TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புத்திஜீவிகளும் கிழிக்கப்பட வேண்டிய முகமூடிகளும்

பிலிப் அலிஸ்டன் சிறீலங்கா அரசை நோக்கிப் போர்க் குற்றங்களுக்கான விளக்கங்களைக் கோரியிருக்கும் வேளையில், ஐ.நா சிறீலங்காவின் கொடுமையான யுத்தத்தை கடற்கரையோர இரத்தக் குளியல், என்று வர்ணித்திருந்த வேளையில், ஐ.நா உயரதிகாரியான விஜய் நம்பியாரின் முக்கிய பங்கானது சரணடைந்து கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களின் தொடர்பாடலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசை விளக்கம் கேட்க்கும் அலிஸ்டன், முதலில் ஐ.நா உறுப்பினரான விஜய் நம்பியாரை விளக்கம் கேட்கத் தவறியது ஏன் என்று இன்னர்சிற்றி பிறஸ் வினா எழுப்பியுள்ளது. சி.என்.என் ற்கு வழங்கிய செவ்வியில் ஜோன் கோல்ம்ஸ் சரணடைந்து கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் விஜய் நம்பியாருடன் தொடர்பு கொண்டதையும் சரணடைதலுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டதையும் உறுதி செய்துள்ளார். இது சிறீலங்கா அரசியலில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது.

பான் கீ மூன் இலங்கை சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்திய சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இப்படுகொலைகளுக்கும் போர்க் குற்றங்களுக்கும் குற்றவாளியாக முன்நிறுத்தப்படுகின்றார். இவருடனான தொடர்பாடலில் விஜய் நம்பியார் ஈடுபட்டிருந்தமையால் ஐ.நா இந்தச் சரணடைதலில் தன்பங்கை விளக்கவேண்டிய நிலையில் உள்ளது. வெள்ளைக் கொடி ஏந்திவந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டிருக்கும் வேளையில் தங்களது தொடர்பாடல்களின் பெறுமதியையும் போர்க் குற்றம் மீதான விசாரணையையும் ஐ.நாவே தாமாகச் செய்திருக்க வேண்டும். இவர்களே ஊழல்களுக்குள் தம்மை மறைத்துக் கொள்ளும் போது, ராஜபக்ச நிச்சயம் துணிவாக இந்தக் குற்றச் சாட்டுக்களையும் மறுப்பார்.

ஏற்கனவே சனல்-4 இல் ஒளிப்படக் காட்சிகள் எத்தனையோ தனியார், அரச குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதன் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டிருந்த போதும் சற்றும் அஞ்சாமல் அதற்கும் மறுப்புத் தெரிவித்தவர்தான் இந்த ராஜபக்ச. சனல்-4 இல் ஒளிபரப்பப்பட்ட நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுத் தமிழர்கள் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி சிறீலங்காவின் அரசியல் தலமையையும், இராணுவ அதிகாரிகளையும் போர்க் குற்றவாளிகளாக்கும் சந்தர்ப்பம் சர்வதேசத்திற்கு கிடைத்தது. ஆனாலும் பான் கீ மூனும் ஐ.நா பாதுகாப்புச் சபையும் காட்டிய அசண்டையீனத்தால் இதன் எழுச்சி மட்டுப்படுத்தப்பட்டது.

இதே நேரத்தில் இதற்குரிய ஊக்கத்தையும், கட்டாயத்தையும் காட்ட நாமும் போராட்டங்களில் இறங்கத் தவறிவிட்டோம். எமது போராட்ட உணர்வு இந்த விடயத்தில் புலம்பெயர் தேசங்களில் சற்றே சோர்வடைந்து விட்டது. ஆனாலும் இந்த ஒளிப்படக் காட்ச்சியின் உண்மைத் தன்மைகள் விநாடிக்கு விநாடி உறுதி செய்யப்பட்டு தகுதியுடையவர்களால் ஆராயப்பட்டு சிறீலங்காவிற்கு எதிராக ஜனவரியில் டப்ளினில் இடம்பெறும் போர்க் குற்ற நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படலாம். இந்த சமயம் இதை ஊக்குவிக்கவும், எம் இழப்புக்களின் வேதனைகளைச் சொல்லவும் எம்மினம் அழிக்கப்பட்ட போர்க் குற்றத்தைச் சொல்லவும் நாம் ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுதிரள வேண்டும்.

