TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பலவீனப்படுத்தவே உதவியுள்ள ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இருவாரங்களே இருக்கின்றன. இந்தத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போவது சிறுபான்மையினரே என்ற கருத்து வலுவாகக் காணப்படுகிறது.

இதனால் சிறுபான்மை அரசியல் கட்சிகளை வளைத்துப் போடும் முயற்சிகளில் இரு பிரதான வேட்பாளர்களும் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே பெரும்பாலான தமிழ்,முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாகத் திரும்பின. ஆனால் இப்போது சிறுபான்மைக் கட்சிகளுக்குள் இந்தத் தேர்தல் பிளவுகளையும்- பிரிவுகளையும் ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருவதைக் காணமுடிகிறது. பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பனவே பிளவுபட்டுள்ள நிலையில் மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியான இதொகாவும் இப்போது பிளவுபட்டிருக்கிறது. இதனால் இந்தத் தேர்தல் சிறுபான்மைக் கட்சிகளைப் பலவீனப்படுத்துகின்ற தேர்தலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக கருதப்பட்ட தமிழ்மக்களுக்கு இந்தத் தேர்தல் உருப்படியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஆனால், தமிழ்மக்களின் பலத்தை சிதைக்கும் வகையிலானதொன்றாக இந்தத் தேர்தல் மாறியிருப்பது பலரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்தான் இது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தத் தேர்தலில் ஐந்து தெரிவுகளை முன்னிறுத்தி கூட்டமைப்பு என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தது. கடைசியில் அது ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி தேர்தல் புறக்கணிப்பிலோ தனியான பொதுவேட்பாளரை நிறுத்துவதோ இல்லை என்பதே அந்த முடிவு. அதனால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டது. சிவாஜிங்கம் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்தார். அவருக்குத் துணையாக சிறிகாந்தா பிரிந்து சென்றார்.

இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் இறுதித் தீருமானம் எடுக்கும் கூட்டத்துக்கு இவர்கள இருவருக்கும் அழைப்பு விடப்படவில்லை என்றே தெரிகிறது. இதனால் கூட்டமைப்பின் இப்போதைய எம்.பிக்களின் பலம் 20 ஆகக் குறைந்து விட்டது உறுதியாகியுள்ளது. பல வாதப்பிரதிவாதங்களுடன் முடிவில் கூட்டமைப்பு. மகிந்த ராஜபக்ஸ வுக்கு ஆதரவு வழங்கப்போவதாக முடிவெடுத்துள்ளது. இதே வேளை கடந்தவாரம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான
தமிழ்க் காங்கிரஸ், தாம் இரு வேட்பாளர்களையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கக் கோரப் போவதாகவும் முடிவு செய்துள்ளது.

இது கூட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும இரண்டாவது பிளவு. அதேவேளை, கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பிக்களான பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், சொலமன் சூ சிறில் போன்றோர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரிக்க முன்வருவார்களா என்ற கேள்வியும் உள்ளது. அதேவேளை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு முடிவு செய்ததால் அது இன்னொரு பிளவுக்கும் வழிகோலியுள்ளதுஎன்பதிலும் சந்தேகம் இல்லை.

காரணம் சிவநாதன் கிஷோர் போன்ற சிலர் மகிந்தவை ஆதரிப்பதில் உறுதியாகவுள்ளதாக தெரிகிறது. சரத் பொன்சேகாவின் பக்கம் கூட்டமைப்பு சாய்ந்ததால், இவர்கள் மகிந்தவின் பக்கம் சாயக் கூடும். அதேவேளை, தாயகக் கோட்பாட்டில் உறுதியாக இருக்கும் சிலர் கூட்டமைப்பின் முடிவுக்குக் கட்டுப்படுவார்கள் போலவும் தெரியவில்லை. மொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தலால் கூட்டமைப்பு பல துண்டுகளாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே மலையக மக்கள் முன்னணியில் முக்கிஸ்தர்களாக இருந்த சிலர் இப்போது சரத் பொன்சேகா பக்கம் சாய்ந்துள்ளனர்.

இப்போது அதன் தலைவர் பெ.சந்திரசேகரனின் திடீர் மறைவு அந்தக் கட்சிக்குள் குழப்பங்களை உருவாக்கவும் வாய்ப்பாகியுள்ளது. அதேவேளை, இதொகாவில் கடந்த வாரம் ஏற்பட்டிருக்கும் பிளவு வலுவானதாகவே தெரிகிறது. காரணம் கட்சியின் தேசிய அமைப்பாளரான யோகராஜனும், பிரதிக்கல்வி அமைச்சரான சச்சிதானந்தனும் பிரிந்து சென்று ஐதேகவில் இணைந்துள்ளதுடன், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்றய செய்திகளின்படி செல்லச்சாமியும் சரத்துக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார் இந்தப் பிளவு மலையக மக்களின் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்து உள்ளது. குறிப்பாக மலையகத்தில் ஐதேகவின் செல்வாக்கு அதிகம்.

எஸ்.பி.திசநாயக்க அண்மையில் மகிந்த பக்கம் சாய்ந்து கொண்டதால் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்து கொள்வதற்கு இதொகாவில் பிளவை ஏற்படுத்த எதிரணி முனைந்திருக்கலாம். இந்தப் பிளவினால் சரத் பொன்சேகாவுக்கோ எதிரணிக்கோ எத்தகைய இலாபம் கிடைக்கப் போகிறது என்பது முக்கியமான விடயமல்ல. இதனால் இதொகா,பலவீனமடையப் போகிறது என்பதே முக்கியமானது. இந்தத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்ற நிலையில்- அவர்களின் பலத்தைச் சிதைப்பதிலேயே பெரும்பான்மைக் கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்தநிலையில், தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகள் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை. பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமே இந்தப் பிளவுகள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றன.அவர்களின் கரங்களைப் பலபடுத்தப் போகின்றன.

சிறுபான்மைக் கட்சிகளை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இப்போது கானல்நீராகக் கரைந்து போவதைக் காணமுடிகிறது. இந்த ஜனாதிபதித் தேர்தல் எத்தகைய முடிவைத் தரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இந்தத் தேர்தல் தமிழ் மக்களின் வரலாற்றில் மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்திய ஒன்றாக- அவர்களின் பலத்தைச் சிதைத்து விட்ட தொன்றாப் பதிவுபெறப் போவது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

ஹரிகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*