TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கூட்டமைப்பின் முடிவு சரியா?

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு பிரதான தரப்புக்களும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியுமா? எனத் தீவிரமாக ஆராய்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதியில் சில அம்சங்களைக் கோரிக்கைகளாக்கி இரண்டு தரப்பிடமும் முன்வைத்தது. இந்தக் கோரிக்கைகளுக்கு உடன்படும் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு ஆதரவு வழங்குவதென கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது.

இதன் பிரகாரம் 06-01-2010 அன்று நாடாளுமன்ற முன்றலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் மிகத் தெளிவான தமது கட்சியின் நிலைப்பாட்டினை வெளியிட்டார். சிவாஜிலிங்கமோ, விக்கிரமபாகு கருணாரட்ணவோ போட்டியிடுவதன் மூலம் வெற்றிபெற முடியாது அவ்வாறு வெற்றி பெற்றாலும் எதனையும் சாதித்துவிட முடியாது போன்ற விடயங்களை சாரப்படுத்தி உரை நிகழ்த்திய அவர் தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை மீண்டும் ஒரு முறை ஆட்சிபீடம் ஏற்றுவது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது என்பதனால் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய முடிவு தொடர்பில் ஒவ்வொரு ஊடகவியலாளர்களும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் ஒவ்வொரு தமிழ் மக்களும் மாறுபாடான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். இந்தநிலையில் அந்த விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறிந்து சரியான காரணங்களுடன் தமது நிலைப்பாட்டினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எட்டியிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த எவரும் ஆட்சியில் அமரமுடியாது, ஆனாலும் அமையவிருக்கின்ற ஆட்சியினைத் தீர்மானிக்கின்ற அல்லது பேரம் பேசுகின்ற சக்தியாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிடைக்கின்ற சரியான சந்தர்ப்பத்தினை பயன்படுத்தியிருக்கின்றது என்று கூறலாம். முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஆட்சியேறப்போகும் பேரினவாத ஆட்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியவையா? அவை தமிழ் மக்களுக்கு பயன்தரக் கூடியவையா? போன்ற கேள்விகளை மீண்டும் மீண்டும் ஆராய்ந்தே கூட்டமைப்பு ஒரு முடிவிற்கு வந்திருப்பதை அவதானிக்கலாம். ஏனென்றால் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை அழிக்கின்ற அவல நிலைக்கு உட்படுத்துகின்ற கைங்கரியத்தை ஒரு சேர ஒப்பேற்றியவர்கள். அவர்களை ஆதரிப்பது தொடர்பில் தாய்த்தேச பற்றுக் கொண்ட எந்த தமிழ் மகனுக்கும் உடன்பாடு இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இருவரில் யாராவது ஒருவருக்கே ஆதரவு தரவேண்டிய இக்கட்டினை சாமர்த்தியமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர் கொண்டு தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இதற்கிடையில் கூட்டமைப்பின் ஒருமித்த போக்கினை அல்லது செயற்பாட்டினை சிதறடிக்கின்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிலைப்பாடு எடுத்திருந்தும் அவருக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வக்காளத்து வாங்கி தூபமிட்ட போதும் கட்சி அவர்கள் தொடர்பில் பகிரங்க அறிவிப்பினையோ அல்லது அவர்கள் தொடர்பான தீர்மானத்தையோ எடுக்கவில்லை. இது பலருக்கு வேதனை அளித்தாலும், அந் நடவடிக்கையானது கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் மத்தியிலும் கறை பூச எத்தனிப்போரின் கனவினை அது மெய்ப்பிக்கும் என்பதால் கூட்டமைப்பு எந்த நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை அல்லது அது தொடர்பில் பகிரங்கப்படுத்தவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். இந்த இடத்திலும் கூட்டமைப்பு சரியான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கின்றது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீங்கப்படுதல், வடக்கு கிழக்கை இணைத்தல், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீள் குடியமர்த்தல், அவர்களின் நிரந்தர வாழ்வுரிமையை உறுதிப்படுத்தல், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவித்தல் உட்பட்ட கோரிக்கைகள் இரு பிரதான தரப்பிடமும் முன்வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளுக்கு எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் இணங்கியிருப்பதாக தெரிகிறது. உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சரத் பொன்சேகா உடன்பட்டிருப்பதாக இரா சம்பந்தன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார். இதே நாள் அரச ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன நாட்டின் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை தமது அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கின்றார். இதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

மிகத் தொன்மை வாய்ந்த, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களது சொந்த இடங்கள் அபகரிக்கப்பட்டு அகதிகளாகி அல்லல்ப்படுகின்றனர். அவர்கள் தமது பகுதிகளில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் நிலங்களில் அவர்கள் சுதந்திரமாகத் தொழில்புரிய வேண்டும்,

போராட்டம் முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிட்டது, விடுதலைப்புலிகளின் தலைமை உட்பட அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது என மார் தட்டிய சிங்களம் சிறையில் இருக்கும் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பில் ஏன் பின்வாங்குகின்றது?

இன்னமும் இனவாதமும் குரோதமும் தலைவிரித்தாடும் மகிந்த ஆட்சிபீடத்திற்கு பதில் வழங்கும் வல்லமை எமது தமிழ் மக்கள் கைகளில் இருக்கின்றது என்பதுதான் நிமிர்வான செய்தி. தமிழ் மக்கள் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டினை விரிவாக ஆய்ந்து அதன் பின்னர் தமிழ் மக்கள் தமது முடிவினை வெளிப்படுத்தலாம்.

இராவணேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • Kim says:

    This informative article encouraged me very much! Bookmarked your website, extremely interesting categories everywhere that I read here! I like the info, thank you.

    September 10, 2010 at 00:02

Your email address will not be published. Required fields are marked *

*