இதற்கிடையில் அலிஸ்டனின் கேள்விகளுக்கு இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் ரஜீவ விஜயசிங்க தனது பதிலை அளித்துள்ளார். அது மட்டுமல்லாது ஐ.நாவின் அறிக்கை மற்றுமொரு முட்டாள்தனம் எனவும், அலிஸ்டன் கவலை மிகுந்தவரும், வெறுமனே எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய மனிதர் எனவும் விமர்சித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் செவ்வியை உதாரணம் காட்டி, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் சரணடையும் போது சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் திரு நடேசன், திரு புலித்தேவன், மற்றும் பலரும் அவர்களது குடும்பங்களும் அழிக்கப்பட்ட விதம்பற்றிய உங்கள் அவதானங்களையும் விளக்கங்களையும் கோருகின்றோம் என்றும் இந்தக் குற்றங்கள் நம்பகத்தன்மையாக இருப்பதாகவும் அதை மறுப்பதாயின் அவற்றிற்கு உரிய ஆதாரங்களை வழங்குமாறும் கேட்டிருந்தார். விஜயசிங்க இதற்குரிய பதிலைத் தாம் அலிஸ்ரனுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரின் அதிகாரியான இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தம் அமைச்சின் சார்பில் உத்தியோகபூர்வமாக எந்தவித அறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் அப்படி அனுப்புவதாயின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக தமது ஜெனீவாவிற்கான தூதுவர் மூலமே வழங்குவோம் என்றார்.

இங்கு சர்வதேச விவகாரங்களை ஒரு அமைச்சின் செயலர் தன்னிச்சையாக கையாள்கின்றார். தனது செயலாளரின் அறிக்கையை அதிகார பூர்வமற்றது என்று அமைச்சர் கூறுகின்றார். இந்த ஒழுங்கிலிருக்கும் ஒரு அரசாங்கம், மக்களுக்கு எவ்வாறு நன்மைபுரியப் போகின்றது. தமது உள்ளக அதிகாரிகளின் பிணக்குகளையும் இடர்களையும் தீர்க்கவே இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு நேரம் சரியாக இருக்கும். இவர்கள் எப்படி மக்கள் இடர்பற்றிச் சிந்திக்கப் போகின்றார்கள். அதுமட்டுமல்லாது ஜெனீவாவிற்கான தூதுவரிடம் விஜயசிங்கவின் பதிலைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதையும் தாண்டி சிறீலங்கா அரசாங்கம், சரத் பொன்சேகாவால் கோத்பாய மீதும் இராணுவ அதரிகாரிகள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விஜயசிங்கவின் அறிக்கையை மீளப்பெறுவதாகக் கூறியுள்ளதாகவும் இந்துப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா வில் ஒரு பொறுப்பு வாய்ந்ததும் அதிகாரம் மிக்க பதவியிலும் இருக்கும் அலிஸ்டனைப் பகைத்துக் கொள்வது, அலிஸ்டன் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க இருக்கும் இந்த நேரத்தில், ஜ.நா வின் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறீலங்காவிற்கு சிக்கலைத் தரும் என்பதையிட்டு கலக்கம் கொண்டுள்ள சிறீலங்கா அரசு, அலிஸ்டனைத் தாக்கி எழுதியுள்ள விஜயசிங்கவின் அறிக்கையை மீளப்பெறுவதின் தனது முழுவளத்தையும் செல்வாக்கையும் செலவளிக்கின்றது. இது இவர்களின் ஒரு பாரிய இராஜதந்திர இராஜரீக தவறும் தோல்வியுமாகும். ஒரு அமைச்சின், குறிப்பாக மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் மிகவும் பண்பற்ற தனமாகவும், மிரட்டும் பாணியிலும் தம் பதிலை அலிஸ்டனுக்கு அளித்துள்ளது சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் ஐ.நா அதிகாரிகளைக் கூட விட்டுவைக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கின்றது.

முன்னாள் ஆங்கில ஆசிரியரான விஜயசிங்க தனது சொல்விளையாட்டுக்களாலும், வார்த்தை முடிச்சுக்களாலும் தமிழர் அழிப்பின் உண்மைகளை மறைத்து நியாயங்களை மறுத்து ராஜபக்ச அரசைக் காப்பதிலேயே தன்திறமைகளச் செயலிடுகின்றார். அண்மையில் கூட கண்கூடான சாட்சியங்கள், தடுப்பு முகாங்களின் உள்ளே தமிழப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு சிறீலங்கா இராணுவத்தால் பலியாக்கப்படுவதை வெளிக் கொண்டுவந்த போது கூட இந்தக் கல்விமான் தனது பேச்சை அநாகரிகமாக வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இவரும், இவரது அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் காணொளி ஆதாரங்கள் ‘சுயாதீன வல்லுனர்கள்’ தவறென்று காட்டியிருந்ததாக கூறியுள்ளனர். ஆனால் அலிஸ்கன் தன் அறிக்கையில் இவர்கள் ‘சுயாதீனமாகச்’ செயற்படவில்லை என்றும் அரசின் விருப்பத்தையே நிறைவேற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேற் குறிப்பிட்டவர்கள் போலும் சிறீலங்கா அரசில் வெளிவிவகாரங்களைக் கவனிப்பதும், சிறீலங்காவிற்கு எதிரான போர்க்குற்றங்களிலிருந்தும், மனிஉரிமைக் குற்றச் சாட்டுக்களிலிருந்தும் சிறீலங்காவைக் காப்பதற்கு மேலைநாடுகளில் கல்வியறிவு பெற்று இன்று அமைச்சர்களாக உள்ள அறிவியல் கூலிப்படைகளை அரசு பயன்படுத்துவதாக பீற்றரசாரக் குறிப்பிட்டுள்ளார். வெறும் சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைகளை மனதில் நிறுத்தியிருக்கும் இந்தக் கல்விமான்களால் தமிழர்களின் தேசியதாகத்திற்கு எந்த பொறுப்பான பதில்களையும் அளிக்கமுடியாது.

