TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அப்படி என்ன உள்ளது?

தமிழீழ மக்களின் ஆழ்மன விருப்பான தமிழீழ விடுதலை என்ற நிலை தகர்ந்து போய் விட்டதோ?

என்று தமிழீழ மக்கள் மனவெப்பியாரத்துடன் இருக்கின்ற சமகாலத்தில் முன்பு தமிழ்த் தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றைப் பற்றிப் பரவலாகப் பேசும் வகையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை நோக்கி சனநாயக முறையில் அணுகுகின்ற முறைமையானது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதுடன் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியில் இன்றைய காலகட்டத்தில் ஓர் அரசியல் நகர்வாகவும் உள்ளது.

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் வட்டுக்கோட்டையில் பண்ணாகம் பகுதியில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அன்றைய காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தலைவராக மதிக்கப்பட்டார். இலங்கையை விட்டு பிரித்தானியர் வெளியேறிய பின்னர் சிங்கள பேரினவாதிகளின் கைகளில் படிப்படியாக ஆழும் அதிகாரம் செல்லச் செல்ல தமிழ் மக்களை அடக்கி ஆழ வேண்டும் என்ற எண்ணத்தை இனவெறியோடு சிங்களப் பேரினவாதம் வலுப்படுத்திக் கொண்டது.

சிங்களப் பேரினவாதிகளின் எண்ணம் தவறானது என்பதனை விளக்கி தீர்வொன்றைக் காணலாம் என்று கருதியதற்கு அமைவாக செல்வநாயகம் அவர்கள் அமைதிவழிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி போராட்டங்களைச் செய்தார். அமைதிவழிப் போராட்டங்களைச் சிங்களப் பேரினவாதிகள் எந்த வழிமுறையிலும் அடக்கி விடவே முனைந்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பண்டாரநாயக்காவுடன் 1957இலும், ஜக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த டட்லி சேனநாயக்காவுடன் 1965இலும் செய்யப்பட்ட ஒப்பந்தம் அதன் மூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னவானது? சிங்களப் பேரினவாதிகள் துளியெனவும் கவலைப்படாது வாக்குறுதிகளைக் கைகழுவி விட்டனர்.

இப்படியே அடுத்தடுத்து வந்த பேரினவாத அரசாங்கங்கள் தமிழரின் கோரிக்கைகளை நிராகரித்தன. சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழரின் அரசியல் ஆழ்மன விருப்பையும், சுயநிர்ணய உரிமையையும் மறுதலித்து வந்த நிலையில் தான் தமிழர் அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். இந்தக் காலத்தில் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தைச் சிதறடிப்பதற்கே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தையும் சிங்களப் பேரினவாதிகள் வேகப்படுத்திக் கொண்டு பொதுத்தேர்தலையும் அறிவித்தமையால் தமிழரின் அரசியல் சக்திகள் ஏதாவது முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகவுள்ளது.

‘1976 மே14ஆம் நாளன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பியப் படையெடுப்பாளர்களின் ஆயுதப் பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டு கொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும் 1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப் பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன ரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

‘ மேற்குறிப்பிட்ட தீர்மானத்தின் முக்கிய கூறானது தமிழரின் உண்மையான நிலையினை உலகிற்கு எடுத்துக் கூறியது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முழுமையாக உலகின் முன் கொண்டு செல்கின்றபோது தமிழர்க்கென்ற தனியரசை இன்று யாரும் புதிதாகக் கேட்கவில்லை என்ற உண்மை தெட்டத்தெளிவாக விளங்கும். முப்பத்தியிரண்டு ஆண்டுகளிற்கு முன்பும் தனியரசிற்கான ஆணையைத்தான் தமிழர் வழங்கினர் இன்றும் அதே உறுதியான நிலை எந்தத் துன்பத்திலும் தொக்கிநிற்கின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அனைத்துமே தமிழரின் ஒட்டுமொத்த விடுதலையும், நிரந்தரப்பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்னுமொரு பகுதியைப்பார்ப்பதன் மூலம் தமிழர் சோரம்போய்விடக்கூடாது என்பதனையும் புடம்போட்டுக் கொள்ளலாம்.

இருண்மை அகற்றிப்பார்க்க வலியுறுத்தலாம் என்ற நோக்கத்துடன் தருகின்றேன். ‘தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான செயல் திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்க வேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு சுதந்திரத்துக்கான இப்புனிதப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.’ 1976ஆம் ஆண்டு எழுத்துமூல ஆவணமாக தமிழர் தனியரசை வலியுறுத்தியுள்ளனர் எனின் இன்று நாம் அதனை ஆதரிக்க ஏன் பின்னிற்க வேண்டும்? எனவே இன்று நாம் எமது முன்னோர் காட்டிய வழியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரிப்பது எமது வரலாற்றுக் கடமையாகும்.

கனகரவி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*