு “”ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது. ஆயினும் தமிழ் காங்கிரசின் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்ற தீர்மானம் நிச்சயமாக கூட்டமைப்பை தீவிரமாகப் பிளவுபடுத்தக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அத் தீர்மானத்தின் உணர்வு அடிப்படை புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருப்பினும் இத் தீர்மானத்துடன் ஒப்பிடுகையில் தனித் தமிழ் வேட்பாளர் என்பது முற்போக்கான தீர்மானமே. அது தமிழ் சமூகத்தை தவறாக வழி நடத்திய போதும், தேர்தலில் பங்குபற்றும் அவர்களது உரிமையையும், தேவையையும் வலியுறுத்தியது.

எனவே, இறுதி நிலையில் இதுவரை பிளவுபடாதிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் கூட தேர்தல் பிளவுபடுத்திவிட்டது போல் தோன்றியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுவதில் இருக்கின்ற பிரதான பிரச்சினை என்னவெனில் அடுத்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் பலவீனப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஆகும். இவ் அச்சம் பல மட்டங்களில் காணப்பட்டிருந்தது. இன்று, ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இல்லாவிடினும், இன்று தமிழ் அரசியல் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது. கூட்டமைப்பு பிரதானமான தமிழ் கட்சியாக இருந்தபோது அரசியல் ரீதியான தலைமைத்துவத்தை இன்று வழங்குகின்றது என்று கூற முடியாது. குறிப்பாக பின் யுத்த காலத்தில் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கான செயன்முறை ஒன்றை கட்சி உறுதியாக முன்னெடுத்தது என்று கூற முடியாது. கட்சி அரசியல் காற்று போகிற திசையில் போக எத்தனித்தது போன்றே தோன்றியது. சில சந்தர்ப்பங்களில் கட்சி சுயமாக தீர்மானம் மேற்கொள்ளும் இயலுமையைக் கொண்டிருக்கவில்லையோ என்ற சந்தேகம் கூட ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இன்று எம்மிடையே தலைமைத்துவ வெற்றிடமொன்று உள்ளது என்பது மறுக்கப்படுவதற்கில்லை. அது இயல்பானதும் கூட. அதேசமயம், இத்தலைமைத்துவப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படக் கூடியதும் அல்ல. இருப்பினும் இந்நிலை நீண்ட காலத்திற்கு தொடர்ந்திருக்க முடியாது. அவ்விதம் அமைவது பாதகமானதாகவே அமையும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான நிச்சயமான ஒரு சுவாசத்தை வழங்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

இன்று செயற்படுகின்ற அரசியற் கட்சிகள் புத்திசாலித்தனமாகவும் இராஜதந்திரத்துடனும் செயற்படுமாயின், அவற்றில் ஒரு கட்சி எதிர்வரும் தேர்தலில் பிரதானமான கட்சியாகத் தோற்றம் பெறுவதற்குரிய சாத்தியம் உள்ளது. அவ்விதம் தோற்றம் பெறுகின்ற கட்சி தமிழ் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட வேண்டியதவசியம். இவ்விதம் பிரதானமான அரசியல் சக்தியாக மாற்றம் பெறுவதற்குரிய இயலுமையுடைய கட்சிகளில் ஒன்று தேசியக்கூட்டமைப்பாகும். எனவே, அது பிளவுபடுவது எதிர்வரும் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தி விடுமோ என்ற பதற்றத்தைத் தோற்றுவிப்பது இயல்பானது.

உதாரணமாக, கூட்டமைப்பு கட்சி அடிப்படையில் மூன்றாக அல்லது நான்காகப் பிளவுபட்டுவிடுமாயின், எதிர்வரும் தேர்தலில் ஓரளவு சமபலமுடைய பல கட்சிகள் போட்டியிடும். அப்போது பிரதிநிதித்துவம் குறைவடைவதற்கும் பலவீனப்படுவதற்கும் இடமுண்டு. இது எதிர்கால திட்டங்களையும் பேரம் பேசல்களையும் பெரிதும் பாதித்துவிடும். எனவே, பிரதானமான சக்தி ஒன்று இருக்க வேண்டியதவசியம். அவ்வகையிலேயே கூட்டமைப்பிலுள்ளான பிளவு ஒரு கரிசனையைத் தோற்றுவித்திருந்தது.

இருப்பினும் இறுதிநிலையில் கட்சி இப்பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது போல் தோன்றுகின்றது. பிந்திவந்த செய்திகளின் படி தேர்தலில் கூட்டமைப்பின் இறுதிநிலைப்பாடு அறிவிக்கப்படுகின்ற போது, சிவாஜிலிங்கமும் சமுகமளித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே, கட்சியின் அனுமதி இன்றி வேட்பு மனு தாக்கல் செய்தமை அவரை பூரணமாக வெளியேற்றவில்லை. அதேசமயம் அவர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதாகவும் இருக்கலாம். அவ்வகையில் சிவாஜிலிங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் கவனிக்கப்பட வேண்டியசுவையான விடயமே ஆகும்.

அதேசமயம், தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போவதாக உறுதியான தீர்மானம் மேற்கொண்ட தமிழ் காங்கிரசும் தற்போது அத்திட்டத்தைக் கைவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் செய்திகள் உண்மையாக இருப்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உட்கட்சிப் பூசல் பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது என்று கூறப்பட வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் உண்மையில் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். வெறுமனனே இரு வேட்பாளர்களில் ஒருவரை ஆதரித்து அவரைப்பதவியில் அமர்த்திவிட்டு வீட்டுக்குச் செல்வது புத்திசாலித்தனமாகாது. இத் தேர்தலை அடிப்படையாக வைத்துக்கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் சாதிப்பது எவ்விதம் என்று நோக்கப்பட வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் போதிய ஆசனங்களைப் பெறாவிடின் தாம் ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் பெரும் பயன் எதுவும் இருக்கப்போவதில்லை. அவ் வகையில் ஜனாதிபதித் தேர்தல் சுயாதீனமான ஒரு விடயமாக அன்றி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒரு அடிப்படையாக நோக்கப்பட வேண்டியதவசியம். ஒரு சில தமிழ் பிரதிநிதிகளுக்கு இவ்விடயம் ஒன்றாகவே புரிந்துள்ளது என்று கூறப்பட வேண்டும்.

கொழும்பிலிருந்து ஆதவன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*