தம்மைப் பேராசிரியர்கள் என்றும் கலாநிதிகள் என்றும் பறைசாற்றிக்கொண்டு தம் மேலைநாட்டுக் கல்வியைக் கேடயமாகக்கொண்டு தாம் மனிதஉரிமைகளின் குழந்தைகள் போலும் மனிதாபிமானத்தின் தந்தையர்கள் போலும் மேலத்தேசம் எங்கும் சிங்கள பௌத்த அரச பயங்கரவாதத்தை அமைதிக்கான போர் என்று நிரூபிக்க உழைக்கின்றார்கள். இன்னும் ஒரு கல்விமான்கள் கூட்டம் பௌத்த துறவிகளாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு இனவழிப்புப் போரை அமைதிக்கான போர் என்று வாதிடுகின்றனர். பௌத்த மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு பௌத்தத்தின் பேரால் பௌத்த நாடுகளைத் துணைக்கு அழைக்கும் தற்திரத்தை இவர்கள் நன்கே நிறைவேற்றுகின்றனர்.

இதில் ஒரு பகுதியினர் மேலைத்தேய நாடுகளை விமர்சித்து தாம் அந்நிய அதிகாரத்தை சிறீலங்காவில் நிறுவவிடமாட்டோம் என்ற கோசத்தன் ஊடாக பாமர சிங்கள மக்களை தம்பக்கம் சாய்க்கின்றனர். இவர்களின் இந்த அறிவியல் கூலித்தனத்தைப் போல் எம்மினத்துள்ளே தம்மைப் புத்தி ஜீவிகளாகவும், சர்வதேசத்தில் அறியப்பட்டவர்களாகக் காட்டிக் கொள்வோரும் கூட ஒரு சில அந்நிய சக்திகளுக்கு பலியாகி தம்மையும் அறிவியல் கூலிபடைகளாக, சிங்களத்தைத் தாங்கிப்பிடிக்கும் சக்திகளுக்கும் பணிபுரிய ஆரம்பித்து விட்டார்கள். நாடுகடந்த அரசுக்குள்ளும் அதன் செயற்பாட்டாளர்கள் என ஒவ்வொரு நாட்டிலும் தம்மை அடையாளப்படுத்துவோரும் தம்மை முற்றாக மேற்கூறிய பணிகளில் வெளிப்படையாகவே ஈடுபடுத்தியுள்ளனர்.

சர்வாதிகார, பிராந்திய வல்லரசு நாடுகளின் ஏவல்களைச் செயற்படுத்த இவர்கள் நன்றி விசுவாசமாக வாலாட்டத் தொடங்கிவிட்டார்கள். தமிழர் விடுதலை உணர்வையும், அவர்மனங்களில் கணலாகத் தகிக்கும் தமிழீழத் தனியரசையும் ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்குவதற்கான செயற்திட்டங்களில் தம்மை அர்ப்பணிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தாம் முன்பு விடுதலைப் புலிகளுக்கு வேலை செய்தவர்கள் என்ற போர்வையில் தம்மை அடையாளப்படுத்து முயல்கின்றனர். இவர்கள் மக்களால் அடைளங்கணப்பட வேண்டியர்கள். இவர்களின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு இவர்களின் உண்மை முகங்களும், இவர்களின் உண்மை எஜமானர்களும் வெளிக்கெணரப்பட வேண்டும். சிங்களத்தின் போர்க்குற்றங்கள் உலகெங்கும் பேசப்படும் வேளையில் எழ இருக்கும் மக்கள் போராட்டங்களை எழவிடாது தடுப்பதும் இவர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளாகும்.

தேசியத்தலைவரால் ஆணைவழங்கப்பட்டு புலம்பெயர் தமிழர்களிடமும் இளையோர்களிடமும் தரப்பட்டிருக்கும் எம் தேசத்தின் விடுதலை தமிழீழத் தனியரசின் கட்டமைப்பும் எம் தோள்களில் நாங்கள் சுமக்க வேண்டிய கடமைகள். அவற்றின் குறுக்கே வரமுயலும் இவர்கள் போன்ற அறிவியல், பொருளாதாரக் கூலிப்படைகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு மக்கள் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டும். தேசிய விடுதலையின் வெண்தணலின் முன் இவர்கள் விட்டில் பூச்சில்களாக தம்மையே அழித்துக் கொள்வார்கள்.

சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*